Last Updated : 25 Jan, 2021 05:43 PM

 

Published : 25 Jan 2021 05:43 PM
Last Updated : 25 Jan 2021 05:43 PM

துணைக்கண்டத்தின் சினிமா: 8- ஜெர்மானியர்களைச் சிதறடித்த சீக்கிய ராணுவ வீரனின் கதை

'சஜ்ஜன் சிங் ரங்ரூத்' படத்தில் ஒரு காட்சி.

கடந்துசெல்லும் மேகங்கள் அல்ல வரலாறு... அது அசைக்கமுடியாத மலைமுகடு என்கிறது 'சஜ்ஜன் சிங் ரங்ரூத்' பஞ்சாபி திரைப்படம்.

உலக சினிமாக்களில் ஐரோப்பிய போர்க்களக் காட்சிகளைக் காணும்போது நம் இந்தியாவிலும் இப்படியெல்லாம் அல்லது இதைவிடக் கடுமையாக நடந்திருக்கிறதே அதையெல்லாம் ஏன் திரைப்படமாகக் காண முடிவதில்லை என்ற ஏக்கம் எழத்தான் செய்கிறது.

முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போருடன் இந்தியாவும் பலவாறாகச் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். கடந்தகால வரலாறுகளில் எண்ணிலடங்கா உண்மைக்கதைகள் பல நல்ல படைப்பாளிகளின் கரங்களுக்காகக் காத்துக்கிடக்கின்றன என்பதுதான் உண்மை.

நமக்கு மிகவும் நெருக்கமாக ஒரு சம்பவம். எம்டன் கப்பல் சென்னையில் குண்டு போட்டது. மறைந்திருந்து தாக்குவது, யாரும் எண்ணமுடியாத துணிகரக் காரியங்களில் ஈடுபடுவது, தந்திரத்தோடு செயலாற்றுவது போன்ற காரணங்களுக்காக சிலரை நாம் எம்டன் என்று அழைப்பதுண்டு. அதில் எந்தவிதத்திலும் குறையாத குணங்களோடு உண்மையில் எம்டன் கப்பல் ஒரு நாள் இரவு (14.9.2014) வந்து குண்டுபோட்டு சென்னைத் துறைமுகத்தில் பிரிட்டிஷாரின் எண்ணெய்க் கிடங்குகளைச் சிதறடித்துவிட்டுத் தப்பிச் சென்றது.

இதற்குச் சரியாக நூறு ஆண்டுகள் கழித்து, எம்டன் கப்பல் சென்னையில் குண்டுபோட்ட 100-வது ஆண்டை நினைவுகூரும் நிகழ்ச்சியொன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை உட்லண்ட்ஸ் சிம்பொனி அரங்கில் 26.10.2014 அன்று (ஞாயிற்றுக்கிழமை) 9 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஜெர்மனி தூதர் ஆச்சிம் ஃபேக் வரவேற்புரை ஆற்ற, சிறப்புரை ஆற்றியது சர்வதேச தரம் மிக்க நம்ம ஊர் ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து Kreuzer Emden (1932) என்ற ஜெர்மனி திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த ஜெர்மனி திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா... எம்டன் கப்பல் உலகின் பல்வேறு கடற்பரப்புகளைக் கடந்து வரும் வழியில் பல கப்பல்களை அழித்து கடைசியில் சென்னையில் வந்து குண்டுபோட்டதுதான்.

நமக்கு வரலாற்று ஆவணமாக இத்திரைப்படம் திகழ்கிறது. ஆனால், நாம்தான் இதற்கான குறிப்புகளைத் தேடிப்பிடித்து நம் தரப்பில் ஒரு புதிய படைப்பை உருவாக்கத் தவறிவிட்டோம்.

