Last Updated : 27 Jan, 2021 03:30 PM

 

Published : 27 Jan 2021 03:30 PM
Last Updated : 27 Jan 2021 03:30 PM

கலர் பிம்பங்கள்: 3 மன்னிப்பின் மாண்பைப் பேசும் திரைப்படம் ஷோபாவின் பொன்னகரம்

80-களின் தமிழ் சினிமாவில் எத்தனையோ அதிசயங்கள் நடந்துள்ளன. அதில் இன்னொரு அதிசயம்தான் ஷோபா.

நம்ப முடியாத ஒரு கனவைப்போல வாழ்க்கை கடக்க முடியாத ரயில்வே ஸ்டேஷன்களையெல்லாம் கடந்துவந்துவிட்டது. திரும்பிப் பார்க்கும்போது வெகுதூரம் வரை ஒரு தண்டவாளப் பாதைதான் தெரிகிறது. அதற்குப் பின்னால் சின்னஞ்சிறுப் பருவங்கள் நிறைய இருக்கலாம். ஆனால் இனி திரும்பப் பெறமுடியாது என்பதை உணர்த்தும் ஒரு வெற்று அடிவானம்தான் நமக்குத் தெரிகிறது.

பருவங்களை திரும்பப் பெறமுடியாமல் போகலாம். அதன் நினைவுகளை...? எனக்கு அப்போது 11, அல்லது 12 வயதிருக்கும் என்று ஞாபகம். அப்போதெல்லாம் கிராமங்களில் விவசாய வேலைகள் போக மீதி நேரங்களில் பேச்சுபேச்சு பேச்சுதான். எங்கள் வீட்டின் திண்ணையில் அப்பாவுடன் ஊர் பெரியவர்கள் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். தவிர, கல்லூரியில் படித்த அண்ணனின் நண்பர்கள் பள்ளி இறுதியாண்டித்த படித்த அக்காவின் தோழிகள் எல்லாம் வருவார்கள். அதனால் வீட்டின் தாழ்வாரம், நடை, கூடம் அனைத்தும் கலகல கலகல.......

சின்ன அண்ணனோ நானோ நண்பர்களுடன் வெளியில் விளையாடுவதோடு சரி.

எங்கள் வீட்டு தோட்டத்தில் மற்றப் பூக்களைப்போல டிசம்பர் பூக்களுக்கும் ஒரு இடம் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அக்காவின் தோழி மாலதி (பெயர் மாற்றப்பட்டது) அக்காதான். அந்த அக்காவின் தந்தை பிடிஓ அலுவலகத்தில் வேலை. குவார்ட்டர்ஸில் குடியிருப்புகள் காலி இல்லை என்பதால் அடிக்கடி வீடு மாறுவார்கள். அதனால் போகிற இடத்தில்எல்லாம் டிசம்பர் பூச்செடிகளை கொண்டுபோக முடியாது என்பதால் எங்கள் வீட்டில் கொண்டுவந்து நிறைய நட்டுவிட்டார்கள். அது மார்கழி காலங்களில் பூத்துக்குலுங்கும் அழகு சொல்லிமாளாது.

ஷோபா நம்வீட்டுப் பெண்ணைபோல.....

மாலதி அக்கா. கிட்டத்தட்ட நடிகை ஷோபா போலவே இருப்பார். முள்ளும் மலரும் உள்ளிட்ட எத்தனையோ படங்கள் அப்போது எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்திருந்தோம். அதனாலேயே ஷோபாவை எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அலட்டிக்கொள்ளாத, ரசாபாசம் இல்லாத இயல்பான நடிப்பு... உண்மையில் நம் வீட்டில் ஒரு பெண்போலவே அவர் இருந்தார்.

