Published : 15 Feb 2021 10:20 AM
Last Updated : 15 Feb 2021 10:20 AM

திரைப்படச்சோலை 6: கோலார் நாடகம்

சிவகுமார்

1967, ஜனவரி மாதம் 26-ம் தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவுக்காக கே.பாலசந்தர் எழுதிக் கொடுத்த ‘எதிர்நீச்சல்’ நாடகம் பார்த்தேன். செளகார் ஜானகி அழகுக்கும் நடிப்புக்கும், பட்டுமாமி வேடம் அவருக்கு ரசிகர்களிடையே ஆரவாரமாகப் பெயர் வாங்கிக் கொடுத்த நாடகம்.

‘உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பில் அன்றைய தினம் ஏவிஎம் ஸ்டுடியோவில் கலந்துகொண்ட பிறகு மாலையில் மேடைக்கு வந்திருந்தார்.

10 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு நாடக மேடை க்ரீன் ரூமில்’ அவர் ஒப்பனை செய்து கொண்டிருந்தபோது போய்ப் பார்த்தேன்.

‘வந்துட்டீங்களா? ரொம்ப சந்தோஷம். எங்கே டிக்கெட்டைக் காட்டுங்க!’ என்று கேட்டு, 10 ரூபாய் டிக்கட்னா ஹாலில் கடைசி ‘ரோ’வில் உட்காரணும். நாடகத்தை ‘என்ஜாய்’ பண்ண முடியாது!’ என்று முதல் ‘ரோ’-வில் உட்கார, ‘காம்ப்ளிமெண்ட்ரி’ டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்.

மாடிப்படி மாதுவாக நாகேஷ் வாழ்ந்து காட்டினார். எடுபிடி வேலை செய்யும் அவர், குடித்தனக்காரர் வீட்டுப் பெண்ணை ‘லவ்’ பண்ணுவது தெரிந்து எல்லோருமே அவரை வெறுத்து ஒதுக்குகின்றனர். அந்த வீட்டில் ரிட்டயர்டு தாசில்தார் ஒருவர் இருப்பார். அந்த வேஷத்தில் மேஜர் சுந்தரராஜன் நடிப்பார்.

மாது மீது அன்பும் அரவணைப்பும் உள்ளவர். அவருக்கும் மாது மீது கோபம். எப்போதும் ஈஸி சேரில் கைத்தடியுடன் உட்கார்ந்திருப்பவர், உள்ளே போய் விடுவார்.

பரீட்சைக்கு முதன்முதல் போகும் நாகேஷ் மேஜரிடம் ஆசி பெற்று போக விரும்புவார். உள்ளே போனவர் வரவே இல்லை.

‘சார்! பரீட்சைக்கு நேரமாச்சு. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க சார். நான் அனாதை சார். என் மேல அன்பு வச்சிருக்கிற நீங்க ஆசீர்வாதம் பண்ணினா போதும். வாங்க சார்! பஸ்ஸுக்கு நேரமாயிடுச்சு. வாங்க சார்!’ என்று எமோஷனலாக கூப்பிட்டுப் பார்த்து மேஜர் வரவில்லை என்று தெரிந்ததும்,

இவரே, ‘படவா ராஸ்கல்! நான் ஆசீர்வாதம் பண்ணாம எவன்டா உன்னை ஆசீர்வதிப்பான்? போய் நல்லா பரீட்சை எழுதீட்டு வா’ என்று மேஜர் பேசுவதுபோல அவரிடத்தில் நின்று, கைத்தடியை வைத்துக் கொண்டு பேசி நடித்துவிட்டு உடனே மாதுவாக மாறி அவர் காலில் விழுந்து வணங்கி புறப்படுவது போல மேஜர்-நாகேஷ் இரண்டு பாத்திரங்களிலும் ‘மோனோ ஆக்டிங்’ செய்து காட்ட அரங்கமே உணர்ச்சிப் பெருக்கால் அதிரும்படி கைதட்டினார்கள்.

மேஜர் சுந்தர்ராஜன் - நாகேஷ்

எனக்கு ‘கிலி’ அடித்துவிட்டது. நாம் எங்கு இருக்கிறோம். நமக்கும், நடிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒரு நாளைக்கு 4 கம்பெனிகளில் மாறி மாறி நடிக்கும் நாகேஷ், எப்படியோ நேரம் ஒதுக்கி மாலை வேளைகளில் நாடக மேடை ஏறி இப்படி கலக்குகிறார்.

