Last Updated : 12 Feb, 2021 06:31 PM

 

Published : 12 Feb 2021 06:31 PM
Last Updated : 12 Feb 2021 06:31 PM

நூல் மதிப்புரை: ''மக்களின் இதயங்களிலிருந்து மறையாத அமீரகத் தந்தை'' - ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்

அமீரகத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட மன்னர் ஷேக் ஜாயித் மறைந்து பத்தாண்டுகள் கழித்து அவரது நினைவைப் போற்றும் வகையில் வெளியாகியுள்ள புத்தகம் 'ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்'.

''ஒரு நாட்டின் தலைவராக எப்படி வாழ வேண்டும். எப்படி ஆள வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஷேக் ஜாயித் பற்றிய இந்நூல் இனியும் காலம் தாழ்த்தாமல் வெளியிடப்பட வேண்டிய ஒரு காலப் பெட்டகம்'' என்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.பி. எம்.அப்துல் ரஹ்மான் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

நூலாசிரியர் வி.களத்தூர் கமால் பாஷா தனது முன்னுரையில் கூறும்போது, ''அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான் புஜைரா, உம் அல் குவைன் எனத் தனித்தனியாக இருந்த அரசாங்கங்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின்கீழ் அரசமைத்து அமீரக வளர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் தலைவர் மறைந்த ஷேக் ஜாயித்தின் வரலாற்றை தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற என் நீண்டநாள் ஆசை தற்போது நிறைவேறியிருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அடுத்த பக்கத்தில் வாழ்க்கைச் சுருக்கம் தரப்பட்டுள்ளது. அதில் கடைசி சில வரிகளாக, ''துபை-அபுதாபி சாலையின் இருமருங்கிலும் கண்டால் இவரது பசுமைப் புரட்சியின் செயல்பாட்டைக் கண்டுணரலாம். கல்வித்துறையில் ஆண்-பெண் இரு பாலருக்குமான கல்வி அவசியத்தை மக்களுக்கு உணரவைத்துச் செயல்படுத்தியும் காட்டிய பெரும் தலைவர்'' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது. நூலில் நுழைவதற்கு முன்பாகவே அவரைப் பற்றி நமக்குக் கிடைத்த தகவல்கள் இவை.

நூலின் முதல் அத்தியாயமே மன்னர் ஷேக் ஜாயித் நவம்பர் 2004, 02ல் மறைந்த சம்பவத்திலிருந்துதான் தொடங்குகிறது.

''அந்த நாள்... அபுதாபியின் புல்வெளிகள் கண்ணீர் வடித்தன... மரங்களும் செடி கொடிகளும் சுவாசத்தை மறந்து வீச மறுத்து நிலையாய் நின்றன. அந்த நாள்... மக்கள் விம்மி விம்மி கதறி அழுது புரண்ட நாள்.... தேற்றுவார் யாருமின்றி தேசத்தின் மக்கள் யாவரும் உடல்குலுங்க அழுத நாள்... ஆம்! அமீரகத்தின் சிற்பி, தேசத்தந்தை, மாமன்னர் எனப் பல கோணங்களில் அழைக்கப்பட்ட மாபெரும் தலைவர், மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மாமேதை, அமீரகத் தந்தை ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் இறைவனின் அழைப்பை ஏற்று மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்ற அந்த நாள்....''

இப்படித்தான் இந்நூல் தொடங்குகிறது. ஒருவரைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத நிலையில் அவரைப் பற்றிய ஒரு நூல் தரும் ஆரம்ப அறிமுகங்களே எதிர்பார்ப்பைத் தூண்டிவிடுகின்றன. நூலாசிரியர் களத்தூர் கமால் பாஷா, மன்னர் மீது கொண்ட சாதாரண மரியாதையாக மட்டுமின்றி மிகப்பெரிய இடத்தில் வைத்து வணங்கத்தக்க மாபெரும் தலைவராகவே ஷேக் ஜாயித் விளங்குவதை இவையெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.

இந்தத் தொடக்க அத்தியாயத்தில் முக்கியமான ஒரு செய்தி மிகவும் வியப்பூட்டுவதாக இருந்தது. நூலாசிரியரின் சொற்களிலிருந்தே இதைக் காணலாம்.

''அபுதாபியைச் செழுமைப்படுத்தி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரு ஐக்கியத்தை உருவாக்கி அனைத்து மாநிலத்தையும் தன் கவனத்தில் வைத்து, ஒவ்வொரு அசைவையும் வடிவமைத்து செதுக்கியவர் ஷேக் ஜாயித். இவ்வளர்ச்சி சாதாரணமானதல்ல. ஏழ்மையில் வாடிய இந்நாட்டைச் செல்வச் செழிப்புள்ள நாடாக்க இவர் கொண்ட முயற்சிகள் பாராட்டவும் பின்பற்றவும் வேணடியவை.

