Last Updated : 11 Feb, 2021 04:29 PM

 

Published : 11 Feb 2021 04:29 PM
Last Updated : 11 Feb 2021 04:29 PM

கதைப்பயணம்: பின்தொடரும் பேய்கள், சிவதாணுவின் ''கள்ளியங்காட்டு நீலி''  

மக்கள் வாழ்கையை நேரடியாகப் பேசும் கதைகள் சிலவகை. மக்களின் உணர்வுகளிலிருந்து சில அதீத போக்குகளை கண்டெடுத்து பேசும் கதைகள் இன்னும் வேறுவகை. பேய்களைப் பற்றி கதைகளை இரண்டாவது வகைக்குள் கொண்டுவரலாம்.

பெரும்பாலும் சிலரின் பயம், திகில் போன்ற உணர்வுகளின் அனுபவங்களை உணரச் செய்யும் கதைகளே பேய்க்கதைகளாக பிரபலமடைந்துள்ளன. 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஓ ஹென்றியின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது.,

ஒருநாள் இரவு புதியதாக ஒரு ஊருக்கு வருகிறான் ஒரு இளைஞன். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள யாருமில்லாத விடுதி ஒன்றில் தங்குவதற்கு அறை கேட்டு காத்திருப்பான். சிறு விளக்கு வெளிச்சத்தில் அவன் அந்த விடுதி நிர்வாகப் பெண்மணியோடு யார் யாரெல்லாம வந்து தங்கிச் சென்றார்கள் பேசிக்கொண்டிருப்பான்.

அவனுக்கு தெரிந்த ஒரு நாடக நடிகையை அவன் பார்த்து நீண்ட நாளாகிறது. ஆனால் அவளைப் பற்றி எந்த தகவலுமே இல்லை... அவன் அந்த விடுதி நிர்வாகப் பெண்மணியுடன் சில விவரங்கள் கேட்பான். அவளின் பெயரைச் சொல்லி சில அடையாளங்களைச் சொல்லி இந்த மாதிரி அழகாக இருப்பாள், அவள் இப்படியெல்லாம அணிகலன் பூட்டிக்கொண்டு இந்த மாதிரியான உடைகளுடன் வாசனை திரவியங்களுடன் வலம் வருவாள்... என்று.

''அவள் இந்த விடுதிக்கு வந்து தங்கினாளா'' என்று கேட்பான். ஆனால் அந்த விடுதி நிர்வாகப் பெண்மணி, ''அப்படி யாரும் வரவில்லை... நீங்கள் சொல்லும் பெயரில் இங்கு யாரும் வரவில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே நாடகக்குழுக்கள் இடம்மாறிக்கொண்டே இருக்கும். அதுபோல நடிகைகளும் வேறுவேறு ஊர்களுக்கு செல்வதால் தனது உண்மையான பெயரில் விடுதியில் தங்குவதில்லை. ஆனால் நிறைய பேர் வந்து தங்கியிருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் பெயரில் அல்லாமல் வேறொரு பெயருள்ள நடிகை நீங்கள் சொல்லும் வகையில் வந்து தங்கிச்சென்றாள். அது நீங்கள் கூறும் பெண்ணா என்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறி அவளது பழக்கவழக்கங்களை சொல்வாள்.

அவனோ தனக்கு நெருக்கமாக இருந்த ஒரு நடிகையைப் பற்றிய நினைவுகளுடனே விடுதிப்பெண்மணி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பான்.

சரியென்று தனக்கு ''ஒரு அறை கிடைத்தால் போதும்'' என்பான். மூன்றாவது மாடியில் கடைசி அறை காலியாக இருப்பதாக சொல்லி அழைத்துச் செல்வாள். உண்மையில் எல்லா அறைகளும் காலியாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றும். அது மிகவும் பழங்கால விடுதி. அந்த எப்போதும் உடைந்து விழுகிற மாதிரியான உளுத்துப்போன சுவர்களும் உத்தரங்களும் கொண்ட விடுதி. காரைத் தரைகளையும் துருபிடித்த படிக்கட்டு இரும்புக் கைப்பிடிகளையும் வர்ணிக்கிற விதமே நமக்கு அச்சம் பீறிடத் தொடங்கிவிடும்.

