Published : 08 Jan 2021 10:44 AM
Last Updated : 08 Jan 2021 10:44 AM

சித்திரச்சோலை 28 - திருப்பதியும்; சில பட்டாம்பூச்சிகளும்...

சிவகுமார்

1962 -அக்டோபர் 3-ந்தேதி பாரிஸ் கார்னரிலிருந்து காலை 6 மணி பஸ் பிடித்து 11.30-க்கு கீழ் திருப்பதி போய்ச் சேர்ந்தோம். தசரா விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை -கோடை விடுமுறைகளில் தமிழகத்தில் புகழ்மிக்க கோயில்களுக்கு சென்று ‘ஸ்பாட் பெயிண்டிங்’ வரைவது என்று முடிவெடுத்தபடி இந்த தசரா விடுமுறையில் திருப்பதி செல்ல திட்டமிட்டேன். 6 நாட்கள் திருப்பதியில் தங்கி, சாப்பாடு, பஸ் செலவு எல்லாம் சேர்த்து 35 ரூபாய் பட்ஜெட். நான் உஷராக 5 ரூபாய் சேர்த்து 40 ரூபாய் கொண்டு சென்றேன்.

கருட உற்சவம், ரத உற்சவம் சமயம் என்பதால் இந்தியாவிலிருந்து ஏழுமலையான் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள்.

ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் -பைலட் தியேட்டர் எதிரில் திருப்பதி தேவஸ்தான அலுவலகம் இருந்தது. அங்கு சென்று ஓவியக்கல்லூரி மாணவர்கள் என்ற அத்தாட்சி கடிதம் காட்டி -திருப்பதியில் இலவசமாக சத்திரத்தில் தங்கிக் கொள்ள அனுமதி சீட்டு வாங்கி வைத்திருந்தேன்.

திருப்பதியில் ரயில்வே பாதைக்கு எதிரில் தெற்கு பார்த்த மாதிரி பாலாஜி பவன் சைவ ஓட்டல் புதிதாக திறந்திருந்தனர். நானும், வகுப்புத் தோழர்கள் ரகமத்துல்லா, சேனாதிபதி இருவரும் பகல் உணவு முடித்து விட்டு, கொளுத்தும் வெயிலில் அங்கிருந்து 3 கிலோமீட்டர் நடந்து மலை அடிவாரம் சென்றோம்.

200 ஆண்டு கடந்து உளுத்துப் போய் ஓட்டை விழுந்த மரம் ஒன்று. அதன் கீழ் ஐஸ் வண்டி. ஐஸ்கட்டியை உளி போன்ற ஒரு இரும்புப் பட்டையில் உரசி, பொடியாக்கி அதன் மீது சிவப்பு, மஞ்சள் கலரில் ‘எசன்ஸ்’ தெளித்து குச்சியில் அழுத்தி ரெடிமேட் ஐஸ் கொடுத்தார் ஒருவர். ஒரு கிழவி கொய்யாப்பழம், வெள்ளரிப்பழம் கூடையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.

திருப்பதி ஓவியம்

ஒளவையார் தோற்றத்தில் எந்த ஊர் போனாலும் ஆயிரக்கணக்கில் பாட்டிமார் ஒட்டிய வயிறோடு, இப்படி ஏதாவது ஒன்று விற்றுத்தான் பிழைக்கிறார்கள். 109 வயது வரை எங்கள் கிராமத்தில் ஒரு பாட்டி வாழ்ந்தார். கணவனை இழந்து 50 வருடங்கள் இந்த உலகத்தில் தைரியமாக அவரால் வாழ முடிந்தது. மனைவியை இழந்து 30 வருடம் ஆரோக்கியமாக வாழ்ந்த ஆண்களைத் தேட வேண்டும்.

கொளுத்தும் வெயிலை மறைக்க தலையில் கர்சீப்பை நனைத்து போட்டுக் கொண்டு பாதி மலையில் இருந்த மொட்டைக் கோபுரம் வரை நடப்பதற்குள் நாக்கு வெளியே வந்து விட்டது. வறண்டு போன தொண்டையை நனைக்க, மொட்டைக் கோபுரத்தடியில் பெரிய மொடாவில் (மண்பானை) தண்ணீர் ஊற்றி ஒடுங்கிப் போன அலுமினிய டம்ளர் வைத்திருந்தார்கள்.

