Published : 01 Jan 2021 02:00 PM
Last Updated : 01 Jan 2021 02:00 PM

சித்திரச்சோலை 26: மலைக்கோட்டை

சிவகுமார்

1962 - ஜூன் 2-ம் தேதி தஞ்சாவூரிலிருந்து காலை 7 மணி பஸ் பிடித்து திருச்சி வந்தேன். மலைக்கோட்டைக்கு எதிரே தெற்காகச் செல்லும் பெரிய கடை வீதியில் உள்ள கிருஷ்ண பவன் ஓட்டல் சென்றேன். தினம் ரூ.3.50 வாடகையில் ஒரு அறை எடுத்து துணிப் பை, ஓவிய உபகரணங்களை வைத்து விட்டு, நடந்தே பஸ் ஸ்டேண்ட் எதிரே உள்ள சிங்கார தோப்பு தெரு சென்றேன். ரவி எலக்ட்ரிகல்ஸ் என்ற சொந்த கடையில் ஓவியக்கல்லூரி நண்பன் ரங்கராஜனைச் சந்தித்தேன்.

இருவரும் சைக்கிள் எடுத்துக் கொண்டு மலைக்கோட்டை வரை ஊரின் பல பகுதிகளுக்கு சென்று கோணம் பார்த்தோம். அப்படியே ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் சென்று படம் வரைய இடங்களை தேர்வு செய்தேன்.

ஸ்ரீரங்கம் கோயில்

மாலை திரும்பி வந்ததும் கிருஷ்ணபவனை காலி செய்து விட்டு 25-ம் எண் சாணியாங்குள தெரு, ரங்கராஜன் வீட்டுக்கு வந்து விட்டேன்.

மறுநாள் தெப்பக்குளத்துக்கு தென்புறம் வடக்கு வாசல் உள்ள பிஷப் ஹீபர் ஹைஸ்கூல் விளையாட்டு மைதானத்துக்குள்ளிருந்து மலைக் கோட்டையை வரைந்தேன். மரங்களும், பெரிய கட்டிடங்களும் முன்னால் இருந்து முழு மலைக்கோட்டையின் அழகைப் பார்க்க முடியாமல் மறைத்தன. படம் திருப்தியாக வரவில்லை.

பிற்பகல் தடாகத்தை ஒட்டிய பகுதியில் சைக்கிளில் பலகையை பொருத்தி ஓவியம் தீட்ட கனத்த மழை வந்து விரட்டி விட்டது.

ஒரு நாள் முழுக்க வீணானதில் கொஞ்சம் வருத்தம். அதை மறக்க கோயிலுக்குள் இரண்டு சுற்று வந்து விட்டு பூங்காவில் போய் இரவு 8.30 மணி வரை மனதை லேசாக்கி திரும்பினேன்.

நானும் நானும் நண்பர்கள் என்ற மனோபாவ வாழ்க்கை முறை அப்போதே வந்து விட்டது. அதாவது, 'ஸ்பிரிச்சுவல் பாடி' - சூக்கும உடம்பும் - 'பிசிக்கல் பாடி' என்பது வெளியே தெரியும் உடம்பும்தான் என்பார்கள். வேறு நண்பர்கள் அத்தியாவசியமில்லை என்று அப்போதே பழகிக் கொண்டேன்.

4-ம் தேதி காவிரி ஆற்றின் மீது ரயில்வே பாலம் ஒன்று, வாகனங்கள் செல்ல பாலம் ஒன்றுள்ளது. ரயில்வே பாலம் அருகே சென்று கிளைவ்ஸ் ஹாஸ்டல் கட்டிடத்தையும் திருச்சி நகரத்தையும் தூரத்தே பக்கவாட்டில் தெரியும் திருச்சி மலைக் கோட்டையையும் வரைந்து முடித்தேன்.

யாரும் தொல்லை தராததால் ஓவியத்தை 11 மணிக்குள் முடித்து விட்டேன். திருப்தியான கோணத்தில் திருச்சி மலைக்கோட்டை வரையவில்லை என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது.

பகல் உணவை 12 மணிக்கே முடித்து விட்டு மெயின் கார்டு கேட்டை ஒட்டி வடபுறத்தில் டிஇஓ அலுவலகம் ஒன்று இருந்தது. இதன் மாடியில் ஒரு வேளை மலைக்கோட்டையின் நல்ல கோணம் தெரியலாம் என்று நினைத்து அலுவலகத்துள் நுழைந்து பியூனுக்கு சலாம் போட்டு கல்வி அதிகாரி அறைக்குள் சென்றேன்.