பழைய சிந்தனையை மனதில் கொண்டு நவீன வளர்ச்சியை நோக்கி நாட்டை இரு கோடுகளைப் போல இணையாகக் கொண்டு சென்றார். ஷேக் ஜாயித் இல்லாமல் இந்த தேசத்தின் வளர்ச்சி கிடையாது. தேசத்தின் வரலாறு எனபது ஷேக் ஜாயித்தின் வரலாறு. தேசத்தின் நலன் ஒன்றையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்தார். பொதுக்கூட்டங்களில் தோன்றுவதை ஷேக் ஜாயித் என்றும் விரும்பியதில்லை....''

---- என்று நூலாசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நமக்குச் சாதாரண ஊராக இருந்த சிங்கப்பூரை வளம்மிக்க ஒரு மாபெரும் வர்த்தக, செல்வச்செழிப்புமிக்க மாநகராக உருவாக்கிய சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கடந்த 2015 மார்ச் மாதம் அவரது பிரிவை அந்நாடு தாங்கிக்கொள்ளாத நிலையிலேயே இருந்தது.

உலகின் முக்கியத் தலைவர்களாகத் திகழும் உதாரண மனிதர்களைப் பற்றிய நூல்கள் நமக்கு வரலாற்றின் பொக்கிஷங்களாகவே திகழ்கின்றன. ஷேக் ஜாயித் பின் சுல்தானின் 14 முன்னோர்களில் முதலாமவர் இஸ்ஸா பின் நஹ்யான் எனத் தொடங்கி அனைத்து சுல்தான்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகமும் இந்நூலில் உண்டு. 14-வது சுல்தானாக உருவான ஷேக் ஜாயித் தனது 10வயது வயதிலேயே திருக்குரானில் உள்ள பெரும்பாலான அத்தியாயங்களை மனப்பாடம் செய்திருந்ததையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

1946இல் அல் அய்ன் பிராந்தியத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அப்பகுதியின் ஆளுநராகவும் பொறுப்பேற்கிறார் ஷேக் ஜாயித். அப்பகுதியின் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு நிலத்தடி நீர் மூலம் நீர்த்தேக்கங்களைக் கட்டி விவசாயத்தைப் பெருக்குகிறார். இலந்தையும் ஈச்சம்பழமும் மட்டுமே விளைந்து கொண்டிருந்த பகுதிகளை மாமரம், கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப் பழங்கள் தரும் மில்லியன் கணக்கான மரங்களை நட்டுப் பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறார்.

மன்னரின் சாதனை வாழ்க்கை மட்டுமல்ல, நூலின் 19 அத்தியாயங்களிலும் அபுதாபியின் பாலைவனப் பழங்குடி மக்களின் வாழ்க்கை, பூர்வீக வரலாறு, எண்ணெய் வள ஆய்வு, முத்துக்குளித்தல், அபுதாபி வளர்ச்சி எனப் பன்முக நோக்கில் ஒரு ஆய்வு நூலாகவும் இப்புத்தகம் திகழ்கிறது.

அபுதாபி என்ற சொல்லுக்கான பொருளை அழகாக விளக்குகிறார் நூலாசிரியர் களத்தூர் கமால் பாஷா.

முதலாம் சுல்தானாக இருந்த ஷேக் தியாப் நஹ்யான் பாலைவனத்தின் புதிய பகுதிகளை வேட்டைக்காகத் தேடிச் செல்வது வழக்கம். பதினாறாம் நூற்றாண்டில் அப்பகுதியில் ஒரு இடம் முழுவதும் மான்கள் வசித்து வந்தனவாம். அங்கு செல்வதையும் அங்கேயே தங்கியிருப்பதையும் தனது வழக்கமாகக் கொண்டிருந்த நஹ்யான் அப்பகுதிக்கு அபுதாபி என்றே பெயரிட்டார். அபுதாபி எனில் மான்களின் தந்தை என்று பொருளாம்.

