Published : 15 Jan 2021 10:43 AM
Last Updated : 15 Jan 2021 10:43 AM

சித்திரச்சோலை 30: துறவு

சிவகுமார்

1963, டிசம்பர் 25-ம் தேதி. சென்னை, புதுப்பேட்டை வீட்டில் விடிய விடிய வாண வேடிக்கைகளும் சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை செய்வதுமாக ஒரே கூச்சல். சற்று நேரம் கூட நிம்மதியாக கண்ணை மூட முடியவில்லை. அவர்கள் ஏரியா. கிறிஸ்து பிறந்த மணித்துளிகளை அப்படித்தான் கொண்டாடுவார்கள். நான் கூட நள்ளிரவில் பாலாவுடன் சர்ச்சுக்குப் போய்விட்டு வந்தேன்.

அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து யோகாசனங்கள் செய்து, குளித்து தயாராகி சட்டக்கல்லூரி பக்கத்திலிருந்த வெளியூர் பஸ் நிலையம் சென்றேன். பள்ளித்தோழன் சேனாதிபதியும் வந்து சேர்ந்தார்.

காலை 6.45 மணிக்கு புறப்பட்ட பஸ், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், செஞ்சி வழியாக 12.30 மணிக்கு திருவண்ணாமலை வந்து சேர்ந்தது. ஓட்டலில் வாடகைக்கு அறை எடுத்து தங்குவது வீண் செலவு. அதனால் பாண்டிச்சேரி நண்பர் தயாளன், திருவண்ணாமலையிலுள்ள நாடார் சத்திரத்தில் இலவசமாகத் தங்க, அவர் தாயார் மூலம் கடிதம் போட்டிருந்தார்.

சத்திரத்திற்கு கடிதம் அதுவரை வந்து சேரவில்லை என்ற போதிலும், தயாளன் தந்தையார் பெயர் (ரத்தினசாமி நாடார்) சொன்னவுடனேயே ஒரு அறை ஒதுக்கித் தந்தார்கள். இங்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். சாப்பாடு, குளியல் வசதி ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்றனர். பகல் உணவுக்குப் பின் வாடகைக்கு 2 சைக்கிள் எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நகரை பல கோணங்களி்ல படம் வரைய இடங்கள் தேர்வு செய்தோம்.

திருவண்ணாமலை மேற்கு கோபுர ஓவியம்.

மாலை 6 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் சென்று வேண்டிக் கொண்டு, இரவு சாப்பாட்டை ஓட்டலில் முடித்துக் கொண்டு, நாடார் சத்திரம் நடந்து போகும்போதே கால்கள் கெஞ்சின. முந்தைய இரவு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கண்ணை மூட முடியவில்லை.

போய் படுத்ததுதான் தெரியும். எங்கு இருக்கிறோம் என்ற நினைப்புகூட இல்லாமல் பேய்த்தூக்கம் போட்டோம். காலை 6 மணிக்கு எழுந்து காலைக்கடனை முடிக்க, திருவண்ணாமலை நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய குளத்தை அடைந்தோம். படித்துறையில் பெண்கள் துவைப்பார்கள், பாத்திரம் கழுவுவார்கள், மாடுகள் நீர் அருந்த வரும், குடத்தில் நீர் எடுத்துப் போக பெண்களும், சிறுமிகளும் வருவார்கள்.

அந்தக் கூட்டத்தில் நாங்களும், படித்துறையில் இறங்கி, பல்துலக்கி, முகம் கழுவி விட்டு, ஓட்டலில் சிற்றுண்டி முடித்துக் கொண்டு பகல் நேரத்துக்கு, பூரி கிழங்கோ, ஒரு மசால்தோசையோ இலையில் கட்டி வாங்கிக் கொண்டு மலை ஏறினோம். ஜோதி வைக்கும் மலை உச்சிக்கு பாதி வழியில் சென்று கிழக்கு நோக்கிப் பார்த்தோம். வானுயர்ந்த கோபுரங்களின் உச்சி கண்களுக்கு நேராகவும், கோயில் மதில் சுவர் மிகவும் கீழேயும் தெரிந்தது.

4 கோபுரங்கள் தூரத்தில், வயல்வெளி, ஏரிகள், அதை அடுத்து காடுகள், 22 மைல் தூரத்தில் புகைமண்டலத்தில், மங்கலாகத்தெரியும் செஞ்சி மலைப் பகுதிகள் - என கண்கொள்ளாக் காட்சி. கண்களும், மனமும் ஐக்கியமாகி விட, கைகள் அதன் போக்கில் சென்று, ‘பாலட்டில்’ வண்ணங்களை குழைத்து எடுத்து வர, 7 மணி நேரம் அபூர்வப்படைப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயில், தலையில் சூடு இறங்காமல் இருக்க எப்போதும் ஒரு தொப்பி வைத்துக் கொள்வேன்.

