

கல்கி (பக்.300 விலை ரூ.120)
எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி அவர் படத்தையே மலரின் முகப்பில் வெளியிட்டு மரியாதை செய்திருக்கிறது கல்கி மலர். சங்கீத வித்வத் சபை 42-வது மாநாட்டில் எம்.எஸ்.நிகழ்த்திய உரை ஒரு பொக்கிஷம். எம்.எஸ். வாழ்வின் பல முக்கியத் தருணங்களை நம் கண்முன் நிறுத்தும் ஒளிப்படத் தொகுப்பும், ஓவியர் ம.செ.வின் வண்ணக் கலவையில் குத்துவிளக்கேற்றும் எம்.எஸ்ஸின் ஓவியமும் மெய்மறக்க வைக்கின்றன.
தம்மம்பட்டி மரச் சிற்பங்கள், புத்தகப் பதிப்பில் புதிய அலைகள், ஸ்காட்லேண்டின் சொத்து, தூரிகை ஆயுதம் ஆகிய கட்டுரைகள் கவனத்துக்குரியவை. My son, you have saved my life என்று இந்திரா காந்தி, பழ.நெடுமாறனின் கைகளைப் பிடித்துக் கொண்டு கூறிய நெகிழ்ச்சியான தருணங்களைப் படம்பிடித்துக் காட்டு கிறது, மூத்த அரசியல்வாதி பழ.நெடுமாறனின் பேட்டி.
ஐபிஎல் குறித்த விவாதமும், பொன்னியின் செல்வன் பாதையில் ஒரு பயண அனுபவமும் வித்தியாசமான முயற்சிகள். ஆன்மிக வெளிச்சம் பாய்ச்சும் கட்டுரை களும், கவிதைகளும் மலரில் இடம்பெற்றுள்ளன. ரசனை யைக் கூட்டும் சிறப்புச் சித்திரங்கள் நம் கவனம் ஈர்க்கின் றன. அமரர் கல்கி, அசோகமித்திரன் ஆகியோரின் சிறுகதைகளும் த.கி.நீலகண்டனின் தூது இலக்கியமும் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.
தினகரன் (பக்.340 விலை ரூ.130)
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை முன்னிட்டு மணியன் செல்வத்தின் ஓவியத்துடன் கூடிய, எம்.எஸ். சில துளிகள் கட்டுரை, எம்.எஸ். என்னும் ஆளுமையை விரிவாக அறிமுகம் செய்கிறது. கிளாஸிக் சிறுகதைகளாக லா.ச.ரா., தி. ஜானகிராமன் படைப்புகள் சிறப்பு சேர்க்கின்றன. தீவிர இலக்கிய உலகில் பரவ லாக அறியப்பட்டிருக்கும் எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் சிறுகதைகளும் ஜெயராஜின் ஓவியத்தைத் தாங்கிய பட்டுக்கோட்டை பிரபாகரின் சிறுகதை, பாவண்ணனின் சிறுகதை உள்ளிட்ட பல சிறுகதைகளும் வாசிப்புக்கு உகந்தவையாக உள்ளன.
அமெரிக்கர் ஒருவர் சென்னையின் பிரதான இடங் களைப் பருந்துப் பார்வையில் பார்த்து அதை ஒளிப் படங்களாக்கியிருக்கிறார். வாசகர்களை வசீகரிக்கும் வகையில் அந்தப் படங்களும் அழகாக அமைந்துள்ளன. தமிழ்த் திரை வழியே வாசகருக்கு நன்கு அறிமுகமான பழநிபாரதி, யுகபாரதி ஆகியோரின் கவிதைகளும், அய்யப்ப மாதவன், அ.வெண்ணிலா, ஷக்தி ஜோதி போன் றோரின் கவிதைகளும் மலரின் பக்கங்களில் இடம்பெற் றுள்ளன. மேலும் வரலாறு, திரைப்படம், ஆன்மிகம் எனப் பல பிரிவுகளில் சுவையான பல கட்டுரைகளும் அழகான வண்ணப்படங்களும் மலரை அலங்கரிக்கின்றன.