ஒருநாள் வீட்டிற்கு வந்த மாலதி அக்கா, நடிகை ஷோபா இறந்துவிட்டதாக வந்து சொன்னபோது வீடே துக்கத்தில் மூழ்கியது. 'யாரோ ஒரு நடிகைக்காகவா இருக்கற வேலைகளை விட்டு இப்படி ஒரு குடும்பம் இப்படி துக்கத்தில் ஆழ முடியும்?' என்று நீங்கள் கேட்கலாம். அது அப்படியில்லை.

ஷோபா உயிரிழக்கும்போது அவரது வயது 17 அல்லது 18 தான். இளம்பெண்களின் தற்கொலை பூமி ரெண்டாக பிளப்பதற்கு சமம். அதிலும் தனது 17 வயதிலேயே 'பசி' திரைப்படத்தின் மூலமாக தேசிய விருதான 'ஊர்வசி' பட்டம் வென்ற ஒரு இளம்பெண்ணின் மரணம் எப்படி உங்களை உலுக்காமல் இருக்கமுடியும்.

ஷோபாவின் இறுதி ஊர்வலக் காட்சி இடம்பெற்ற 'சாமந்திப்பூ'

அவர் இறந்த பிறகு இரண்டொரு மாதங்களில் அவர் கடைசியாக நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. இரு படங்களுக்கும் இயக்குநர் கே.எஸ். மாதங்கன்.

அதில் ஒன்று சாமந்திப்பூ. அப்படத்தின் போஸ்டரில் இப்படி எழுதி இருந்தார்கள். 'இத்திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் நடிகை ஷோபாவின் இறுதி ஊர்வலம் காட்டப்படும்' என்று. படத்தின் இறுதிக் காட்சியில் கதையோடு ஒட்டியதாகவே இறுதி அஞ்சலிகள், இறுதி ஊர்வல ஒரிஜனல் புட்டேஜ்கள் இடம்பெற்றிருந்தன. ஒரு கல்லூரி விரிவுரையாளராக அப்படத்தில் வரும் ஷோபா, வெளிவட்டாரங்களில் எளிய மக்களோடு பழகுவார். ஒரு எளிய ரிக்ஷாகாரனை (சிவக்குமார்) காதலிப்பார். எவ்வளவோ போராட்டத்திற்குப் பிறகு வேறொருவரோடு திருமணத்தை தடுக்கமுடியாத நிலை ஏற்படும். வெளியே சிவக்குமார் பங்களா வீட்டின் மெயின் கேட்டில் உள்ளே விடவில்லை என்பதால் வேறு வழியில் வந்துகொண்டிருப்பதை அறிந்து உடனே தனது அறையிலிருந்து வெளியேறி மணக்கோலத்தோடு வீட்டை தப்பித்து ஓடிவந்து தன்னைத் தேடிவரும் சிவக்குமாரை அணைத்துக்கொள்வார்.

அப்போது சிவக்குமார் சொல்வார், ''வந்துட்டேன் டீச்சர் உங்களுக்கு நான்தான் என்ற முடிவோடு நான் வந்துட்டேன் டீச்சர்'' என்று. காதலர்கள் இணைந்த மகிழ்ச்சியில் ரசிகர்களும் மனநிறைவோடு படம்முடிந்துவிட்டதென்று கிளம்பத் தயாரான தருணங்களில்தான் ஷோபா அப்படியே நழுவி கீழே விழுவார். அவர் கட்டாய திருமணத்திலிருந்து தப்பிக்க முன்னதாக விஷம் அருந்தி இருப்பதை சிவக்குமார் அப்போதுதான் கண்டு மனம் வெதும்புவார். படத்தில் பங்கேற்ற அனைவரும் ஷோபா இறப்புக்கு துக்கப்படும் காட்சியோடு ஷோபாவின் உண்மையான இறுதி ஊர்வலக் காட்சி அடுத்தடுத்து தொடரும்.