மும்மரமாக ஃபைலுக்குள் மூழ்கி இருந்தார். 'சார்' என்றேன். தலை நிமிர்ந்தார்.

"நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். மலைக்கோட்டையை ஓவியமா வரையணும். நீங்க அனுமதி குடுத்தீங்கன்னா, மொட்டை மாடில இருந்து 3 மணி நேரத்தில படம் வரைஞ்சிட்டு வந்துருவேன்!" என்றேன்.

அவர் பெரிதாக அதை காதில் வாங்கின மாதிரி தெரியவில்லை. ஃபைலைப் பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினார்.

மே, ஜூன் கோடை வெயில். மூளை உருகி முழங்கால் வரை வந்து விடும். வெறுங்காலில் நின்றதால் தீமிதி உற்சவத்தின் தகிப்பு - தலை சூரியனின் கோபத்தில் சூடாகி வெடித்து விடாமல் இருக்க, எப்போதும் ஒரு தொப்பி போட்டுக் கொண்டிருப்பேன். கம்பளித்துணியால் உரை போட்ட ராணுவத்தினர் பயன்படுத்தும் 'மிலிட்டரி பேக்'கில் ஒரு லிட்டர் தண்ணீர் வைத்திருந்தேன். வாட்டர் கலர் செய்யும் போது அடிக்கடி சுத்தமான தண்ணீரில் பிரஷ்களை கழுவ வேண்டும். அதற்கு பாதி தண்ணீர் - தாக சாந்தி செய்து கொள்ள மீதி அரைலிட்டர் தண்ணீர் அதில் இருக்கும்.

உச்சந்தலை, தொப்பிக்குள்ளும் சூடாகி அருவி போல நெற்றியிலும், கன்னத்திலும் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டே 4 மணிக்குள் மிகவும் திருப்தியாக ஓவியத்தினை வரைந்து முடித்தேன்.

திருச்சி மலைக்கோட்டை புகைப்படம் உலகம் பூராவும் உள்ளன. அத்தனை படங்களும் இந்த கட்டிடத்தின் மேலிருந்து எடுத்தவை என்பது நேரில் பார்த்த போது புரிந்தது.

வெளியூரில் ஸ்பாட்டில் வரைந்த படங்களை அதே போல் பிரதி எடுத்து - அதாவது அந்த படத்தைப் பார்த்து மீண்டும் வரைந்து மவுண்ட் ரோடில் (இப்போது அண்ணாசலை) டி.வி.எஸ் நிறுவனத்துக்கு எதிராக - ஸ்பென்சர் கட்டிடத்திற்கு வலதுபுறம் இருக்கும் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட் எடுத்துச் சென்று வெளிநாட்டினர் வாங்கிச் செல்ல வைப்போம். நல்ல படங்கள் விலை போனால் நிறுவனம் அசல் விலை ரூ. 500-ல் 20 சதவீதம் போக ரூ.400 நமக்குத் தருவார்கள்.

விடிஐ நிறுவனத்தின் தலைவராக அப்போது இருந்த பிலிப் என்ற அதிகாரி - ஒரிஜினல் ஓவியங்களைப் பார்த்து நான் பிரதி எடுத்த ஓவியங்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.

YOU DON'T KNOW HOW TO APPLY COLOURS - SEE POULRAJ -ARULRAJ PAINTINGS- என்று அந்த மேதைகளின் புகழ்பெற்ற வாட்டர் கலர் ஓவியங்களை காட்டினார்.

எனக்குப் பெருத்த அவமானமாகி விட்டது. உடனே வீட்டுக்குச் சென்று திருச்சி மலைக்கோட்டை ஓவியம். காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோபுர வாசல் ஓவியம், மகாபலிபுரம் 5 ரதங்கள் ஓவியம் என ஒரிஜினல் ஓவியங்கள் 5-6-ஐ எடுத்து வந்து காட்டி, இவை சரியில்லை என்றால், ஓவியத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று சண்டை போடலாம் என்று வந்தேன். This is painting-Wonterful என்று அவர் பாராட்டியதில் உச்சி குளிர்ந்து போய் விட்டேன்.

மலைக்கோட்டை பக்கவாட்டு தோற்றம்

இரண்டு மாதங்களில் அவை விற்றுப் போய் விட்டன. அந்த ஓவியங்களை இப்போது யாராவது வைத்திருந்தால், அந்த 500 ரூபாய்க்கு பதில் ரூ.20 ஆயிரம் தரத்தயாராக இருக்கிறேன். ஆனால், அவை வெளிநாடுகளுக்குச் சென்று விட்டன.

அவற்றில் ஒன்றுதான் இந்த மலைக்கோட்டை ஓவியம். வரைந்து முடித்து மாடியில் இருந்து கீழே இறங்கினேன்.

