

அக்டோபர் 15. உலகின் மிக முக்கியமான இரு சிந்தனையாளர்கள் பிறந்த தேதி. ஒருவர், ஜெர்மானிய மெய்யியலாளரும் நவீன இலக்கிய உலகிலும் தத்துவவாதிகளிடமும் பெரும் தாக்கத்தைத் தந்தவருமான பிரெடரிக் நீட்ஷே. 1844 அக்டோபர் 15-ல் பிரஷ்யாவின் சாக்ஸோனி பகுதியில் பிறந்தவர். மற்றொருவர், பிரெஞ்சுத் தத்துவ அறிஞர் மிகேல் ஃபூக்கோ. 1926 அக்டோபர் 15-ல் பிரான்ஸின் போட்யே நகரில் பிறந்தவர். இருவரும் நவீன மற்றும் பின்நவீன இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.
எங்கும் அதிகாரம் நிறைந்திருக்கிறது என அறிவித்தார் ஃபூக்கோ. ஆட்சி பீடத்தில் இருப்பவர்களிடத்தில் மட்டுமல்லாமல், ஒழுக்கம் என்ற பெயரில் குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் பள்ளிக்கூடங்களும், எந்நேரமும் சிறைவாசிகளைக் கண்காணிக்கும் சிறைச்சாலைகளும், அவ்வளவு ஏன் பாலியல் ஒழுக்க விழுமியங்களைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கும் குடும்ப அமைப்புகளும் அதிகார மையங்களே. ஆக, அதிகாரம் மேலிருந்து கீழே மட்டுமல்ல, கீழிருந்து மேலேயும் பாயும் என்றார்.
கடவுளின் மரணத்தைப் பகிரங்கமாக அறிவித்தவர் நீட்ஷே. இவ்வுலகம் முழுவதும் ஆண்டான் அடிமை என்னும் உறவு முறையில்தான் இயங்குகிறது. “நீ எஜமானாக இரு. இல்லையேல், அடிமையாக ஒடுக்கப்படுவாய்” என்றார். ஆனால், ஒவ்வொரு மனிதனும் முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். ஏனெனில், மனிதன் சர்வ வல்லமை படைத்தவன் என்றார். கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அறிவித்த நீட்ஷேவைத் தன் மானசீக குருவாக மனதில் நிறுத்தியவர் சர்வாதிகாரியான ஹிட்லர் என்பது சரித்திர வியப்பு.