

கலைப்படங்கள் உட்பட அனைத்துவிதமான திரைப்படங்களிலும் சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இந்தி நடிகை ஸ்மிதா பாட்டீல் (Smitha Patil) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மகாராஷ்டிர மாநிலம் புனேயில் (1955) அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சிவாஜிராவ் பாட்டீல். தாய் சமூக சேவகி. புனே ரேணுகா ஸ்வரூப் மெமோரியல் பள்ளியில் பயின்றார். தூர்தர்ஷனில் செய்தி வாசித்தபோது, கேமராவுடனான பந்தம் தொடங்கியது.
l நடிப்பில் ஆர்வம் கொண்டவர், புனேயில் உள்ள இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தொலைக்காட்சித் தொடர்கள், மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.
l ஷ்யாம் பெனகலின் ‘சரண்தாஸ் சோர்’ என்ற கலைப்படத்தில் (1975) முதன்முதலாக நடித்தார். தொடர்ந்து, சிறந்த கலைப்பட இயக்குநர்களான கோவிந்த் நிஹலானி, சத்யஜித் ரே, ஜி.அரவிந்தன், மிருணாள் சென் ஆகியோரின் படங்களில் நடித்தார். கலைப்பட உலகின் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தார். கலைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தவர், கமர்ஷியல் திரைப்பட வாய்ப்புகளை மறுத்தார்.
l ஒருசில கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, கமர்ஷியல் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். ராஜ் கோஸ்லா, ரமேஷ் சிப்பி, பி.ஆர்.சோப்ரா ஆகியோரது இயக்கங்களில் நடித்தார். இவர் நடித்த ‘மந்தன்’, ‘பூமிகா’, ‘சக்ரா’, ‘ஆக்ரோஷ்’ திரைப்படங்கள், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த காவியங்கள்.
l எப்படிப்பட்ட வேடத்திலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை ‘ஷக்தி’, ‘நமக் ஹலால்’ ஆகிய திரைப்படங்களில் நிரூபித்தார். இவரது அற்புத நடிப்பாற்றல், நாடு முழுவதும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இவரது அபார நடிப்பால் கமர்ஷியல் படங்களும் கலைப்பட அந்தஸ்து பெற்றன. வியாபார ரீதியிலும் வெற்றிபெற்றன.
l நடிகர் ராஜ் பாபரை மணந்தார். சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். பத்ம விருது 1985-ல் வழங்கப்பட்டது. இவர் சிறந்த புகைப்பட நிபுணரும்கூட.
l இவர் ஒரு பெண்ணியவாதி. பெண்களின் அடிப்படை உரிமைகளுக் காகப் போராடியவர். சமூக அக்கறையுடன் பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
l ‘சக்ரா’ என்ற படத்தில் நடிப்பதற்காக மும்பையின் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வை நேரடியாகப் பார்த்து தெரிந்துகொண்டு, திரையில் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி பாராட்டு பெற்றார். இத்திரைப்படம் அவருக்கு 2-வது தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
l இந்தி, மராத்தியில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகை என்று போற்றப்பட்ட ஸ்மிதா பாட்டீல் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 31 வயதில் (1986) மறைந்தார்.
l மறைவுக்குப் பிறகு, இவரது 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றன. ஒரு நடிகையாக குறுகிய காலமே வலம்வந்த ஸ்மிதா பாட்டீலின் பெயர், இந்திய சினிமா வரலாற்றிலும், ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டது.