கல்வி அதிகாரியைப் பார்த்து, 'தாங்க் யூ சார்' என்றேன். 'நீ யார்?' என்றார்.

"12 மணிக்கு படம் வரைய மாடிக்கு போக நீங்க பர்மிஷன் குடுத்தீங்களே?"

"செவப்பா, சிரிச்ச முகத்தோட ஒரு பையன். அந்தப் பையனா நீ? இப்படி கருவளிஞ்சு போயிருக்கியே? ஏம்ப்பா இதெல்லாம் ஒரு போட்டோ எடுத்திட்டு போயி, செளகரியமா வீட்ல உட்கார்ந்து வரைய முடியாதா?"

"கடவுளை நேர்ல பாக்கறதுல கிடைக்கிற திரில், போட்டோவுல பார்த்தா கிடைக்குமா சார்?"

"ஓ.. நீ பேச வேற செய்வியா? எத்தனை பேர் உங்கூட பொறந்தவங்க?"

"5, 6 பேர் பொறந்து ஒவ்வொருத்தரா செத்துப் போயிட்டாங்க. நான்தான் சார் கடைசிப் பையன்..!"

"பாவம்! உங்கம்மா!" - என்றார் அதிகாரி.

மறுநாள் ஜூன் 5-ம் தேதி ஸ்ரீரங்கம் சென்று புஷ்கரணி, அதையொட்டிய கீழ சித்திர வீதியில் உள்ள கோபுரத்தை 'கம்போஸ்' செய்து ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தேன். பாதிபடம் வரைந்து முடித்த நிலையில் கோயில் சிப்பந்தி ஒருவர் வந்து இங்கெல்லாம் உட்கார்ந்து படம் வரையக்கூடாது என்று நாயை விரட்டுவது போல விரட்டி விட்டார். பிறகு வெளியே வந்து மீதி படத்தை வரைந்து முடித்தேன்.

மலைக்கோட்டை

நடிகனானதுக்கப்புறம் திருச்சி போனா நான் தங்கற ஒரே இடம் டாக்டர் கலைக்கோவன் வீடுதான். (C -87, 10th CROSS - WEST THILLAI NAGAR விலாசம்) டாக்டர் கலை அவர் துணைவியார் டாக்டர் அவ்வை (செல்வி) கோவை தம்பி டாக்டர் பெருமாள் எல்லோரும் 1964-ல் சென்னை எம்.எம்.சி-யில் மருத்துவம் படித்த காலத்தில் எனக்குப் பழக்கம். பூச்செண்டு என்ற சிற்றிதழ் டாக்டர் கலைக்கோவனும் நண்பர்களும் நடத்தி வந்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து என் வீடு வந்து பேட்டி எடுத்ததிலிருந்து பழக்கம், நெருக்கம்.

கல்லூரித் தோழி டாக்டர் அவ்வையை மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொண்டார் கலை. டாக்டர் கலைக் கோவன், அறுவை சிகிச்சை செய்யும் கண் மருத்துவர். மனைவியும் கண் டாக்டர். அவர் தந்தையாரும் திருச்சியில் கண் மருத்துவர்.

ரங்கராஜன்

படிப்பு முடிந்ததும் மாமனார் கிளினிக்கில் எல்லோரும் ஒன்றாக இணைந்து தொழில் தொடங்கினர்.

கலைக்கோவனின் மறுபக்கம் அவர் கல்வெட்டு ஆய்வாளர். 'சோழர் கால ஆடற்கலை' நூலாசிரியர். இந்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் தந்தையார் பேராசிரியர் ம.ராசமாணிக்கனார் இலக்கியம், சமயம், வரலாறு, கோயில் கலைகள், கல்வெட்டு இவற்றில் ஆழ்ந்த புலமையுள்ளவர். சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்க தமது எழுத்திலும் பேச்சிலும் பாடுபட்டவர்.

டாக்டர். கலைக்கோவன் தம்பதி

'பல்லவர் வரலாறு', 'பத்துப் பாட்டு ஆராய்ச்சி' தமிழ் மொழி இலக்கிய வரலாறு, பெரிய புராண ஆராய்ச்சி, 'சைவ சமய வளர்ச்சி' ஆகிய அவரது நூல்கள் வருங்கால சந்ததிக்கு பெரிதும் உதவக்கூடிய ஆய்வு நூல்கள்.

