கர்னாடக இசை ரசிகர்களுக்கு விருந்து: ரசிகா பைன் ஆர்ட்ஸின் 1 வார இசைத் திருவிழா- ஆன்லைன், நேரில் காண அனுமதி இலவசம்

கர்னாடக இசை ரசிகர்களுக்கு விருந்து: ரசிகா பைன் ஆர்ட்ஸின் 1 வார இசைத் திருவிழா- ஆன்லைன், நேரில் காண அனுமதி இலவசம்
Updated on
1 min read

கர்னாடக இசை ரசிகர்களுக்கான் இசைத் திருவிழா டிசம்பர் 25-ம் தேதி தொடங்கி ஜனவரி 1-ம் தேதி நிறைவடைகிறது. இவற்றை ஆன்லைன் மற்றும் நேரில் காணக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

சென்னையில் மாம்பலம், அசோக் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிவாழ் கர்னாடக இசைப் பிரியர்களின் ரசனைகளுக்குத் தீனி போடுகிறது சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ரசிகா பைன் ஆர்ட்ஸ். இதன் 17-வது ஆண்டு இசை விழா நிகழ்ச்சிகளை, நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு கர்னாடக இசை ரசிகர்களுக்கு வித்தியாசமாக விருந்தளிக்க முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சம் நிலவிவரும் சூழலில் பாதுகாப்பான முறையில் இசைக் கச்சேரிகளைக் கண்டுகளிக்க புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது இச்சங்கம். அதன்படி, ரசிகா பைன் ஆர்ட்ஸ் சங்கமும் ஹைபிரிட் நிகழ்ச்சிகளை (நேரலை மற்றும் பதிவு செய்யப்பட்டது) இந்த இசை சீசனில் வழங்க உள்ளது. இவற்றை சர்வதேசத் தரத்துக்கு இணையாக ஒளிபரப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் கச்சேரிகளைக் கேட்டு ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்குப் பல சுவாரசிய நிகழ்வுகள் காத்திருக்கின்றன.

• பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள் (நேரலை, காணொலி)
• வளரிளம் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சி (நேரலை, காணொலி)
• ரெட்ரோ இசை நிகழ்ச்சி (பழம்பெரும் கலைஞர்களின் பிரபல இசைக் கச்சேரிகளின் தொகுப்பு)
• இசை சார்ந்த விளக்க உரை (வளரிளம் கலைஞர்களுக்கு உபயோகமான பகுதி)
• காணொலி விநாடி- வினா மற்றும் போட்டி (வெற்றி பெறுபவர்களுக்குச் சான்று அளித்து கவுரவம்)
• பாலக்காடு மணி அய்யர் போன்ற இசை ஜாம்பவான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகளின் ஆவணத் தொகுப்பு.

ஹைபிரிட் இசை விழா டிசம்பர் 25-ம் தேதி தொடங்கி ஜனவரி 1-ம் தேதி நிறைவடைகிறது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் நித்யஸ்ரீ, மாண்டலின் ராஜேஷ், அபிஷேக் ரகுராமன், கணேஷ் குமார், மாம்பலம் சகோதரிகள் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த இசை நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள், நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலம் கண்டு ரசிக்க முடியும்.

அத்துடன் கரோனா பாதுகாப்பு விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து இசைக் கச்சேரிகளை ரசிகர்கள் நேரில் பார்த்தும் ரசிக்கலாம்.

நேரடி நிகழ்ச்சிகள் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இசை நிகழ்ச்சிகள் தினசரி மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும். இசை நிகழ்ச்சிகளை www.mediapointevent.com என்ற இணையதளத்தில் கண்டு ரசிக்கலாம்.

இந்த ஆண்டு இசை நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சமே ஹைபிரிட் இசை நிகழ்ச்சிதான். நேரில் கண்டு ரசிப்பவர்களுக்கு இலவச அனுமதி போலவே, ஆன்லைனில் பார்த்து, கேட்டு ரசிப்பதற்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. இது முழுவதும் இலவசமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in