Published : 01 Feb 2021 10:44 AM
Last Updated : 01 Feb 2021 10:44 AM

திரைப்படச் சோலை 2: அந்த அப்பளம் எங்கே போச்சு?

சிவகுமார்

1965, பிப்ரவரி 8-ம் தேதி தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. ஓவியக் கல்லூரியில் என் தலைமையில் 20 பேர் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். பத்திரிகைகளில் செய்தி வந்தது.

1965, ஜூன் 19-ம் தேதி ஏவிஎம்மின் ‘காக்கும் கரங்கள்’ படம் வெளிவந்தது. கோடை விடுமுறையில் கிராமத்தில் நான் இருந்தேன். ஜூலை 1-ம் தேதி மாலை 5.20 க்கு பத்துப் பைசா ஸ்டாம்ப் ஒட்டிய தபால் கவரில் ஜெமினி ஸ்டுடியோவிலிருந்து, ‘உடனே புறப்பட்டு வரவும். உங்களுக்கு எங்கள் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு தருகிறோம்!’ என்ற செய்தி வந்திருந்தது.

நான் முதன்முதல் பார்த்த திரைப்படம் ‘சந்திரலேகா’. அதன் க்ளைமாக்ஸ் காட்சியில் முரசுகள் மேல் பெண்கள் நடனமாடுவதும், பாடல் முடிந்ததும், முரசின் அடிப்பக்கக் கதவுகளைத் திறந்துகொண்டு வீரர்கள் வெளியேறி, கொடுங்கோல் மன்னனை எதிர்த்துச் சண்டை போடுவதுமான காட்சி மனத்திரையில் நிழலாடியது.

சந்திரலேகா முரசு நடனம்

‘கணநாதனே வருக’ என்று ஒளவையார் கே.பி.எஸ்., பாடியதும் விநாயகர் சிலையிலிருந்து ஒரு யானை புறப்பட்டு வெளியே வந்து காட்டுப்பகுதி சென்று 2 கால்களையும் தூக்கி நின்று பிளிற, படை படையாக யானைக்கூட்டம் வருவதும், நெற்றியில் விபூதிப் பட்டை அடித்த அந்த யானைகள் கோட்டை வாயிற்கதவைத் தந்தத்தால் குத்தித் திறப்பது போன்ற காட்சிகளும் நினைவுக்கு வந்தன.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படம் நான் கிராமத்திலிருந்து சென்னை வந்தபோது மோகன் ஆர்ட்ஸ் கம்பெனிக்கு அடுத்த காம்பவுண்டில் -வெலிங்டன் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது.

அதன் கிளைமாக்ஸில் ‘கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே’ பாடலில் ‘சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று வைஜயந்தி மாலாவும், பத்மினியும் ஆடும் போட்டி நடனம் போல இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் ஒரு காட்சி வந்ததில்லை.

அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது சுவையான சம்பவம் நடந்ததாக பத்மினி பின்னாளில் என்னிடம் சொன்னார்.

டி. ஆர். ராஜகுமாரி

வைஜயந்தி, பத்மினி இருவருமே பரதத்தில் அசாத்திய தேர்ச்சி பெற்றவர்கள். ஒருவரை மிஞ்சி ஒருவர் ஆடக்கூடியவர்கள். போட்டி என்று வந்தால் யாராவது ஒருவர் தோற்க வேண்டும். இரண்டு நாட்டியத் தாரகைகளின் மனம் புண்படாதவாறு ஆட்டத்தின் கடைசியில், ஜெமினி கணேசன் லஸ்தர் விளக்கை இணைத்துள்ள கயிறை வெட்டிவிட, தலைக்கு மேலே 20 அடி உயரத்திலிருந்த லஸ்தர் கீழே விழுந்து சிதற ஆட்டம் தடைப்பட்டு நிற்பது போல முடித்திருந்தார் வாசன்.