இடது கை ஃபிக்ஸிங் போர்டு-ஐ ஆடாமல் அசையாமல் பிடித்துக் கொள்ள, அந்தப் பலகையில் பொருத்தியிருந்த வெள்ளைத் தாளில், திருவண்ணாமலையின் பேரழகுத் தோற்றம் உதயமாகிக் கொண்டிருந்தது. பசி தெரியாது, தாகம் தெரியாது, உடல் உபாதைகள் நினைவுக்கு வராது. அது ஒரு தவம். என் மீது பாம்பு ஊறினால் கூட உணர மாட்டேன். அப்படி ஒரு மனம் ஒன்றிய படைப்புக்கலை அது. காலை 7.30-க்குத் தொடங்க 2.30 மணிக்கு வரைந்து முடித்தோம்.

பூரி கிழங்கு வழக்கம் போல் ஊசிப்போய் இருந்தது. கிழங்கை வழித்து வீசிவிட்டு 2 பூரியை மென்று தின்று தண்ணீர் குடித்தோம். 27-ம் தேதி காலை கிழக்கு கோபுரத்திலிருந்து நேராகச் செல்லும் சந்நிதி தெருமுனையில் நின்று பார்த்தோம். ரம்மியமான கோணம். மண்டபத்துக்கு இடதுபுறம் வடக்கு வாசல் உள்ள ஒரு வீட்டின் உள்ளே நுழைந்து, மாடியில் ஏறி ‘ஒரு படம் வரைய அனுமதிப்பீர்களா?’ என்று கேட்டோம். அப்போதுதான் திருமணமாகி மஞ்சள் கயிறு கழுத்தில் துலங்க, திகிலான பார்வையுடன் அந்தப் பெண், ‘வீட்டில் ஆண்கள் யாருமில்லை. நீங்கள் யாருன்னு தெரியாது. எப்படி மேலே அனுப்புவது?’ என்று கேட்டார்.

‘நான் நல்ல பையன் அம்மா. தொப்பி வச்சிருக்கறதைப் பார்த்து பயப்பட வேண்டாம். வெயிலுக்காக தொப்பி. நாங்க மாடிக்குப் போனதும், கதவை நீங்க உள் பக்கமா பூட்டுப் போட்டுக்குங்க. நாங்க படம் வரைஞ்சு முடிச்ச பிறகு வந்து திறந்து விட்டால் போதும்’என்று சொன்னோம். எதுவும் பேசாமல், பின்னால் வந்து நாங்கள் மேலே போனதும் தாழ்பாழ் போட்டுவிட்டுப் போனார்.

மலை மீதிருந்து கோயில்.

பல ஆண்டுகளாக கோபுரங்கள் பழுது பார்க்காமல் அப்படியே விட்டிருந்ததனால், செங்கல் வண்ணத்திலும், ரத்தச்சிவப்பிலும் கோபுரங்கள் ஓவியம் தீட்ட ஏற்றவாறு அவ்வளவு அழகாக இருந்தன. தூரத்தில் ஒரு மணிக்கூண்டு சுற்றிலும் வெள்ளை பார்டர், ரோஸ்கலரில் மணிக்கூண்டுச்சுவர். தூரத்தில் ஜோதி வைக்கும் மலை. அதன் மேலே மேகங்கள் இறங்கி வந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

ஆனால், கொடைக்கானல் மேகம் போல் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. மலைமுகட்டில் மேகங்கள் இருப்பது போல் வரைந்தே ஆக வேண்டும் என்று அடிப்படை ஸ்கெட்ச் கூட போடாமல், அவசர, அவசரமாக வண்ணங்களை குழைத்து மலையை அணைத்துக் கொண்டிருக்கும் மேகங்களை 5 நிமிடத்தில் வரைந்து முடித்தேன். நாலாப்பக்கமும் மேகம் காணாமல் போய் மொட்டை மலை தெரிந்தால் அதில் என்ன அழகு இருக்க முடியும்?

பின்னர் நிதானமாக கோபுரங்கள், மதில் சுவர் சன்னதி தெரு, குதிரை வண்டி, நடனமாடும் மனிதர்கள், இருபுறமும் உள்ள வீடுகளை ‘ஸ்கெட்ச்’ செய்து வரைய ஆரம்பித்தேன். ஓவியத்தின் கீழ்ப்பக்கம் இடதுபுறம் ஒரு வீடு. செங்கற்கள் பயன்படுத்தாமல், வெறும் செம்மண்ணில் நீர் ஊற்றி காலால் மிதித்த, குழைத்து, வரிவரியாக செம்மண்ணை, செங்கல்லுக்கு பதிலாக வைத்து, அது காய்ந்த பின், அடுத்த வரி என்று 10 நாள் வெயிலில் காய வைத்து கட்டிய சுவர். அதன் மீது பூசிய சுண்ணாம்புக் காரை பிய்ந்து போய் பல இடங்களில் உள்சுவர் தெரிந்தது. ஓவியத்திற்கு உயிர் தந்தது அது.