மொட்டைக் கோபுரம் வந்து சேர்வதற்குள் ‘ஹாவாய்’ செருப்பில் வார் அறுந்து விட்டது. இரண்டையும் தூக்கி வீசி விட்டு வெறுங்காலில் மேல் திருப்பதி நடந்தோம்.

காலரா எச்சரிக்கை செய்ய வழியில் பக்தர்களுக்கு தடுப்பு ஊசி போட்டார்கள். நாங்களும் குத்திக் கொண்டோம்.

‘எங்கய்யா ஏழுமலையான் கோயில்?’ என்று வருபவரிடத்தில் கேட்டால், ‘இதோ இந்த மலை தாண்டினா, கோயில் வந்து விடும்!’ என்றே பதில் வந்தது. அந்த மலையைத் தாண்டினால் அடுத்து ஒரு மலை, அதைத் தாண்டினால் அதையடுத்து ஒரு மலை. நமக்கு தெம்பூட்டுவதற்காக, எல்லோரும் ஒரே மாதிரி -அந்த மலையை தாண்டினா கோயில் என்று பொய் சொன்னார்கள்.

உண்மையில் 7-வது மலையைத் தாண்டி தூரத்தில் வெள்ளைக் கோபுரத்தை பார்த்தபோது பட்ட கஷ்டத்தில் சொர்க்கத்தைப் பார்த்த நெகிழ்ச்சி.

அதிகாலை பஸ் பயணம். வயிறு முட்ட சாப்பிட்டது. அதே வேகத்தில் வெயிலில் 7 மலைகள் ஏறியது.

திருப்பதி அவுட் லைன் ஓவியம்

எல்லாமுமாக சேர்ந்த களைப்பில் எங்காவது படுத்து விடலாம் போலிருந்தது. வேறு வழியில்லை. மேல் திருப்பதியிலிருந்து அடிவாரத்திற்கு பஸ்ஸில் போய் விடலாம் என்று முடிவு செய்தோம். 14 கிலோமீட்டர் பஸ் பயணத்திற்கு 1 ரூபாய் 44 பைசா கட்டணம். இது எங்கள் பட்ஜெட்டில் சேராத ‘எக்ஸ்ட்ரா’ செலவு.

கீழ் திருப்பதி வந்ததும், அனுமதி சீட்டை காட்டி தேவஸ்தான சத்திரத்தில் தங்கிக் கொண்டோம். அடுத்த இரண்டு நாட்கள் அடிவாரத்தில் படிகளுடன் கூடிய மலையின் தோற்றம், பாதி மலையிலிருந்து திரும்பிப் பார்த்தால் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகம், அதையொட்டிய நிலப்பரப்பு இப்படி படங்கள் வரைந்து விட்டு மேல் திருப்பதி பயணமானோம்.

ஓவியக்கல்லூரி ஆசிரியர் கிருஷ்ணாராவின் நண்பர் திருப்பதி தேவஸ்தான ஊழியர் ஒருவர். எங்கள் ஓவியங்களைப் பார்த்து பாராட்டி விட்டு, ‘மேல் திருப்பதியில் தங்குவதற்கு பிரச்சனை ஏற்பட்டால் தபால் ஆபீசில் இந்த சீட்டைக் காட்டி என் பெயரைச் சொல்லுங்கள். இடம் தருவார்கள்!’ என்று கொடுத்தார்.

நாம்தான் சென்னையிலேயே அனுமதி சீட்டு வாங்கி வந்து வந்திருக்கிறோமே; இது எதற்கு என்று தோன்றினாலும் இருக்கட்டும் என்று பாக்கெட்டுக்குள் வைத்தேன்.

மூணாவது நாள் மேல் திருப்பதி போனால் -சத்திரத்தில் தங்க அனுமதிக்காக 1 பர்லாங் தூரத்திற்கு க்யூ வரிசை. நான் கம்பீரமாகப் போய் இடையில் நுழைந்தேன். அக்கட சூடண்டி க்யூ. அங்க போ என்று இடித்துத் தள்ளினார்கள்.

அந்த க்யூவில் நின்று இடம் கிடைப்பது சாத்தியமில்லை என்று தெரிந்ததும், மனதில் ஒரு மின்னல் வெட்டியது. கிருஷ்ணாராவ் வாத்தியார் நண்பர் கொடுத்த லெட்டர்.

அளவில்லா சந்தோஷத்தில் பாக்கெட்டில் கைவிட்டால் கோலி குண்டாக ஒரு பேப்பர். நேற்று பேண்ட் துவைத்தபோது அது நனைந்து சுருண்டு பரிதாபமாக இருந்தது. நல்லவேளை விரித்துப் பார்த்தால் எழுத்து எதுவும் இல்லை. XXX- என்று மூன்று பெருக்கல் குறி. அதாவது மிகவும் அவசரம் என்று குறித்து தந்துள்ளார்.