ஆனால், முதலாம் உலகப் போரில் இந்தியா சார்பாக பிரிட்டிஷ் படைக்குத் துணையாக ஜெர்மனி வீரர்களைச் சிதறடித்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த சிப்பாயை இன்றுவரையிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் பஞ்சாப் மக்கள். துணிச்சல்மிக்க வீரன் பிறந்த கிராமத்தில் அவனுக்காக நினைவுத்தூணை எழுப்பியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அவனை மறக்காமல் நினைவஞ்சலியை செலுத்துகின்றனர் அம்மாநில மக்கள்.

சஜ்ஜன் சிங் எனும் கிராமிய இளைஞன் எவ்வாறு இந்திய பிரிட்டிஷ் ராணுவக் கல்லூரியில் சேர்ந்து நாட்டின் பெருமையைக் காக்க ஜெர்மனியர்களை எதிர்த்துப் போரிடுகிறான் என்பதைச் சித்தரிக்கும் 'சஜ்ஜன் சிங் ரங்ரூத்' திரைப்படம் 2018-ல் வெளிவந்தது.

ஆனால், இத்திரைப்படம் முழுக்க முழுக்க பிரிட்டிஷாரின் ஆணவத்தையும், அடக்குமுறையையும் பெரும்பாலும் சித்தரிக்கிறது. கடைசி முக்கால் மணிநேரம்தான் ஜெர்மானியருடன் போர்.

பிரிட்டிஷ் ஆர்மியில் சேரமாட்டேன் யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டேன் என்கிறாரே தவிர, தாயின் வேண்டுகோளை ஏற்று அவர் ஆர்மியில் சேர்ந்துவிடுகிறார். இதில் மிகவும் முக்கியமானது என்னவெனில் ராணுவத்தில் சேர்ந்த பிறகு பிரிட்டிஷாரே வியக்கும் அளவுக்கு ஜெர்மனியை எதிர்த்துப் போர் புரிந்து பிரிட்டிஷுக்கு வெற்றியை ஈட்டித் தந்துவிட்டு அந்தத் திருமணமாகாத இளைஞன் உயிரை விட்டுவிடுகிறான் என்பதுதான்.

அக்காலத்தின் ஓர் அழகிய பஞ்சாப் கிராமத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஒரு வைராசிராய் வீட்டில் பணியாற்றுகிறார் தயாள் சிங். வைசிராய் ஜான் என்பவரிடமும், அவரது மனைவிடமும் நற்பெயர் பெற்றவர் தயாள் சிங். தன் மகனுக்கு ஒரு வேலை தர வேண்டும் என வைசிராய் மனைவி மூலமாகவே வைசிராயிடம் கேட்டுச் சம்மதம் பெறுகிறார். ஆனால், வீட்டில் தன் மகன் சஜ்ஜன் சிங்கிடம் இதை எடுத்துச்சொன்னபோது கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

சஜ்ஜன் சிங், ''நான் யாருக்கும் முக்கியமாக, ஆங்கிலேயருக்கு அடிமையாக இருக்க மாட்டேன். நீங்கள் சொல்லும் வேலை எனக்குத் தேவைவில்லை'' என்கிறான்.

சஜ்ஜன் சிங்கின் பிடிவாதத்தைத் தாயின் அன்பு தளர்த்துகிறது. வேறு வழியின்றி தந்தையோடு வைசிராய் மாளிகைக்குச் செல்கிறான். அங்கேயும் அவரைப் பார்த்தவுடன் வணங்க வேண்டும் என்று தோன்றவில்லை. தந்தைக்குத் தர்மசங்கடமாகி விடுகிறது. அவர் அவனைக் கண்களால் காட்டி வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறார். ஆனால், அவன் வைசிராயை வைத்தகண் வாங்காமல் பார்த்து முறைக்கிறான். தந்தையின் தொந்தரவு தாங்காமல் வணக்கம் செலுத்துகிறான். அப்போது வைசிராய் சொல்கிறார். ''உன் தந்தை இங்கே 10 வருடங்களாக வேலை செய்கிறார். அவரது விசுவாசத்திற்காக உனக்கு வேலை நிச்சயம்'' என்கிறார்.

