Published : 25 Jan 2021 11:03 AM
Last Updated : 25 Jan 2021 11:03 AM

சித்திரச்சோலை 33: ‘கேட் வே ஆஃப் இந்தியா’

சிவகுமார்

‘வாழ்நாள் முழுவதும் ஓவியம் பற்றியே சிந்திக்க வேண்டும். ஓவியத்தையே சுவாசமாகக் கொண்டு கடைசி மூச்சு வரை வரைந்து கொண்டிருக்க வேண்டும்!’ என்ற வைராக்கியம் சென்னை வரும் முன்னும் இருந்தது. ஓவியக்கல்லூரி படிப்பு முடியும் வரை கூட இருந்தது.

‘நீ வரையும் ஓவியங்களுக்கு உயர் மட்டத்தில் அங்கீகாரம் கிடைக்காது. பாணி மாறி விட்டது. உன் பாணி வயிறு கழுவும் பத்திரிகை ஓவியங்கள் வரையவே உதவும்!’ என்று ஆசிரியர்களும், பலதுறை மேதைகளும் சொன்னபோது மனம் ஒடிந்து போனது உண்மைதான்.

‘பொம்மை போடறதெல்லாம் ஒரு படிப்பாடா? புத்தி கெட்டுப் போய் படிக்கிறியே. நாலு காசு சம்பாதிக்க அதில வழி இருக்கா?’ன்னு என் பள்ளித் தோழன்- செல்வராஜ்- கணிதமேதை - கிண்டல் செய்த போது, உன் படிப்பை வைத்து, ‘நீ 10 ஆயிரம் சம்பாதித்தால், என் ஓவியங்கள் மூலம் 10 ஆயிரத்து 1 ரூபாய் சம்பாதித்துக் காட்டுகிறேன்!’ என்று சூலூரில் வீராப்பாகச் சவால் விட்டது நினைவுக்கு வந்தது.

கேட்வே ஆஃப் இந்தியா, தாஜ் ஓட்டல்

சாதிச் சான்றிதழ் பெற கிராம முன்சீப்பிடம் கையெழுத்து வாங்கப் போனேன். ‘இது பெரிய படிப்பா தண்டபாணி?’ன்னு மணியக்காரர் தாமோதரசாமி நாயுடு கேட்டார். அவரை முன்னால் உட்கார வைத்து அரை மணி நேரத்தில் அவர் முகத்தை வரைந்து காட்டியபோது, ‘உங்கையில இவ்வளவு பெரிய வித்தை வச்சிருக்கியா?’ என்று ஆச்சரியப்பட்டார்.

‘விடிந்தால் ஓவியக் கல்லூரியின் கடைசி நாள். தேசத்தலைவர் முகங்களை அச்சு அசலாக வரைகிறோம். கோயில்களையும் கோபுரங்களையும் நேரில் பார்ப்பது போல வரைகிறோம். இயற்கை காட்சிகள், பறவைகள், விலங்குகள் எல்லாவற்றையும் அப்படியே வரைய முடியும். நாளையுடன் படிப்பு முடிகிறது. சேர்ந்தாற்போல 1000 ரூபாயை நாம் இதுவரை கண்ணால் பார்த்ததில்லையே. இந்த ஓவியக்கலை நமக்குச் சோறு போடுமா?’ என்று இரவெல்லாம் தூங்காமல் தவித்தபோது ‘ஏவிஎம் டெஸ்ட் - ஓகே’ என்று மறுநாள் தகவல் வந்தது.

வாடி வதங்கிக் கிடந்த ஒரு குழந்தையை வானத்திலிருந்து பறந்து வந்த தேவதை அள்ளி எடுத்து அணைப்பது போலிருந்தது.

‘காக்கும் கரங்கள்’ படத்தில் நீங்க செகண்ட் ஹீரோ. இதில் நடிக்க உங்களுக்கு ரூ. 1000 சம்பளம். இந்தாங்க அட்வான்ஸ்!’ என்று தயாரிப்பு நிர்வாகி ரங்கசாமி அய்யங்கார் 100 ரூபாய் கொடுத்தபோது -சொர்க்கத்தில் மிதந்தேன். நடுக்கடலில் தத்தளித்தவனை, 'காக்கும் கரங்கள்' நீட்டி ஏவிஎம் எடுத்து அணைத்துக் கொண்டது.

மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் - மாடியிலிஈருந்து -கேட்வே ஆஃப் இந்தியா, தாஜ் ஓட்டல்

வேஷங்கள் பெரிதாக இல்லை. ஆனால் நிறுவனங்கள் சரித்திரம் படைத்தவை. ஏவிஎம், சிவாஜி, வைஜயந்தி மாலா, எஸ்.எஸ்.ஆர், அஞ்சலிதேவி, லலிதா பத்மினி ஆகியோரைத் தொடக்கக் காலத்தில் பயன்படுத்திய நிறுவனம்.

