Published : 18 Jan 2021 08:14 AM
Last Updated : 18 Jan 2021 08:14 AM

தேர்தல் கூட்டணி என்பது கொள்கை சார்ந்ததா?

எல்லா கட்சிகளுக்கும் ஒரு கொள்கை உண்டு. ஆனால், தேர்தல் நேரத்தில் கட்சி கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இதைத்தான், 'கொள்கை வேறு; கூட்டணி வேறு' என்று முதல்வர் பழனிசாமி சொன்னார். ‘ஆட்சி அதிகாரம் என்பது கொள்கையைவிட முக்கியம்’ என்பது கிட்டத்தட்ட எல்லாக் கட்சிக்கும் பொதுவாகி விட்டது.

தமிழ்நாட்டில் 1967-ல், ‘தேர்தல் கூட்டணி’ என்று முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் அண்ணாதான். அவர் கட்சி தொடங்கும் போது, 'என் தலைவர் இன்றும் பெரியார்தான். எனவே, திமுக.வுக்கு பொதுச் செயலாளர்தான். கட்சித் தலைவர் நாற்காலி காலியாகதான் இருக்கும்' என்று சொன்னார். தேர்தல் ஆசை வந்ததும், ‘தனித் தமிழ்நாடு’ கொள்கையைக் கைவிட்டு, ‘மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி’ என்றார். ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று சொன்னதுடன், ‘நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன். அவருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்று கடவுள் எதிர்ப்பு கொள்கையைக் கைவிட்டார்.

ராஜாஜியுடன் கூட்டணி வைத்து, அவரது பிராமண எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது. ராஜாஜியும் பிராமணர்களை, ‘பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு திமுக.வுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அண்ணா முதல்வரானார்!

கருணாநிதி காலத்தில், பெரியாருக்காக காலியாக வைக்கப்பட்டிருந்த தலைவர் நாற்காலியை, சட்டவிதிகளில் திருத்தம் செய்து கருணாநிதி திமுக தலைவர் ஆனார். இப்போது, ஸ்டாலின் தலைவர். 1989-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்த போது, திராவிட கழகத்தினர் தஞ்சையில் பூணூல் அறுப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, ‘என் ஆட்சிக்கு இடைஞ்சல் செய்ய பார்க்கிறீர்கள்’ என்று திராவிட கழகத்தை சாடினார் கருணாநிதி.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது, மத்தியில் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி செய்தது. அப்போது கருணாநிதி, உண்ணாவிரதம் இருந்துதான் தன் எதிர்ப்பை தெரிவித்தார். ஆட்சி அதிகாரம் அந்த அளவுக்குதான் அவரை அனுமதித்தது.

ஸ்டாலின் ஆலோசனைப்படி அவர் தந்த அழுத்தம் காரணமாக, கருணாநிதி ஒரு முறை எல்லா ஜாதிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். இன்று ‘மதவாத சக்தி’ என்று சொல்கிற பாரதிய ஜனதா.வுடன் கூட திமுக தேர்தல் கூட்டணி வைத்திருந்தது. அவசர நிலையில் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்த, கூட்டம் கூட்டமாக திமுக.வினரை மிசாவில் கைது செய்த இந்திரா காந்தியுடன் மீண்டும் கருணாநிதி கூட்டணி வைத்தார். ‘கொள்கை’, ‘கடந்த கால எதிரி’ என்பது எல்லாமே தேர்தல் வெற்றி இலக்குக்கு முன்னால் தூசுதான்.

எனினும், திமுக,வுக்கு இப்போதும் சில கொள்கைகள் இருக்கின்றன. ‘தனித் தமிழ்நாடு’ கோரிக்கையை அண்ணா கைவிட்ட பிறகு, அவர் எழுப்பிய கோஷம்தான் ‘மாநில சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி’. அது அரசியல் கோஷம் அல்ல. அதில் சுயநலமும் இல்லை. ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தோம். இப்போது நம்மால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. நாம் ஏன் ராஜினாமா செய்யக் கூடாது?’ என்று கேட்டவர் அவர். அவருடைய அன்றைய கூட்டணி, ‘சந்தர்ப்பவாத கூட்டணி’யாகப் பார்க்கப்படவில்லை. அது ‘சமூக நீதிக்கான கூட்டணி’யாகதான் பார்க்கப்பட்டது.