விஜய பாரதம் (பக் 500, விலை ரூ. 100)
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழ் வார இதழான ‘விஜய பாரதம்’ வெளியிட்டுள்ள தீபாவளி மலர் தனி வகையானது. சங்க இலக்கியங்களிலும் திருக்குற ளிலும் சனாதன தர்மமும் இந்துத்துவச் சிந்தனையும் உள்ளன என்கிறது ஒரு கட்டுரை. ஆண்களைக் கவரும் உடையணிந்த மாதவியால்தான் கோவலன் கெட்டான். அத னால் கல்லூரியில் மாணவிகளுக்கு நவீன உடைகள் வேண்டாம் என்கிறது ‘பெண்ணியம்’ தொடர்பான கட்டுரை.
இந்து மதத்தை விட்டு அம்பேத்கர் வெளியேறியபோது வெளியிட்ட 22 இந்து மத எதிர்ப்பு உறுதிமொழிகள் பற்றிய பாடத்தைக் குஜராத்தில் நீக்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி. அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்துக்காக எழுதப்பட்டுள்ள கவிதை வரிகளாக இந்த மலரில் அவை இடம் பெற்றுள்ளன.
தமிழின் இலக்கியங்கள் இந்து மதக் கருத்துகள் எனும் தேசியச் சிந்தனையின் தொடர்ச்சிதான் என்று நிறுவும் முயற்சியை மலரில் ஆங்காங்கே காண முடிகிறது. சினிமா உட்படப் பன்முகங்களைக் கொண்ட மலர்.
அமுதசுரபி (பக்.300 விலை ரூ.150)
மலரின் அட்டையில் மணியம் செல்வம் கலை வண்ணத்தில் பிறந்த நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன ஓவியம் கண்களையும் மனதையும் கவ்வி இழுக்கிறது. மலரின் உள்ளடக்கம் இயல், இசை, நாடகம் எனப் பகுத்து அளிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர் கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் மணிபாரதி சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. வீயெஸ்வி சிறுகதைக்கு ஓவியர் ஜெயராஜின் ஓவியத்தைப் பயன்படுத்தியிருப்பது நினைவின் வருடல்.
அழகப்பச் செட்டியார், ராஜாஜி, கண்ணதாசன் எனத் தமிழர் வாழ்வில் மாற்றங்கள் நிகழ்த்திய முன்னோடிகளைப் பளிச்சென்று அறிமுகப்படுத்தும் குறுங்கட்டுரைகளுக்கு மத்தியில் ‘முகநூலில் முகம் பார்க்கலாம்’ என்னும் தலைப்பில் சமகால வாழ்வின் தெறிப்புகளும் உள்ளன.
பண்டைய இலக்கியப் பிரிவில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோட்டைவிட்ட அம்சங்களைப் பற்றிய விசாரணை, இசைப்பிரிவில், களிப்பும் மேன்மையும் சேர்க்கும் ‘அபங்’ பற்றிய அறிமுகம், தற்கால இலக்கியப் பிரிவில் பிரமிள் பற்றிய எளிய அறிமுகம் ஆகியவற்றை ஒரு சோற்றுப் பதமாகக் கூறலாம்.
விகடன் (பக்.400 விலை ரூ.125)
சிறுகதைகள், படைப்புகள், நேர்காணல்கள், கவிதைகள் வாசிப்பு சுவாரஸ்யத்தை அளிக் கின்றன. படைப்புகளுக்கு ஏற்ற நயமான ஓவியங்கள், அழகழகான வண்ணப் புகைப்படங்கள் கவர்கின்றன.
நடிகர் சிவகுமார் சினிமாவுக்கு வந்த பொன் விழாவைக் குறிக்கும் வகையில் 50 சத்தான அம்சங்கள் அடங்கிய அவரது டைரியின் பக்கங்கள், அஜித்தின் 56 படங்களைப் பற்றிய பிரதானமான தகவல்கள் சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்கும். ஊட்டி மலை குன்னூரில்தான் இந்தியாவின் விண்வெளி நாயகன் ராகேஷ் சர்மா வசிக்கிறார் என்பது பலருக்குப் புதிய சங்கதியாக இருக்கும். அனுராக் காஷ்யப், இர்ஃபான்கான் ஆகியோருக்கான சந்திப்புகள் குறிப்பிடத் தகுந்தவை.
வரலாறு, கலைப் பயணம், விளையாட்டு, பதிவுகள், ஆல்பம், அனுபவம், திருவிழா என இன்னும் பல கட்டுரைகள், தகவல்களுடன் உள்ளது விகடன் தீபாவளி மலர்.