Published : 25 Dec 2020 12:03 PM
Last Updated : 25 Dec 2020 12:03 PM

சித்திரச்சோலை 24: ராஜராஜன்

சிவகுமார்

1962 -மே- 31 வியாழக்கிழமை.

நேற்று சிம்மக்கல் பகுதியில் மதுரை மக்களை தன்னுடைய தேனினும் இனிய குரலால் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல மயக்கி விட்டான் மேலூர் கதிரேசன். என் நண்பன் சந்திரசேகரின் தம்பி, டிவிஎஸ் நிறுவனத்தில் அவன் வேலை பார்த்ததால் டிவிஎஸ் ஆர்க்கஸ்ட்ரா குழுவில் பிரதான பாடகன்.

‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்- காணாத காட்சியை காண வந்தாய்..பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய் - பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாய் -‘ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக்கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா?’ பாடல்கள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன.

கச்சேரி முடிந்த போது இரவு 2.15. அசந்து தூங்கி விட்டதில் இன்று காலை தஞ்சை புறப்படும் முதல் பஸ்ஸை தவற விட்டு விட்டேன். அடுத்த வழி திருச்சி வரை பஸ்ஸில் சென்று அங்கிருந்து தஞ்சைக்கு வேறு பஸ் பிடிக்க வேண்டியதுதான்.

திருச்சியில் இறங்கிய போது 12 மணிக்கு தஞ்சை புறப்படும் ரயில் தயாராக இருந்தது. ஓடிப் போய் அதில் ஏறிக் கொண்டேன்.

தஞ்சை மண்ணில் முதன்முதலாக கால் பதிக்கிறேன். காஞ்சிபுரத்தில் பேனா நண்பன் துரை. செளந்தரராஜன் வரவேற்று வீட்டில் தங்க வைத்தான். மதுரையில் ஓவியக்கல்லூரி மாணவன் சந்திரசேகர் வீட்டில் தங்கி ஓசி சாப்பாடு 7 நாள் சாப்பிட்டு மதுரையின் அடையாளமான கோயில், மகால், திருப்பரங்குன்றம் -ஓவியங்களில் பதிவு செய்தேன்.

தஞ்சையில் யாரையும் தெரியாது. ரயில் நிலையத்தில் இறங்கி ஊருக்குள் நடந்தேன். மங்களாம்பிகா விலாஸ் ஓட்டல் கண்ணில் பட்டது. அக்காலங்களில் தங்குவதற்கு ரூம் தரும் லாட்ஜிலேயே உணவும் கிடைத்தது.

தஞ்சை பெரிய கோயில் ஓவியம்

‘வாடகைக்கு அறை’ கேட்டேன். ‘தினம் 8 ரூபாய்!’ என்றார்கள். ‘நான் ஒரு ஆள்தான். குறைவான வாடகையில் அறை இருக்குமா?’ என்றேன். ‘சிங்கிள் ரூம் 4 ரூபாய்!’ என்றார்கள். ‘அதை விட குறைவாக இருக்குமா?’ ‘டாய்லட் உள்ளது!’ என்றார் ஓனர். ‘எனக்கு அது போதும். குளித்து விட்டு வெளியே போய் விடுவேன்!’ என்றேன். ‘நான் ஓட்டல் நடத்த வேண்டாமா?’ என்றார். ‘நான் ஓவியம் வரைய வந்த மாணவன்!’ என்றேன். சிரித்துக் கொண்டே ‘4 ரூபாய் வாடகை ரூம் எடுத்துக் கொள்ளுங்கள்!’ என்றார்.

குளித்து பகல் உணவு முடித்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தஞ்சை கோயில் சென்றேன். மலைத்துப் போனேன். சிமெண்ட் செங்கல் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இந்த கற்களை வடிவமைத்து கொக்கி போல் ஒன்றுக்குள் ஒன்று கோர்த்து இவ்வளவு பெரிய கோயிலை உருவாக்கிய சிற்பிகளை மானசீகமாக வணங்கினேன்.

கி.பி 1006 முதல் 1010 வரையிலான காலகட்டத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது இந்த தஞ்சை பெரிய கோயில்.

கோபுர உச்சியில் கலசத்தை தாங்கி நிற்கும் ஒற்றைக்கல் 36 அடி சுற்றளவு கொண்டது. ஆனால் 6 அடி உயரமுள்ள கலசத்தின் நிழல் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை அந்த ஒற்றைக்கல் மீதே இருக்கும். பின்னர் கோயிலைத் தாண்டி வெளியே போய் விடும்.

‘அதனால்தான்’ கலசத்தின் நிழல் கோயில் காம்பவுண்டுக்குள் விழாதபடி கட்டடக்கலையை அமைத்த மேதைகளை போற்றுகிறோம்.

