Published : 28 Dec 2020 10:54 AM
Last Updated : 28 Dec 2020 10:54 AM

சித்திரச்சோலை 25: இருவர்

ஜெயராஜ் மற்றும் அவர் துணைவியாருடன்.

சிவகுமார்

உலகப் புகழ் பெற்ற ஓவியர்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ‘எல்லோரா’, ‘அஜந்தா குகை’ ஓவியங்களுக்குள் நேரம் போவது தெரியாமலே புகுந்து புகுந்து வெளியே வரலாம். ஆனால், இலக்கியமானாலும், காவியம், ஓவியமானாலும் அவை சார்ந்து ஜனரஞ்சக சாமானிய உலகத்திற்குள் பிரவேசித்து வராவிட்டால் அது முழுமையோ, நிறைவோ பெறாது. அந்த வகையில் இந்த தமிழ் கூறும் நல்லுலகின் ஓவிய உலகில் ஜெயராஜ், மாருதியைத் தாண்டி நாம் பயணித்து விட முடியாது. அவர்களுடன் நான் பயணித்த ஓவியப் பொழுதுகள் அலாதியானவை.

மனோகர் தேவதாஸ், ஜெயராஜ் இருவரும் மதுரையில் பால்ய நண்பர்கள். அமெரிக்கன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரியில் வெளியாகும் வருடாந்திர இதழ்களுக்கு அப்போதே ஓவியம் தீட்டிக் கொடுத்தவர் ‘ஜெ’ என இனிசியலை மட்டும் தன் ஓவியங்களில் பதிய வைக்கும் ஓவியர் ஜெயராஜ்.

ஜெயராஜ் எந்தக் கல்லூரியிலும் போய் ஓவியம் கற்கவில்லை. இவர்தான் குரு என்று சொல்லிக் கொள்கிற மாதிரி யாரும் இல்லை. ஒற்றைச் சொல்லில் சொன்னால் ‘சுயம்பு’.

கல்லூரியில் பி.ஏ., டிகிரியை வாங்கிக் கொண்டு வேலை நிமித்தமாக சென்னைக்கு மாறுதலாகி வந்த அப்பாவுடன் இவரும் வந்துவிட்டார். சென்னை வந்த அதே ஆண்டு குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் எழுதிய கதைக்கு ஓவியம் வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தைப் பாராட்டிய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை தொடர்ந்து வாய்ப்பளித்தார்.

அதன் பின்னர், தினத்தந்தி, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுத சுரபி, குங்குமம், சாவி, ராணிமுத்து, தென்றல் போன்ற பிரபல இதழ்களுக்கும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளிலும் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கும் மூச்சு விட நேரமில்லாமல் 60, 70களில் வரைந்து கொடுத்து ரெக்கார்டு ஏற்படுத்தியவர்.

தமிழ்நாடு பாட நூல்கள், ஓரியண்ட் லாங்மென், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி, அறிவொளி இயக்கம், குடும்பக் கட்டுப்பாடு, எய்ட்ஸ் விழிப்பணர்வு, சாம்பா பப்ளிகேஷன்ஸ் பாட நூல்கள், ஒய்.ஆர்.ஜி.கேர் போன்ற மக்கள் விழிப்புணர்வு ஓவியங்கள் என கணக்கில்லாமல் தீட்டியவர்.

அகிலன், லட்சுமி, கவிஞர் கண்ணதாசன், கலைஞர், சுஜாதா, சிவசங்கரி, புஷ்பா தங்கதுரை, இந்துமதி, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார் போன்ற 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத் தன் ஓவியங்கள் மூலம் உயிர் கொடுத்தவர்.

கலைஞரின் முரசொலி அறக்கட்டளை பொற்கிழியும், பிறந்த ஊரான தூத்துக்குடியில் ஓவியச் சக்கரவர்த்தி- மலேசியாவில் தூரிகை மன்னன்- விஜிபி விருது, வாஷிங்டன் டி.சி.,யில் ஓவியச் செம்மல் போன்ற விருதுகள் பெற்றவர்.

ஜெயராஜ் ஓவியம்

திரையுலகில் டைரக்டர் ஸ்ரீதர், மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களுக்கும் ஓவியம் தீட்டித் தந்துள்ளார். இன்றும் திரைப்படங்களுக்கு ஓவியங்கள் தீட்டித் தருகிறார்.

உலகெங்கிலும் 60 ஆண்டுகளாக இவர் ஓவியங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். இரவு பகலாக இவர் தீட்டிய ஓவியங்களுக்கு பக்கத்திலேயே அமர்ந்து பலம் சேர்ப்பவர் துணைவியார் ரெஜினா.

புதுப்பேட்டையில் நான் 1959-65 வரை வாழ்ந்த காலத்தில் நான் முதல் தெருவிலும், அவர் 3-வது தெருவிலும் குடியிருந்தோம். ஆனால், ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பு ஏற்படவில்லை.

நடிகனான பிறகு ஒரு நாள் மாம்பலம் கிருஷ்ணா தெரு வீட்டுக்கு அழைத்தேன். துணைவியுடன் வந்து பகல் உணவு, மாலை சிற்றுண்டி முடித்து அத்தனை ஓவியங்களையும் -வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங்ஸ், 28 ஸ்கெட்ச் நோட்டுகள் எல்லாம் பொறுமையாகப் பார்த்துவிட்டு வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலையை 7 ஆண்டுகளில் அசுரத்தனமாகச் செய்துள்ளீர்கள் என்று பாராட்டிச் சென்றார்.