அறைக்குள் நுழைந்தால் அங்கு பெரிய மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்கிறது. அலமாரியில் அவனுக்கு நெருக்கமான நடிகை பயன்படுத்திய துணிகள்.... அவன் சொல்லிக்கொண்டிருந்த நடிகையின் மீது வீசும் அதே வாசனை திரவியத்தின் மனம். அன்றிரவு அவன் தூங்கினானா அல்லது என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை. உண்மையில் அக்கதையின் பெயர் மறந்துவிட்டது.

பேய்க்கதை ஜானர் வகை இலக்கியவகையில் புதுமைப்பித்தனின் காஞ்சனை ஒரு அரியவகை முத்து என்றுதான் சொல்ல வேண்டும். நான்கைந்து பக்கங்களுக்குள் ஒரு திகில் உணர்வை தூண்டுவது சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனால் மட்டுமே முடியும். காஞ்சனை சிறுகதையை படித்த சில நாட்கள் எனக்கு ஜூரமே வந்துவிடும்போலிருந்து. கதையின் முடிவில் கண்ணாடியில் யதேச்சையாகத் தெரியும் காஞ்சனை எனும் சிறுபெண்ணின் அந்த மர்மச் சிரிப்பை நினைத்து கதையைப் படித்தபிறகு அடுத்துவந்த சில நாட்கள் திகிலோடு மறக்கமுயன்று தூங்கப் பிரயத்தனப்பட்டுள்ளேன். தமிழ் இலக்கியத்தில் காஞ்சனைக்கென்று ஓர் இடம் உண்டு.

மாறி வரும் சிந்தனைகள் பேசவிரும்பும் படைப்புக் கர்த்தாக்கள் ஒன்று புதுமைப்பித்தனை மிஞ்ச வேண்டும். அல்லது மாற்றி ஏதாவது யோசிக்க வேண்டும். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. .

''சில பேய்கள் சுருட்டு கேட்கின்றன.. சாராயம் கேட்கின்றன. சில பேய்களோ கறி ஆக்கிப்போடச் சொல்லி கேட்கின்றன... என்று தொடங்கிச் செல்லும் கவிதை அதென்னமோ கூரை வீட்டு முனியம்மாக்களையும் கடைசிவீட்டு மிளகாய் கடித்து கூழ்குடிக்கும் குப்பமமாவையும்தான் பேய் பிடிக்கிறது'' என்றும் முடியும்.

இக்கவிதையில் எவ்வளவு தெளிவான சிந்தனை... கவிதையில் கற்பனை இருக்கலாம். ஆனால் நிஜம் இருக்கவேண்டும். அதுவும் புத்தியில் உறைக்கற மாதிரி சொல்கிற நிஜங்கள்.

மேலே சொன்ன ஒரு கவிதையின் சில வரிகளைப் போலவே ஒரு அழகான கதையை எழுதியிருக்கிறார் சிவதாணு. தொண்ணூறுகளின் கதை சொல்லி சிவதாணு. அவரது கதைகள் தெருமுனை டீக்கடையில் நின்று நம்மிடம் நன்கு தெரிந்த ஒருவர் நிறைய அனுபவங்களை பகிர்ந்துகொள்வது போலவே சுவாரஸ்யமாக இருக்கும் அதேநேரம் கச்சிதமான வடிவமும் கூடியிருக்கும்.

சிவதாணுவின் கள்ளியங்காட்டு நீலியைப் பற்றி பேசுவதற்குள் தமிழ்நாட்டின் பழையனூர் நீலிக்கதையைப் பற்றி சிறு அறிமுகம். பழையனூர் நீலி பேய்க்கதைக்கு இணையாக உலகின் வேறு எந்த பேய்க்கதையும் ஈடு இணை இல்லை.

வணிகனாக தொழில்செய்யும் ஒருவனால் மிகுந்த கொடுமைக்கு நீலி என்ற பெண் ஆளாவாள். கடைசியில் அந்த வணிகள் அவளை கொலை செய்துவிடுவான். உயிரிழந்த நீலி அவனைப் பழிவாங்குவதற்கு பேயாக வந்து அவனைக் கொல்ல முயற்சிப்பாள். ஆனால் அவனோ ஒரு மந்திரவாதியிடம் பெற்ற வாளின் உதவியால் அவளிடமிருந்து தப்பித்துக்கொண்டிருப்பான். ஒருநாள் ஊர் பஞ்சாயத்து பெருந்தனக்காரர்களைக் கூட்டி கணவனை தன்னுடன் சேர்த்துவைக்க சொல்லி அழுவாள்.

