

குறள்
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை (315)
பொருள்:
மற்ற உயிர்களுக்கு துன்பம் வரும்போது, அந்தத் துன்பத்தை தனக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி மீட்க முயலாவிட்டால், நாம் பெற்ற அறிவால் எந்தப் பயனும் இல்லை. மற்றொரு உயிருக்கு ஏற்பட்ட துன்பத்தை தனக்கு வந்ததைப் போல் எண்ண வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு நாம் எந்தத் துன்பமும் செய்துவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்படும். மேலும், அந்தத் துன்பம் மீண்டும் வராமல் காப்பது எப்படியென்றும் நமக்குத் தெரியவரும்.
விளக்கம்:
ஓர் அருமையான நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். போலியோவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் குறைந்த எடையில் FRO (Floor Reaction Orthosis) Caliber கண்டுபிடிப்பில் எவ்வாறு அறிவு உதவியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு தடவை ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு பல குழந்தைகள் சிரமத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்குப் பொருத்தபட்டிருந்த செயற்கை கால்களின் எடை 4 கிலோ இருந்தது.
அங்கே மருத்துவராக பணிபுரியும் எனது நண்பர் பிரசாத் என்னிடம், ‘‘இந்தக் குழந்தைகளின் செயற்கை கால்களின் எடையைக் குறைக்க ஏதாவது செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். நான் என்னுடைய ‘அக்னி’ நண்பர்களிடம், ‘‘அக்னி செய்யப் பயன்படும் ஒரு composite material-லைக் கொண்டு எடை குறைந்த FRO-வை போலியோவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்க முடியுமா?” என்றேன். ‘‘முடியும்” என்றார்கள் அவர்கள்.
நானும் எனது நண்பர்களும் சில நாட்கள் தொடர்ந்து அந்தத் திட்டத்தில் வேலைசெய்து, FRO-வின் எடையை 4- கிலோ கிராமில் இருந்து 400 கிராமாகக் குறைத்துவிட்டோம். அதாவது 10 மடங்கில் இருந்து ஒரு மடங்காக அந்த எடை குறைந்துவிட்டது. குறைவான எடை கொண்ட FRO-வை குழந்தைகளுக்குப் பொருத்தி அவர்களை நடக்கவிட்டுப் பார்த்தோம் அந்தக் குழந்தைகள் மிகவும் எளிதாகவும் சிரமம் இல்லாமலும் நடந்தனர் அந்தக் குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சி. அவர்கள் ஓடவும், விளையாடவும் மிகவும் அருமையாகத் தயாரிக்கப்பட்டிருந்தன அந்த எடை குறைந்த செயற்கை கால்கள். இந்த அற்புதமான காட்சியைக் கண்ட அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கெல்லாம் அளவற்ற ஆனந்தம். இந்த நிகழ்வோடு இந்தக் குறளைப் பொருத்திப் பாருங்கள்.
குறள்:
கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் (550)
பொருள்:
கொலை செய்யக் கூடிய கொடியவர்களைத் தலைவன் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும். உழவன் களைகளைக் களைந்து பசும்பயிர்களைக் காப்பது போல சமுதாயத்தில் களைகளாக மண்டிக் கிடக்கும் தீமைகளை வேரறுக்க வேண்டும். பொல்லாதவர்களை தலைவன் அடக்கி ஒடுக்காவிட்டால் நல்லோர் வாழவே முடியாது.
விளக்கம்:
நான் குடியரசுத் தலைவராக இருந்த நேரத்தில் என்னை தொந்தரவு செய்யும் விஷயங்களைப் பற்றி சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசிப்பேன். அதுபோலவே எங்களால் கொடுக்கப்படும் ஆலோசனைகளை ஒரு சட்ட முன்னோடி சரிபார்க்க வேண்டும் என்பது ஏற்பாடு.
மரண தண்டனைப் பெற்றவர்களுடைய மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டப் பிறகு, ஏராளமான மனுக்கள் ‘கருணை மனு’க்களாக வரும். கூடவே, எனக்கு முன்னால் இருந்தவர்கள் விட்டுப்போனதும்கூட சேர்ந்துகொள்ளும். ‘ஓர் உயிரை எடுப்பதற்கு உத்தரவு போட என்னால் முடியாது’ என்று நான் சொல்வதை, எனது நண்பர்கள் எதிர்ப்பார்கள். ‘கொலை குற்றம் புரிந்தவர்களை; அதுவும் குழந்தைகளை, பெண்களைக் கொன்றவர்களை எப்படி நீங்கள் மன்னிக்க முடியும்?’ என்பார்கள்.
ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. தூக்கு தண்டனை ஏன் கூடாது என்பதைப் பற்றி ஒரு முக்கியமான சட்ட பிரமுகருடன் ஆலோசித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்னுடன் இருந்த எனது செயலாளர் பி.எம்.நாயர், அந்த சட்ட பிரமுகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘கொலை குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அந்தக் குற்றம் மேலும் மேலும் வளர்ந்து நம்மையும் நம் மக்களையும் பாதிக்கும்’’ என்பது அவருடைய வாதம்.
என்னுடைய விருப்பம் என்னவென்றால், குற்றம் புரிந்தவர்களுக்கு திருந்தி வாழ மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நல்ல சிந்தனைகளையும் வழங்கி, மீண்டும் தன் மக்களோடு சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
- நல்வழி நீளும்…