சிவாஜிக்கு இனி நடிப்பைப் பற்றி கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை. ஆனால்ம் அவரும் சிவாஜி நாடக மன்றம் என்று ஒரு குழு வைத்துக்கொண்டு 'தேன்கூடு', 'தங்கப்பதக்கம்', 'வியட்நாம் வீடு' என்று மாதத்திற்கு 10 நாடக மேடை ஏறி நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராகினி ரிக்ரியேஷனில் நாகேஷ், செளகார், மேஜர் என்று பிரபலங்கள். மேஜர் சுந்தரராஜன் தனியே என்.எஸ்.என். தியேட்டர்ஸ் நாடகக் குழு வைத்து நாடகங்கள் போடுகிறார்.

ஆர்.எஸ். மனோகர் காடகமுத்திரையன், சாணக்யன், சுக்கிராச்சாரியார், இலங்கேஸ்வரன் என்று புராண நாடகங்கள் நடத்தி பிரம்மிக்க வைக்கிறார்.

நாம் என்ன ஆகப்போகிறோம்? 2 வரி வசனத்திற்கு 4 டேக் வாங்கி, நாம் இப்படியே எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும் என்று யோசித்தேன்.

உடனடியாக நாடகங்களில் நடித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஓவியக் கல்லூரியில் படிக்கும்போதே, ‘பாவையின் பார்வை’ என்ற தலைப்பில் கைத்தறி கண்காட்சியில் 2000 பேர் கூட்டத்தில் நடித்துள்ளேன். ‘பிரேத மனிதன்’ என்றொரு நாடகம். மியூசியம் தியேட்டரில் அரங்கேற்றினோம்.

பிரேத மனிதன் நாடகத்தில்...

அறிஞர் அண்ணா தலைமையில் கமர்ஷியல் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் சீனி சோமு தயாரித்த, ‘அடல்ட்ஸ் ஒன்லி’ நாடகத்தில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடித்தபோது மேஜர் சுந்தர்ராஜன், சோ, கல்யாண்குமார், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் வந்து பார்த்து பாராட்டினர்.

அதன் பிறகு ‘7 DAYS & 9 MEN’ என்று ஒரு நாடகம், மகரந்தம், பச்சிலை, கொம்புத்தேன் என்று பல நாடகங்கள் அரங்கேற்றத்துடன் முடிந்துவிடும்.

1968, செப்டம்பர் 2-ம் தேதி எம்.எஸ்.பெருமாள், ‘கல்கி’யில் எழுதிய குறுநாவலை விரிவுபடுத்தி நாடகமாக்கி ‘அம்மன் தாலி’ என்ற பெயரில் அரங்கேற்றினோம்.

1960-70களில் அமெச்சூர் நாடகங்கள், சபாக்கள் மிகவும் வளமாக, திரும்பிய பக்கமெல்லாம் நாடகக் கொட்டகைகள், 120க்கும் மேற்பட்ட சபாக்கள் இருந்த காலம்.

பிரபல நாடகக்குழு மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் சபாவில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி விட்டால், மளமளவென்று அன்றைக்கே 50, 60 சபாக்கள் அந்த நாடகத்தை ‘புக்’ செய்து விடுவார்கள்.

MFAC -என்கிற சபாவுக்கு அவ்வளவு செல்வாக்கு இருந்தது. ராஜகோபால் என்பவர் அதன் செயலாளர். அவர் கண் அசைவில் நாடகக் குழுவினர் எதிர்காலம் இருந்தது.

சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலை ராஜகோபால் வீட்டுக்குச் சென்று அவருக்கு ஒரு கும்பிடு போட்டு சமையல் கட்டிலிருந்து மாமியிடம் காபி வாங்கி வந்து அவருக்குக் கொடுத்து, அது சாப்பிட்டதும், ‘இந்து’ பேப்பரை நீட்டி படிக்க வைத்து, கால்பிடித்து அமுக்கி விடாத குறையாக, ‘அண்ணா! எங்க புது நாடகம் உங்க சபாவுல அரங்கேற்றம் பண்ண பெரிய மனசு பண்ணி ஒரு தேதி குடுங்க’ என்று கெஞ்ச வேண்டும்.

‘டேய் சிவா! நீ படங்கள்ல நடிக்கலாம். ஆனா, மேடை உனக்குப் புதுசுடா. உன் நாடகம் பாக்க டிக்கெட் வாங்கிட்டு யாரும் வரமாட்டாங்கடா!’ என்று கிண்டல் செய்வார்.

எப்படியோ ஒரு தேதி வாங்கி 450 ரூபாய் ஒரு நாடகத்துக்கு அவர் கொடுப்பார். மேற்கொண்டு ஆகும் செலவு 300 அல்லது 400 ரூபாய் நான் என் கையிலிருந்து போட்டு அரங்கேற்றம் செய்வேன்.