அதை விட சுவாரஸ்யமான விஷயம். தன்னை விட பத்மினி நன்றாக ஆடியிருக்கிறாரா என்று பார்க்க வைஜயந்திக்கு ஆர்வம். பாடல் காட்சி ஒரு வாரம் படமாகியது. 3 நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அதுவரை படமாக்கப்பட்டதை பார்க்கலாமா என்று வாசனிடம் வைஜயந்தி கேட்க, ‘ஓ, தாராளமாகப் பார்க்கலாம்!’ என்று சொன்னவர் வைஜயந்தி ஆடிய ஷாட்களை மட்டும் இணைத்துப் போட்டுக்காட்டினராம்.

அதேபோல் பத்மினி படமாக்கப்பட்டவரை பார்க்கலாம் யார் ஆட்டம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளக் கேட்டபோது பத்மினி ஷாட்டுகளை மட்டும் இணைத்துத் திரையில் காட்டினாராம். படம் முடியும் வரை முழு பாடல் காட்சியை இருவருக்கும் வாசன் காட்டவே இல்லையாம்.

சரித்திரம் படைத்த 'சந்திரலேகா' படம் 40 லட்சம் ரூபாய் செலவில் தமிழ், இந்தியில் 1948-ல் தயாராகி 650 பிரிண்டுகள் போட்டு உலகெங்கும் உள்ள தியேட்டர்களில் ஓடியது.

வைஜயந்திமாலா

ஒளவையார் வேடத்தில் 5 ஆண்டுகள் நடித்த கே.பி.எஸ் அம்மையாருக்கு 1953-ல் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தவர். பிரம்மாண்டங்களுக்குப் பெயர் போனவர். அவரையா நாம் நாளை சந்திக்கப் போகிறோம்? என்று நினைத்தபோது மூளைக்குள் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பறந்தன.

முதல் தடவையாக விழுந்தடித்து கிராமத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வந்து ரிசர்வ் செய்யப்படாத பெட்டியில் தாவி ஏறி, விடிய விடிய கண்விழித்து சென்னை வந்து சேர்ந்தேன்.

ஒரு சாதாரண புதுமுகம். என்னை அழைத்துப் போக ஜெமினியிலிருந்து எனது வீட்டுக்கு கார் மாலை 5.30க்கு வந்தது.

ஜெமினி ஸ்டுடியோவுக்குள் நினைத்த மாத்திரத்தில் நுழைந்துவிட முடியாது. ஜெமினி அழைப்புக் கடிதத்தை மெயின்கேட்டில் வாட்ச்மேனிடம் கொடுக்க வேண்டும். அது நேரே ரிசப்ஷன் பகுதிக்குப் போகும். அது பிறகு புரொடக்‌ஷன் மானேஜரிடம் போகும். பின் ஜெனரல் மானேஜர். பி.ஏ., கடைசியாக வாசன் கைக்குப் போகும்.

இத்தனை தடைகளைத் தாண்டி நாம் உள்ளே போகக் குறைந்தது அரை மணிநேரம் ஆகும். ஜெமினி ஸ்டுடியோ காரில் சென்றதால் உடனே கதவு திறக்கப்பட்டது. 5-வது நிமிடத்தில் அந்த மேதை முன் நிறுத்தப்பட்டேன்.

கே.பி. சுந்தராம்பாள்

அறையின் உள்பக்கம் வெளிர் நீல வண்ணச்சுவர். அடர் நீலத்தில் தரையில் கார்ப்பெட். பாலீஷ் போட்ட கருந்தேக்கு மேஜை. சுற்றிலும் 4 நாற்காலி. நேர் எதிரே தும்பைப்பூ போன்ற வெள்ளைத் தலைமுடியுடன் வெள்ளை கதர் முக்கால் கை சட்டை, தோளில் கதர் துண்டு போட்ட அளவான உயரமுள்ள மனிதர் -தென்னிந்தியாவின் சிசில்.பி.டெமில்லி என்று போற்றப்பட்ட வாசன். என்னைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றார்.

