

புகழ்பெற்ற யோகா குரு
இந்தியாவின் தலைசிறந்த யோகா குருவாகவும், ஆயுர்வேத பண்டிதராகவும் திகழ்ந்த திருமலை கிருஷ்ணமாச்சாரியார் (Tirumalai Krishnamacharya) பிறந்த தினம் இன்று (நவம்பர் 18). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
# கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டத்தில் முச்சுகுண்டபுரம் என்ற இடத்தில் பிறந்தார் (1888). தந்தை பிரபல வேத விற்பன்னர். 6 வயதில் சமஸ்கிருதத்தில் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அப்போதே தந்தை ஆசனங்களும் பிராணாயாமமும் கற்றுத் தந்தார். இவரது 10-ம் வயதில் தந்தை இறந்தார்.
# செம்மராஜ் சமஸ்கிருத கல்லூரியிலும் மடத்திலும் பயின்றார். வியாகரணம், (இலக்கணம்) வேதாந்தம் மற்றும் தர்க்கம் பயின்று, வித்வான் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 16 வயதில் இவரது கனவில் இவரது மூதாதையரும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைசிறந்த யோகியுமான நாதமுனி தோன்றி தமிழகத்தின் ஆழ்வார் திருநகருக்குச் செல்லுமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. அதனை சிரமேற்கொண்டு இவர், தமிழகம் வந்தார்.
# இந்தியா முழுவதும் பயணம் செய்தார். வாரணாசி பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களில் வயசேசிகா, நியாயா, சங்க்யா, யோகா, மீமாம்சா மற்றும் வேதாந்தா என்கிற 6 வேத தர்ஷனாக்களான (ஷட்தர்ஷனா) வேத தத்துவப் பாடங்களில் பட்டம் பெற்றார்.
# அந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்து பண உதவி பெற முடியாத நிலையில் இருந்தார். தினமும் 7 வீடுகளுக்கு மட்டுமே சென்று பிச்சை எடுத்து உண்டு வந்தார். ஆயுர்வேதக் கல்வி கற்பதற்கான உதவித் தொகை பெற்று ஆயுர்வேதமும் பயின்றார். ஊட்டச்சத்து, மூலிகை மருத்துவம் மற்றும் குணப்படுத்தும் முறைகள் குறித்து ஆழமான அறிவைப் பெற்றிருந்தார்.
# 1916-ம் ஆண்டு வாக்கில் யோகி யோகேஷ்வரா ராமா மோகன் பிரம்மச்சாரியிடம் கல்வி பெற கைலாய மலைக்குச் சென்றார். அங்கு ஏழரை ஆண்டுகள் யோகப் பயிற்சிகளை ஆழமாகப் பயின்றார். பாரம்பரிய யோகா பற்றிய பல புத்தகங்களை மனப்பாடமாக அறிந்திருந்தார். 11 வருடங்கள் பனாரசில் தங்கியிருந்தார்.
# இவருக்குப் பல மன்னர்களின் அறிமுகம் கிடைத்தது. மைசூர் மகாராஜாவின் உதவியுடன் யோகசாலா என்ற பிரத்யேக யோகா அமைப்பை 1933-ல் தொடங்கினார். 1952-ல் சென்னைக்கு வந்தார். விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
# இவரது யோகா பாணி ‘விநியோகா’ என குறிப்பிடப்பட்டது. இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உரைகள் மூலமாகவும் செயல்முறை விளக்கம் மூலமாகவும் யோகாவை வளர்த்தார். யோகா குருவாகப் போற்றப்பட்டாலும் இவர் தன்னை எப்போதுமே ஒரு மாணவனாகவே கருதி வந்தார்.
# யோகப் பயிற்சி, ஆயுர்வேதம் மூலமாக நோய்களை குணப்படுத்தினார். ‘யோக மகரன்தா’, ‘யோகாசனாகளு’, ‘யோக ரஹஸ்யா’, ‘யோகாவளி’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது அடிச்சுவட்டைப் பின்பற்றிய இவரது மகன் டி.கே.வி.தேசிகாச்சாரி பல சிறந்த சீடர்களை உருவாக்கி யோகா பாரம்பரியத்தைத் தழைக்கச் செய்தார்.
# ‘யோகாஞ்சலிசாரம்’, ‘எஃபக்ட் ஆஃப் யோகா பிராக்டீஸ்’ உள்ளிட்ட பல கட்டுரைகளையும், கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். 96-வது வயதில் கீழே விழுந்ததில் இவரது இடுப்பு எலும்பு முறிந்தது. ஆங்கில சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல் படுக்கையில் இருந்தவாறே செய்யக்கூடிய யோகாசனப் பயிற்சிகளை செய்து குணப்படுத்திக்கொண்டார்.
# இறுதி வரை சென்னையில் யோகாவை போதித்து வந்தார். 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற யோகா குருவாகப் போற்றப்பட்டவரும் ஹட யோகாவை புதுப்பித்தவர் என்று போற்றப்படுபவருமான திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 100 வயதை நிறைவு செய்து 1989-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி மறைந்தார்.