MFAC -க்கு உள்ள பெயர் காரணமாக மாதம் ஒன்று அல்லது இரண்டு நாடக சபாக்கள் எங்களுக்கு வாய்ப்புத் தருவார்கள்.

இப்படி ‘அம்மன் தாலி’ 50 நாடகங்கள் நடத்த இரண்டரை வருஷங்கள் ஆகிவிடும். வெளியூரில் நாடகம் போடச் செல்லும் போதுதான் நஷ்ட ஈட்டைச் சரிக்கட்ட முடியும். திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை திருநெல்வேலி, சிவகாசி, விருதுநகர் என்று 3 மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் சென்று நாடகம் போடுவோம்.

'அம்மன்தாலி' -50 வது

சிவா டூரிஸ்ட் ஸ்பெஷல் பஸ்ஸை 3 நாள் வாடகைக்கு எடுத்து சீன், செட், மேக் அப், உடைகள் சகிதம், நடிக, நடிகையர், எல்லோரும் பஸ்ஸில் புறப்பட்டுப் போவோம். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில்தான் நான் எப்போதும் அமர்வேன். விடிய விடிய பஸ் போகும்போது ஒரு நிமிடம் டிரைவர் கண்ணை மூடினால் கதை முடிந்துவிடும். அதனால், ஓயாமல் நான் பேச்சுக் கொடுத்துக்கொண்டே செல்வேன்.

விடியும் வரை விழித்து ரோட்டைப் பார்த்தே சவாரி செய்வதால் உடம்பு உஷ்ணமாகி எனக்கு காலையில் தொண்டை கட்டிவிடும். பகல் நேரம் ஒத்திகை வேறு. கண்ணை மூட நேரமிருக்காது. அதனால் நாடகத்தில் ஹீரோவாக நடிக்கும் எனக்குத் தொண்டை கட்டி மக்கர் செய்யும்.

வால்மிளகு, சித்தரத்தை, பனங்கல்கண்டு என எல்லாம் வைத்து அரைத்து சூரணம் போல் கொடுப்பார்கள். அதைத் தொண்டையில் அடக்கினால் கொஞ்சநேரம் குரல் பளீர் என்று இருக்கும்.

1971, ஏப்ரல் 11-ன் தேதி கோலாரில் நாடகம் போடப் போனோம். பொதுவாக தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள்தான் அதிகமாக வேலை செய்கிறார்கள் என்ற போதிலும் அடிமை வேலை மாதிரிதான். பூமிக்குள் சுரங்கம் தோண்டி 1000 அடி 2000 அடி போய் பக்கவாட்டில் குகைபோல் குடைந்து தங்கம் தேடும் வேலை. பரிதாபத்துக்குரிய மக்கள்.

அவர்களுக்குப் பொழுதுபோக்கு கிடையாது. கலை நிகழ்ச்சிகளோ, திருவிழாக்களோ கலைஞர்களைப் பார்க்கும் வாய்ப்போ அவர்களுக்குக் கிடையாது. அப்படிப்பட்ட மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நாங்கள் போனோம்.

பெங்களூர் சாலையில் முல்பகல் கிராமத்திலிருந்து குறுக்கு வழியாகச் சென்றால் 12 மைல் தொலைவில் தங்கச்சுரங்கத்தை ஒட்டினாற்போல சூசைப்பாளையம் கிராமம் உள்ளது. சென்னையிலிருந்து 180 மைல் தொலைவில் கோலார் உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் விடுதியில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் வந்துவிட்ட சேதி கேட்டு படை, படையாய் காலை 8 மணியிலிருந்து மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவ்வளவு பேரும் ஏதோ தெய்வத்தை நேரில் கண்டது போல அவ்வளவு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து என்னைத் தொட்டு, கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டாடி விட்டார்கள். ஆட்டோ கிராப் கைவலிக்கும் வரை போட்டுக்கொண்டே இருந்தேன்.

நாடகக் காண்ட்ராக்டர் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்.

‘‘என்ன சார் பண்றீங்க?’’

‘‘ஆட்டோ கிராப் போட்டுக் குடுத்துட்டிருக்கேன்!’’

‘போச்சு.. போச்சு.. இன்னிக்கு மொத்த வசூலும் போச்சு! ஐயோ சார்! இப்படி தர்மதரிசனம் குடுத்தீங்கன்னா, சிவகுமாரை நேர்லயே பார்த்தாச்சு போதும்னு அவனவன் வீட்டுக்குப் போயிருவான். நாடகம் பார்க்க ஒரு ஆள் வரமாட்டான். வசூல் கிழிஞ்சிரும்.- ஒரு பைசா உங்களுக்கு தரமாட்டேன்!’னு கத்தினார்.

