Published : 12 Nov 2015 11:08 AM
Last Updated : 12 Nov 2015 11:08 AM

வல்லிக்கண்ணன் 10

புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர்

புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான வல்லிக்கண்ணன் (Vallikannan) பிறந்த தினம் இன்று (நவம்பர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லி புரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் (1920). இயற்பெயர் ரா.சு. கிருஷ்ணசாமி. கோவில்பட்டியில் ஆரம்பக் கல்வி பயின்றார். தந்தை சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார். அவருடன் பிரபல நாவலாசிரியர் அ.மாதவையாவும் பணி யாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் மாதவையா நடத்தி வந்த பஞ்சாமிர்தம் இதழ்கள் பற்றி தந்தை அடிக்கடி வீட்டில் பேசுவார்.

# இதுவே சிறுவனுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது. இவரது 10-வது வயதில் தந்தை இறந்துவிட்டார். தனது 16-ம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். ‘சந்திரகாந்தக் கல்’ என்ற இவரது முதல் சிறுகதை பிரசண்ட விகடனில் வெளிவந்தது.

# 1937-ல் பள்ளி இறுதிப் படிப்பை முடித்த இவருக்கு பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் வேலை கிடைத்தது. எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளனாக மாறினார். ஆரம்பத்தில் சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன், ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.

# ‘கோவில்களை மூடுங்கள்’, ‘அடியுங்கள் சாவு மணி’, ‘எப்படி உருப் படும்?’, ‘கொடு கல்தா’ உள்ளிட்ட நூல்களை கோரநாதன் என்ற பெயரில் கோபக்கார இளைஞனாக எழுதத் தொடங்கிய இவரது இலக் கியப் பயணம், புனைவுகள், திறனாய்வு, சிறுபத்திரிகை, புதுக்கவிதை வரலாறு எனப் பன்முகப் பரிமாணங்களுடன் தொடர்ந்தது.

# நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பல புனைபெயர்களிலும் எழுதியுள்ள இவர், தனது ஊர் பெயரில் உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன் ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

# நாட்டியக்காரி, குஞ்சாலாடு, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அத்தை மகள், சகுந்தலா, ஆண் சிங்கம், அமர வேதனை, ராகுல் சாங்கிருத்யாயன் உள்ளிட்ட மொத்தம் 75 நூல்களை எழுதியுள்ளார்.

# இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். இவரது ‘பெரிய மனுஷி’ என்ற சிறுகதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற இவரது நூலுக்காக 1978-ல் இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

# ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது. புதிய எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர் வல்லிக்கண்ணன்.

# பாரதிதாசனின் உவமை நயம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி காலம், பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை ஆகிய படைப்புகள் இவரது இலக்கிய அடையாளங்களாகக் கருதப்பட்டன. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

# ஒல்லிக்கண்ணன் என்று எழுத்தாள நண்பர்கள் குறிப்பிடும் அளவுக்கு ஒல்லியான தேகம் படைத்தவர். சுமார் 75 ஆண்டு காலம் இலக்கியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வல்லிக்கண்ணன் 2006-ம் ஆண்டு 86-ம் வயதில் மறைந்தார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x