அவளது (நீலிக்) கண்ணீரை உண்மையென நம்பி கணவனை அவளுடன் சேர்த்துவைக்க அவனுக்கு உத்தரவிடுவார்கள். இதனால் ''அவ என் மனைவி இல்லை, பேய்'' என்பான். அவளிடமிருந்த அவனது குழந்தை அப்பா என ஓடி அவனை முத்தமிட வணிகன் சொல்வது பொய் என்றே அவர்கள் கருதுகின்றனர். அவளிடமிருந்து மந்திர வாளையும் பிடுங்கிக்கொண்டு, ''உனக்கு எதாவது ஆபத்து என்றால் நாங்கள் 70 பேரும் தீக்குளிக்கிறோம்'' என்று தீரப்பு வழக்கி விடைபெற்றுவிடுகின்றனர். உண்மையில் நீலி என்ற அந்தப் பேய் அவனை அன்று இரவு அவனை கொன்று விடுகிறது. மறுநாள் தீர்ப்பு வழஙகிய ஊர் பெரியவர்களான 70 வேளாளர்களும் தீக்குளித்து இறந்துவிடுவார்ரகள். இவர்கள் அனைவருக்கும் திருவாலங்காடு அருகே சிலைகள் உள்ளதாகவும் கேள்வி. பழைய தமிழ் இலக்கியங்களில் இதற்கான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

கள்ளியங்காட்டு நீலி என்ற ஒரு பேயை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சிவதாணு. சிவதாணு தனது வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஆட்டோ ஓட்டினார். சென்னை நகரிலேயே நான் பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன். அவருடைய சிறுகதைத் தொகுப்பில் அத்தனை கதைகளுமே அவர் ஆட்டோக்காரராக வலம்வந்து நேரில் பார்த்த அனுபவங்களே சிறுகதைளாக அதில் கதை சொல்லியான ஓர் ஆட்டோ ஓட்டுநராக சிவதாணு இடம்பெற்றிருப்பார்.

அதன்பிறகு சின்னத்திரை தொடர்கள், பாலுமகேந்திராவின் குறும்படங்கள் என நடிக்கத் தொடங்கினார் சிவதாணு. என்றாலும் ஆட்டோவை அவர் விடவில்லை. காரணம் ஆரம்பத்திலிருந்தே ஆட்டோவை அவர் நம்பியதுதான். இதற்கிடையில்தன் அவர் ஒரு சிறுதை எழுத்தாளராகவும் பரிணமித்தார். ஒரு வார இதழில் சுஜாதா பதில்கள் இடம்பெற்ற காலம் அது. அப்போது ஒரு வாசகர் சுஜாதாவிடம் ''ஆட்டோ ஓட்டும் என் நண்பன் ஒரு பட்டதாரி அவன் செயல் வரவேற்கத்தக்கதா? என்று கேட்க, அதற்கு சுஜாதா, சுயமரியாதையடன் எந்தத் தொழில் செய்வதிலும் தவறென்ன? சிவதாணு என்ற சிறந்த கதாசிரியர்கூட ஆட்டோ ஓட்டுகிறார் என்று மேறகோள் காட்டியிருப்பார்.

சிவதாணு தற்போது இல்லை. எனினும் அவர் சொன்ன கதைகள் வழியே அவர் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

சிவதாணு எழுதிய ''கள்ளியங்காட்டு நீலி'' இப்படி தொடங்குகிறது,

''அழகம்மன் கோவில் தெருப் பெண்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் செய்தி, குப்புசாமி பொண்டாட்டி மாடத்திக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதுதான். குப்புசாமி என்கூடத்தான் கழுதைசந்தை பள்ளியில் ஒன்றாகப் படித்தவன்'' என்று தொடர்கிறார் கதைசொல்லியான சிவதாணு.

இதனால் அந்தப் பக்கம் ஆட்டோ ஓட்டி செல்லவேண்டாமென கதைசொல்லியின் மனைவி சொல்கிறார்.