4 மணி நேரத்தில் வரைந்து முடித்து அந்த இளம் பெண்ணுக்கு நன்றி கூறி புறப்பட்டோம். பகல் உணவு முனியாண்டி விலாஸில் முடித்து, வெயில் கொஞ்சம் இறங்கியதும், மீண்டும் மலை மீது ஏறி மேற்கு கோபுரம் அதன் பின்னால் தெற்கு நோக்கி, ரமண மகரிஷி ஆசிரமம் செல்லும் கப்பி ரோடு, தூரத்தே காப்பி பொடி வண்ணத்தில் ஒரு கரடு ஆகியவற்றை ‘கம்போஸ்’ செய்து ஒரு ஓவியம் தீட்டினோம்.
அடுத்த நாட்களில், கோயிலுக்குள்ளிருந்து கிழக்கு கோபுர நுழைவாயிலையும், கோயிலுக்குள்ளே இருக்கும் இரண்டு குளங்கள், அதையொட்டிய சிறு கோபுரங்களை ‘கம்போஸ்’ செய்து ஓவியங்கள் தீட்டினோம்.

கிழக்கு கோபுர வாசல்.

டிசம்பரிலும் வெயில் கடுமையாக இருந்தது. வியர்த்து ஒழுகி சோர்ந்து, சுருண்டு போன உடம்பை மாடர்ன் கபே சென்று காசு கொடுத்து ஜில் தண்ணீரில் குளியல் போட்டபோது அது என்ன சுகம்! பசித்தவனுக்குத்தான் உணவின் ருசி தெரியும்; காய்ந்தவனுக்குத்தான் அருவியின் குளிர்ச்சி புரியும்.

கடைசி நாள் திருவண்ணாமலையின் தெற்கே உள்ள ரமண மகரிஷி ஆசிரமம் சென்றோம். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரச மரம். அதன் அடிமரத்தின் சுற்றளவே 20 அடி இருக்கும். மரத்தைச் சுற்றிலும் 4 அடி உயர திண்ணை கட்டி, தலைக்கு மேலே சரிவாக கூரை கள்ளிக்கோட்டை ஓடுகளில் வேய்ந்திருந்தார்கள். 6 அடிக்கு 6 அடி அறைகள் போல இடையே தடுப்பு. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு வெள்ளை தேவதை, மெலிதான கண்ணாடி துணி முகத்தை மறைத்தவாறு -வருடியவாறு, தலையில் அணிந்திருந்தார்.

அது உயிருள்ள பெண்மணியா? சிலையா? ஊகிக்க முடியவில்லை. கண்கள் திறந்திருந்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு தரமாவது சிமிட்டுவதைப் பார்க்கலாம். கண்கள் மூடிய நிலையில், கைகளில் ‘சின்’ முத்திரை -சம்மணம் போட்டு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு பெண், இரண்டு பெண்கள் அல்ல. மரத்தைச் சுற்றிய அந்த குடில்களில் 7,8 பெண்கள் இப்படி உலகை மறந்து, தன்னை மறந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்தனை பேரும் வெளிநாட்டுப் பெண்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இல்லாத செல்வம் வேறெங்கும் இல்லை. அங்கே இல்லாத நாகரிகம் எங்கேயும் இல்லை. அங்கே இல்லாத சுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை. கன்னிப் பெண் பெற்றோருக்குத் தெரியாமல் ‘டேட்டிங்’ இன்னொரு பையனோடு போகலாம். கல்யாணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். விருப்பம் உள்ளவருடன் சேர்ந்து வாழலாம். வேண்டாம் என்றால் விலகி விடலாம். இங்கு போல் சாதிப் பிரச்சினை இல்லை.

ஏழைப்பெண் பணக்காரனை மணக்கலாம்; பணக்காரப் பெண் ஏழையை மணக்கலாம். எத்தனை முறை வேணடுமானாலும் விவகாரத்து பெறலாம். என் குழந்தையும், உன் குழந்தையும், பிறக்கப் போகும் நம் குழந்தையோடு விளையாடட்டும் என்ற சகலவிதமான சுதந்திரமும் உள்ள நாட்டில் கிடைக்காத ஒன்றே ஒன்று மன நிம்மதி. அதைத் தேடித்தான் ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு அவர்கள் வருகிறார்கள்.

ஓவியக்கலை படிப்பவன் ஓட்டாண்டியாகத்தான் வாழ முடியும். வசதியான வாழ்க்கை, குடும்பம் ஆகியவற்றின் மீது ஆசையில்லாத நான் வருங்காலத்தில் இங்குதான் வந்து துறவற வாழ்க்கை மேற்கொள்வேன் என்று நினைத்திருந்தேன். ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!’ என்ற வரிகள்தான் மனதில் உதிக்கிறது.
...
தரிசிப்போம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x