அண்ணாவுக்குப் பிறகு முதல்வராக அமர்ந்த கருணாநிதி, ‘மாநிலங்களுக்கான அதிக அளவு அதிகாரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்; மாநில சுயாட்சிக்கு என்ன வழி? என்பவை பற்றி ஆராய ராஜமன்னார் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரை அறிக்கை 1971-ல் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக சட்டசபையிலும் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றியது கருணாநிதி அரசு. ஆனால் மத்திய அரசு அதற்கெல்லாம் அசைந்து தரவில்லை.

அதற்குப் பிறகு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அசாம் முதல்வர் பிரபுல் குமார் மகந்தா போன்றவர்கள், ராஜீவ் காந்தி, வி.பி.சிங் காலத்தில், ‘மாநில அரசுக்கு அதிக அதிகாரம் தேவை’ என்று குரல் எழுப்பினார்கள். அவர்களின் குரலும் எடுபடாமல் போனது. எது எப்படியோ, மத்தியில் அதிகாரம் குவிந்து இருப்பதை எதிர்த்து கண்டனக் குரல் முதலில் எழுப்பியது தமிழ்நாட்டில் இருந்துதான். அந்தப் பெருமை அண்ணாவையே சாரும்.

பின்னாளில் மத்தியில் நிலைமையே வேறு. ‘மாநில கட்சிகளின் தயவின்றி ஆட்சியே அமைக்க முடியாது’ என்று மாறியது. தேசியக் கட்சிகள், ‘மாநில கட்சிகளுடன் கூட்டணி இருந்தால்தான் வெற்றி பெற முடியும்’ என்ற அளவுக்கு மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி வருகிறது. இன்று வரை இதுதான் நிலைமை. திமுக, அதிமுக, அகாலி தளம், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அசாம் கண பரிஷத்... இப்படி எல்லா மாநிலத்திலும் மாநில கட்சிகளின் கை ஓங்கி இருக்கிறது.

யார் பிரதமர் என்று தீர்மானிக்கும் வாய்ப்பு கூட ஒரு முறை திமுக.வுக்கு வந்தது. தங்களுக்குத் தேவையான இலாகாக்களை பெறுவதில் காட்டிய அக்கறை, அவர்களை ‘மாநில சுயாட்சி அல்லது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம்’ என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்க விடாமல் தடுத்து விட்டது. ‘நீட்’ தேர்வு பிரச்சினையில், ‘மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வி வரவேண்டும்’ என்று இப்போது திமுக கோரிக்கை எழுப்புகிறது. அப்போது அதை அவர்கள் சாதித்துக் கொள்ளவில்லை. வி.பி.சிங், சோனியா போன்றவர்கள், திமுக எதைச் சொன்னாலும் கேட்கத் தயாராக இருந்தார்கள். அப்போது திமுக.வுக்கு ராஜமன்னார் குழு பரிந்துரைகள், சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானம் இவையெல்லாம் ஏனோ நினைவுக்கு வராமல் போனது.

திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ‘தலித் உரிமைக்காக போராடுபவர்’ என்று தன்னை வெளிக்காட்டிக் கொள்வார். அவர் கட்சியின் கொள்கையும் கிட்டத்தட்ட அதுதான்.

ஆனால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ‘தலைமைச் செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல், மூன்றாம் தரமாக நடத்தினார்’ என்று சொன்ன போது, திருமாவளவன் பெரிதாக தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ‘தலித் வகுப்பினரை நீதிபதி ஆக்கியது திமுக போட்ட பிச்சை’ என்று திமுகவின் இன்னொரு முக்கிய நிர்வாகி சொன்ன போது, ‘அடங்கமறு கொள்கைத் தலைவர்’ அடங்கிதான் போனார்! எல்லாம் கூட்டணி தர்மம்.

