Published : 11 Jan 2021 11:22 AM
Last Updated : 11 Jan 2021 11:22 AM

சித்திரச்சோலை 29: இன்ஸ்பிரேஷன்

ஓவியர் ஜீவாவுடன்...

சிவகுமார்

‘இது கூடவே கூடாது!’ என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் ‘அதுவே’ அவர்களுக்கு வாழ்க்கையாகி விடுகிறது. ‘இது எனக்குப் பிடித்திருக்கிறது!’ எனச் செய்கிறார்கள். ஆனால், ‘அது சோறு போடாது!’ என்று முடிவு செய்து வேறு துறைக்குச் செல்கிறார்கள். என்றாலும் பிடித்தது எதுவோ அது இவர்களை விட்டுப் பிரிவதேயில்லை. அப்படி இருவேறு விதத்தில் ஓவியமே வாழ்க்கையாகத் திகழ்பவர்கள்தான் இந்த ‘இன்ஸ்பிரேஷன்’ பகுதியில் நான் சொல்லப் போகும் ஓவியர்கள் ஜீவாவும், ஜெயராமனும்.

குக்கிராமத்தில் 15 வயது வரை வாழ்ந்த ஒரு இளைஞனுக்கு கோயம்புத்தூர் நகரம் சொர்க்க லோகம்தான்.

7, 8 வயதில் பழனி மலைக்குப் போக இரவில் பஸ் ஏறி கோவை வந்து கண்கூசும் மின் விளக்கொளியில் ரயில் நிலையம் சென்று இரவு 10 மணிக்குச் செல்லும் திண்டுக்கல் பாசஞ்சரில் ஓரிரு முறை பயணம் செய்திருக்கிறேன்.

சூலூரில் சினிமாவே தீபாவளி பொங்கல் இரண்டு நாள்தான் அனுமதி. சினிமா போஸ்டர்களைப் பார்த்தே ஏக்கத்தைத் தீர்த்துக் கொண்டேன்.

எஸ்.எஸ்.எல்.சி., முடிந்து ஓராண்டு ஊரில் தங்க நேர்ந்த காலகட்டத்தில் பொங்கியண்ண கவுண்டர், ஆசிரியர் குமாரசாமி ஆகியோருடன் சைக்கிளில் சில சமயம் கோவை சென்றிருக்கிறேன்.

கர்னாடிக் தியேட்டரில் ‘தெனாலிராமன்’ படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் சிவாஜி, பாகவதர், பண்டிதர் என்று பல மாறு வேஷங்களில் நடித்துள்ளதை தியேட்டர் முழுக்க சினி ஆர்ட்ஸ் வரைந்து வைத்திருந்தது.

‘பேசும் படம்’ பத்திரிகையில் கையளவு பார்த்த சிவாஜி முகம் கட்டிட உயரத்திற்குப் பெரிதாக, அடையாளம் மாறாமல் வரைந்திருந்தது ஆச்சர்யமூட்டியது.

பழனி மலையை அடிவாரத்திலிருந்து பார்த்தால் முழு தோற்றத்தையும் ரசிக்க முடியாது. 6 கி.மீ தூரத்திலுள்ள ரயில் நிலையத்திலிருந்து பார்த்தால் கையெடுத்துக் கன்னத்தில் போட்டுக்கொள்ளத் தோன்றும்.

ஓவியர் ஜெயராமனுடன்...

அப்படி தியேட்டருக்கு எதிரே ரோட்டின் மறுபுறம் இருந்து பார்த்தால் வரைந்த ஓவியனைக் கையெடுத்து கும்பிடத்தோன்றியது.

‘சினி ஆர்ட்ஸ்- என்.எச் ரோடு’ என்ற பெயர் மட்டும் ஆழ்மனதில் பதிவாகி இருந்தது. அதன் உரிமையாளர் நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்ட வேலாயுதம் என்பதும் அந்த ஓவியரின் மகன்தான் ஜீவா என்பதும் பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன்.

பேனர் ஓவியனாகி, 60 அடி கட் அவுட் வரைந்து வைப்பவன் ஓவியச் சக்கரவர்த்தி என்று நினைத்திருந்தேன். சென்னை சென்று மோகன் ஆர்ட்ஸில் பார்த்தபோதுதான் அந்த மாபெரும் கலைஞன் அந்தத் துறையில் கடைநிலை ஊழியனைப் போல் நடத்தப்படுவதை அறிந்து ரத்தக்கண்ணீர் வடித்தேன்.

