Published : 14 Nov 2015 09:16 AM
Last Updated : 14 Nov 2015 09:16 AM

முத்துக் குளிக்க வாரீகளா 16: விதியை விதியால்தான் வெல்ல முடியும்

நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். பாதையில் கிடந்த கல்லில் காலிடறிக் காயம் ஏற்பட்டு விட்டது. இரத்தம் சிந்தியது.

உடனே நாம், ’எல்லாம் தலைவிதி. எனக்கு இப்படி நடக்க வேண்டும் என்று இறைவன் என் தலையில் எழுதிவைத்துவிட்டான்’ என்கிறோம்.

இதைவிடப் பெரிய மூடநம்பிக்கை வேறொன்றில்லை.

எவன் தலையிலும் இறைவன் எதையும் எழுதுவதில்லை.

அப்படியென்றால் விதி என்று ஒன்று இல்லையா?

இருக்கிறது. மேலே காட்டிய எடுத்துக் காட்டிலேயே விதி இருக்கிறது.

கல் கடினமானது; கால் மென்மையானது. கடின மானதின் மேல் மென்மையானது மோதினால் மென்மையானது சேதமடையும் என்பது விதி.

இது இயற்கை விதி (Law of Nature). இதைத்தான் இறைவன் எழுதி வைத்திருக்கிறான்.

இது பொதுவிதி. யாருக்கும் பொருந்தும். கல்லில் யார் கால் மோதினாலும் காயம் உண்டாகத்தான் செய்யும்.

பார்த்து நடந்தால் கல்லில் இடறாமல் சென்றிருக்கலாம்.

எனவே இடறுவதும் இடறாமல் இருப்பதும் நம் கையில் இருக்கிறது. நம் நெற்றியில் இல்லை.

எந்த ஒரு காரியம் நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

காரணமின்றிக் காரியமில்லை.

துவரம் பருப்பு விலையேறியிருக்கிறதென் றால், விளைச்சல் இல்லை அல்லது பதுக்கி விட்டார்கள் அல்லது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன என்பவை காரணங்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்விளைவு உண்டு.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிட்டதா? தவறான உணவை உண்டிருக்கிறோம் என்று பொருள்.

இவை எல்லாமே இயற்கை விதிகளே. இறைவன் சும்மா இஷ்டத்துக்கு எழுதுவதில்லை.

கலீஃபா உமர் காலத்தில் அரசுப் படை ஒரு சிற்றூரில் முகாமிட்டிருந்தது. அந்த ஊரில் கொள்ளை நோய் பரவிக் கொண்டிருந்தது.

படைத் தளபதி படையைப் பாதுகாப்பதற்கு நோயில்லா இடத்திற்குக் கொண்டு செல்ல கலீஃபாவிடம் அனுமதி கேட்டார். கலீஃபா அனுமதித்தார்.

அவையில் இருந்த ஒரு பெரியவர், ‘கலீஃபா! நீங்கள் இறைவன் விதிக்கு (கதர்) எதிராக நடக்கிறீர்கள்’ என்று குற்றம் சுமத்தினார்.

கலீஃபா உமர், ‘‘இல்லை பெரியவரே! நான் இறைவனுடைய விதியிலிருந்து தப்பி ஓட வில்லை. ஆனால் நான் வேறெங்கும் செல்ல வில்லை. இறைவனுடைய மற்றொரு விதியிடமே செல்கிறேன்” என்றார்.

அதாவது ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவுகிறதென்றால் அவ்வூரின் சுகாதார மற்ற சூழலே காரணம். சூழல் அசுத்தமாக இருந்தால் நோய்கள் உண்டாகும் என்பது விதி. சுத்தமான சூழல் இருந்தால் நோய் உண்டாகாது என்பதும் விதி.

ஆபத்தான சூழலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்வது நம் பொறுப்பு. அதாவது நமக்கு நடப்பதை விதியென்று நொந்து உட்காரக்கூடாது அந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டும்.

நாமிருக்கும் இடத்தில் தீப்பற்றிக் கொண்டால், ‘சரி, இது நம் விதி’ என்று நினைத்து அங்கேயே நாம் இருப்போமா?

நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடுவோமல்லவா?

நோய் வந்துவிட்டால் விதியென்று சும்மா இருக்கிறோமா? மருத்துவரைத் தேடி ஓடுகிறோமல்லவா?

நோய் எப்படி விதியோ; அப்படியே மருந்து என்பதும் விதியே.

உங்களுக்குத் துன்பம் நேர்ந்தால் விதியே என்று நொந்து கொண்டு சும்மா இருக்காதீர்கள். அதிலிருந்து வெளியேறுவதற்கென்று ஒரு விதி இருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.

அதாவது விதியை விதியால்தான் வெல்ல முடியும்.

முற்பிறவியில் செய்த வினைகளே இப்பிறவியில் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்று சில மதங்கள் கூறுகின்றன.