எனக்கு ‘திக்’ என்றாகி விட்டது. எனக்குப் பின்னால் யாராவது பெரியவர்கள் வந்து விட்டார்களா என்று திரும்பிப் பார்த்தேன்.

வணக்கம் சொன்னவர் ‘வாங்க உட்காருங்க’ என்றார்.

‘‘ARE YOU FROM KARNATAKA?’’

‘‘NO SIR!’’

‘‘MIGHT BE FROM ANDRA?’’

‘‘NO SIR. I AM PAKKA TAMILAN!’’ - என்றேன். ‘‘THEN LET US TALK IN TAMIL!’’ என்று பேச ஆரம்பித்தார்.

‘‘அதென்ன சிவகுமார்னு பெயர்? உதயகுமார், கல்யாணகுமார்னு கன்னட நடிகர்கள்தானே பேர் வச்சுப்பாங்க. நீங்க எப்படி சிவகுமார்னு பேர் வச்சுட்டீங்க?’’

‘‘சார். எம்பேரு பழனிசாமி. ஏவிஎம் நிறுவனம் கொஞ்சம் மாடர்னா இருக்கட்டும்னு சிவகுமார் ஆக்கிட்டாங்க!’’ என்றேன்.

அட்டகாசமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ‘‘ 'காக்கும் கரங்கள்' படம் இன்னும் நான் பாக்கலை. ஏதோ டைலாக் டெலிவரில இன்னும் கொஞ்சம் தெளிவு வேணும்னு சொன்னாங்க!’ என்றார்.

‘‘சார், நான் அடிப்படையில் ஓவியன். ஊர் ஊராப் போய் ஓவியம் தீட்டறது என் படிப்பு. நடிப்புக்கு நான் புதியவன். நாடகம் சரியாகப் பார்த்தது கூட இல்லை. நல்ல பயிற்சி எடுத்துக்குவேன்.!’’ என்றேன்.

சிவாஜியின் மூத்த மருமகன் வேடம். காஞ்சனா உங்களுக்கு ஜோடி. உங்களுக்குச் சம்பளம் 1,500 ரூபாய் முடிவு செஞ்சிருக்கேன். பரவாயில்லையா? ஓகேன்னா ஓப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் வாங்கிக்குகங்க..!’’ என்றார்.

கனவுலகில் மிதந்தேன்.

1965 ஜூலை மாதம் 5-ம் தேதி ஒப்பந்தப் பத்திரத்தில் முதன்முதலாக சிவகுமார் என்று கையெழுத்திட்டு ரூ. 500 அட்வான்ஸ் வாங்கினேன். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் அந்த 500 ரூபாயை எடுத்து அம்மாவுக்கு 400 ரூபாய் அனுப்பி வைத்தேன்.

‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ -படம் ‘கிரஹஸ்தி’ என்ற பெயரில் இந்தியில் முன்னரே எடுத்து ஹிட் ஆன படத்தின் தமிழ் ஆக்கம்.

எஸ்.எஸ்.வாசன், எஸ்.எஸ்.பாலன் -அவர் மகன் இருவருமே படத்தை இயக்கினார்கள். சில நாள் வாசன் இயக்குவார். பெரும்பகுதி பாலன் இயக்கினார்.

வாசன் இயக்கத்தில் ஒரு நாள் நான் நடித்த அனுபவம் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

மேஜர் சுந்தரராஜன் என் தகப்பனார். காஞ்சனாவை நான் திருமணம் செய்து கொண்டாலும், B A பட்டம் வாங்கிய பிறகே இவன் மனைவியை வீட்டுக்கு அழைத்துப் போவோம் என்று சிவாஜியிடம் சொல்லிவிட்டதால், கல்லூரி நாட்களில் திருட்டுத்தனமாக மனைவியைச் சந்திக்க மாமனார் வீட்டுக்கு வருவேன்.

வைஜயந்திமாலாவுடன்

சிவாஜிக்கு 5, 6 பெண்கள் அந்தப் படத்தில். காஞ்சனாவை நெருங்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு பெண் வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். கடைசித் தொல்லை நாகேஷ். சிவாஜி வீட்டில் வளரும் அவர் தங்கை மகன் அவர்.