வேலாயுதம் புத்திசாலி. இந்தக் கொத்தடிமை வேலையை மகன் செய்யக்கூடாது என்று முடிவெடுத்து, அவன் கலெக்டராக வரவேண்டும் என்று கனவு கண்டார். எம்.ஏ.,பி.எல் படித்த ஜீவாவின் படிப்பு முடியும் முன்பே தந்தையார் காலமாகிவிட்டார். விதி விடவில்லை. பேனர் ஆர்ட்டுக்கு வாரிசாக மகனையே இழுத்து வந்துவிட்டது. ஆனால், புத்திசாலியான ஜீவா பேனர் வரைவதோடு நில்லாமல், தன்னுடைய 5 உடன்பிறப்புகளையும் காப்பாற்ற பிரஷ்ஷை எடுத்தார்.

பேனர்களில் புதிய பாணி வண்ணங்களையும், லே-அவுட்களையும் கையாளுகிறார். பேனர் ஓவியர், வாட்டர் கலர், லைன் டிராயிங், அக்ரலிக், புத்தகங்களுக்கு அட்டை ஓவியம், பத்திரிகை ஓவியம் என்று என் குருநாதர் ஆர்.நடராஜனைப் போல பல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

ஜீவா ஓவியம் தீட்டுதல்.

1978-ல் கோவையில் நவீன ஓவியர்களுக்கான சித்ரகலா அகாடமி தோன்றியபோது மாணவனாக அதில் இணைந்த ஜீவா, அதன் செயலாளர், துணைத் தலைவர், தலைவர் என்று பதவி உயர்வு பெற்று இன்று அந்த அமைப்பைத் திறம்பட நடத்தி வருகிறார்.

இதுவரை 44 குழு ஓவியக் கண்காட்சிகளையும், மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகளையும், ஞாயிறு வகுப்புகளையும் தன் தோழர்களோடு இணைந்து நடத்தி வருகிறார்.

தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களான தனபால், ஆதிமூலம், அந்தோணிதாஸ், அல்ஃபோன்சோ, பாஸ்கரன், ட்ராட்ஸ்கி மருது ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதோடு இன்று வளரும் ஓவியர்களுடனும் பரிச்சயமாகி இருக்கிறார்.

திரைப்படங்கள் குறித்து இவர் எழுதிய ஒரே நூலான ‘திரைச்சீலை’ 2010-ல் சிறந்த திரைப்பட நூலுக்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றுத் தந்துள்ளது.

கோவையில் அவரது பாராட்டு விழாவில் நானும் கலந்துகொண்டு திரைச்சீலைக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

ஆர்.பி.பாஸ்கரன் ‘ஒன் மேன் ஷோ!’ கோவையில் நடந்தபோதும் 2017-ல் என்னுடைய ஓவியக் கண்காட்சி ஜி.டி.நாயுடு ஆடிட்டோரியத்தில் ந்டைபெற்றபோதும் உடன் பிறந்த சகோதரனாக என்கூடவே இருந்தார்.

ஜீவாவின் பேனர் ஓவியம்.

பேனர்கள் பயிற்சி கட்டற்ற வண்ண சுதந்திரம் இவருக்குத் தந்ததால் இவரது ஓவியங்களில் ஆழ்ந்த வண்ணங்கள் எதிர்பாராத இடங்களில் காணலாம். வேகமான தூரிகை வீச்சு அழுத்தம் இவரது தனித்தன்மை. கையால் வரையும் பேனர் தொழில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மறையத் தொடங்கியபோது இவர் கணினிக்கு மாறிக் கொண்டார்.

இப்போது கணினி மூலம் டிஜிட்டல் ஓவியங்களும் பத்திரிகை ஓவியங்களும் வரைந்து தன் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்.

இயற்கைக் காட்சிகளை ஊர் ஊராகப் போய் திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, திருப்பதி, கன்னியாகுமரி, குற்றாலம் என்று என்னைப் போல் வரைய மாணவப் பருவம் ஜீவாவுக்கு அமையவில்லை. அப்படி ஓவியக் கல்லூரியில் படித்திருப்பின் அதையும் ஒரு கை பார்த்திருப்பார்.

இருந்த இடத்திலேயே பேனர், லே-அவுட் என்று வரையும் வாழ்க்கை அமைந்து விட்டதனால், இயற்கைக் காட்சிகளை விட மனித உருவங்களை அதிக ஆர்வத்துடன் வரைகிறார்.

என்னை மாதிரி ஓவியத்துறையை விட்டு பயந்து ஓடாமல், ‘ஓவியம்தான் தனக்குச் சோறு போடுகிறது. உலகுக்குத் தன்னை அறிமுகப்படுத்துகிறது. சமுதாயத்தில் ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது என்று தான் ஓவியக்கலைஞன்!’ என்று சொல்வதையே பெருமையாக நினைக்கிறார்.

ஜெயராமன் தொழில் முறை ஓவியரல்ல. ஓவியம் தீட்டுவது இவருக்குப் பொழுதுபோக்கு. இந்தப் பதிவிலே வந்துள்ள இவரது ஓவியங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்தவை.

