Published : 05 Jan 2021 07:18 AM
Last Updated : 05 Jan 2021 07:18 AM

இன்று போல நாளை இல்லை- கரோனா உருவாக்கிய மாற்றங்கள்

கரோனா தாக்கத்தினால் 2020 ஆம் ஆண்டின் பல மாதங்கள் பயமும் அச்சமும் இருளும் சூழ்ந்து காணப்பட்டது. தற்போது அந்த நிலை மெல்ல மெல்ல மாறி, இயல்பு நிலைக்கு வரும் நாளை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இயல்பு நிலை மாறிவரும்போதும் பழைய நிலையில் அத்தனை எளிதில் திரும்பமுடியுமா என்பது கேள்விக்குறியே?

இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சரிவு நிலை சற்றே மாறி மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.15 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வருவாய் கடந்த 2019 ஆம் ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட 12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நிலைச் சரிவிலிருந்து மீளத் தொடங்கியுள்ள நிலையில் வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் உச்சகட்டத்தில் வேலையின்மை 23.5 சதவீதம் என்ற அளவில் இருந்த நிலை மாறி அக்டோபர் மாதத்தில் 6.98 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது . இந்தத் தகவலை இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ) தெரிவித்துள்ளது குறிப்பிட்டதக்கது.

இயல்பு நிலையை நோக்கிய நீண்ட பயணத்தில் சில விஷயங்களில் பழைய நிலையை அடைய இயலாது. அதே நேரம் பல புதிய நிலைகள் உருவாகியுள்ளன. ஊரடங்கு சமயத்தில், இந்தியாவின் 43 லட்சம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களில் 90 சதவீதம் பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு மாறினர். வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையும், எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்கிற முறையும் பணிச்சூழலை, பணியிடங்களை மொத்தமாக மாற்றியமைத்து வருகின்றன.

ஊரடங்கின் தொடக்கத்தில் வேலை தொடருமா? என்கிற கவலையும், சந்தேகமும் நிலவியதால் காலத்திற்கு ஏற்ப புதிய வேலை முறைக்குப் பணியாளர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர். இதனால் பணியாளர்களின் உற்பத்தித் திறன் அதிகமானது. வீட்டிலிருந்து வேலை செய்வதே புதிய இயல்பு நிலையாக மாறியது.

வேலைக்குச் செல்வதற்கான பயண நேரம் மிச்சம், விருப்பப்படும் நேரத்தில் வேலை செய்து இலக்கை அடைவது, வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே உள்ள சமநிலையை எட்டுவது என இந்தப் புதிய முறையால், ஒரு கனவு நனவானதைப் போலத் தெரிந்தது.

அதிக வாடகை, மின்சாரச் செலவு, ஏ.சி., பணியாளர்களுக்குத் தேவையான இதர அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர்களை அழைத்து வர, வீட்டில் விட வாகன வசதி எனப் பலதரப்பட்ட செலவுகளைக் குறைக்க இதை ஒரு வாய்ப்பாக நிறுவனங்கள் பார்த்தன. சந்திப்புகள், ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் இணையம் மூலமாகவே நடந்தன. நீதிமன்ற நடவடிக்கைகளும் இணையவழியில் ஆரம்பிக்கப்பட்டன.

பெரிய அளவில் செலவு மிச்சமானதோடு பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தேவையான வேலையை செய்ய வாய்ப்பு அமைந்ததால் தடை இல்லாமல், உற்பத்தித் திறன் உயர்ந்தது.

பிரபல வழக்கறிஞர் ஒருவர், காலை 11 மணிக்கு டெல்லியில் இருக்கும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையிலும், நண்பகல் 12 மணிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஒரு வழக்கிலும் மாலை 3 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையிலும், லண்டனில் இருக்கும் தனது வீட்டில் இருந்தே இணைய வழியில் வாதாடிய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

இந்தப் புதிய மாற்றங்களின் விளைவாக சுற்றுச்சூழல் பாதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. தகுதி படைத்த பணியாளர்களைத் தேடும் நிறுவனங்களுக்கு உரியவர்களைக் கண்டறிய இந்தக் காலம் புதிய வாய்ய்புக்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நிறுவனங்களுக்குத் தேவையான திறன் தங்களிடம் இருந்தும் அங்கு சென்று வர முடியவில்லை என்பதாலோ அல்லது இன்னும் சில காரணங்களாலோ வேலைக்குச் சேர முடியாத பணியாளர்களுக்கும் இது சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வயதான பெற்றோரை வேலை காரணமாக வீட்டில் தனியே விட்டுச் சென்ற பலருக்கும், இனி வேலை என்றால் பிரிவு என்பது கட்டாயமில்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது. வீட்டுப் பொறுப்புகளைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தினால் தங்களது வேலை/ தொழில் வாய்ப்புகளை விட்டு விலகியிருந்த பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை என்பதால் பல புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்க ஆரம்பித்தன.

