ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் 4

ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் 4
Updated on
2 min read

உலகத் திருமறையாம் திருக்குறளில் எனக்குப் பிடித்தமான சில குறள்கள் உள்ளன. இவற்றை எனக்குப் பிடிக்கக் காரணம்.. என் வாழ்க்கையின் சில நிகழ்வுகளுடன் இவை தொடர்புகொண்டவையாக இருந்ததுதான். எனவே அந்தக் குறள்களை இங்கே என் அனுபவங்களுடன் விளக்க முற்படுகிறேன்.

குறள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (200)

பொருள்:

நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நமக்கும் பிறருக்கும் நன்மையும் பயனும் தருவதாக அமைய வேண்டும். பயன் இல்லாத சொற்களை ஆராய்ந்தறிந்து விலக்கிவிடவேண்டும்.

விளக்கம்:

என்னுடைய கணித ஆசிரியர் இராமகிருஷ்ண ஐயர் மிகவும் கண்டிப்பானவர். வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியர் அவர். ஐதீகமானவர். மிகுந்த தெய்வீக அமைதியுடன் பொறுமையாக இருப்பவர். அறிவை எப்படி தேடிப் பெற வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறியவர்.

அவரது வகுப்புக்கு நேரம் தவறாமல் செல்ல வேண்டும். ஒருநாள் வகுப்புக்கு மிகவும் தாமதமாகச் சென்றுவிட்டேன். அன்று அவரிடம் நன்றாக அடி வாங்கினேன். அவர் என்னிடம் சொன்னார், ‘‘இப்படி நீ வகுப்புக்கு தாமதமாக வந்தால் கணிதப் பாடத்தில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாது. உயர் படிப்புக்குச் செல்ல உனக்கு நல்ல மதிப்பெண் வேண்டும், புரிகிறதா?’’ என்றார்.

அன்றுமுதல் நான் நேரம் தவறாமல் அவரது வகுப்பில் இருப்பேன். அவருடைய ‘பயனுடைய சொல்’ என்னை கணித பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வைத்தது. அவர் எப்போதும் எனக்கு நல்லதொரு வழிகாட்டியாகவே திகழ்ந்தார்.

குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (314)

பொருள்:

நமக்கு துன்பம் செய்தவருக்கு தண்டனை கொடுப்பது எவ்விதம் என்றால், அவர்கள் துன்பத்தால் துவளும்போது நாம் முன்வந்து, அவர்களே வெட்கப்படும் வகையில் அவர்கள் துன்பம் தீர உதவ வேண்டும்.

விளக்கம்:

ஒருமுறை சென்னையில் இருந்து இராமேசுவரம் ரயிலில் சென்றுகொண்டிருந்தேன். ஒரு பெண்மணி தனது மூன்று மாதக் குழந்தை மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வந்து கீழ் பெர்த்தில் அமர்ந்தார். ரயில் ஓரிடத்தில் நிற்க, அங்கே சிலர் ஏறினர். அதில் ஒருவர் என் பக்கத்தில் இருந்தவரிடம், ‘‘உங்கள் சீட் எங்கே?’’ என்றார். அவர், அந்த பெண் தன் குழந்தைகளுடன் படுத்திருந்த சீட்டை காண்பித்தார்.

உடனே அவர் அந்தப் பெண்மணியை எழும்பச் சொல்லி சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். இந்தி மொழி மட்டுமே தெரிந்த அந்த பெண், கீழ் பெர்த்தில் தன் குழந்தைகளுடன் இருக்க அவரிடம் அனுமதி கேட்டார். அவர் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. வேறு வழியின்றி மேல் பெர்த்தில் படுத்துக்கொண்டார் அந்த பெண்.

இராமேசுவரம் சென்றடைந்தது ரயில். அந்த பெண்மணி கீழே இறங்கி தங்களது உடைமைகளை எடுக்க ஆரம்பித்தார். அனைவரும் கீழே இறங்கும் அவசரத்தில் இருந்தனர். ஆனால், அவருக்கு இடம் கொடுக்காதவர்கள் இராமேசுவரம் வந்தது தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அப்போது, அந்த பெண் சிறிதும் தாமதிக்காமல், இராமேசுவரம் ஸ்டேஷன் வந்துவிட்டதைச் சொல்லி, அவர்களை எழுப்பினார். அவர்கள் அந்த பெண்ணுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அந்த இடத்தில் நான் கண்ட காட்சி மிக அருமையானது. அந்த பெண் தனக்கு அவர்கள் உதவி செய்யவில்லை என்றபோதிலும், அவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்பித்தார்.

- நல்வழி நீளும்…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in