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 2 நாடாளுமன்றத் தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஒரு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சின்னத்தில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இன்னொரு தொகுதியில் திமுக சின்னத்தில் ரவிக்குமார் பேட்டியிட்டார். திமுக சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் வெற்றி பெற்றார். ‘ரவிக்குமார் கருத்து, திமுக கருத்தா? அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கருத்தா?’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்லுவார்? இதெல்லாம் ‘கொள்கை வேறு... கூட்டணி வேறு’ என்பதற்கு உதாரணங்கள் அதிமுகவும், ‘மாநிலத்துக்கு அதிக அதிகாரம்’ என்று பேசியவர்கள்தான். அண்ணாவின் பெயரில் கட்சி தொடங்கிய எம்ஜிஆர், அவர் தன் கட்சி கொள்கையான ‘அண்ணாயிசம்’ பற்றிச் சொல்லும் போது, ‘இன்றைய அரசியல் சட்ட அமைப்புப்படி, தலைமையில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு கிடக்கின்றன. அவை பரவலாக்கப்பட்டு மாநிலங்களும், மாநிலங்கள் வழியாக அவற்றின் கீழ் அமைப்புகளும் போதுமான அதிகாரங்களைப் பெற வேண்டும் என்பது அண்ணா திமுக.வின் லட்சியம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

எம்ஜிஆரும் காங்கிரஸுடன் நீண்ட கூட்டணி வைத்திருந்தார். அவரும் ‘அண்ணாயிசத்’தில் குறிப்பிட்டிருந்த மாநில அதிகாரங்களை பற்றி மத்திய ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தியோ, வற்புறுத்தியோ கேட்டது எல்லாம் இல்லை.
தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிமுக.வின் கூட்டணி கட்சியான பாமக, தற்போது வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, ரயில் மீது கல் எறிந்து போராடி வருகின்றனர். ஆனால் ‘கூட்டணி ஒப்பந்தம் போடும் போது பாமக.வுக்கு ராஜ்ய சபா சீட்டு வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டதே தவிர, 20% இடஒதுக்கீடு கோரப்படவில்லை. இதுவும் கூட்டணி கொள்கைதான்.

மத்தியில் ஆளும் கட்சியை ஆட்டிப் படைக்கும் மகாசக்தி உள்ள மாநிலக் கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் இருந்தன. அப்போது அவர்கள், ‘மாநில சுயாட்சி, மாநிலத்துக்கு அதிக அதிகாரம், இந்தி திணிப்பு, காவிரி பிரச்சினை போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்’ என்று காரியம் சாதிக்கவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளையும் பொறுத்த வரை, ‘தேவையான இலாகாக்கள் மற்றும் தங்கள் மீதுள்ள ஊழல் வழக்குகள்’ என்று சின்ன வட்டத்தில்தான் சுழன்று வருகின்றன.

திமுக.வை எதிர்த்து கட்சித் தொடங்கிய வைகோ, இன்று ‘அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின்’ என்கிறார். ராகுல் காந்தியை ‘பிரதமர் வேட்பாளர்’ என்று அறிவித்தது ஸ்டாலின்தான். ஆனால் ‘கல்வி மீண்டும்‌ மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்’ என்ற ஸ்டாலின் கோரிக்கைக்கு, ராகுல் காந்தி எந்த உத்தரவாதமும் தரவில்லை. ஆனாலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது.

‘பாரதிய ஜனதா கூட்டணி தொடர்கிறது’ என்று அரசு நிகழ்ச்சியில் அதிமுக சொன்னது. ஆனால், ‘நீட்’ தேர்வு, இந்தி திணிப்பு, சம்ஸ்கிருத செய்தி ஒளிபரப்பு, ஜிஎஸ்டி வரிப்பணம் பகிர்வதில் பாரபட்சம் என்று மாநில உரிமைகளை வலியுறுத்துவதில் உரிமை காட்டவில்லை.

‘கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி... பதவி என்பது மேலே அணியும் துண்டு. பதவிக்காக இடுப்பில் கட்டிய வேட்டியை நாம் இழக்கக் கூடாது’ என்றார் அண்ணா. இது அண்ணாவுக்கு மட்டும்தான் பொருந்தும். இன்றைய இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் பொருந்தாதோ என்னமோ தெரியவில்லை!

கட்டுரையாளர்
ஜாசன்
மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jasonja993@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x