Published : 18 Jan 2021 10:13 AM
Last Updated : 18 Jan 2021 10:13 AM

சித்திரச்சோலை 31: பெரியாரின் தாடி

சிவகுமார்

பெரியாரை நீங்கள் ஓவியமாகத் தீட்டாவிட்டால் உங்கள் படைப்புகள் முழுமை பெறாது என்று வற்புறுத்தியவர் சகோதரர் வை.கோ. 2007-ல் வரைய முடிவு செய்த போது, பெரியார் சம்பந்தப்பட்ட பல புகைப்படங்களை கி.வீரமணி அவர்கள் கொடுத்து அனுப்பினார். துரதிருஷ்டவசமாக எல்லா படங்களும் ‘ப்ளாஷ்’ ஒளியில் படமாக்கப்பட்டிருந்தன. FLAT LIGHT-ல் எடுத்த படங்கள் ஓவியம் தீட்ட உதவாது. LIGHT & SHADE உள்ள படங்கள் தேடி அலைந்தேன்.

அப்போது 1965 வாக்கில் தினசரி இதழ் ஒன்றில் அச்சாகி இருந்த பெரியார் படத்தை வெட்டி என் ஃபைலில் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. பிரிண்ட் ஆன படத்தில் அச்சு எந்திரப்புள்ளிகள் இருந்தபோதும், எனக்கு தேவையான படமாக அது இருந்தது.

அதை அடிப்படையாக வைத்து 3 நாள் வரைந்த ஓவியம். பெரியார் திடலில் முதல் படம் கொடுத்தேன். விடுதலை நாளேட்டில் கி.வீரமணி அவர்கள் அதை வெளியிட்டு பெரியார் தொண்டர்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார்.

கார்ல் மார்க்ஸ், டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, ரவீந்திரநாத்தாகூர் எல்லோருக்கும் தாடி உண்டு. ஆனால் பெரியார் தாடி போன்ற அழகு தாடி யாருக்கும் அமையவில்லை.

ராஜாஜி ஓவியம் 1960-களில் கல்கியில் அட்டைப் படமாக வெளியான புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது. ராஜாஜி மொட்டைத் தலை, தீர்க்கமான கண்கள், கிளி மூக்கு, சிறிய உதடு, ஓவல் ஷேப் முகம். ‘Portrait’-க்கு ஏற்ற அருமையான தோற்றம் அவருடையது.

ராஜாஜி ஓவியம்

இருவரும் இருவேறு துருவங்களாக மக்கள் பார்வைக்குத் தெரிந்தாலும், இருவருக்குள்ளும் இருந்த பகுத்தறிவு சாமான்யமானதல்ல.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னார் வள்ளுவர். இந்த மண்ணில் பிறந்த எல்லோரும் பிறப்பின் அடிப்படையில் சமம்தான். கலெக்டர் வேலை பார்ப்பவரும், பியூன் வேலை பார்ப்பவரும் வேற வேற தொழில் செஞ்சாலும், அதற்கான மரியாதை வேறுபட்டாலும் பிறப்பால் இருவரும் சமம்தான் என்று வலியுறுத்திச் சொன்னார்.

மனித வாழ்க்கை ஒரு ஒழுங்கு முறையில் நடக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த தொழிலை ஆரம்ப காலத்தில் விரும்பி செய்தார்கள்.

ஒருவன் பயிர்த்தொழில் செய்தான். ஒருவன் மரம் அறுத்தான். ஒருவன் மண்பாண்டம் செய்தான், ஒருவன் கூடை பின்னினான். இன்னொருவன் காடுகரைகளில் விளைந்தவற்றை வாங்கி வந்து கடை போட்டு வியாபாரம் செய்தான். மற்றொருவன் உடல்பலம் இருந்ததால் ஊர்க்காவல் புரிந்தான். இன்னொருவன் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தான்.

