Published : 14 Jan 2021 05:56 PM
Last Updated : 14 Jan 2021 05:56 PM

எழுத்தாளர் காஸ்யபனின் நினைவலைகள்: கருகமணியின் புத்திர சோகம்

எழுத்தாளர் காஸ்யபன் தன் மனைவியுடன் | கோப்புப் படம்.

1990களின் தொடக்கம். தமுஎச (இப்போது தமுஎகச) குற்றாலத்தில் 3 நாள் சிறுகதைப் பட்டறை முகாமை நடத்தியது. மாவட்டத்திற்கு 2 பிரதிநிதிகள், அச்சில் வந்திருந்தாலும், வராவிட்டாலும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 2 சிறுகதைகளாவது எழுதியிருக்க வேண்டும் என்ற தேடலில் 41 சிறுகதையாளர்கள் பயிற்சிக்கு குழுமியிருந்தனர்.

பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் என இரா.கதிரேசன் (அருணன்), கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, முத்துநிலவன், காஸ்யபன், தமிழ்ச்செல்வன் என்று ஐந்தாறு பேர். பயிற்சி கொடுக்கும் எழுத்தாள ஆசிரியர்கள் முதற்கொண்டு, பயிற்சி பெற வந்திருந்த மாணவ எழுத்தாளர்கள் வரை அறிமுகப் படலம். பெயர், ஊர் சொல்லி, அவர்கள் எழுதிய கதைகள், அச்சில் வந்த விவரங்களைச் சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

ஆசிரியர்களில், கல்கி, ஜனரஞ்சனி என வெகுஜன இதழ்களில் சிறுகதைகளுக்கான முதல் பரிசு எழுத்தாளராகி மேலாண்மை பொன்னுச்சாமி சுடர்விட்டிருந்தார். முத்து நிலவனின் ‘குஞ்சாணியின் டாட்டா!’ என்ற சிறுகதை கல்கி போட்டியில் அப்போது மூன்றாம் பரிசு பெற்றிருந்தது. பயிற்சி தந்த மற்ற ஆசிரியர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் செம்மலர், தீக்கதிர் உள்ளிட்ட இடதுசாரி இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர். சிலரது கதைகள் நூலாக வெளியிடப்பட்டிருந்தன.

பயிற்சிக்கு வந்த எழுத்தாளர்களும் செம்மலர், தீக்கதிர் மற்றும் சிற்றிதழ்களிலேயே ஓரிரு கதைகளை பிரசுரிக்கக் கண்டிருந்தனர். சிலர் எழுதியும் பிரசுரமாகாத நிலையில் இருந்தனர். எனக்கான அறிமுகம் வந்தபோது, ‘நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதி, தாய், கல்கி, ஜனரஞ்சனி, விகடன்!’என வெகுஜன இதழ்களில் 47 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன!’ என்றேன்.

பட்டறையில் முதலாவது வகுப்பெடுத்தவர் காஸ்யபன். அறுபது வயதுக்குக் குறையாது. ஐந்தேகால்- ஐந்தரை அடி உயரம். சீனக்காரர் மாதிரி மஞ்சள் நிறம். முன் மண்டையில் முடியில்லாத ஏர் நெற்றி. குரலில் கண்டிப்பு. பேண்ட்-சர்ட் ‘டக் இன்’ செய்து ஒரு போலீஸ் அல்லது மிலிட்டரிக்காரர் போல் படு ஸ்மார்ட்டாக இருந்தார்.

‘‘இங்கே பயிற்சி கொடுக்க வந்த நான் ஏழெட்டு சிறுகதைகளைத்தான் எழுதியிருக்கிறேன். அதுவும் செம்மலரில் மட்டும்தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இங்கே 47 கதை எழுதி விகடன், கல்கியில் பிரசுரமான எழுத்தாளர் கூட பயிற்சிக்கு வந்திருப்பது வியப்பளிக்கிறது. அவர் புதிதாக இங்கே என்ன கற்றுக் கொள்ளப் போகிறாரோ, நாங்கள் என்ன கற்றுக் கொடுக்கப் போகிறாமோ?’ என்று வேடிக்கையாகத்தான் வகுப்பை ஆரம்பித்தார்.