சரி, தபால் ஆபீஸ் போகலாம் என்று புறப்பட்டோம்.

‘ஐயா! போஸ்ட் ஆபீஸ் எங்க இருக்கு?’’

‘‘அதோ, அந்த கோபுரத்துகிட்ட..!’’

கோபுரம் தாண்டி, ‘‘எங்கய்யா போஸ்ட் ஆபீஸ்?’

‘‘வெளிப்பக்கம்!’’

எங்கே என்று பூத கண்ணாடி வைத்து தேடினால் பன்றிக்குடில் அளவுக்கு 6 அடி உயரம் 5 அடி அகலத்தில் ஒரு டெண்ட் போட்டு அதற்குள்ளே நாமம் போட்ட ஒருவர். கடிதங்களுக்கு ‘சப், சப்’பென்று முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்.

குனிந்து தலையை விட்டு, பணிவுடன் கும்பிடு போட்டு சேஷாத்திரி பெயர் சொல்லி, துண்டு சீட்டைக் கொடுத்தோம்.

திருப்பதி வெங்கடாஜலபதி

அவர் பரிதாபமாக முழித்தார். புரிந்து விட்டது ‘‘நீங்கள் இந்தச் சின்ன இடத்தில் நாங்கள் தங்க இடம் தர முடியாது. எங்கள் BAG-களை வைத்துக் கொள்ள அனுமதித்தால் போதும்!’’ என்றோம்.

நாமக்காரர் வாயெல்லாம் பல்.

திரும்பிய பக்கமெல்லாம் மனிதத் தலைகள். மொட்டைத் தலைகள். குடும்பப் பெண்கள். நூற்றுக்கணக்கில் மொட்டையடித்து இடுப்பில் குழந்தைகளுக்கும் மொட்டை போட்டு, அலை அலையாய் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

இருள் கவியத் தொடங்கி விட்டது. என் காலடியில் இடறலை .உணர்ந்து குனிந்து பார்த்தேன். தரையில் மல்லாந்து ஒருத்தர் படுத்துக் கொண்டார். ரகமத்துல்லா பின் கால் பக்கம் ஒருவர் சாய்ந்தார்.

‘‘டேய்! விட்டா நாம நிக்கக்கூட இடம் கிடைக்காது. படுங்க!’’ என்று சொல்லி கால் வைக்கும் இடைவெளியில் மூவரும் படுத்துக் கொண்டோம். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து பாதையோரம் இருந்த பைப்பை ஒருவன் அடிக்க மற்றவன் 2 கைகளாலும் தண்ணீர் பிடித்து முகம் கழுவிக் கொண்டோம். காலைக்கடன் மறைவிடத்தில் மலையில் செடிகளைத் தாண்டி முடித்துக் கொண்டோம்.

மெயின் கோபுரம் உள்ள சந்நதி தெருவில் நேரு கபே என்று ஒரு சிறிய சிற்றுண்டி சாலை இருந்தது. போய் இட்லி வடை கேட்டோம். தட்டில் இட்லியும், வடையும் வந்தது. ‘சாம்பார்!’ என்று குரல் கொடுத்தோம். கரண்டியில் கொண்டு வந்து இலையில் விட்டான் சர்வர். அது வாய்க்காலில் குதித்தோடும் தண்ணீர் போல என் பேண்ட்டை நனைத்து தரையில் விழுந்தது.

‘‘என்னப்பா இது?’’

‘‘உற்சவ சீசனில் இப்படித்தான் தர முடியும்!’’

‘‘காசு பார்க்க வேண்டாமா?’

வாயைப் பொத்திக் கொண்டு இட்லியை பிய்த்துப் போட்டு, தொண்டையிலிருந்து அதை கீழே இறக்க தண்ணீர் இரண்டு மடக்கு குடித்தேன்.

சந்திரகிரி வியூ என்பது மேல் திருப்பதியிலிருந்து 1000 படிகள் கீழே வந்ததும் கிடைக்கும் தோற்றம்.

‘ஃபிக்சிங் போர்டு’-ல் ஓவியம் வரைய பேப்பரை பொருத்தி, ஒரு கையில் ‘பேலட்’ கலர் பாக்ஸ் எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினோம்.