உண்மையில் எனது அக்காவின் தோழி மாலதி அக்காவுக்கும் இப்படியொரு நிலை ஏற்பட வாய்ப்பிருந்தது. அவரை நினைத்து என் அண்ணனின் தோழன் இளம் கல்லூரி மாணவர் ஒருவர்தான் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மாலதி அக்கா ஊரைவிட்டே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. வெளியூரில் டிரைசம் ஸ்கீமில் டெய்லரிங் பயிற்சி ஆசிரியைக்காக படித்து அதற்கான பதவியில் பொறுப்பேற்றபோது அவரையும் யாரோ ஒரு என்ஜீனியர் காதலித்தார். ஆனால் மாலதி அக்கா இம்முறை காதலை வெறுக்கவில்லை. மாலதி அக்காவுக்கும் வாழ்வில் ஒரு பிடிப்பு வேண்டியிருந்தது. அதனால் அவரும் அவரை விரும்ப வீட்டிலோ கடும் எதிர்ப்பு. ஆனால் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. வீட்டை விட்டு வெளியே வாழும் மாலதி அக்கா தான் விரும்பியவரையே மணந்துகொண்டார். பின்னர் ஒருநாள் தனது கணவரோடும் குழந்தையோடும் வீட்டுக்கு வந்தபோது மாலதி அக்காவை அவரது வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. அடித்து உதைத்து அனுப்பிவிட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே மாலதி அக்கா உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை, அடித்து உதைத்து அனுப்பிவிட்டார்கள் என்ற இந்த செய்தி என் மனதில் வடுவாக தங்கிவிட்டது.

கடும்தவறுகள் என்று நாமாக கற்பிதம் கொண்டிருப்பதாலேயே சில செயல்களை மன்னிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். உண்மையில் மன்னிப்பு என்ற வார்த்தையைவிட உலகில் அற்புதமான வார்த்தை எதுவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. சிலநேரங்களில் சின்ன தவறுகள் அல்ல, பெரும்பாவங்கள் கூட மன்னிக்கப்படுவதுண்டு. மன்னிப்பு அளிக்கும் மனோபலமும் உண்மையை உணரும் ஞானமும்தான் அதற்கு தேவை என்கிறது ஒரு ஜென் கதை.

ஒரு பெரும் கொலைகாரன் தான் மனம் திருந்திவிடலாம் என முடிவெடுத்து புத்தரை நாடி வருகிறான். ஆனால் புத்தரது சீடர்கள் அவனை உள்ளே விட மறுக்கின்றனர். எப்படியாவது புத்தரை காண்பது என்ற ஆர்வத்தில் புத்த மடாலயத்தின் வாசல் சுவரில் தனது தலையாலேயே திரும்பத்திரும்ப மோதிக் கொள்கிறான். இதனால் சளசளவென்று ரத்தம் வர அவ்வழியே வந்த புத்தர் இக்காட்சியைக் காட்டு என்ன கொடுமை இது என அவனை உள்ளே அழைத்து வந்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறார். அவரது முக்கிய சீடர்களில் ஒருவரான சாரிபுத்தர், ''அவன் நிறைய கொலைகள் செய்தவன். மக்களால் வெறுக்கப்பட்டவன் அவனை எப்படி ஏற்றுக்கொள்வது'' என்று கேட்கிறார்.

புத்தர் சொல்கிறார், ''சாரிபுத்தா நீ நல்லவன் ஆனால் உனக்கு ஞானம் இல்லை. பாவங்களின் சுமை எத்தகையது என்பதை நீ அறிந்திருக்கவில்லை. இவனோ அதன் தவிப்பை உணர்ந்தவன். அவனுடைய எண்ணத்தை உன்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இறந்த காலம் என்பது உண்மையில் இறந்துபோன காலமே. தன் பாவச் சுமையான இறந்த காலத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற தவிப்புதான் அவனை புதியவனாக மாற்றியிருக்கிறது'' என்றார்.