மொத்த கோபரமும் கருங்கல்லால் ஆனது. அதுவும் நீல வண்ண ரேகை ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ரக கிரானைட்ட கல்.

இரண்டு கோபுரங்கள் தாண்டி, அழகிய விமானத்துடன் கூடிய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, ஏரிக் குளங்களில் காணப்படும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள்?

இந்த கருங்கற்களைச் செதுக்க எப்படிப்பட்ட உளிகளைப் பயன்படுத்தியிருப்பார்கள்? சிற்பிகளுக்கு உதவி செய்ய யானைகள், குதிரைகள், மாடுகள் எத்தனை பயன்படுத்தப்பட்டிருக்கும்?

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் அருகே இருக்கும் நார்த்தாமலையிலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 60 கிலோமீட்டர் தூரம் இவ்வளவு பெரிய பாறைகளை பல சக்கரங்கள் இணைக்கப்பட்ட இன்றைய லாரிகள் போல, பெரிய வண்டி செய்து அந்த கற்பாறையை அதில் ஏற்றி யானைகளைக் கொண்டோ, பல மாடுகளை கொண்டோ இழுத்து வரச் செய்திருக்க வேண்டும்.

விமானம் கட்ட வண்டிப்பாதை அமைத்துள்ளனர். எதிர் எதிராக இரண்டு யானைகள் வந்து போகும் அளவுக்கு கோயிலைச்சுற்றி மேல் நோக்கி வளைவாக சுழல்பாதை அமைத்திருக்க வேண்டும்.

விமானத்தின் உள்ளே ஓவியங்கள் சுவற்றில் தீட்டப்பட்டுள்ளன. தளபதிகள், அந்தணர்கள், அரசிகள், கொண்டையும் தாடியுமாக ராஜராஜன் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தஞ்சை கோயில் டாப் வியூ

ராஜராஜ சோழனை இந்த கோவிலைக் கட்டத்தூண்டியது பெரிய புராணம் என்கிறார்கள். கோபுர வாசல் உள்ள சுவர்களில் சிறு, சிறு சிற்பங்கள்... கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று ஒரு அடிக்குக்குறைவாக சிலைகளை செதுக்கி சாதனை புரிந்துள்ளனர்.

எப்போது படத்தை வரைந்து முடிப்போம் என்று தெரியாததால் ஒட்டகம் பாலைவனப் பயணத்துக்கு முன்பு தண்ணீரை ஓவர் லோட் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்வது போல நானும், பகல் உணவையும் சேர்த்து காலையிலேயே வயிற்றை நிரப்பி விட்டுச் சென்றேன்.

ஒரு வேளை வெயில் அடித்தால் கோபுர கலசத்தின் நிழல் கோயில் காம்பவுண்டுக்குள் விழாதா என்று ஆவலோடு காத்திருந்ததுதான் மிச்சம். மாலை வரை வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.

‘ஸ்பாட் பெயிண்டிங்’கில் ஒரு சிரமம் கோயில் மீது அதிகாலை 7 மணிக்கு 180 டிகிரியிலிருந்து விழும் சூரிய வெளிச்சம் நிழல் வேறு, 12 மணிக்கு சூரியன் உச்சிக்கு சென்ற பின் கோயில் மீது விழும் வெளிச்சத்தின் தன்மை வேறு. பிற்பகல் 3 மணிக்கு சூரியன் கோயிலுக்கு பின்னால் போய் விட்டால் முழுக்கோயிலும் நிழல் வடிவத்தில்தான் தெரியும்.

7 மணிநேரம் 8 மணி நேரம் ஓவியம் தீட்ட வேண்டி வரும்போது LIGHT & SHADE -ஐ அடிக்கடி மாற்றி வரைய முடியாது. ஆகவே காலை 7 முதல் 8 மணிக்குள் கோபுரத்தின் மேல் விழும் சூரிய ஒளி- அதன் நிழல் இரண்டின் அடிப்படையில் படத்தில் LIGHT & SHADE வண்ணத்தை முதலில் வரைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒவ்வொரு படிக்கட்டாக அதன் ‘டீட்டெய்ல்’களை நிதானமாக வரைந்து கொள்ளலாம்.

தரையில், கோயிலின் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி அருகில் உட்கார்ந்து ‘ஸ்கெச்’ போட ஆரம்பித்தேன். பள்ளிச்சிறுவர்கள் 10 வயதிலிருநு்து 15 வயதிற்குள் கிரிக்கட் மைதானமாக கோயிலின் தரைப்பகுதியைப் பயன்படுத்தி- ஆரவாரக்கூச்சலுடன் எனக்கு முன்னே ‘ஸ்டம்பை’ குத்தி வைத்து கிரிக்கெட் ஆடினார்கள்.

