Published : 22 Dec 2020 09:31 PM
Last Updated : 22 Dec 2020 09:31 PM

ஐரோப்பியர்களை அவஸ்தைப்படுத்தும் கரோனா: உண்மை எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது?

சென்ற வாரம் வெளியே போய் வந்தபோது வேர்த்து விறுவிறுத்துவிட்டது. என்ன இந்த மக்கள் எந்தக் கடையில் பார்த்தாலும் இடித்துப் பிடித்துக்கொண்டு புத்தாடைகளும் பலகாரங்களும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே!

சில மாதங்களுக்கு முன்னர் “ஆறலைக் கள்வர்கள்” அடித்துப் போட்டு விடுவார்கள் என்று பயப்படுவது போல தெருவில் சந்தடி இல்லாமல் இருந்ததே! இப்போது என்னவாயிற்று?

கரோனா பயம் போய்விட்டதா? அல்லது கரோனாவே போய்விட்டதா? அல்லது வீடுதோறும் சென்று கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிப் பிடித்தவர்கள் முடக்கி வைக்கப்பட்டு விட்டார்களா? அல்லது நாளுக்கு நாள் கரோனா கட்டுக்கடங்காமல் வளர்ந்து கொண்டே இருப்பதை “வெளிக்காட்டாமல்” அரசாங்கம் “அடக்கி வாசிக்கிறதா?”

அதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கரோனா என்ற புயலால் யாருக்கு என்ன லாபமோ யாருக்கு என்ன நஷ்டமோ தெரியாது; ஆனால் ட்ரம்ப் போன்ற ஒரு வலிமையான அதிபர் வீழ்ந்ததும் இன்னும் நான்காண்டுகளில் எப்படியும் வெள்ளை மாளிகையில் தேவாரமும் திருவாசகமும் திருக்குறளும் முழங்கும் என்பதும் உண்மை !

கரோனாவால் மனிதர்கள் பட்ட கஷ்டம் பலருக்குத் தெரியும்; மனிதர்களால் கரோனா பட்ட கஷ்டத்தை நானாவது சொல்ல வேண்டாமா?

நெட்(Net)டில் போய் கரோனா வேர்ல்டோமீட்டர் என்று தட்டி பாருங்கள். (இதற்காக எங்கும் அலைய வேண்டாம். காசில்லாதவர் கைகளில் கூட இருக்கும் மொபைலில் தட்டுங்கள் போதும்) இதில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 220 நாடுகளில் அதிகமாக மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் நாடுகளைக் கணக்கிட்டு வரிசைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

அதில் முதலில் அமெரிக்கா, ட்ரம்ப்பின் புண்ணியத்தால் கரோனா அங்கே ஏகபோகமாய் கொட்டமடிக்கின்றன. பிறகு இந்தியா, பிறகு பிரேசில்.

முதல் 40 நாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு உண்மை நிலவரத்தை அலசுவோம். இந்த 40 நாடுகளை 85 சதவிகிதம் கரோனா சுமையைத் தோளில் தூக்கிச் சுமக்கின்றன. எனவே உண்மை எங்கும் ஒளிந்து விட முடியாது!

முதலில் உலக முழுமைக்குமான “அன்றாட புதுக் கரோனா தொற்று பற்றி வரைபடம் 1-ல் பார்க்க. (யாவும் கரோனா வேர்ல்டோமீட்டர், உலக சுகாதார அமைப்பின் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை)

உலக அளவில் தினசரி கரோனா நிலவரம்

இதைப் பார்த்ததும் உங்களுக்கு அச்சத்தின் உச்சத்திற்குப் போய் விடுவீர்கள். முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று கரோனா பொங்கிப் பூரிக்கிறது. (நிலவரம் இப்படி இருக்கையில் எப்படி நம் கடைக்குள் மக்கள் கூட்டத்தைப் பொங்க அனுமதிக்கிறார்கள்!?)