‘‘இப்ப நான் என்னய்யா பண்ணனும்?’’

‘‘எங்காவது போய் சாயங்காலம் வரைக்கும் முகத்தைக் காட்டாம ஒளிஞ்சுக்குங்க...!’’

கெஸ்ட் ஹவுஸ் உள்ளே ஓடினேன். அது கண்ணாடி மாளிகை. எல்லா அறையின் வெளிச்சுவரிலும் கண்ணாடி ஜன்னல்கள் இருந்ததால் டாய்லட்டுக்குள் போய் வெஸ்டர்ன் டாய்லட் மூடி மீது பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை உட்கார்ந்திருந்தேன்.

கர்நாடகா எல்லை என்பதால் மது அருந்துவது அங்கு குற்றமல்ல. எனவே ஆள், ஆளுக்கு 400 மில்லி அடித்துக்கொண்டு வந்து, ‘‘அண்ணா! வெளியே வாங்க அண்ணா! காலையில வந்தவங்க கூட எல்லாம் பேசினீங்க. ஆட்டோகிராப் போட்டுக் குடுத்தீங்க. போட்டோ எடுத்திட்டீங்க. 5 நிமிஷம் தலையக் காட்டுங்க பார்த்துட்டுப் போயிடறோம்!’’

நான் மூச்சு விடவில்லை.

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிவிட்டது புரிந்தது. கொஞ்சம் எல்லை மீறினால், குடித்து விட்ட தம்பிகள் கதவை உடைத்து கெஸ்ட் ஹவுஸ் உள்ளே பாய்ந்தால், நடிக்க வந்திருக்கும் 4 பெண்களுக்கு ஆபத்தாகி விடும் என்று உணர்ந்த நான் மடார் என்று கதவைத் திறந்து கூட்டத்துக்குள் பாய்ந்தேன்.

‘‘என்னய்யா, சிவகுமாரைத்தானே பாக்கணும். இதோ வந்திட்டேன். பாருங்க. குத்துங்க. கொல்லுங்க. என்ன வேண்ணாலும் செய்யுங்க!’ன்னு சாமி வந்தவன் மாதிரி சட்டைய கழட்டீட்டு தரையில படுத்து உருண்டேன்.

யாரும் இதை எதிர்பார்க்கலே. பாதிப் பேருக்கு போதையே கலைஞ்சிருச்சு.

அதுல துணிச்சலான ஒருத்தர், கண்ணை மூடி முழிக்கறதுக்குள்ளே என்னைத் தூக்கி தோள் மேல உட்கார வைத்து, அண்ணன் சிவகுமார் என்றான். வாழ்க என்று விண்ணதிர குரல்கள் எழுந்தன. 2 நிமிடம் விட்டு போதும் இறக்கி விடு என்று கேட்டு கீழே இறங்கி முன்னால் வந்தேன்.

மொத்தக் கூட்டமும் மூச்சு விடுவது மட்டும் கேட்கும் அளவுக்கு மெளனமாகி விட்டனர். ‘உங்களையெல்லாம் பாக்கவும், உங்களைச் சந்தோஷப்படுத்தவும்தான் என் நாடகக்குழுவைக் கூட்டி வந்திருக்கேன். நீங்க எல்லோரும் இங்க என்னைப் பாத்திட்டு வீட்டுக்குப் போயிட்டீங்கன்னா, நாடக காண்ட்ராக்டர் ‘அப்செட்’ ஆயிருவாரு. வசூல் ஆகாதபோது அவர் எங்களுக்கு எப்படி பணம் செட்டில் பண்ணுவாரு? நீங்க அத்தனை பேரும் நல்ல புள்ளைகள்னா, அப்படியே எம் பின்னாடி வாங்கன்னு - பை டூ பைப்பர் கதையில் பீப்பி ஊதி ஊர்ல இருக்கற எலிகளையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போவானே-அந்த மாதிரி எல்லாரையும் நாடகக் கொட்டகைக்கு கூட்டிகிட்டுப் போய் டிக்கட் கவுன்ட்டரில் நானே உட்கார்ந்து டிக்கட் விற்று 3000 பேர் சேர்ந்ததுக்கப்புறம் மேக்கப் போட்டு இரவு 11.10க்கு நாடகத்தை ஆரம்பிச்சு 2 மணி நேரம் நடத்தினோம்.

சுரங்க சூப்பரின்டெண்ட் விஜயராகவலு தலைமை தாங்கி எங்களை வாழ்த்திப் பேசினார்.

இரவே சாமான் செட்டுகளையெல்லாம் பிரித்து பஸ்ஸில் ஏற்றி விடியற்காலை 6 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 1.40 ம்ணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

--

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x