வறுமையின் காரணமாக ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கம்பளத்தில் ஒரு மளிகைக்க்கடையில் வேலைக்கு சேர்கிறான குப்புசாமி. எட்டுவருட வேலை அனுபவத்திற்கு பிறகு அவனுக்கு திருமணம் நடக்கிறது. ஒசரன்விளையைச் சேர்ந்த மாடத்தி மனைவியாக வந்தாள். அவளது நகைகளையே அடகுவைத்து ஒரு கடை போடுகிறான். கடையில் நல்ல வருமானம் வரவ ர வசதி கூடுகிறது. இதனால் குடிப்பழக்கமும் அவனுக்கு சேர்ந்துவிட இந்த சமயத்தில மாடத்திக்கு பேய் பிடிக்கிறது. அவளிடம் வந்து குடிகொண்டிருப்பது கள்ளியங்காட்டு நீலி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நீலியை அவளிடமிருந்து ஓட்டுவதற்கு பூசாரி உள்ளிட்ட யார் யாரையோ அழைத்துவந்து அவளிடமிருந்து பேய்விரட்ட ஏற்பாடு செய்கிறான். ஏற்கெனவே அடங்கி ஒடுங்கிக்கிடந்த மாடத்தியின் உடம்பில் நீலி வந்தபிறகு குப்புசாமியிடம் சீறுகிறாள். எதிர்த்து அடிக்கிறாள்.

பல நேரங்களில் மாடத்தி தலையை விரித்துப்போட்டு ''டேய் நான் யார் தெரியுமாடா கள்ளியங்காட்டு நீலியாக்கும் உன்னை என்ன செய்கிறேன் பார்'' என்றபடியே குப்புசாமியை போட்டு அடிக்கிறாள். இதனால் கதைசொல்லி சிவதாணுவின் ஆடடோவில் மாடத்தியை உட்கார வைத்துக்கொண்டு பல்வேறு ஊர்களுக்கும் சென்று பேய் ஓட்டிவர செல்கிறான் குப்புசாமி.

ஆனால் வழியெங்கும் ரகளைதான். ஆத்துவாக்கால் மாந்திரீகவாதி, சோட்டானிக்கரை மாந்திரீகவாதி என்று கேரள மாந்திரீவாதிகளைத் தேடி செல்கிறார்கள். கடைசியில் மணவாளக்குறிச்சி செல்வதென முடிவாகிறது. போகிற வழியெல்லாம் ஒரே ரகளைதான். ஒரு இடத்தில் கதைசொல்லி சொல்கிறார், பேய்க்கு ஆட்டோ ஓட்டினால் இதை எல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று.

கதையை மிகவும் நகைச்சுவையோடு சொல்கிறார் சிவதாணு. ஒரு இடத்தில் அவரது எழுத்து இப்படி நகர்கிறது, ''குப்புசாமி ஒருநாள் என்னிடம் வந்து மணவாளக்குறிச்சில மலையாள மாந்திரீகவாதி ஒருத்தர் இருக்காராம், அவர் எப்பேர்ப்பட்ட பேயையும் நாடு கடத்திடுவாராம்,''என்கிறான். பாஸ்போடு, விசா, எதுவுமே இல்லாம பேயை இந்தியாவை விட்டே விரட்டுவார் என்பதுபோல சொன்னான். அப்படி அவர் விரட்டுவார் என்பதுபோல சொன்னான். அப்படி, அவர் விரட்டிய பேய்கள் எல்லாம் இந்திய எல்லைகளில் நின்று கதறிக்கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றியது'' என்று கூறுகிறார்.

பேய்விரட்டும் மாந்திரீக ஜாலங்களை நகைச்சுவையோடு விளக்கிச் செல்கிறார். கடைசியில் ஒருநாள் குப்புசாமி ''இவளுக்கு பேய்பிடித்துவிட்டது அவளது கொழுந்தியாளை எனக்கு கட்டிவையுங்கள்'' எனக் கேட்க மாடத்திக்கு தெளிவு ஏற்பட்டு விடுவதாக கதை முடிகிறது. உண்மையில் ஆண்களின் கொட்டத்தை அடக்கும் ஒரு குறியீடுதான் ''பேய்பிடித்தல்'' என்பதை இக்கதையில் மிக நாசுக்காக சொல்கிறார் சிவதாணு .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x