

மதுரை நேரு நகரில் பாதாளசாக்கடை அடைத்து கடந்த 10 நாளாக தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு வீடுகள் முன் தெப்பம்போல் தேங்கி நிற்கிறது. குடிநீரிலும் இந்த சாக்கடை நீர் கலந்து வருவதால் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
மதுரையில் பெரும்பாலான வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய்களும், பாதாளசாக்கடை திட்டமும், மாநகராட்சி நகராட்சியாக இருந்தபோது எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் போடப்பட்டவை. புறநகர் வார்டுகளில் 20 ஆண்டிற்கு முன்புபோடபட்டவை. அதன்பின் இந்த குடிநீர் குழாய்களும், பாதாளசாக்கடை குழாய்களும் சரியாக பாராமரிக்கப்படவில்லை.
மாநகராட்சி தற்காலிகமாக பிரச்சினை ஏற்படும்போது மட்டுமே சரி செய்கின்றனர். அதனால், அனைத்து வார்டுகளிலும் நிரந்தரமாகவே அடிக்கடி பாதாளசாக்கடை அடைத்து குடிநீர் மேலே பொங்கி சாலைகளில், தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுவதும், சில சமயங்களில் வீட்டிற்குள் உள்ள கழிப்பறை வழியாக பொங்குவதுமாக மக்கள் பெரும் சிரமத்தையும், துயத்தையும் சந்திக்கின்றனர்.
தற்போது மாநகர்பகுதி வார்டுகளில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் மாநகராட்சி, பாதாளசாக்கடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் மாநகராட்சி 76வது வார்டு உள்ள நேரு நகர், திருவள்ளூர் மெயின் ரோடு, பசும்பொன்நகர், மருதுபாண்டியர் நகர், நடராஜன்தியேட்டர் பின்புறம் உள்ள குடியிருப்புகளில் கடந்த 10 நாட்களாக பாதாளசாக்கடை அடைத்து தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வீடுகள் முன்பும் தெப்பம் போல் கழிவு நீர்தேங்கிநிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீரிலும் கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் 10 நாட்களாக குடிக்க தண்ணீரில்லாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
கரோனா பரவும் இந்தக் காலத்தில் ஏற்கெனவே நோய்த் தொற்று அச்சத்தில் தவிக்கும் மக்களுக்கு குடிநீரும் சுகாதாரமாக இல்லாமல் கழிவு நீர் கலந்து வருவதால் மற்ற தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நேருநகரைச் சேர்ந்த சி.சண்முகசுந்தரம் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக நேரு நகரில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு இதுபோல் கழிவுநீர் பொங்கி வருவது நடக்கிறது. தற்போது ஆரம்பத்தில் நேரு நகர் கபிலர் தெருவில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பக்கத்தில் உள்ள அகத்தியர் தெரு உள்ளிட்ட மற்ற தெருக்களிலும் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பொங்கி தெருவில் செல்கிறது. வீடுகள் முன் கழிவு நீர் தேங்குவதால் வாசலில் கால் வைக்க முடியவில்லை. வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. குடிநீர் குழாய்களும் ஆங்காங்கே உடைந்து கசிவு ஏற்படுவதால் கழிவு நீர் வீட்டிற்குள் வரும் குடிநீருடன் கலந்து வருகிறது. அதனால், குடிநீரை குடிக்கவும், மற்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியவில்லை. குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய உள்ளது. பக்கத்து தெருக்களில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் இருப்பவர்கள், அவர்கள் வீட்டிற்கு சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய உள்ளது. துர்நாற்றத்தால் மக்கள் வீடுகளில் வசிக்க முடியவில்லை. பழங்காநத்தம் உழவர்சந்தை அருகே பாதாளசாக்கடை குழாய்களுக்கு மெயின் ஜங்ஷன் உள்ளதாகவும், அதில் அடைப்பு ஏற்பட்டதாலேயே நேரு நகரில் பாதாளசாக்கடை பொங்கி மேலே தெருக்களில் ஓடுவதாகவும் கூறப்படுகிறது. அதனால், மாநகராட்சி நிரந்தரமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பாதாளசாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும், ’’ என்றார்.