வித்தியாசமான கதை கொண்ட பொன்னகரம்

ஷோபாவின் கடைசித் திரைப்படமான பொன்னகரம் ஜூலை 14ல் 1980ல் வெளியானது. பொன்னகரம் மாபெரும் மன்னிப்பை கோரும் ஒரு உன்னதமான கதை அமைப்பை கொண்டுள்ள படம். ஊருக்குக் கொடுமைகள் செய்த பண்ணையார் திடீரென உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சைக்காக ஊரை விட்டு போனவர் பட்டணத்திலேயே இறந்துவிடுகிறார். பட்டணத்திலேயே படித்து வளர்ந்த அவரது குழந்தைகள் (சரத்பாபு, லாவண்யா) வளர்ந்த நிலையில் தங்களது பூர்விக கிராமத்திற்கு 'காலஞ்சென்ற தனது தந்தையாரின் பண்ணை நிலங்களில் உழுது விவசாயம் செய்து கிராமத்திலேயே வாழலாம்' என்ற நோக்கத்தோடு வருவார்கள். இதனை கேள்விப்பட்ட கிராம மக்கள் அவர்கள் வரும் பாதையெல்லாம் நின்றுகொண்டு அந்த கொடுமை செய்த பண்ணையாரின் வாரிசுகளை வெஞ்சினத்தோடு தூற்றிப் பேசுதல் காரி உமிழ்தல், மண்ணைவாரித் தூற்றுதல், மிகக் கேவலமான வரவேற்பை அளிப்பார்கள். அதுமட்டுமின்றி அவர்களுக்கு ஊர்சார்பாக ஒரு உதவியும் செய்யக்கூடாது என ரெயில்வே ஸ்டேஷன் வெளியே காத்திருக்கும் மாட்டு வண்டியிலிருந்து மளிகைக் கடை வரை எல்லோருக்கும் சொல்லிவிடுவார்கள்.

போகப்போக தனது தந்தையார் செய்த கொடுமையெல்லாம் பற்றி அறிந்துகொண்டாலும், தங்கள் நல்ல தன்மைகளை வெளிப்படுத்தும் விதத்தில் பண்ணையாரின் வாரிசுகள் ஊர் மக்களின் மனதை மாற்றமுடியும் என்று நம்புகிறார்கள். லாவண்யா ஆங்கில மருத்துவம் பயின்றவர் என்பதால் அவர் கிராம மக்களுக்கு மருத்துவம் செய்ய முன்வருவார். ஆனால் கொடுமை செய்த பண்ணையாரிடம் மருத்துவம் செய்துகொள்ளவேண்டாம், பிரசவத்தில் மகள் உயிர் போனால்கூட பரவாயில்லை என துணிபவர்களும் இருக்கிறார்கள்.

ஊர் பெரியவர் வேதாசலத்தின் மகள் ஷோபாவுக்கோ அந்தப் பண்ணையாரின் வாரிசுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம்... எண்ணம்தான். தன்னை மலைமுகடிலிருந்து விழாமல் காப்பாற்றிய சரத் பாபு ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் ஷோபாவின் தோழி பிரசவ வலியால் துடித்தபோது கிராமத்தினரின் பிடிவாதம் காரணமாக பிரசவம் பார்க்க வந்த லாவண்யாவின் மருத்துவத்தை புறக்கணித்ததால் தனதுதோழி உயிரிழப்பும் ஒரு காரணம்.

உள்ளூர் ஆட்கள் மறுத்துவிட வெளியூர் ஆட்கள் வந்து விவசாயம் செய்வதையும் ஊர்மக்கள் தடுப்பதைக் கண்டு ஷோபா மனம்புழுங்குவார். தனது தந்தையான ஊர் பெரியவரின் ஆட்கள் பண்ணையாரின் வாரிசுகளின் வீட்டுக்குச் செல்லும் அரிசி பருப்பு மூட்டைகளையும் வண்டியோட்டியை அடித்துவிரட்டி பறித்துக்கொள்ளும் செய்திகேட்டு வருந்துவார்.