மேலும் ''நீங்கள் எந்தத் தவறு செய்யவும் வாய்ப்பில்லை'' என்கிறார். அதற்கு அவன் புன்னகைத்தவாறே சொல்கிறான். ''ஏற்கெனவே நாங்க நிறைய தவறு செஞ்சாச்சு.... அதையே நான் மீண்டும் செய்யப்போவதில்லை'' என்று. அப்படி அவன் சொல்லும்போது அவர் முகம் சுருங்குகிறது. தந்தையோ நெளிகிறார்.... ''அவன் என்ன சொல்றான்னா... உண்மையா இருப்பேன். அர்ப்பணிப்போட வேலைகளைச் செய்வேன் என்கிறான்'' என்று அவருக்குப் புரிய வைக்கிறார். அதையும் புரிந்துகொண்டு வைசிராய் சொல்கிறார். ''நீங்கள் இந்திய பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்துள்ளீர்கள்'' என்று.

சஜ்ஜன் பிரமாண்டமான லாகூர் டிவிஷன் ராணுவக் கல்லூரி வளாகத்தில் நுழைகிறான். இக்காட்சிவரையிலான முதல் 20 நிமிடங்களே நம்மை எழுந்து நிமிர வைத்துவிடுகிறது. தொடர்ந்து ராணுவக் கல்லூரிப் பயிற்சி, கிராமத்தில் அவனைப் போருக்கு வழியனுப்புதல், கிராமியப் பெண்ணுடன் காதல் நிச்சயதார்த்தம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளுடன் மோதல், இறுதியாக ஜெர்மானியருடன் போர் என அதன்பிறகு 2 மணி நேரம் ஒரு வரலாற்றின் சடசடக்கும் பக்கங்களாக விரிகிறது திரைப்படம்.

இதில் முக்கியமானது ஜெர்மானியருடன் நிகழும் போர்க்களக் காட்சிகள் ஆகும். அதையும் விட முக்கியமானது பிரிட்டிஷ் ராணுவத்தினருடன் அவ்வப்போது நேரும் மோதல் காட்சிகள்.

ஆறுமாதம் கழித்து 1914 Europe எனக் காட்டப்படும் முதல் காட்சியிலேயே அதற்கான முதல்புள்ளி வைக்கப்படுகிறது.

இந்திய ராணுவம் ஐரோப்பியாவில் உள்ள ராணுவ முகாம்களில் அணிவகுத்துச் செல்லும்போது தங்கள் கூடாரங்களின் அருகே அமர்ந்திருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள், வீரர்கள் அவர்கள் கம்பீரமாக நடந்துசெல்வதை கிண்டல் அடிக்கிறார்கள். ''ஹேய் உங்களுக்குத் துப்பாக்கிய எப்படிப் பிடிக்கணும்னு தெரியுமா'' என்று.

இதனால் அனைவரது உள்ளமும் துடிக்கிறது. சஜ்ஜன், அவர்கள் எதிரே, ''என்ன சொல்றாங்க அவங்க. துப்பாக்கிய எப்படி பிடிக்கணும்னு தெரியுமான்னா கேக்கறீங்க. உங்களை மாதிரி ஆட்களை எந்த ஆயுதமும இல்லாம வெறும் கைகளாலேயே எப்படிக் கிழிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்'' என்று ஆவேசமாகக் கூறி தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான். இது அவர்களை மேலும் சீண்டிவிடுகிறது. ஒரு வஞ்சகம் மிக்க மேஜர் சஜ்ஜனைப் பழிவாங்கத் துடிக்கிறான்.

எனினும், படைத் தலைவரான சுபேதார் சாஹேப் சொரோவர் சிங், சஜ்ஜன் உள்ளிட்ட இந்தியச் சிப்பாய்களின் கோபத்தைத் தணியவைக்கிறார். அதேநேரம் லட்சியத்தை நினைவுபடுத்துகிறார்.

''முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்களாக நாம் இங்கு கூடியுள்ளோம். குறைந்தபட்சம் நம் மதங்களை அவர்கள் கேலி செய்யவில்லை. நம்மை மதம் மாறச்சொல்லி அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. அதுவரைக்கும் பொறுத்துக்கொள்வோம். ஏன் தெரியுமா, நாம் வந்திருப்பது நமது நாட்டுக்காக, நமது கிராமத்திற்காக, நமது மக்களுக்காக. நாம் அனைவரும் சுதந்திரம் பெறுவதற்காக. இவற்றை மறந்துவிடவேண்டாம்.

பின்னர் இந்தப் போரில் நாம் வென்றுவிட்டால் நிச்சயம் நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும். ஜெர்மானியர்களுக்கு எதிரான இந்தப் போரில் நாம் வென்றெயாக வேண்டும். நாம் இந்தப் போரில் வெல்கிறோம்...'' என்று சுபேதார் சாஹேர் முழக்கமிட அனைவரும், ''ஆம், நாம் வெற்றி பெறுகிறோம்'' என்று உடன் முழங்குகிறார்கள்.

இந்தியச் சிப்பாய்கள் முதன்முதலாக ராணுவ கேண்டீனில் தேநீர் அருந்தச் செல்கிறார்கள். அங்கே அந்த வஞ்சகம் மிக்க மேஜரும் இன்னும் சில அதிகாரிகளும் வழியில் அமர்ந்தபடி ஒரு இந்தியச் சிப்பாயை காலால் தடுக்கி விழவைக்கிறார்கள். சஜ்ஜனை இது கோபமுறச் செய்கிறது. வஞ்சக மேஜரை நேருக்குநேர் மோதிக் கீழே தள்ளுகிறான். அதற்குள் பணிப்பெண் வந்து அவர்களைப் பிரிக்கிறார்.

வஞ்சக மேஜர், ''மூன்று அடி பின்னால் சென்று மன்னிப்பு கேள். இல்லைன்னா இந்தப் பெண்ணோட வேலை பறிபோயிடும்'' என்கிறான். வேறு வழியின்றி அந்தப் பெண்ணுக்காக அந்த இடத்தில் மன்னிப்பு கோருகிறான் சஜ்ஜன்.

ராணுவ கேண்டீனில் பிரிட்டிஷ் ஆர்மியைச் சேர்ந்தவர்களுக்கு செல்ஃப் சர்வீஸ் எனப்படும் தேவைப்படுவதை எடுத்துச் சாப்பிடும் சுதந்திரம் உள்ளது. ஆனால், இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனி உணவு பரிமாறப்படும் பிரிவுக்குச் செல்லுங்கள் என்று வழியைக் காட்டுகிறார்கள். இதெல்லாம் இந்திய ராணுவத்தினருக்கு மன உளைச்சலையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. அப்போதுதான் அங்கு வந்து அமர்ந்திருக்கும் சுபேதார் சாஹேப் சொரோவர் சிங்கிடம் முறையிடுகிறார்கள். ''சுபேதார் ஜி, அவர்களுக்கு பல்வேறு வகையான உணவு வகைகள். நமக்கோ வெறும் காய்ந்த ரொட்டி மட்டும்''.

சுபேதார் சிப்பாய்களைப் பரிவோடு பார்த்துவிட்டு அவர்களை அமைதியாக ரெஸ்டாரன்ட் இருக்கையில் அமரச் சொல்கிறார். அதில் ஒருவர் கேட்கிறார். ''நமக்கு சாப்பாட்ல கூட வித்தியாசம் காட்டணுமா? வீரர்களைப் பொறுத்தவரை அனைவருக்கும்தான சத்தான உணவு தேவை என்பது அவர்களுக்குத் தெரியாதா?''

சுபேதாரிடம் ஒரு வீரர் சொல்கிறார். ''நாம மாட்டுக்கொட்டாயில கூட கால்நடைகளுக்கு நல்ல உணவு கொடுத்துத் தான் பழக்கப்பட்டிருக்கோம்'' என்று.