இந்தப் புதிய வேலை முறையை தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் நடைமுறைப்படுத்தியுள்ளது. டாடா கன்ஸல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் 2025ஆம் ஆண்டில், குறிப்பிட்ட நேரத்தில் தங்களது பணியாளர்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே அலுவலகத்திலிருந்து வேலை செய்வார்கள் எனவும், மற்றவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் (இணையம் மூலமாக) வேலை செய்யலாம் என்ற வழிமுறையை அறிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனமும் தங்களது பணியாளர்களில் 50 சதவீதத்தினரை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தத் திட்டமிட்டுள்ளது. டாய்ஸ் (Deutsche Bank) வங்கி தங்கள் பணியாளர்களில் 40 சதவீதத்தினரை நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்ய வைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறது.

ஆரம்பக் காலகட்டத்தில் பணித்திறன், உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது என்ற நிலை மாறி உள்ளது. வீட்டிலிருந்தே வேலை செய்வதில் உள்ள பிரச்சினைகள் வெளிப்பட்டுள்ளன. படுக்கையறைகளும், வரவேற்பறைகளும் தற்காலிக அலுவலகங்களாக மாறியுள்ள நிலையில், வீட்டின் தனிப்பட்ட சுதந்திரச் சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. வேலை செய்ய வசதியான மேசை நாற்காலிகள் இல்லாமை, சரியான பணிச்சூழல் இல்லாமை ஆகிய காரணங்களால் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும், உற்பத்தித் திறன், வேலை செய்யும் திறன் பாதிக்கப்படுவதாகவும் பலர் தங்கள் அனுபவங்களைக் கூறியுள்ளனர்.

நேரில் சந்தித்து உரையாடுவது, கலந்தாலோசிப்பது ஆகியவை இல்லாததால் புதிய சிந்தனைகளை யோசிக்கும் திறன், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு தீர்க்கும் திறமை ஆகியவை பாதித்துள்ளன. தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்காமல் இருப்பது தனிமைக்கு வழிவகுக்கிறது. மனநல ஆரோக்கியம் குன்றுகிறது. ஓய்வின்றி அயராது நீண்ட நேரம் உழைப்பது, வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பது, சில பேருக்கு அதிகமான மன உளைச்சல் எனச் சில பிரச்சினைகளும் இந்தக் காலகட்டத்தில் உருவாகியுள்ளன.

இந்த மாற்றத்தால் மற்ற துறைகளிலும் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 2020இன் முதல் பாதியில், பல முக்கிய நிறுவனங்கள், 60 லட்சம் சதுர அடி அளவிலான வாடகைக்கு எடுத்த அலுவலக இடங்களைக் காலி செய்துள்ளது. அலுவலக இடங்களின் விற்பனையும், வாடகைக்குக் குடிபெயர்வதும் பெரிய அளவில் சரிந்துள்ளது.
நகரங்களில் காலியாகும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வாடகைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வீடுகளின் விற்பனையும் சரிந்துள்ளது.

வாடிக்கையாளரின் விருப்பங்களையும் இந்தக் கரோனா காலம் மாற்றியுள்ளது. இணையம் மூலமான ஷாப்பிங் பிரம்மாண்டமான வளர்ச்சி கண்ட அதே நேரத்தில் மால்கள், கடைகளுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் பல வியாபார நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் இன்னும் மீளவில்லை.

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை இனி தவிர்க்க முடியாது. எதிர்காலத்தில், எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்வதும், அலுவலகத்திலிருந்து வேலை செய்வதுமாகக் கலந்து ஒரு (ஹைபிரட் ஓர்க் பிளேஸ் )முறை உருவாகும். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இந்த மாற்றங்களைச் சாத்தியமாக்கும்.

இந்த மாற்றங்களால் பொருளாதாரத்தில் ஒன்றோடொன்று சார்ந்திருந்த பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய தொடக்கம் உருவாகும். தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களால்தான் திறமையான பணியாளர்களை ஈர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். உற்பத்தித் திறனை அதிகரித்து வெற்றி காணவும் முடியும்.

புதிய மாற்றங்கள் , இந்தியாவின் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வர்த்தக வாய்ப்புகளை வளமான எதிர்காலத்தை நம்பிக்கை மிகுந்ததாக மாற்றும்.

கட்டுரையாளர்
பி.சந்திரமோகன் ஐஏஎஸ்,
தமிழக அரசின் முன்னாள் தகவல் தொழில்நுட்பச் செயலாளர்.
தொடர்புக்கு: chandramohanias@gmail.com

(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஐஏஎஸ் அதிகாரி. கட்டுரையில் இருக்கும் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x