இந்நூல் முழுக்கத் தேவையான குறிப்புகளுடன் ஏராளமான படங்கள் இடம்பெற்றுள்ளன. 15ஆம் நூற்றாண்டின் ஃபுஜைராவில் கட்டப்பட்ட அமீரகத்தின் முதல் பள்ளிவாசல், பிரிட்டனிடமிருந்து ஷேக் ஜாயித் கையெழுத்திடும் நாட்டுக்கான விடுதலை ஒப்பந்தம், அனைத்து குறுநில ஷேக் மன்னர்களுடன் இணைந்த எடுத்துக்கொண்ட பல்வேறு படங்கள், அமீரகப் பகுதிகளில் விவசாயம் செய்யும் காட்சி, பாலைவனத்தில் ஒட்டகத்தின் துணையோடும் வாழும் மக்கள் என ஏராளமான படங்கள் இந்நூலுக்கு அணியும் அழகும் சேர்க்கின்றன.

இக்காலத்தில் சிறு எழுத்துப் பிழையும் இல்லாமல் ஒரு நூலைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. கலாம் பதிப்பகத்தாரின் கடுமையான உழைப்பில் இந்நூல் பிழையின்றி சிறந்த வடிவமைப்பில் செம்மையாக வெளிவந்துள்ளது.

இந்நூலில் வளைகுடாக்களில் முத்துக்குளித்தல் தொழில் மேற்கொள்ளப்பட்டது குறித்த விவரணைகளும் உண்டு. இந்நூலில் இதற்காகத் தனி அத்தியாயமே இருக்கிறது. ஆனால், உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் முத்துக்குளித்தல் தொழிலுக்கு முழுக்குப் போட வேண்டிய நிலையும் ஏற்பட்டதாக ஒரு இடத்தில் கூறுகிறார். அதற்கு காரணம் 1930களில் ஜப்பானின் செயற்கை சிந்தடிக் முத்துவின் வருகைதான்.

அபுதாபியின் ஏராளமான ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஜப்பான் முத்துகள் சிதறடித்ததாகச் சொல்கிறார். ஆனால், இங்குதான் ஒரு முக்கியக் குறிப்பும் இடம்பெறுகிறது. அவரது சொற்களிலேயே சொல்வதென்றால், ''இறைவன் மற்றொரு கதவைத் திறந்து வைத்துவிட்டுத்தான் ஒரு கதவை மூடுவான் என்பது வளைகுடா வரலாற்றில் நிரூபணமாகியது.... எப்படி?'' என்று குறிப்பிட்டு அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குகிறார். அடுத்த அத்தியாயம் ''எண்ணெய் வள ஆய்வு''.

இறைவன் திறந்த மற்றொரு கதவு எண்ணெய் வளம். எனினும் எண்ணெய் வளமெல்லாம் பிரிட்டிஷ் நாட்டுக்கேதான் போய்க்கொண்டிருந்தது. ஒரு வகையில் மக்கள் வாழ்நிலை உயர்ந்தது என்றாலும் முற்றும் முழுதுமாக 1971இல் தான் வளைகுடா நாடுகளின் மீதான பிரிட்டனின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 1971 டிசம்பர் 2இல்தான் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர். ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டது. வளைகுடா நாடுகளில் கத்தாரும் பஹ்ரைனும் தவிர 6 நாடுகள் மட்டும் அபுதாபியுடன இணைந்தன. ஷேக் ஜாயித்தின் இறுதிக்காலம் வரை அவர்தான் நாட்டின் மன்னராகத் தொடர்ந்து நீடித்தார்.

அபுதாபியின் பெரும்பாலான பகுதி 1930, 40களில் ஏழ்மைச் சூழலுக்கு ஆட்பட்டிருந்தது. பின்னர் உலகமே வியக்கும் பெருவளர்ச்சி கண்டது. பஞ்ச காலங்களில் நம் நாட்டிலிருந்தும் துபாய் சென்று குடும்பத்திற்குப் பணம் அனுப்பியவர்களை, சம்பாதித்து செழிப்போடு திரும்பியவர்களை இன்றும் பெருமையோடு பார்க்கும் தமிழக கிராமங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

காலம்தான் எவ்வளவு பெரிய ஆசிரியர். நமக்கு புதிய புதிய பாடங்களை அதன் அழகு குலையாமல் சொல்லித் தருகிறது. அந்த ஊருக்கு ஒரு ஷேக் ஜாயித்தை அனுப்பிவைத்து வளர்ச்சி என்ற சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தைக் கற்பித்துள்ளது என்பதை நினைக்கும்போது அந்நாட்டின் மீது நமக்கு பொறாமையே மேலிடுகிறது.

ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்,

நூலாசிரியர்: வி.களத்தூர் கமால் பாஷா,

கிடைக்கும் இடம்:

கலாம் பதிப்பகம்,
6 இரண்டாவது பிரதான சாலை,
சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை 600004.

விலை ரூ.150

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x