‘டேய்! டிராயிங் மாஸ்டர் மேல ‘பாலை’ வீசிடாதடா! பாவம். அவரு கஷ்டப்பட்டு வரையறாரு!’ என்று கிண்டல் வேறு.

மன அமைதிக்கு இமயமலை அடிவாரம் செல்லலாம். ரிஷிகேஷ் செல்லலாம் என்கிறார்கள். அங்கு போனால் எல்லோருக்கும் அமைதி கிடைக்கும்.

ஆனால் கால் பந்து மைதான ஆரவாரத்தில் உன் மனதை அடக்கி, புலன்களை ஒருமைப்படுத்தி தியானம் செய்பவனே யோகி என்கிறார் விவேகாநந்தர்.

ஆகவே கிரிக்கட் விளையாடும் பிள்ளைகளின் ஆரவாரத்தை மறந்து மனதை கோயிலின் தோற்றத்தின் மீதும், வரையும் ஓவியத்தின் மீதுமே செலுத்தி வரைந்து முடித்தேன்.

காலை 7 மணிக்கு துவங்கி 2 மணிக்கு முடிந்தது. ஓட்டல் வந்து குளித்து விட்டு 2 மணி நேரம் ஓய்வெடுத்து விட்டு, மாலை சிற்றுண்டி அருந்த கீழே வந்தேன்.

ரெண்டு உருளைக்கிழங்கு போண்டா ஆர்டர் செய்தேன். மசால் தோசை வந்தது.

‘‘ஐயா! நான் கேட்டது உருளைக்கிழங்கு போண்டா!’’

‘‘பரவால்லே‘ மசால் தோசை சாப்பிடுங்க!’’

‘‘யாருக்கோ போட்ட தோசையை எனக்கு தராதீங்க. நான் ஆர்டர் பண்ணின போண்டா குடுங்க!’‘

‘‘ஏன் உங்களால மசால் தோசை சாப்பிட முடியாதா?’’

‘‘ரெண்டு மசால்தோசை சாப்பிடுவேன். ஆனா எனக்கு இப்ப போண்டாதான் வேணும்!’’

‘‘சின்ன முதலாளி! என்னை நியாபகம் இல்லீங்களா? நான் பொள்ளாச்சில உங்க மாமா ஓட்டல்ல வேலை செஞ்ச சர்வர் கேசவன்..!’’

சரோபோஜி மன்னன் அரண்மனை, சரஸ்வதி மகால்.

உலக சுற்றுப்பயணம் போறீங்க. ரஷ்யா லெனின்கிராட் விமானநிலையத்தில் இறங்கறீங்க. நூற்றுக்கணக்கான பயணிகள் உங்க தோளை உரசிட்டு புரியாத ரஷ்ய மொழி பேசிட்டுப் போறாங்க. அந்தக்கூட்டத்தில் நீங்க ஒரு துரும்பு. பிரான்ஸ் போறீங்க. லூவர் மியூசியத்துக்குள்ளே க்யூவுல நின்னு, இடிச்சுகிட்டு உள்ளே போறீங்க. அவங்க பேசற பிரஞ்ச் உங்களுக்குப் புரியாது. நீங்கள் அங்கே ஒரு அல்ப ஜந்து. அமெரிக்கா போய் ஓகையோ மாகாணம் தாண்டி நயாகரா நீர் வீழ்ச்சி அருகே படகில் செல்லும் போது, ‘டேய்! வேலாயுதம்!’ன்னு ஒரு குரல் கேட்டா உங்க மனசு எப்படி இருக்கும்?

இந்த அகண்ட உலகத்தில நம்ம பேரைக்கூட ஒருத்தன் இங்க .உச்சரிக்கறானா? அந்த மகிழ்ச்சி கேசவனைப் பார்த்தபோது ஏற்பட்டது. 20 ரூபாய் பட்ஜெட்டில், திருச்சி, தஞ்சை ஓவியம் வரைய வந்தவனை யாரோ ஒருவர் அடையாளம் கண்டு அன்பு காட்டும்போது நமக்கு ஏற்படுகிற நெகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

இந்த பிரம்மாண்ட தஞ்சை ஓவியக்கோயிலை கட்டி முடித்தபோது ராஜராஜன் எப்படி சந்தோஷப்பட்டான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் காலை 7 மணிக்கு வெள்ளை பேப்பரில் வரைய ஆரம்பித்து பிற்பகல் 2 மணிக்கு தஞ்சைக் கோயிலை வண்ண ஓவியமாக தீட்டி முடித்த போது ராஜராஜனை விட நான் கர்வப்பட்டேன், நெஞ்சை நிமிர்த்தி...

---

தரிசிப்போம்

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x