அடிபட்டால்கூட ''உன் கையால் வைத்தியம் வேண்டாம்'' என்று கிராமத்தினர் பிடிவாதமாக இருப்பதோடு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் இருவரையும் எவ்வளவு அவமானப்படுத்தமுடியுமோ அவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள் ஊர் மக்கள். ஆனால் பாம்பு கடித்து துடிக்கும் இளைஞன் ஒருவனை லாவண்யா காப்பாற்றுகிறார். அவன் ஊர்பெரியவர் வேதாசலத்தின் தங்கை மகன். ஷோபாவை மணம் முடிக்க இருக்கும் ஸ்ரீகுமார். ஆனால் ஷோபாவை அல்ல லாவண்யாவைத்தான் அவன் நேசிக்கிறான். ஷோபாவோ சரத்பாபுவை நேசிப்பதாக கதை போகிறது.

சரத்பாபு தனது தந்தையின் நிலத்தையெல்லாம் ஊர்மக்கள் பெயரில் எழுதுவதற்கான வேலைகளில் மும்முரமாக இருப்பது ஊர் மக்களுக்கு தெரியாது.

கொடுமை செய்த பண்ணையார் மகளும் மருத்துவருமான லாவண்யாவும் தனியே ஸ்ரீகுமாரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து கிராமத்துப் பெரியவர்களின் உத்தரவுக்கிணங்க அந்த ஊர் பெண்கள் துரத்திப்பிடித்து லாவண்யாவின் கூந்தலை சின்னாபின்னமாக்கி வெட்டிவிடுகின்றனர். கடைசியில் மக்களை திருத்தமுடியாது என்ற நிலையில் ஊரைவிட்டே செல்வதென முடிவெடுத்து ஊரை விட்டே புறப்படுகின்றனர். ஆரம்பக் காட்சியைப்போல மக்கள் அவர்கள் செல்லும் பாதையெங்கும் நின்று பார்க்கின்றனர்.....

அப்போது ஷோபா பேசுவார்..... ''இந்த ஊர்ல வாழமுடியாதுன்னு போறாங்களே, கொடுமைக்காரங்கன்னு ஒதுக்கிவச்சதோட இல்லாமல் அவங்களை விவசாயம் செய்யமுடியாம தடுத்தோமே நாம வலியால துடிக்கும்போது நமக்கு உதவிகள் செய்யணும்நெனைச்சாங்களே... அவங்க கெட்டவங்க நாமெல்லாம் நல்லவங்களா''... என்று கேட்பார்.... இப்படி வரிசையாக எல்லா சம்பவங்களையும் சொல்லி ''நாமெல்லாம் நல்லவங்க அவங்க கெட்டவங்களா, இப்பவாவது அவங்களை மன்னிக்கக்கூடாதா?'' என்று கேட்பார். கடைசியில் ஊர் மக்கள் தங்கள் தவற்றை உணர்ந்துகொண்டு ரெயில்வே ஸ்டேஷனை நோக்கி ஓடுவார்கள். சரத்பாபு, லாவண்யாவை மன்னித்து அழைத்து வருவார்கள்.

பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படங்கள் என்று வழக்கமான பாணியில் சென்று பிரமிக்கவைத்து முதுகுவலி ஏற்படுத்தாமல், மனித மாண்பை வலியுறுத்தும் 'மன்னிப்பு' என்ற வார்த்தைக்கு ஒரு தமிழ் சினிமாவில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. வித்தியாசமான ஒரு கதைக்காக மட்டும் ஷோபாவின் கடைசிப் படமான பொன்னகரத்தில் இடம்பெற்றுள்ள மசாலா காமெடி, டூயட் பாடல்கள், பரபரப்புக்கும் ரெயில்வே ஸ்டேஷன் கிளைமாக்ஸ் போன்ற காட்சிகளையும் நிச்சயம் மன்னித்துவிடலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x