இரண்டாவதாக அமெரிக்காவின் தினசரி நோய் நிலவரம் என்ன என்று போட்டுள்ள இடத்திற்கு போய் அதன் தலையில் ஒரு குட்டு வையுங்கள். அமெரிக்காவிலும் இதே கதைதான். அலைகளின் உயரத்தில் (magnitude) குறைவு உள்ளதே தவிர, அலையின் போக்கில் - வடிவத்தில் மாற்றமில்லை.

அமெரிக்காவில் தினசரி கரோனா நிலவரம்

சரி. இப்போது அதற்குக் கீழே உள்ள இந்தியா தலையில் ஒரு தட்டு தட்டுங்கள். (குட்டாதீர்கள்; நம்ம நாடு!) இங்கே இந்தியாவில் கரோனா அலையின் தோற்றம் முற்றிலும் வேறு! பிப்ரவரியில் தொடங்கி செப்டம்பர் 18ஆம் தேதிக்கு உச்சம் அடைந்து பின்னர் கரோனா அலை அடங்கத் தொடங்கிவிட்டது!

இந்தியாவில் தினசரி கரோனா நிலவரம்

இந்திய கரோனா அலை மோடியின் மந்திரத்திற்கு “பெட்டிப் பாம்பாக” அடங்கிவிட்டது. அதேசமயம் அமெரிக்கா படும் அவஸ்தை “ட்ரம்ப்பின்”ஆணவத்திற்குக் கிடைத்த பரிசு! அப்படி அரசியல்வாதிகள் எழுதலாம்; அறிவியல்வாதி எழுதக் கூடாது. அடுத்த 38 நாடுகளையும் சென்று ஒவ்வொரு நாட்டின் கதவையும் (பொற்கைப்பாண்டியன் போல) தட்டிப் பாருங்கள்.

மேலே சொன்ன இரண்டு வகையான கரோனா அலைகள் பெரிதும் மாறி மாறி வரும். இந்த 38 நாடுகளுக்கும் மோடிக்கும் ட்ரம்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

உண்மை எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது?

இந்த 40 நாடுகளை மட்டும் கணக்கில் கொண்டு, கரோனா அலையின் அடிப்படையில் இந்த நாடுகளை இரண்டு அணிகளாய்ப் பிரித்தோம். முதலில் Team Aல் 13 பேர் அடுத்து Team Bல் இன்னும் 13 பேர்.

Team B

Team A-ல் உள்ள நாடுகளில் உள்ள மக்களின் நடுத்தர வயது இரண்டாவது column (நிரல்!?) காட்டப்பட்டுள்ளது. இந்த 13 நாடுகளில் 50 சதவிகித மக்கள் 42 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதாவது தடுக்கி விழுந்தால் ரோமில் அல்லது நியூயார்க்கில் ஒரு கிழவர் மேல் விழுவீர்கள்.

இதேபோல இப்போது Team Bல் கவனியுங்கள். இங்கே நடுவயதே 28தான். இங்கே சென்னையிலோ, ரியாத்திலோ தடுக்கி விழுந்தால் ஒரு இளைஞர்/ இளம்பெண் மேல் விழுவீர்கள். (அடியும் வாங்குவீர்கள்!)

மறுபடியும் Team Aயைக் கவனிப்போம். இந்த அணியில் உள்ள அத்தனை நாடுகளும் ஐரோப்பிய கண்டத்தைச் சார்ந்தவை. (அமெரிக்கர் இவர்கள் தாத்தா-பாட்டி குடியேறியவர்கள் மட்டுமல்ல; இவர்களைப் போல தட்பவெப்ப சூழலில் வாழ்பவர்கள். (Approx. same latitudes). இதை வலியுறுத்தத்தான் மூன்றாவது மற்றும் நான்காவது column-த்தில் தேதிகளையும், வெப்பநிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மாறாக Team Bல் சில நாடுகள் ஆசியாவில், சில ஆப்பிரிக்காவில், தென் அமெரிக்கா என்று பல இடங்களில் உள்ளன. வெப்பநிலையிலும் மாற்றமுண்டு. மழையில் நனைந்து நனைந்து நடுங்கும் இந்தோனேசியனும் சுள்ளெரி வெயில் சவுதியும் இந்த அணியில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே விஷயம் இவர்களின் நடுவயது 28.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே 14 வயது இடைவெளி இருக்கிறது கீழே உள்ள படம் பார்க்க. அரைக்கடத்தியின் ( semiconductor) ஆற்றல் இடைவெளியை (band - gap) நினைவுறுத்தும். இந்த இடைவெளியைத் தாண்ட முடியாத காரணத்தால்தான், கரோனா நம்மிடத்தே அவஸ்தைப்படுகிறது; ஐரோப்பியர்களை அவஸ்தைப்படுத்துகிறது. (தமிழின் ஒரே ஒரு வல்லின எழுத்தின் வலிமையைக் கவனியுங்கள்.)