இவர்தான் காஸ்யபன். (இயற்பெயர் சியாமளம்). மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசுபவர்.

எடுத்த எடுப்பில் என்னையும், நான் எழுதிய சிறுகதைகள் குறித்தும் அவர் பேசியதால், ஒருவருக்கொருவர் பெரிதாகப் பேசிக் கொள்ளாவிட்டாலும், அவரைச் சுற்றியே என் கண்களும், என்னைச் சுற்றியே அவர் கவனமும் இருந்ததில் வியப்பில்லை. அந்தப் பட்டறை முடிந்து வெளியே வந்த நாளிலிருந்து அவர் என்னிலிருந்து விலகவில்லை. எழுத்தாளர் சங்க மாநாடுகள், இலக்கியக் கூட்டங்கள், அளவளாவல்கள், அவரின் கதைகள், கட்டுரைகள் இடம் பெற்ற இதழ்கள் எல்லாவற்றிலும் அவர் அன்று வகுப்பெடுத்த தோரணையே நினைவில் ஆடியது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தன் சகதோழர் சி.ஞானபாரதியின் மூங்கில் கழி சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டிற்காக கோவை வந்து பேசினார். அப்போது தனிப்பட்ட முறையில் நிறைய பேசியிருக்கிறேன். அங்கே அவரின் ஆசிரியத் தோரணை அகன்று குழந்தை உள்ளம் வெளிப்பட்டது ஒரு படைப்பாளிக்கேயான அம்சம்.

1990களின் இறுதியில் செம்மலர் இடது சாரி இலக்கிய இதழ் ஒவ்வொரு மாதமும் தன் இதழில் வெளியான கதைகளில் சிறந்த ஒன்றுக்கு சிகரச் சிறுகதை என்ற முத்திரையைக் கொடுத்து சிறப்புப் பரிசும் கொடுத்து வந்தது. அதில் முதல் சிகரச் சிறுகதை ‘கருகமணி’. காஸ்யபன் எழுதியது.

புதுமாப்பிள்ளை சுப்பிரமணியனுடன், பிறந்த ஊருக்கு பம்பாயிலிருந்து வந்திருக்கும் பேத்தி வடிவைக் கண்டு தாத்தா பிரம்மநாயகம் பிள்ளைப் பெருமிதத்தில் ஆழ்கிறார். இறந்து போன மனைவியை நினைவுபடுத்தும் முகம், நிறம். வடிவு அடிக்கடி முகம் கழுவிச் சீராக்கும் பழக்கத்தைப் பற்றிச் சலித்தாலும் மாப்பிள்ளை தன் பேத்தியை ஆராதிக்கிறான் என்பது தெரிந்து குளிர்ந்து நெகிழ்ந்து போகிறார் தாத்தா. தான் வாங்கிக் கொடுத்த பொன்னில் கோர்த்த கருகமணி மாலை பேத்தி கழுத்தில் மின்னுகிறது. மராத்தியருக்கு கருகமணி மாலை தாலி போல என்பதனால் வடிவு அதைக் கழற்றவேயில்லை.

ஒரு வாரம் ஊட்டி சென்று தங்கி வரலாம் என்று பேத்தியும் மாப்பிள்ளையும் கிளம்புகிறார்கள். சன்னலோர பஸ் பயணம். தோளில் சாய்ந்துத் தூங்கும் கணவனிடம், தான் கர்ப்பமுற்றிருக்கும் செய்தியை டாக்டர் உறுதி செய்ததும் சீக்கிரம் சொல்லவேண்டும் என்று உள்ளூர நினைத்துக் கொள்கிறாள். கோயம்புத்தூர் எல்லையில் ஓரிடத்தில் நிற்கிறது. வேட்டியைத் தொடைக்கு மேலே மடித்துக் கட்டி பனியனும் போட்ட' சிலர் பஸ்ஸின் பக்கவாட்டில் தடிகளால் தாக்குகின்றனர். பஸ்ஸைச் சுற்றி பல குரல்கள், கூச்சல்.