டாக்டர் கலை திருச்சி டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனராகவும், 'வரலாறு' ஆய்விதழின் பொறுப்பாசிரியராகவும் இருக்கிறார். தந்தை வழியில் தனயன். கண் மருத்துவர். வரலாற்று ஆய்வாளர். இதுபோக நாடக நடிகராகவும் மேடைகளில் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சேரன் செங்குட்டுவன், திப்பு சுல்தான், சிவகாமியின் சபதம், ஒளரங்கசீப் போன்ற நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'ஒளரங்கசீப்' நாடகத்தில் அவர் நடித்ததை நான் பார்த்திருக்கிறேன்.

கலையின் துணைவியார் அவ்வை விருந்தோம்பலுக்கு பெயர் போனவர். டாக்டர் கலைக்கோவன் முக அமைப்பு அவரது அப்பாவின் முகத்தை ஒத்தது. அவ்வை என்கிற செல்வியின் முகம் சிற்பி செதுக்கிய மதுரை மீனாட்சி முகம் போன்றது. உருண்ட தீட்சண்யமான விழிகள், கூரான மூக்கு, சிலைகளில் காணப்படும் உதடமைப்பு, ஓவல் முகம். அவரைப் பார்க்கும்போதெல்லாம் மதுரை மீனாட்சி சிலை என் நினைவுக்கு வரும்.

கலைக்கோவனைச் சுற்றி அறிவார்ந்த கூட்டம், கல்லூரி மாணவ மாணவியர் இருந்து கொண்டே இருப்பார்கள். நான் திருச்சி செல்லும்போதெல்லாம் ஒரு மணி நேரம் மாடியில் எல்லோரையும் அழைத்து என்னுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவார்.

என் திருமணத்திற்கு முன்னால் போன் வழி ரசிகை ஒருத்தி திருச்சியில் இருந்தார். என் படங்கள் பற்றி பாராட்டவும் செய்வார். கடுமையாக விமர்சனமும் செய்வார்.

'திருமகள்' என்றொரு படத்தில் நீங்களும் லட்சுமியும் நிர்வாணமாக இருப்பது போல் ஒரு காட்சி வருகிறது என்று கேள்விப்பட்டேன். அந்தப் படம் பார்க்க மாட்டேன். ஏன் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அப்பட்டமாக நிர்வாணக்காட்சி அல்ல. சஜ்ஜஸ்டிவ் ஆக காட்டுகிறார்கள். கதையில் தவிர்க்க முடியாத காட்சி என்றேன். கோபித்துக் கொண்டார்.

எனக்குப் பல ஊர்களில் பெண் பார்த்த செய்தி பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவார். ஒரு தடவை கூட தன் பெயரை சொல்லவே இல்லை.

கலைக்கோவன் அழைப்பில் வந்த பெண் ஒருத்தி எனக்கு விசேஷ வணக்கம் சொல்லி, 'என்னைத் தெரிகிறதா?' என்று கேட்டார். 'மன்னிக்கவும் ஊகிக்க முடியவில்லை!' என்றேன். 'நான்தான் அந்த திருச்சி ரசிகை' என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

அதை விட சுவாரஸ்யமானது, அன்றைக்கும் தன் பெயர் சொல்லாமல் திருச்சி ரசிகையாகவே விடை பெற்றுச் சென்றார்.

பல முறை இப்படி கலந்துரையாடல் அவர் வீட்டில் நடக்கும். ஒரு நாள் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன் மகன் வரைந்திருந்த ஓவியத்தைக் காட்டி 'ஆட்டோ கிராப்' போடச் சொன்னார். 'வாழ்க வளர்க உன் ஓவியத்திறன்!' என்று எழுதி கையொப்பமிட்டு தந்தேன்.

அடுத்த 5-6 வருடங்களில் அந்த இளைஞன் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றதும், அவன் நினைவாக குடும்பத்தார் வெளியிடவிருந்த மலரில் அந்த இளைஞன் படத்தை நான் வரைந்து தர வேண்டிய சோகம் வரும் என்று ஒரு கணம் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

1974-ஆகஸ்ட் 18-ம் தேதி திருச்சி பிஷப் ஹீபர் ஹைஸ்கூல் மைதானத்தில் மாலை 6 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும் என 2 முறை அப்பாவி நாடகத்தை நடத்தினோம். தமிழக அரசு வரிவிதிப்பை எதிர்த்து தமிழக தியேட்டர்கள் 4 நாட்களாக மூடியிருந்த சூழல் அது.

1999 அக்டோபர் 18 முதல் 22 முடிய திருச்சியில் தங்கி ஸ்ரீரங்கத்தில் 'சித்தி' தொடர் படப்பிடிப்பை காவிரிக்கரை, அம்மா மண்டபம், கீழ சித்திரை வீதிகளில் படமாக்கியதும் மறக்க முடியாத அனுபவம்.

ரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x