அப்போது தேநீரை வாங்கி வந்து அவர்கள் அருகே நின்றபடி சஜ்ஜன் சொல்கிறான். ''நாம் போரில் வெல்ல வேண்டும் என்றால் இத்தகைய சூழ்நிலைகளையும் வெல்லக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறான்.

பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்கும் நேரடியாக மோதல் பயற்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதுதான் சீக்கியர்கள் என்று உலகம் புரிந்துகொள்வதற்காக வைக்கப்பட்ட காட்சி.

அதிலும் தந்திரத்தோடு இந்தியர்களை வெல்ல அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்திய வீரர் ஒருவர்... எதிரே தாக்க வருபவர்கள் பிரிட்டிஷ் வீரர்கள் மூவர். அவர்கள் வகைவகையாகச் சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள். இவர்களோ ரொட்டி மட்டும்தான். இதுதான் வெள்ளையர்களின் கொடுங்கோன்மை என்பது.

வஞ்சகமான மேஜர், சீக்கிய சிப்பாயின் டர்பனில் துப்பாக்கியால் தாக்குகிறான். டர்பனில் அடிக்காதே என சுபேதார் கத்துகிறார்.

அப்போது பிரிட்டிஷ் கம்பேல் பீல்டு மார்ஷல் சொல்கிறார், ''நடக்கப்போகும் போரில் ஜெர்மானியர்களுக்கு டர்பனா ஹெல்மெட்டா என்று தெரியாது. சண்டை இப்படித்தான் இருக்கும்'' என்கிறார். தனது மத அடையாளங்களில் கை வைத்துவிட்டார்கள் எனத் துடிக்கும் சஜ்ஜனையே அடுத்ததாக போகச் சொல்கிறார் சுபேதார்.

வெறியோடு செல்லும் சஜ்ஜன் வேகம் குறையாமல் அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறான். அவர்களைத் தோற்கடித்து மூக்குடைபட வைக்கிறான். அதில் வஞ்சகமான மேஜருக்கு கழுத்தில் ரத்தம் வருகிறது. அப்போது பிரிட்டிஷ் பீல்டு மார்ஷல் ''ஓகே ஓகே ரத்தம் வருகிறது'' என்கிறார். வரிசையாக நிற்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஒருவர் சொல்கிறார். ''நடக்கப்போகும் போரில் ஜெர்மானியர்களுக்கு ரத்தம் வருவதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள் என்று'' .

இப்படி படம் முழுவதும் அதிரடியான வசனங்களும், காட்சிகளும் முதலாம் உலகப் போர் காலகட்டத்தை நம் கண் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

டர்பனை இழுக்க முயன்ற வஞ்சகமான பிரிட்டிஷ் மேஜரைக் கடுமையாகத் தாக்கி அடித்துநொறுக்கிவிட்டு, ''சீக்கியர்களுக்கு டர்பன்களை எவ்வாறு கட்டுவது என்று தெரிந்தவர்களுக்கு, அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பதும் தெரியும்'' என்று சஜ்ஜன் சொல்கிறார். இயக்குநர் பங்கஜ் பத்ராவின் இயக்கத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் காட்சி இது.

அடுத்தடுத்த காட்சிகளில் ஒருமுறை ஊருக்குச் சென்று திரும்பும் காட்சி. அத்தகைய காட்சிகளில் காதலியிடம் கடைசியாக விடைபெறுதல், போர்க்களத்திற்குச் செல்லுதல். இப்படத்தில் அகழியில் பதுங்கிக்கொண்டு ஜெர்மானியர்களுடன் போர்புரியும் காட்சிகளில் இந்தியர்களே மிளிர்ந்து நிற்கிறார்கள் என்பதை பிரிட்டிஷார் உணர்ந்துவிடுகின்றனர். பிரிட்டிஷார் இந்தியர்களை முன்னிறுத்திவிட்டு ஒதுங்கிவிடுகின்றனர்.