ஜெமினியின் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சின்ன வேஷம்தான். ஆனால் ஜோடி ஸ்ரீதரின் காஞ்சனா- சிவாஜியின் மருமகன் வேடம். ‘சந்திரலேகா’, 'ஒளவையார்', ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்த நிறுவனம்.

'கந்தன் கருணை'யில் -எனது வேடம் பாதிப் படத்துக்கு பின்தான் வரும். ஆனால், முருகக்கடவுள் வேடம். ஜெயலலிதா அம்மையாரும், கே.ஆர்.விஜயாவும் புகழ்பெற்ற ஹீரோயின்கள் எனக்கு ஜோடி

'தாயே உனக்காக' படத்தில் எம்ஜிஆர், ஜெமினி தவிர பிரபல நட்சத்திரங்கள் எல்லோரோடும் நடிக்கும் வாய்ப்பு.

இப்படிப் பெரிய நிறுவனங்களின் கருணைப் பார்வையில் நடிகனாக நடமாடினேன்.

சிவாஜி நாடகக் குழு வைத்து இன்னும் நடிக்கிறார். மேஜர் சுந்தராஜன்-நாகேஷ்-சகஸ்ரநாமம், மனோகர் எல்லோரும் பிரபலமான பின்பும் கூட நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தனர்.

மூஞ்சி நல்லா இருக்குங்கற ஒரே காரணத்தை வச்சு எத்தனை நாள் குப்பை கொட்ட முடியும் என்று தீவிரமாக யோசித்து சொந்த நாடகக்குழு தொடங்கி- சபா செயலாளர் வீடுகளுக்கெல்லாம் போய் கெஞ்சி கூத்தாடி வாய்ப்பு கேட்டு, 50 நாடகங்கள் நடத்த இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன.

‘குழந்தை நீ வைரமா இருக்கலாம். பட்டை தீட்ட வேற ஆள் வேணும். நீயே அதைச் செய்ய முடியாது. என் குழுவில் வந்து சேர்ந்துக்க!’ன்னு மேஜர் சுந்தராஜன் அழைத்து என்.எஸ்.என் தியேட்டர்ஸ்னு அவர் மேற்பார்வையில் உள்ள குழுவில் சேர்த்துக் கொண்டார். 3 மாதங்களில் 100 நாடகங்கள் நடத்தினோம். அதாவது சனி, ஞாயிறுகளில் மேட்னி ஷோ. மூச்சு முட்டும் அளவு தினம் மாலையில் ஏதோ ஒரு சபா மேடையில் நிச்சயம் நாடகம் இருக்கும்.

அப்படி பிஸியாக இருந்த நாட்களில் பம்பாயில் செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸுக்காக நாடகம் போட ரயிலில் பயணித்தோம். ஒரு கம்பார்ட்மென்ட்டை முழுசாக ரிசர்வ் செய்து நாங்களே சமையல் செய்து சாப்பிட்டு பாடி, ஆடி, தூங்கி பம்பாய் போய் சேர்ந்தோம்.

1972 -ஜனவரி 29-ம் தேதி காலை பம்பாய் விக்டோரியா டெர்மினசில் ரயில் வந்து நின்றது. செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக சிவராமகிருஷ்ணன் பஸ்ஸுடன் வந்து எங்களை வரவேற்று சண்முகநந்தா ஹால் அழைத்துப் போனார்.

மும்பை ஹார்பர்

அது மிகப்பெரிய நாடக அரங்கம். சுற்றிலும் நிறைய அறைகள் உண்டு. 3 பேருக்கு ஒரு அறை என ஒதுக்கி, 50 பேரையும் தங்க வைத்தனர்.

1964-ல் ஓவியக்கல்லூரி மாணவனாக முதன் முதல் பம்பாய் வந்ததற்கும், இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் நகரத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.

ஃப்ளோரா பவுண்டன், கொலாபா, கேட் வே ஆஃப் இந்தியா, மெரின் டிரைவ், செளபாத்தி கடற்கரை, மலபார் ஹில்ஸ், மீன் வளர்ப்பு நிலையம், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மியூசியம் எல்லாம் அப்படியே இருந்தன. முதல் நாள் இரவு ‘ஞான ஒளி’ நாடகம். அதில் மேஜர் சுந்தரராஜன் -எஸ்.ஆர்.வீரராகவன் இருவருக்கும்தான் முக்கிய வேடம்.