"டேய்! பாத்துச் செய்யணும். ஆம்பிளைன்னா மீசை இருக்காது, தாடி வச்சிருப்பான். பொம்பளைனா பொட்டிருக்காது, கழுத்துல கருகமணி இருக்கும்!’ வடிவு சன்னல் கதவைத் திறந்து பார்க்கிறாள். பஸ்ஸை நோக்கி ஒருவன் ஓடிவருவது அவளுக்குத் தெரிகிறது. அவளுடைய பொட்டில்லாத முகமும் கருகமணிக் கழுத்தும் அவனுக்குத் தெரிகிறது!’. இதுதான் மொத்தக் கதையின் சாராம்சம்.

அநேகமாக கோவை 1997 டிசம்பர் கலவரம், 1998 பிப்ரவரி குண்டுவெடிப்பை தொடர்ந்து எழுதப்பட்ட கதை. ஏதுமறியா அப்பாவி மக்களை மதவெறி எப்படி நாசமாக்குகிறது என்பதை இதை விட மென்மையாக யாராலும் சொல்லியிருக்கிறார்களா? என்று தெரியவில்லை. இவரின் ஒவ்வொரு சிறுகதையிலும் பட்டு நூலிழை போல் இழைந்திருக்கும் மென்மையான நுட்பம் வேறு எங்கும் காணக் கிடைக்காது.

பின்னாளில் ‘கருகமணி’ என்ற இதே தலைப்பில் வெளியான சிறுகதை முற்போக்கு அரங்குகள் தாண்டியும் பேசப்பட்டது. விருதுகளுக்காகவோ, நாற்காலிகளுக்காகவோ முற்போக்காளர்களுடன் கூட சமரசம் செய்து கொண்டதில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான் இவர் பேச்சு. இடதுசாரிகள் தங்கத்தால் ஆன மோதிரம் போன்ற அணிகலன்கள் அணிவது வழக்கமில்லை. அது மேட்டிமை குணாம்சம். பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு முரணானது என்பர். ஆனால், இவரோ தமுஎகச மூத்த தலைவராக, இடதுசாரியாக இருந்த போதும் தன் கைவிரலில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் பொறித்த தங்க மோதிரம் ஒன்றை அணிந்திருப்பார். அதை இவரின் தோழமை வட்டாரங்களே கலாய்ப்பதுண்டு. தங்கத்திலும் கூட பாட்டாளி வர்க்கம் பளிச்சிட வேண்டும் என்பது அவரின் பார்வை.

மதுரை கோட்ட ஆயுள் காப்பீட்டுத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவர் சில காலம் செம்மலர் ஆசிரியர் குழுவிலும் பயணித்திருக்கிறார். ஒரு மகன், ஒரு மகள். மகன் சத்தியமூர்த்தி பொருளாதாரம், சட்டம் பயின்று மேலாண்மையியலில் முதுகலைப் பட்டம் பெற்று தீயணைப்புத் துறையில் உயர் அதிகாரியாக நாக்பூரில் பணியாற்றி 2014-ல் இளம் வயதிலேயே தன் துறையின் சிறந்த சேவைக்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றார். தன் பணி ஓய்வுக்கு நாக்பூரிலேயே தன் மகனுடனே வசித்து வந்தார்.

கடந்த செப்டம்பரில் காஸ்யபனின் மகன் கரோனா தொற்றில் மரணமடைய தீராத அதிர்ச்சி. தன் நெருங்கிய நண்பர்களைக்கூட தொலைபேசி வாயிலாக அழைக்க வேண்டாம் என்கிற அளவு புத்திர சோகத்தால் பாதிக்கப்பட்டார். இப்படி புத்திர சோகத்தால் வாடிய 86 வயது காஸ்யபனை- சமூகத்தில் கருகமணிகளுக்காக உருகியவரை நேற்று இரவு மரணம் தழுவிக் கொண்டது. காஸ்யபனின் மனைவியும் எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x