ஜீவாவின் பேனர் ஓவியம்

ஜெயராமன் எனக்கு ரசிகரானதே ஒரே ஒரு கடிதம் மூலம்தான். அப்போது அவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். எனது 4-வது படம் ‘சரஸ்வதி சபதம்’ 1966-ல் வெளி வந்தது. அந்தப் படத்தைப் பார்த்த சிறுவன், ‘உங்களுக்கு மகா விஷ்ணு வேஷப் பொருத்தம் நல்லா இருக்கு. இளமையா அழகா இருக்கீங்க. குரல் கணீர்னு இருக்கு. தமிழ் உச்சரிப்பு கூட தப்பில்லை. ஆனா, உங்க டயலாக்கைப் பேசி முடித்ததும், சிவாஜி - தேவிகா பேசும்போது வேடிக்கை பார்க்கறீங்க. அந்த வசனங்களுக்கு ரியாக்ட் பண்ணனும். போகப்போக தெரிஞ்சுக்குவீங்க. இப்பவே கத்துக்குங்க’ என்று எழுதி இருந்தார்.

பள்ளியில் படிக்கும் பையனின் துணிச்சலும், கூர்ந்து கவனிக்கும் திறனும் என்னை வியக்க வைத்தது. அப்போது பழக்கமாகி, 54 வருடமாக எங்கள் நட்பு நீடிக்கிறது.

ஜெயராமன் திருச்சி மாவட்டம் துறையூரில் பிறந்தவர். சொந்த ஊரில் பள்ளிப் படிப்பு முடித்து 1967-ல் திருச்சி நேஷனல் காலேஜில் பிஎஸ்சி படித்தார். ஓவியக்கலை படிப்பு பற்றி நான் விளக்கிச் சொல்லி, ‘பொருளாதார பலம் இருந்தால் ஓவியக்கலை பயிலலாம். இதை வைத்து வேலைவாய்ப்பு, சிறப்பான எதிர்காலம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கல்லூரியில் சேர்ந்து படித்து கவுரவமான வேலை தேடிக்கொண்டு பொழுது போக்காக ஓவியம் வரையலாம்!’ என்று சொன்னேன்.

1971-ல் பிஎஸ்சி பட்டம் வாங்கி இந்திய அஞ்சல் துறையில் 1972-ல் விருத்தாச்சலத்தை அடுத்த பெண்ணாடத்தில் கிளார்க் வேலையில் சேர்ந்தார். எழுதப் படிக்கத் தெரிந்தது 5 வயதில்தான். ஆனால், சுவர்களிலும், தரையிலும் கிறுக்கி ஓவியம் தீட்டத் தொடங்கியது 3 வயதில்.

ஜீவா ஜனாதிபதி விருது

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் முகத்தைப் பார்த்து நோட்டில் வரைவார்.

கல்லூரியில் படிக்கும்போதும், அலுவலக வேலையில் சேர்ந்த பின்னரும் கூட பொழுதுபோக்கு ஓவியம் தீட்டுவதுதான். நல்ல ஓவியம் யார் வரைந்திருந்தாலும், எந்தப் புத்தகத்தில் வந்திருந்தாலும் அதைப் பார்த்து வரையத்தோன்றும்.

பெரும்பாலான ஓவியங்கள் திரைப்பட நடிகர், நடிகைகள் படம்தான். உறவினர்கள், நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் புகைப்படத்தைப் பார்த்து வரைந்து தந்தவற்றை வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஜெயராமன் வரைந்த ஓவியம்

நேஷனல் காலேஜில் படிக்கும்போது நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் அதிகம் இடம் பெற்றன. அதிக பரிசுகளும் பெற்றிருக்கிறார். 1977-ல் விருத்தாச்சலம் தலைமை அஞ்சலகத்தில் அக்கவுண்டண்டாகப் பதவி உயர்வு பெற்றார்.

2004 -மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் சூப்பிரன்டெண்டாக பணியில் அமர்ந்தார். கம்ப்யூட்டர், கோரல் டிரா, போட்டோ ஷாப் முதலான பல்வேறு மென்பொருள்களைக் கையாளும் திறமைகளை அங்குதான் பெற்றார்.

ஜெயராமன் வரைந்த ஓவியம்

மதுரை அஞ்சல் நிலையத்திலிருந்து வெளியான ஃபோகஸ் என்ற காலாண்டு ஆங்கில இதழின் ஆசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். ஒரு இதழுக்குரிய லே அவுட் வடிவமைக்கும் திறனையும் இணையத்தில் கிடைக்கும் படங்களைக் கொண்டு அவரே தேர்ச்சி பெற்றார்.

2008-ல் சென்னை அடையாறு தபால் நிலையத்தில் முதல் நிலை போஸ்ட் மாஸ்டராகப் பணியில் சேர்ந்து 2011-ல் ஓய்வுபெற்று பொழுதுபோக்காக ஓவியம் தீட்டுவதில் மூழ்கி இருக்கிறார்.

---

தரிசிப்போம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x