இரண்டு அணிகளுக்கு இடையே வயது இடைவெளி

முதலில் கரோனா தன்மையில் அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு அணிகளில் தனித்தனியே USA அணி மற்றும் இந்திய அணி பல நாடுகள் ஒட்டிக்கொண்டன. இவற்றின் பொதுத்தன்மையின் வேறுபாடு வயதின் கோளாறுதான். இது அனுமானக் கட்டம். (hypothesis stage). பின்னர் பிறகு வயது அடிப்படையில் அடுத்து 25 நாடுகளைத் தேடும்போது கீழே உள்ள 24-ம் சரியாக இரண்டு அணியில் சேர்ந்துவிட்டன. இது உறுதி செய்யப்பட்ட நிலை. (Confirmatory stage). எனவே ஆக மொத்தம் 50 நாடுகள்; 90 சதவீத கரோனா தொற்றில் மக்கள் அகப்பட்டு விட்டார்கள். (இந்தப் பகுப்பில் சில மாற்றுகள் (Exceptions) உண்டு. குறிப்பாக சீனா, நியூசிலாந்து, தாய்லாந்து, நேபாளம் இவை பற்றிப் பின்னர் பார்ப்போம்).


உங்களுக்கு நேரமிருப்பின் உலகிலுள்ள 220 நாடுகளின் நடுவயதுப் பட்டியலை மட்டும் வைத்துக்கொண்டு Team A அல்லது Bயில் சேர்த்துப் பாருங்கள். Cut off for B Team = 34 வயது. சுமார் 85 சதவிகிதம் சரியாக இருக்கும். மாற்றுகள் (Exceptions) மிகச்சிலவே. குறிப்பாக சீனா இங்கெல்லாம் அரசு கட்டுப்பாடு மிக அதிகம். சீனப் பிரதமரைக் கண்டு கரோனா கதிகலங்கிவிட்டது.

உண்மை இங்கே ஒளிந்து இருக்கையில் ட்ரம்ப் மட்டும் அநியாயமாக தண்டிக்கப்பட்டு விட்டாரோ?
எப்படி?

Team A அட்டவணையின் கடைசிக் கட்டத்தைப் பாருங்கள். அதில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு எத்தனை மக்களுக்குத் தொற்று என்று கணக்கிடப்பட்டு பட்டியலிடப்பட்ட இருக்கிறது. அதில் அமெரிக்காவுக்கு 58 ஆயிரம், பெல்ஜியம் 54,000, Czechia 59 ஆயிரம், ஸ்பெயின் 39 ஆயிரம். அதாவது கரோனாவின் தாக்கத்தை மற்ற பல நாட்டுத் தலைவர்களும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆனால் அடிபட்டவர் ட்ரம்ப் மட்டுமே. அறிவியலுக்கு உதாரணமாக விளங்கும் அமெரிக்காவில் அதன் தலைவர் அறிவியலையே கேலியாகப் பேசியதால் அறம் கூற்று ஆகிவிட்டதோ? இது நிற்க!

இன்னொரு விஷயத்தை உற்று கவனிக்க வேண்டும்.

இரண்டு மற்றும் மூன்றாம் படங்களில் உள்ள கரோனா அலை பற்றி கவனியுங்கள். அமெரிக்க அலைக்கும் இந்திய அலைக்கும் மிக முக்கியமான ஏப்ரல் மாதத்தில் வந்த முதல் உச்சம் இந்தியாவில் இல்லை. இரண்டாவதாக ஆகஸ்ட் சமயத்தில் அமெரிக்காவில் வந்த உச்சம் கொஞ்சம் தள்ளி செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்துள்ளது.