மனித சமுதாயம் இந்த அமைப்புக்குள் நிம்மதியாக போய்க் கொண்டிருந்தது. ஒரு காலகட்டத்தில் எழுதப்படிக்கக்கற்றுக் கொடுப்பவன் -எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற எண்ணம் எப்படியோ மேலோங்கி, அவன் உயர்ந்த சாதிக்காரன், காடுகரையில் வேலை செய்பவன், கடைநிலை மனிதன் என்ற விஷ எண்ணம் சமுதாயத்திலே வேறூன்றி விட்டது துரதிருஷ்டம். இந்தியா தவிர இந்த நான்கு வர்ண பேதம் எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏழை, பணக்காரன் எல்லா நாட்டிலும் இருப்பான். ஆனால் இந்த சாதி வேற்றுமை -அதனால் தீண்டாமை உணர்வு இங்கு மட்டும்தான் இன்னும் உள்ளது.

சாதியை ஒழிக்க வேண்டும் -அதனால் வரும் ஏற்ற தாழ்வை ஒழிக்க வேண்டும் என்பது பெரியாருடைய கொள்கை.

தீண்டாமைக்கு காரணம் சாதி உணர்வு; சாதியை தூக்கிப்பிடிப்பது மதம்; மதத்தின் அடையாளம் கடவுள்; ஆதிமூலமான கடவுளை எதிர்த்துப் போராடினால் சாதிய உணர்வு ஆட்டம் கண்டு விடும் என்று முடிவெடுத்து கடவுள் இல்லை என்று முழக்கமிட்டார்.

கடவுள் மறுப்பு உணர்வு இங்கு வெற்றி பெற்றதோ இல்லையோ; சாதி வெறி ஓரளவு தணிய உதவியது. தூங்கிக் கொண்டிருந்த தமிழனை தட்டி எழுப்பி சுயமரியாதை உணர்வை ஊட்டி, அவனுக்கு கல்வியின் அருமையை உணர்த்தியதால் இன்று ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ்கள் முதல் ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என்று பல பிரிவுகளிலும் அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்கள் புற்றீசல் போல் புறப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பத்திரிகையில் பார்த்து வரைந்த பெரியார் படம்

இதற்கு விதைபோட்டவர் பெரியார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடவுள் விஷயத்தில் நான் காந்தியை கடைப்பிடிப்பவன்; கடவுளுக்கு வடிவமில்லை; ஆண்-பெண் பேதமில்லை; அது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷமல்ல. கடவுள் இந்த உலகத்தில் தோன்றினால் அவன் பசித்தவனுக்கு உணவு, வேலை வடிவத்தில்தான் தோன்ற வேண்டும் என்றார். அதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வுலகத்தை படைத்தது ஒரு மாபெரும் சக்தி. அதற்கு வடிவமோ, பெயரோ கிடையாது. மலைகள், அருவிகள், மரம், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள், மானுடர்கள் என அனைத்தையும் படைத்தது அந்த மாபெரும் சக்தி. அதற்கு வேண்டியவன், வேண்டாதவன் என்ற பாகுபாடு கிடையாது. அப்படி ஒரு சக்தி இருப்பதை ஏற்றுக் கொண்டு, அதை மதித்து நம் சக்திக்கு மீறி துன்பம் வந்தால், ‘நீ பார்த்துக் கொள்!’ என்று அந்த சக்தியிடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக இரு என்று நினைப்பவன் நான்.

நீ கடவுளை நம்பு; அல்லது நம்பாதே. அது தனிப்பட்ட விஷயம். அனைவரையும் நேசி. அடுத்தவரை உனக்கு சமமாக மதி. உண்மையிலேயே இல்லாதவன், முடியாதவனுக்கு உன்னால் முடிந்த உதவி செய். நீ மகத்தான மனிதனாகி விடுவாய்.

காந்தியுடன் நேரு

பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் அடுத்தவர் உணர்வை மதிக்கும் பண்புள்ளவர்.

குன்றக்குடி அடிகளார் ஒரு முறை திருநீறு பூச வந்தபோது பணிவோடு நெற்றியை காட்டி விபூதியை இட்டுக் கொண்டார்.

தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் ஈரோடு சென்று பெரியார் வீட்டில் இருந்தபோது, காலையில் திரு.வி.க குளித்து முடித்து வெளியே வந்தபோது கையில் விபூதித்தட்டுடன் நின்று கொண்டிருந்தார் பெரியார்.

கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செய்வார். ஐந்து வயதுச் சிறுமி வந்தாலும், ஐம்பது வயது பெரியவர் வந்தாலும் எழுந்து நின்று வரவேற்பார்.

ராஜாஜியும், பெரியாரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக கடைசி வரை இருந்திருக்கிறார்கள்.

சேலம், ஓசூர், தொரப்பள்ளி என்கிற கிராமத்தில் ராஜாஜி பிறந்தாலும் வெற்றிகரமான வக்கீலாக தொழில் செய்தார். 1937-ல் சென்னை மாகாண முதல்வராக கொஞ்ச காலம் இருந்தவர். நாடு விடுதலை அடைந்த போது இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் பதவி வகித்த தென்னிந்தியர்.

சேலம் முனிசிபாலிட்டி சேர்மனாக இருந்த போது தாழ்த்தப்பட்ட இன மக்களை வைத்து அக்ரஹாரத்திற்குள் தண்ணீர் குழாய் இணைப்பு தரச்செய்தார்.

ஹரிஜன் ஆலயப்பிரவேசம் செய்ய வைத்த முதல்வர். மது இந்த நாட்டுமக்களை அழிக்க வந்த அரக்கன். ஆகவே மதுவிலக்கை அமல்படுத்தி, நஷ்ட ஈட்டை சரிக்கட்ட விற்பனை வரி விதியுங்கள் என்று கெஞ்சியவர்.

காந்தியின் மனசாட்சியாக இருந்தவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் எளிய மொழியில் ராமாயணம், மகாபாரதக் கதைகளை உரைநடையாக்கிக் கொடுத்தவர்.

பெரியார்- ராஜாஜி

ஈரோடு முனிசிபாலிட்டி சேர்மனாக பெரியார் இருந்த காலம். சேலம் முனிசிபாலிட்டி சேர்மனாக ராஜாஜி இருந்தவாறே வழக்கு நடத்த காரில் மதுரை, கோவை சென்று வருவது வழக்கம்.

ஈரோடு நகரைத் தாண்டும்போது, இந்த ஊர் இவ்வளவு சுத்தமாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டு பெரியாருக்கு போன் செய்து ‘நாயக்கரே! உங்க சானிடரி இன்ஸ்பெக்டரை எங்க ஊருக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்கன்னு கேட்டு, சேலம் நகரை சுத்தப்படுத்தினார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பியதும் பெரியாரை வற்புறுத்தி அழைத்துப் போய் காந்திக்கு அறிமுகம் செய்தார். காந்தி மீது அசாத்திய மரியாதை ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முதல் தொண்டனாகி, கதர் துணிகளை தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றார்.

நாகம்மை, கண்ணம்மை என்ற தன் மனைவி, சகோதரியை கள்ளுக்கடை மறியல் செய்ய முன்னிறுத்தினார்.

பிறப்பால் உயர்ந்தவன்; தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை சொல்லும் வர்ணாசிரம தர்மத்தை காந்தி தூக்கிப் பிடித்தார் என்று அவரோடு சண்டைப் போட்டு திரும்பி வந்து விட்டார்.

பின்னரே பகுத்தறிவு இயக்கம், தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்கல்வி போன்ற சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

மணியம்மையை திருமணம் செய்து கொள்ள ராஜாஜியைத் தேடிப் போய் அவர் அபிப்ராயம் கேட்டார். ராஜாஜி இறந்த செய்தி வந்தபோது, தங்கமான மனிதன், எளிமை, ஒழுக்கம் என்று வாழ்ந்தவர், காந்தியையே எதிர்க்கேள்வி கேட்டவர் போய் விட்டாரே என்று வருந்தியவர். அவர் உடல் மயானத்திற்கு எடுத்துச் சென்ற போது இவரும் சென்று சிதையில் தீ மூட்டியபோது கேவிக் கேவி அழுதார். தூய நட்பின் முன் சாதி காணாமல் போய்விட்டது.

---

தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x