உலகத்திலேயே அத்தனை வெரைட்டியான அத்தனை பிச்சைக்காரர்களை எங்கும் பார்க்க முடியாது. பார்வை இழந்த பெண்மணி. கேட்க, பேச முடியாத ஊமை ஜாடையில் ஓர் ஆண். இரண்டு கைகளும் இழந்த வயோதிகர். ஒரு கால் இழந்த சிறுவன். கற்பனை செய்ய முடியாத உடல் குறைபாடுகளுடன் மக்கள், படிகளின் இருபுறமும்.

ஓர் இடத்திலே தலையை முழுக்க மண்ணுக்குள் புதைத்து மண்ணால் மூடிக் கொண்டு, இரண்டு கால்களும் ஆகாயத்தில் பத்மாசனம் போல் கோர்த்துக் கொண்டிருக்க -கையால் மார்பில் ஒருவர் தட்டிக் கொண்டிருந்தார். கிலியடித்து விட்டது எனக்கு. மூச்சைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு நேரம் அவர் மண்ணுக்குள் தலையை வைத்திருக்க முடியும்? இப்படியெல்லாம் பிச்சை எடுக்கும் கொடுமை அதன் பிறகு நான் எங்கும் பார்த்ததில்லை.

திருப்பதியில் 1970-ல் ' திருமலை தென்குமரிபடப்பிடிப்பில்

நேரு கபேயில் பார்சல் செய்து எடுத்துப் போன பூரி பார்சலை 1 மணிக்கு பிரித்தேன். வெயில் சூட்டில், மசாலா ஊசிப்போய் கெட்ட வாசனை வந்தது. அப்படியே வழித்து வீசி விட்டு மெலிதான பூரிகள் இரண்டை கடனே என்று கடித்து மென்று தின்று தண்ணீர் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டேன்.

ஒரு நாள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பின்னால் 100 ஆண்டு கடந்த ஆலமரம் ஒன்றிருந்தது. அதை ஒரு நாள் வரைந்தோம். அடுத்தந நாள் திருப்பதி கோபுரம். அதையொட்டி இடதுபுறமாக உள்ள தடாகம்.- பின்னணியில் பச்சை மலை, ஆங்காங்கே காட்டேஜ்கள் அமைந்த தோற்றத்தை வரைந்தேன். பாதி வரையும்போது மழை வந்து விட்டது.

வெயிலில் கட்டிடங்களின் ‘லைட் அண்ட் ஷேடு’ வேறு. மழை பெய்த பிறகு, நனைந்த சுவர்களின் தோற்றம் வேறு. ஒரு வழியாக சமாளித்து வரைந்து முடித்தேன்.

கையில் இருக்கும் காசைக் கணக்குப் பார்த்தோம். திருப்பதி -சென்னை பஸ் கட்டணம் 3 ரூபாய், இரவு சாப்பாட்டுக்கு 1 ரூபாய், ஆக 4 ரூபாய் சில்லறை கையில் இருந்தது. கீழ் திருப்பதிக்கு பஸ்ஸில் போக 1 ரூபாய் -44 காசில்லை. தாங்க முடியாத களைப்பு. கல்லூரிப் பெண்கள் 50 பேர். பாவாடை தாவணி, சுரிதாரில் கலகலவென சிரித்தவாறு படியில் இறங்கினார்கள். 20 வயது இளைஞர்கள் நாங்கள். நடையின் வலி தெரியாதபடி பட்டாம்பூச்சிகளை பார்த்தவாறு கீழ்த்திருப்பதி வந்து சேர்ந்தோம்.

3-ந்தேதி பகல் பொழுது சாப்பிட்ட சாப்பாடு. 6 நாளாக காஞ்சு போன பூரி, வெரைச்சுப் போன இட்லி சாப்பிட்டவர்கள். பாலாஜி பவன் வந்து 1 ரூபாய்க்கு வடை பாயச்சத்துடன் ஸ்பெஷல் சாப்பாடு தொண்டைக் குழி வரை நிரப்பிக் கொண்டு தர்ம சத்திர வெராண்டாவில், பைகளை தலைகைக்கு வைத்து தூங்கினோம். அந்த நிறைவான தூக்கம்

எத்தனை கோடி இருந்தாலும், ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் குளுகுளு அறையில் தூங்கினாலும் கிடைக்கவே கிடைக்காது.

மறுநாள் கலை 8 மணி பஸ் பிடித்து திருத்தணி வழியே சென்னை வந்து சேர்ந்தோம்.

---

தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x