இதன்படியும் நம் இன்ப துன்பங்களுக்கு நாம் செய்த வினைகளே காரணமன்றி இறைவனுடைய எழுத்தல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நாம் பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகளே நம் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். சுற்றுப்புறச் சூழலும் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிறார்கள்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறந்த இருவரில் ஒருவர் நச்சுப் புகை கக்கும் ஆலைகள் இருக்கும் ஊரில் வசிக்கிறார். மற்றொருவர் சுவிட்ஸர்லாந்து போன்ற ஆரோக்கியமான சூழலில் வசிக்கிறார். இவர்கள் இருவருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது.

ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிடுகின்ற னர். அத்தனை பேருடைய ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் அவை ஒரே மாதிரி இரா.

இங்கே விபத்துக்குக் காரணமான விதி அத்தனை பேருடைய தனி விதிகளையும் அழித்துவிடுகிறது.

பொறியியல் அறிஞர் ஒருவர் ஒரு கட்டிடம் கட்டுகிறார். இந்தக் கட்டிடம் நூறாண்டுக் காலம் இருக்கும் என்கிறார். அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட இடம், அதைக் கட்டுவதற்காகப் பயன் படுத்தப்பட்ட இரும்பு, சிமெண்ட், மணல் இவற்றின் தரம், கலவைச் சதவீதம் இவற்றையெல்லாம் கணக்கிட்டே அப்பொறியியல் அறிஞர் கட்டிடத்தின் ஆயுளை நிர்ணயிக்கிறார்.

இதன் பொருள் நூறாவது ஆண்டில் அந்தக் கட்டிடம் அப்படியே சட்டென்று உடைந்து விழுந்துவிடும் என்பதல்ல.

அதை நன்கு பராமரித்து வந்தால் அது நூறாண்டுக்கும் மேல் இருக்கும். சரியாகப் பராமரிக்காவிட்டால் நூறாண்டுக்குள்ளேயே சிதிலமாகிவிடும்.

கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட அடுத்த நாளே ஒருவன் கட்டிடத்திற்கு அடியில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கட்டிடம் அந்தக் கணமே உடைந்து பொடிப் பொடியாய் சிதறிவிடும்.

நாம் அதைக் கட்டிய பொறியியல் அறிஞனிடம் போய், ‘‘இந்தக் கட்டிடத்தின் ஆயுள் நூறாண்டு என்றாயே, இப்போது என்ன சொல்கிறாய்?’’ என்று கேட்க முடியாது.

இங்கு வெடிகுண்டு என்ற சக்திவாய்ந்த விதி நூறாண்டு இருந்திருக்க வேண்டிய கட்டிடத்தைத் தகர்த்துவிட்டது. நம்முடைய ஆயுளின் நிலையும் இப்படித்தான்.

பாரம்பரிய உடல்வலிமை, பெற்றோர் உடல் வலிமை, பெற்றோர் புணர்ந்த நேரம், கருப்பை யில் இருந்தபோது தாய் உண்ட உணவு இவையெல்லாம் சேர்ந்து நம் உடலின் வலிமையையும் ஆயுளையும் நிர்ணயிக்கின்றனர். உடலை நன்கு பராமரித்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளை விட நீண்ட நாள் நாம் வாழலாம்.

புகைத்தல், குடித்தல் போன்ற தீய பழக்கங்களால் உடலைக் கெடுத்துக் கொண்டால் சீக்கிரம் போய்ச் சேர வேண்டியதுதான்.

தற்கொலை செய்துகொள்வது, விபத்தில் இறப்பது போன்றவை கட்டிடத்திற்கு வெடி குண்டு வைத்ததைப் போன்றதுதான்.

விதியென்றாலே கெட்டது, துன்பம் தருவது என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு.

நெருப்புக்குச் சுடுவதும் ஒளி தருவதும் விதி.

நெருப்பினால் பயனடைந்துகொள்வதும், பாதிப்பை அடைவதும் நம் பொறுப்பு.

குயிலின் பாடல், மயிலின் ஆடல், ஆண் பெண் கூடல், பெளர்ணமி நிலா, இளவேனிற்காலப் பூங்கா, அறுசுவை உணவு, இதமான தென்றல் இவையும் விதியின் விளைவுகளே. இவையெல்லாம் துன்பம் தருபவையா?

இறைவன் வகுத்த இயற்கை விதி நம் நன்மைக்கே அன்றி, தீமைக்கல்ல.

சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். முடியாது.

நெருப்பு சுடும். அதை எவன் மதியாலும் வெல்ல முடியாது.

‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்’

என்பார் வள்ளுவர்.

மேலும், நெருப்பைச் சுடாமல் செய்ய வேண்டிய அவசியமென்ன?

சமைப்பது எப்படி? குளிர் காய்வது எப்படி? விளக்கேற்றுவது எப்படி?

விதியைப் பற்றிய தவறான கருத்துதான் நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x