

ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவருக்கு எல்லோரும் நினைப்பது போலத் தன்னைப் பெண்ணாக நினைப்பதில் நிறையத் தயக்கம் இருந்தது. பெண்ணின் உடலோடு பிறந்தாலும் ஆணின் மனதோடு இருந்தார். ‘பிரேம்’ என்னும் பெயரில் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடத் தொடங்கினார்.
அவரின் தோழி திருநங்கை ப்ரீத்திஷா. காதல் தோல்வியால் பிரேம் விரக்தியின் எல்லைக்குச் செல்லும் போதெல்லாம் அவரைக் காப்பாற்றியவர் அவரின் தோழிதான். ப்ரீத்திஷாவுக்கும் காதல் தோல்விகள் ஏற்பட்டன. ஒருகட்டத்தில் நண்பர்கள் இருவரும் நமக்கான துணையாக நாமே இருப்போமே என்று முடிவெடுத்தனர். பிரேம் - ப்ரீத்திஷா ஆகிய இருவரும் மாற்றுப் பாலினத் தம்பதியாயினர்.
ப்ரீத்திஷா அரங்கக் கலைஞரும் கூட. சில படங்களில் நடித்திருந்தாலும் வாழ்க்கையின் போராட்டத்தில் இருவருமே வாடிக்கையாளருக்கு உணவைக் கொண்டு சேர்க்கும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி பிரிவில் சேர்ந்தனர். கரோனா பெருந்தொற்றுப் பேரிடர் நெருக்கடியில் பணி பறிபோனது.
இந்த மாற்றுப் பாலினத் தம்பதிக்கு ‘பார்ன் டூ வின்’ அமைப்பின் திருநங்கை ஸ்வேதா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும், பல நல்ல உள்ளங்களின் உதவியால் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் சென்னை, அசோக் நகரில் ‘மகிழம்’ என்னும் பெயரில் நடமாடும் தேநீர்க் கடையை பிரேம் - ப்ரீத்திஷா தம்பதியினர் திறந்திருக்கின்றனர்.
லோகேஸ்வரி என்னும் திருநங்கை ஒருவருக்கும், திருநம்பி ஒருவருக்கும் தங்களின் கடையில் பணி வாய்ப்பையும் வழங்கியிருக்கின்றனர்.