கலாம் நெஞ்சமெல்லாம் 6: புதிய தீர்மானம்

கலாம் நெஞ்சமெல்லாம் 6: புதிய தீர்மானம்
Updated on
2 min read

இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவில் இணைந்ததில் இருந்து ராக்கெட்டைப் போன்று தனது வாழ்க்கையையும் நான்கு கட்டங்களாகப் பகுத்துப் பார்த்தார் கலாம்.

இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஏவுகலத்தை 1980-ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி ரோகிணி செயற்கைக் கோளை அதன் சுற்றுப்பாதையில் வலம் வரவைத்த சாதனை; பாது காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன், வல்லரசு நாடு களின் நேரடி மற்றும் மறைமுகத் தடைகளைத் தகர்த்து ஏவு கணைகள் உருவாக்கியது; அணு ஆயுத வலிமை படைத்த நாடாக இந்தியாவை உயர்த்திய லட்சியத் திட்டத்தில் பங்கேற்க வைத்தது என மூன்று கட்டங்கள் முடிந்ததும். நான்காவது கட்டம் குறித்த சிந்தனையை, அவர் எதிர்கொண்ட ஒரு விபத்து அவருக்குள் கிளறிவிட்டது.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள் வதற்காக 2001 செப்டம்பர் 30-ம் நாள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பொக்காரோவுக்கு ஹெலி காப்டரில் சென்றார். தரையிறங் கப்போகும் தருணத்தில் இன்ஜின் இயங்கவில்லை. தரையில் மோதி நின்றது ஹெலிகாப்டர். கலாம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து சிந்தித்தவாறே உறங்கப்போனார். கனவா, நனவா? எனப் பகுத்துப் பார்க்க முடியாத ஒரு நிலையில், மனித குல மேம்பாடு குறித்த காட்சிகள் விரிந்தன. பொழுது புலர்ந்தது. அவருக்குள் ஒரு புதிய தீர்மானம் உதயமானது.

இதுகுறித்த அவரது வார்த்தைகள் இதோ:

‘‘எனது மிகவும் முக்கியமான இந்தத் தீர்மானத்தின்படி இந்திய தேசத்தின் சுய இயல்பை அதன் குழந்தைகளிடம் கண்டுபிடிப் பதற்கு உதவுவது என முடிவு செய்தேன். இதுதான் எனது நான்காவது கட்டமாக அமையப் போகிறதா என்பது பற்றி எனக்கு உண்மையிலேயே தெரிய வில்லை.’’

பள்ளிக் குழந்தைகளை சந்திக்கும் அவரது பயணம் திரிபுராவில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து அவர் பேசி முடித்ததும் மாணவ, மாணவிகள் சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர்.

‘எங்கிருந்து எங்களுக்கு முன்மாதிரி கிடைக்கும்? எப்படி அதைப் பெறுவது?’

‘தினமும் பயங்கரவாதிகள் பற்றிப் பத்திரிகைகளில் படிக்கிறோம். நமது தேசத்தைச் சேர்ந்தவர்களா அவர்கள்?’

இப்படிப்பட்ட ஆழமான, அதிர்ச்சிகரமான கேள்விகள் குழந்தைகளின் சிந்தனை வீச்சையும், குழந்தைகளை கலாம் எவ்வளவு துல்லியமாக எடை போட்டிருந்தார் என்பதையும் புலப்படுத்தும் உரை கல் அல்லவா?

வெவ்வேறு துறைகளைச் சார்ந்த தலைவர்கள் தத்தம் சுய குறிக்கோள்களைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகவும், நமது குழந்தைகளுக்கு ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை உருவாக்க உதவி செய்வதற்காகவும் குழந் தைகளிடம் அடிக்கடி கலந்துரை யாட வேண்டும் என்று கலாம் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைகளின் அளவில்லாத ஆற்றலை அடையாளம் கண்டு கொண்ட அவர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், அவர் அடிச்சுவட்டில் என்னையும் களம் இறக்கியது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கூட மாணவச் செல்வங் களிடம் கலந்துரையாடுவதை என் முக்கியக் கடமையாக மேற் கொண்டுள்ளேன். வாய்ப்பு வசதி கள் மறுக்கப்பட்ட, பெற்றோ ரின் வழிகாட்டுதல் கிடைக்காத குழந் தைகளின் உயர்வுக்காக சிறிய அளவில் பல்வேறு செயல்திட்டங் களை நிறைவேற்றிவருகிறேன்.

‘ஏன் சார் நமக்கு நோபல் பரிசு கிடைக்கலே?’ என்று 7-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கேட்ட கேள்வி எனக்கு இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டை வழிநடத்துவோர், பல்வேறு துறை நிபுணர்கள், மெத்தப் படித்த மேதைகள் என யாராவது எப்போதாவது இப்படி கவலைப்பட்டிருப்பார்களா? நம்மில் யாராவது இந்தக் கோணத்தில் சிந்தித்திருப்போமா?

விழுப்புரத்தை அடுத்த கண்ட மானடி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு மாண வர்களை சந்தித்தபோது, அவர் களை கலாம் கனவுகாணச் சொன்னது குறித்து கலந்துரையாடி னோம். அப்போது விஜய் குணால் என்ற 7-ம் வகுப்பு மாணவர், ‘‘முதல்வராவதுதான் எனது கனவு சார்’’ என்று கூறினார். முதல்வர் ஆனதும் என்ன செய்வது என்ற திட்டம் பற்றியும் விளக்கினார்.

‘‘எங்க ஊருக்கு எப்போதாவது தான் பேருந்து வருகிறது. அடிக் கடி பேருந்துகளை வரவைப்பேன். இப்போது குடிப்பதற்கு எங்கள் ஊரில் நல்ல தண்ணீர் கிடை யாது. சுத்தமான நல்ல குடிநீர் கொண்டுவருவேன். தேவையான வகுப்பறைகள் இல்லாமல் மரத் தடியில் படிக்க வேண்டி யுள்ளது. எங்கள் பள்ளிக்கூடத்தை இன்னும் பெரிதாக கட்டுவேன் சார்...’’

இப்பேர்ப்பட்ட நாளைய தலைவர் ஒருவரைப் பாதுகாத்துத் தரும்படி அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டு விடைபெற்றேன்.

- நிறைந்தது

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: mushivalingam@yahoo.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in