இவருடனான நெருக்கம் இப்படியென்றால் மாருதியுடனான என் இணைப்பு வேறு விதமானது.

ஓவியர் ஆர்.நடராஜனின் சீடர்கள் மாருதியும், நானும். 1959-65 வரை அதிகமாக நடராஜன் சார் அறையில்தான் அதிகமாகச் சந்தித்துக் கொள்வோம்.

ஒவியர் மாருதி

புதுக்கோட்டை பகுதியில் பள்ளி ஆசிரியருக்கு ஐந்தாவது பிள்ளை. கூடப்பிறந்த சகோதரர்கள் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று அரசு உத்தியோகத்தில் கை நிறைய சம்பாதித்தார்கள். இவருக்கு ஓவியக்கலை மீது பைத்தியம். அதனால் பியுசியில் தேர்ச்சி பெறவில்லை.

புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள சிலைகளை ஸ்கெட்ச் போடுவார். கோபுலு, சில்பி, கே.மாதவன், ஆர்.நடராஜன் ஓவியங்களை, நண்பர்கள் வீட்டில் வாங்கும் பத்திரிகைகளை ‘ஓசி’யில் வாங்கி வந்து அவற்றைப் பார்த்துப் படம் வரைவார்.

‘ஓவியம் சோறு போடாது!’ என்று அப்பா சொன்னபோது, ‘மூணு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு மட்டும் கிடைக்கும்னாலும் நான் ஓவியனாகத்தான் ஆவேன்!’னு சவால் விட்டு சென்னை வந்தார்.

மாருதி ஓவியம்

மயிலாப்பூரில் ஆர்ட்ஸ் அண்ட் கம்பெனி எனும் சினிமா போஸ்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் போஸ்டரின் அடியில் எழுத்துகள் எழுதும் வேலை. மாதம் 50 ரூபாய். பல மாதம் கம்பெனிக்கு ஆர்டர் வராத போது சம்பளம் பாக்கி. பலநாள் பட்டினி.

குமுதம் இதழுக்கு இரவு நேரத்தில் சிம்னி விளக்கொளியில் தெரியும் குடிசை ஒன்றை வரைந்து கொடுத்து பாராட்டு பெற்றார். குடிசை வாழ்வு, பொதுக்கழிப்பிடம், மயிலை கபாலீஸ்வரர் குளத்தில் காலைக்குளியல் இப்படி நாட்கள் நகர்ந்தன.

1959, ஏப்ரல் 20-ம் தேதி குமுதத்தில் முதல் ஓவியம் வெளியானது. மாருதி பார்மசி கட்டிடத்தில் வேலை பார்த்ததில் -அதன் நினைவாக மாருதி என்று இவரே பெயர் வைத்துக் கொண்டார்.

மாருதி ஓவியம்

சினிமா படங்களுக்கு ‘டைட்டில் கார்டு’ எழுதுவது, பத்திரிகைகளுக்கு லே-அவுட் செய்வது ஆகியவை அவ்வப்போது கிடைக்கும் வேலை. கொஞ்ச நாள் ‘பேசும் படம்’ சினிமா இதழில் ‘லே-அவுட் -ஆர்ட்டிஸ்ட்’டாக பணி. பட்டுக்கோட்டையாரின் கடைசிப் பேட்டி என்று ‘லே-அவுட்’ செய்து கொடுத்தார்.

மியூசியம் அரங்கில் சைனா ஓவியரின் கண்காட்சியில் தன் குரு ஆர்.நடராஜனை முதன் முதலாகச் சந்தித்தார்.

ஆர். நடராஜன் ஒரு முழுமையான ஓவியர். லெட்டரிங்- கமர்ஷியல் -பேனர் ஓவியம் -காலண்டர் ஓவியம்- போர்ட்ரெய்ட் ஓவியம் -வாட்டர் கலர், ஆயில் கலரில் ஓவியங்கள், பத்திரிகை ஓவியம் - என்று அனைத்துப் பிரிவிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

அவரின் அனுமந்த சீடனாகி, கொஞ்சம் கொஞ்சமாக POSTER COLOUR TEMPERA பாணியைக் கற்று இன்று வரை அதன் மூலம் ஓவியங்கள் தீட்டி வருகிறார்

மாருதி ஓவியம்

ஓவியக் கல்லூரியில் சேர்ந்து முறையாக ஓவியம் பயின்றவரல்ல அவர். ஆனால் தினம் படுக்கச் செல்லும் முன் 20 ‘ஸ்கெட்ச்’கள், பலவிதமான மனித தோற்றங்கள், விலங்குகள், பறவைகள் என்று வரைந்து விட்டுத்தான் படுப்பார்.

சில நாள் நடு இரவு தாண்டி 2 மணி ஆகி விடும், ஸ்கெட்ச் போடுவதை முடிக்காமல் தூங்கமாட்டார்.

அந்தப் பயிற்சிதான் இப்போது கை கொடுக்கிறது. திருமணம் செய்யும் சிந்தனையே இல்லாமல், கட்டை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த அவரை ஓவியர் சுந்தரமூர்த்திதான் அவசியம் திருமணம் செய்து கொள். அப்போதுதான் வாழ்க்கை முழுமையாகும் என்று வற்புறுத்தி மணம் முடிக்கச் செய்தார். எளிய வாழ்க்கை இனிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மாருதி, கே.மாதவனையும், ஆர்.நடராஜனையும் வணங்காமல் பிரஷ் பென்சிலை எடுக்க மாட்டார்.

தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x