முத்துக் குளிக்க வாரீகளா 14: கண்ணுக்கு மை எதற்கு?

முத்துக் குளிக்க வாரீகளா 14: கண்ணுக்கு மை எதற்கு?
Updated on
2 min read

காதலுக்குக் கண்ணில்லை என்கிறார்கள்; தவறு.

கண்ணில்லை என்றால் காதல் இல்லை.

கண்தான் காதலை உண்டாக்குகிறது.

கண்தான் காதலின் வாசல்.

கண் வழியாகத்தான் நுழைந்து இதயத்தில் இடம்பிடிக்கிறார்கள்.

சீதை இராமனைப் பார்த்தாள். காதல் உண்டாகி விட்டது. அவன் அவள் இயத்திற்குள் போய் விட்டான்.

அவன் எப்படி உள்ளே போனான்?

‘‘கண் வழியாகத்தான் நுழைந்திருக்கிறான், திருட்டுப் பயல்!’’

‘கண்வழி நுழையுமோர்

கள்வனே கொலாம்.’

அந்தக் காலத்திலிருந்தே பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை அணிகலன் களால் தங்களை அலங்கரித்துக் கொள் வார்கள்.

எல்லாம் ஆண்களைக் கவர்வதற்காகத்தான்.

வெண்ணிலாவுக்கு வெள்ளையடிப்பதுபோல் இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண் களும் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். வயதானவர்களும் அலங்கரித்துக் கொள் கிறார்கள்.

நெடுங்காலமாகச் செய்து செய்து பெண்களின் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பழக்கம் இது.

‘பெடைமான் போன்ற மட நோக்கம், நாணம் இவற்றால் இவள் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். இவை போதாவோ. இவுளுக்கெதற்கு வேறு அணிகலன்கள்?’ என்று கேட்கிறார் வள்ளுவர்.

‘பிணையேர் மட நோக்கம் நாணும் உடையாட்கு

அணி எவனோ ஏதிலதந்து.’

நகைகள் அணிந்த அழகியை வருணிக்க வந்த காளிதாசன் ‘நகைகள் இவளை அணிந்திருக்கின்றன’ என்கிறார்.

பெண்கள் இரண்டே இரண்டு அங்கங்களில்தான் நகைகள் அணிவதில்லை. ஒன்று உதடு, மற்றொன்று கண்.

இவற்றில் நகைகள்தாம் அணிவதில்லையே தவிர, இவற்றிலும் அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.

உதட்டில் சிவப்பு வண்ணம் ஏற்றிக்கொள்கிறார் கள். கண்ணில் கறுப்பு மை தீட்டிக்கொள்கிறார்கள்.

அந்தக் காலத்தில் புலவர்கள் பெண்களின் கண்களை வருணிக்கும்போது ‘உண்கண்’ என்பார்கள். அதாவது ‘உண்ணும் கண்’.

இது ‘மை உண்ணும் கண்’ என்று விரியும். ஆனால் ‘உண்கண்’ என்று மட்டுமே எழுதுவார்கள்.

அதாவது மற்றதையும் உண்ணும் என்பது குறிப்பு. எதை?

இராமனும் சீதையும் முதன்முறையாகச் சந்திக்கிறார்கள்.

அவனுடைய கண்களும் அவளுடைய கண்களும் ஒன்றையொன்று கவ்வி உண்கின்றன.

‘கண்ணொடு கண்ணினைக்

கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும்’

- என்கிறார் கம்பர்.

அதாவது ‘கண்களை உண்ணும் கண்கள்’ என்கிறார் கம்பர்.

‘கண்ணிரண்டும்

ஆளை விழுங்கும்

அதிசயத்தைக் கூறுவனோ?’

- என்கிறார் பாரதியார்

‘ஆளையே உண்ணும் கண்’ என்பது பாரதியின் பார்வை.

‘கண்டார் உயிருண்ணும்

தோற்றத்தாள் பெண்தகைப்

பேதைக்கு அமர்த்தன கண்’

அதாவது பெண்ணின் கண் உயிரையே உண்ணும் என்பது வள்ளுவரின் வாக்குமூலம்.

ஷாஜஹானும் மும்தாஜும் அரண்மனைப் பூங்காவில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘கண்ணே! உலகில் வெண்முத்து உண்டு, கருமுத்து உண்டா?’’ என்று ஷாஜஹான் கேட்டான்.

‘‘உண்டே! பெண்கள் அழும்போது அவர்களு டைய கண் மையைக் கரைத்துக் கொண்டு வரும் ஒவ்வொரு கண்ணீ்ர்த் துளியும் கருமுத்து தான்’’என்றார் மும்தாஜ்.

‘பெண்ணே!

உன் கண்ணை

இரக்கக் கண்ணீரால்

அலங்கரி

மையால்

அலங்கரிக்காதே

ஏனெனில்

மை கரைந்துவிடும்’

- என்று நான் எழுதியிருக்கிறேன்.

இதோ கண் மை பற்றி என் மை எழுதிய மற்றொரு கவிதை:

‘அவள் மை தீட்டக்

கையில்

கோலெடுத்துவிட்டாள்

யாருடைய விதி

எழுதப்படப் போகிறதோ?’

திருக்குறளில் ஒரு சுவையான குறள்.

வழக்கமாகக் கண்ணுக்கு மை தீட்டும் தலைவி அன்று தீட்டவில்லை.

‘‘ஏனடி, நீ இன்று கண்ணுக்கு மை தீட்டவில்லை?’’ என்று தோழி கேட்கிறாள்.

தலைவி கூறுகிறாள்: ‘‘என் காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார். நான் மை தீட்டும் போது கண்ணை மூட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். அந்தக் கண நேரப் பிரிவைக் கூட என்னால் தாங்க முடியாது.

‘கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து’

எந்தக் கவிதை வீணையை மீட்டும் விரல்களைப் போல் கவிஞனை மீட்டிப் புதுப் புதுப் பண்களை எழுப்புகிறதோ, அது உயர்ந்த கவிதை.

இந்தக் கவிதை உயர்ந்த கவிதை. இதனால் நான் மீட்டப்பட்டேன். இதோ எனக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த ராகங்கள்:

l

‘கண்ணில் ஏன்

மை தீட்டவில்லை

என்கிறாயா, தோழி!

சொல்கிறேன்

l

மை போட்டு

மயக்கினேன்

மயங்கிவிட்டார்

இன்னும் எதற்கு மை?

l

கண்ணுக்குள்

என் காதலர்

அவர் முகத்தில்

கரி பூசலாமா?

l

என் சூரியனை

இருட்டடிப்புச்

செய்யலாமா?

l

வீட்டிற்குள்ளே அவர்

வாசலில் எதற்கு

வரவேற்புக் கோலம்?

l

அவரையே தீட்டி

அழகு பெற்ற கண்ணுக்கு

மையலங்காரம் வேண்டுமா?

l

கண்ணை விட

மென்மையானவர்

காதலர்

கோல் பட்டால்

வலிக்காதோ?

l

அவர்தான்

சிக்கிவிட்டாரே

பிறகு எதற்கு வலை?

l

அவரை வைத்த இடத்தில்

வேறொன்றை வைப்பது

கற்புக்கு இழுக்கல்லவா?’

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2013@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in