பகல் உணவுக்கு சிவாஜி வீட்டுக்கு வருவார். அப்போது நான் காஞ்சனாவைப் பார்க்க வந்திருப்பேன்.

மருமகன் இப்படி வருவது மாமனார் சிவாஜி -மாமியார் செளகார் இருவருக்கும் பிடிக்கும்.

பகல் உணவு வேளை. எல்லோரும் சாப்பிட செளகார் பரிமாறிக் கொண்டு சிவாஜியிடம் பேசும் காட்சியை வாசன் டைரக்ட் செய்தார்.

டைனிங் டேபிளுக்கு குறுக்காக ட்ராலி போட்டு கேமரா முதலில் என் மீது இருக்கும். செளகார் என் இலையில் பொரியல், அப்பளம் பரிமாறுவார். பின் கேமரா செளகாருடன் சிவாஜியிடம் செல்லும். ‘என்னங்க! மாப்பிள்ளையை இன்னிக்கு தங்கிட்டுப் போகச் சொல்லுங்க!’ என்று செளகார் சொல்ல, ‘எனக்கும் ஆசைதான். ஆனா அவங்க அப்பா விடமாட்டாரே, இல்லே மாப்பிள்ளே?’ என்று சிவாஜி கேட்பார். நான் மெளனமாக ஆமாம் என்று தலையாட்ட வேண்டும். இது காட்சி.

மோட்டார் சுந்தரம் பிள்ளை-காஞ்சனாவுடன்

ஒத்திகை தொடங்கும்போது வாசன் சாரிடம், ‘சார்! நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். உங்களுக்கு வசனம் ஒன்றுமில்லை. சும்மா சாப்பிட்டு இருக்கறதுதான்!’ என்றார்.

ஒத்திகை ஆரம்பமாயிற்று -செளகார் எனக்குப் பரிமாறிவிட்டு சிவாஜி பக்கம் போய் அந்த வசனத்தைப் பேசினார். சிவாஜி பதில் சொன்னார். ‘ஓகே! I WILL GO FOR A TAKE என்ற வாசன் திரும்பிவந்து என் இலையைப் பார்த்தார். அதில் அப்பளத்தைக் காணோம்.

பதறிப் போய்விட்டார். சிவகுமார் இலையில் இருந்த அப்பளம் என்ன ஆயிற்று? அசிஸ்டென்ட் டைரக்டர் கிட்டப்பாவை அழைத்து, ‘கிட்டப்பா! அப்பளம் எங்கே போச்சு? FAN காத்துல பறந்துடுச்சா? தேடிப் பாரு!’ன்னாரு. அந்த மனிதர் டேபிள் அடியில் எல்லாம் தேடறாரு.

ஒரு விநாடி கழித்து வாசனுக்கு ஏதோ தோன்ற என் இலை அருகே வந்து உற்றுப் பார்த்தார். பொடிப் பொடியாக அப்பளத்துண்டு சில இலையில் இருந்தது.

விகடன் பாலனுடன்

‘‘என்ன அப்பளத்தைச் சாப்பிட்டேளா? ரிகர்சல்ல சாப்பிட வேண்டியதில்லை- சாப்பிடற மாதிரி நடிச்சாப் போதும்’’-னாரு.

சிவாஜிக்கு ஏற்கெனவே முட்டைக் கண் -லேசாக ஒரு பார்வை பார்த்தார். ‘எங்கடா புடிச்சுிட்டு வந்தீங்க இந்தக் காட்டுமிராண்டியை?’ என்று அவர் கண்கள் கேட்டன.

கைகால் உதறல் எடுத்தது. கண்ணில் நீர் சுரந்தது. அப்போது கூட சாப்பிடற மாதிரி நடிக்கறது எப்படின்னு எனக்குத் தெரியாம பேய் முழி முழிச்சதை இப்பக்கூட என்னால மறக்க முடியலை.

---

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x