

பழைய நினைவுகள் செல்லும் பாதையில் ஒரு அடி எடுத்து வைத்துவிட்டால் போதும், நம்மையறியாமலே நம் மனம், கடந்து வந்த சுவடுகளைத் தேடி ஓடும். நம் நினைவுக்குத் தெரிந்து நாம் கண்ட, கேட்ட, ரசித்த விஷயங்கள் காலப்போக்கில் நம் கண் முன்னேயே கரைந்து காணாமல் போய்விட்டிருக்கின்றன.
எங்கோ ஒரு மூலையில் அவற்றைப் பற்றிய தகவல்கள் சிறு அளவில் கிடைத்தாலும் நமது மனம் அடையும் கிளர்ச்சி அளவில்லாதது. தொன்மையான கலாச்சாரத்தைக் கொண்ட நமது சமூகம் தனது தொன்மை குறித்த ஆர்வத்தையும் பெருமிதத்தையும் தேடலையும் கொண்டிருக்கிறது. ஆனால், நவீன காலத்தின் வேகமான பாய்ச்சலால் நமது சமகாலத்திலேயே தொன்மையாகிவிட்ட விஷயங்கள் ஏராளமாக இருக்க அவற்றையெல்லாம் நாம் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.
இந்த நவீனத் தொன்மைதான் இந்தப் பக்கத்தின் மையம். கற்பனைக் குதிரையைப் பறக்க விட்ட காமிக்ஸ் புத்தகங்கள், மணல் குவித்து அமர்ந்து திரைப்படம் பார்த்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள், கிரைம் நாவல்கள், பாட்டுப் புத்தகங்கள், ஃபவுண்ட்டன் பேனா, ஆர்க்கெஸ்ட்ரா பார்த்த அனுபவங்கள், சிறு வயது விளையாட்டு, ஜட்கா வண்டி பயணம் என்று எத்தனை பொக்கிஷங்கள் பழைய நினைவின் பாதையில் பரவிக்கிடக்கின்றன.
ஒருநாள் இவையெல்லாம் பொக்கிஷமாகிவிடும் என்பதை அறியாமல் இவற்றைத் தங்கள் அன்றாட வாழ்வில் அனுபவித்துவந்தவர்களுக்கும், இந்த விஷயங்கள் பற்றிய அறிமுகமில்லாத இளம் தலைமுறையினரின் பார்வைக்கும் பழைய நினைவுகளை வைக்கவே இந்தக் காலப்பயணம். ஒவ்வொரு வாரமும் நினைவின் நதியில் பின்னோக்கி நீந்தத் தயாராகுங்கள். அது மட்டுமல்லாமல் வாசகர்களாகிய நீங்களும் உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தகுதியானவை பிரசுரிக்கப்படும்.
உங்கள் நினைவுகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editpage@thehindutamil.co.in