ஜனவரி 30-ம் தேதி, ‘அச்சாணி’ நாடகம். அதில் மேஜருக்கும், எனக்கும்தான் பிரதான வேஷம். இந்த நாடகம் பார்த்து டி.வி,ராமானுஜம் மனதாரப் பாராட்டினார். தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். வல்லபாய் படேலிடம் பணிபுரிந்தவர். ஆசியாவிலேயே பெரிய நாடகக் கொட்டகையான சண்முகாநந்தா ஹாலை பம்பாய் கிங் சர்க்கிளில் உருவாக்கியவர்- பாராட்டிப் பேசியது பெருமையாக இருந்தது.

அடுத்த நாள், ‘ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது!’ என்பது போல பிரஷ், பென்சில் பிடித்த என் கை ஏதாவது வரையச் சொல்லி அரிப்பு எடுத்தது.

பம்பாயின் தென்மேற்குப் பகுதியில் மெரின் டிரைவ் பாதையில், ஏர் இந்தியா கட்டிடத்தை அடுத்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் 25 மாடிக் கட்டிடத்தின் உச்சிக்கு நண்பர் ஒருவருடன் சென்றேன். கழுகுப் பார்வையில் பம்பாயின் மொத்தப் பரப்பும் விரிந்து கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததைக் கண்டேன்.

எந்த அளவுக்கு ஒரு வெள்ளைத்தாளில் வரைய முடியுமோ, அந்த அளவுக்கு ஸ்கெட்ச் போட ஆரம்பித்தேன். கண்கள் பார்க்கும். கைகள் வரையும். ஸ்கேல், ரப்பர் வகையறா என எதையும் பயன்படுத்த மாட்டேன்.

மும்பை ஹார்பர்

பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்து முழு பம்பாயையும் தாளில் பதிவு செய்ய முயன்றபோது 6.15 மணி ஆகிவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸில், சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம் வேலை பார்த்தனர். தங்கள் அலுவலகத்திற்கு ஒரு ஓவியர் வந்து பம்பாயை ஓவியமாகத் தீட்டியது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பிப்ரவரி 1-ம் தேதி இன்னொரு ஸ்கெட்ச் போட்டே ஆக வேண்டும் என்று மனம் துடித்தது. நேற்றைய ஸ்கெட்ச் மேஜர் சுந்தரராஜன் மற்றும் நாடகக்குழுவினருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ‘நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகியும் ஓவியம் தீட்டும் திறன் கொஞ்சமும் குறையவில்லையே உனக்கு!’ என்றார் மேஜர் சுந்தரராஜன்.

‘கிங் சர்க்கிளி’லிருந்து கேட் வே ஆஃப் இந்தியா, அதற்கு எதிரிலே இருக்கிற தாஜ் இண்டர்நேஷனல் ஓட்டல், சிவாஜி சிலை, படகுத்துறை இவற்றை கம்போஸ் செய்து வரையக் குறைந்தது 1 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். தாஜ் ஓட்டலின் வலதுபுறம் பாதையில் நடந்து போனேன்.

பாதை வலதுபக்கம் திரும்பும் முனையில் ரேடியோ கிளப் ஹவுஸ் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நான் எதிர்பார்த்த கோணம் கிடைத்தது.

புளோரா ஃபவுண்டன் அருகில்

மடமடவென்று இரண்டரை மணி நேரத்தில் ஸ்கெட்ச்சை முடித்தபோது பின்னால் 2 போலீஸ். ‘இது ‘DEFENCE AREA’ பாதுகாக்கப்பட்ட இடம். யார் உனக்கு பெர்மிஷன் கொடுத்தது? உன்னைக் கைது செய்கிறோம்.!’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

தப்பிக்க என்ன வழி என்று யோசித்து, ‘ஆபத்து நேரத்தில் ஒரு பொய் சொன்னால் பரவாயில்லை!’ என்று முடிவெடுத்து, ‘‘சார், நான் பம்பாய் ஜே.ஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மாணவன். பிரின்சிபல் அவுட்டோர் ஸ்கெட்ச் செய்து வரச் சொன்னார். நேற்று பிற்பகல் இந்தியன் எக்ஸ்பிரஸ் மாடியிலிருந்து இந்தப் படம் வரைந்தேன். இன்று இங்கு வந்தேன்!’’ என்றேன்.

பம்பாயின் பிரம்மாண்டத் தோற்றத்தை பென்சிலால் ஒரு இளைஞன் பிரமாதமாக வரைந்திருக்கிறானே என்று ஆச்சர்யப்பட்ட போலீஸ், ‘‘WOULD YOU CARE FOR A CUP OF COFFEE?’’ (காபி சாப்பிடறியா தம்பி?) எனக் கேட்டனர். ‘ஐயா, ஆளை விட்டீங்கன்னா போதும்!’ என்று ஓட்டமாக ஓடி வந்துவிட்டேன்...

---

(இத்துடன் பகுதி 2 சித்திரச்சோலை நிறைவு பெற்றது. பகுதி 3 திரைப்படச் சோலையாக அடுத்த அத்தியாயத்திலிருந்து மலரும்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x