கடைசியில் ஜெர்மானியருக்கும் இந்தியருக்கும் சண்டை நடக்கிறது. நாளாக நாளாக வந்த இந்தியச் சிப்பாய்களில் பலர் மாண்டுவிடுகின்றனர். கடைசிக் காட்சிகளில் சஜ்ஜன் தனது இன்னுயிரைப் பணயம் வைத்து மிகப்பெரிய மோட்டார் வெடிகுண்டை ஜெர்மானியரின் பாசறை அருகே சென்று இயக்க முற்படுவான். வழியிலேயே அவனைப் பார்த்த மாத்திரத்தில் சுட்டுவிடுவார்கள். வயிற்றில் குண்டடிபட்ட காயத்தோடு அவர்கள் காணாதவாறு தவழ்ந்து வந்து ஜெர்மானிய பாசறை அருகே பொருத்தப்பட்டிருந்த மோட்டாரை இயக்கிட ஜெர்மானியர்களின் அகதியெங்கும் ஒரு பிரமாண்ட வெடிகுண்டு வெடித்துச் சிதற நூற்றுக்கணக்கான ஜெர்மானிய வீரர்கள் செத்து மடிவார்கள். ஆனால், இந்தியப் படைத்தலைவர் சுபேதார் சொரோவர் சிங் கதறக்கதற சஜ்ஜனின் உயிர் பிரியும்.

உண்மையில் முதலாம் உலகப்போருக்கு இவ்வளவு வலுவான திரைப்படம் இந்தியாவில் வாய்ப்புள்ளதா என நினைக்கும்போது சற்று பெருமிதமாகவே உள்ளது.

இறுதிக் காட்சிகளில் சஜ்ஜனை வேலைக்கு வைத்த அதே வைசிராய் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும்போது சொல்கிறார். ''மிக நேர்மையாக தங்கள் கடமையைச் செய்தீர்கள் சஜ்ஜன். எங்கள் இதயத்தில் எப்போதும் வாழ்வீர்கள்'' என்று கூறி சல்யூட் வைக்கிறார். அவரைத் தொடர்ந்து அனைத்து வீரர்களும் சல்யூட் வைத்து வீரவணக்கம் செலுத்துகின்றனர். அதைப் பார்க்கும் சஜ்ஜன் தந்தை தயாள்சிங் உள்ளம் பூரித்து ஆனந்தக் கண்ணீரோடு முகம் பெருமிதமாக அவரும் தன் மகனுக்கு வீரவணக்கம் செலுத்துவார்.

எம்ப்ராய்டரி நெய்த பூத்தையல்களின் நளினங்களில் பின்னப்பட்ட ஆடை அணிகலன்களோடு வாழும் மனிதர்கள், இரவுகளில் தீப்பந்தங்கள், பெரிய விளக்குகளோடு அகன்ற தாழ்வாரங்கள், மாடு, கன்றுகள் குடியிருக்கும் முற்றங்கள் என மண் வீடுகளையே இவ்வளவு அழகழகாகக் காட்ட முடியுமா என்று தோன்றும்படியான வினீத் மல்ஹோத்ராவின் ஒளிப்பதிவு அழகு. அக்கால பஞ்சாப் கிராமங்கள், வைசிராய் பங்களா, ராணுவக் கல்லூரி வளாகம், ஐரோப்பிய இடங்கள் என மிகவும் பொறுப்பான கலை இயக்கம் பாராட்டுக்குரியது.

எந்நேரத்திலும் மனம் தளராமல் இளைஞர்களை உரிய திசையில் வழிநடத்தும் ராணுவ சுபேதாராக நடித்த யோகராஜ் சிங்கின் நடிப்பு இப்படத்தின் ஆணிவேர். சஜ்ஜன் சிங்காக முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்த தில்ஜித் டோசன்ஜ் அனைத்துவிதமான தருணங்களிலும் தனது எளிய நடிப்பை வழங்கி வரலாற்று வீரனை நம் மனதில் பதியவைத்துவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x