காரணம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சீனாவின் நேரடி கரோனா இறக்குமதி. அங்கே இளவேனில் காலத்தில் நாளொரு வண்ணமும் வளர்ந்த பிறகு நமக்கு மார்ச்சில் இருந்து அமெரிக்கா ஐரோப்பா அரேபியா வழியே இறக்குமதி. நல்ல வெயில் நேரம். கட்டுப்பாடு வேறு; தட்டுத்தடுமாறி பல்கிப்பெருகி ஆகஸ்ட் - செப்டம்பரில் உச்சம் அடைந்தது. அதற்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியவில்லை. பின்வாங்கத் தொடங்கிவிட்டது.

வயதுதான் கரோனாத தாக்கத்தை வரையறுத்தது என்றோம்.
அதன் அடியூற்று என்ன?

பதிலுக்கு நேரடியாக ஒரு கரோவின் கட்டமைப்பைப் ( structure) பார்ப்போம். (கீழே உள்ள புகைப்படம் போல அழகாக எந்தக் கரோனாவும் இல்லை; கலை நுட்பமும், அறிவியலும் தெரிந்த ஒருவரின் சரியான படைப்பு (Rendition) இது)

கரோனா என்பது ஒரு ஒட்டுண்ணி (Parasite); கல்லுக்கு உயிர் இல்லை; புல்லுக்கு உயிர் உண்டு; கரோனா இரண்டும் கெட்டான் நிலை. இதன் உள்கூறு 4 nucleotides. அதற்கு மேல் ஒரு மெல்லிய சட்டை. பிறகு ஒரு கோட் எல்லாம். இதைச் சுற்றியுள்ள ஸ்பைக் (spike) புரோட்டின்ஸ்தான் இதன் கைகள்.

இந்தக் கையை வைத்துக்கொண்டு இது ஒட்டிக்கொள்ள யாராவது ஏமாளி கிடைப்பானா என்று தேடிக்கொண்டே இருக்கும். இதற்கு தெரிந்த ஒரே அறிவு தன்னைக் காத்துக் கொள்ளுதல். பல கோடி முறை தேடி, ஓடி, வாடி, பிறகு இந்த சாவிக்கு ஏற்ற பூட்டு போல ACE2 என்ற ஒரு என்சைம் (Enzyme) கிடைத்தால் அதை இறுகப் பிடித்துக் கொள்ளும். கிடைக்காவிட்டால் வாடிக் காத்திருக்கும். வீணாகிவிடவும் கூடும்.

பூட்டுக்கு ஏற்றசாவிபோல ஒட்டுண்ணியும் ACE2Enzymeம் ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு "கவவுக்கை நெகிழா நிலை".

இந்த ACE2 Enzyme நம் மனிதர்கள் எல்லாரிடமும் உள்ளது. இது குறிப்பாக மூச்சுக்குழாய் பகுதியில் நிறைய இருக்கும். அதுமட்டுமல்ல இந்த ACE2 Enzyme வயதாக வயதாக அதிகமாகச் சுரக்கும். ஏனென்றால் நம் ரத்த குழாயில் உள்ள அடைப்புகள் அதிகமாக அதிகமாக இந்த Enzymeமும் அதிகமாகும்.

ரத்தக் குழாயில் அடைப்பு வருவதற்கு 4 காரணங்கள். முதலில் (cholesterol) கொழுப்பு, புகை பிடித்தல், நீரிழிவு, மற்றும் ரத்த அழுத்த நோய். பெரும்பாலும் 60 வயதானவர்களுக்கு இந்த நான்குமே இருக்கும்; அல்லது ஒன்று, இரண்டாவது இருக்கும். எனவே இந்த ACE2வின் கையைப் பிடித்துக்கொண்டு அது கூடவே போய் பெரியவர்களின் மூக்கு முதல் நுரையீரல் வரையிலான மூச்சுக்குழாய் வழியில் உள்ள உயிரணுக்களில் (cell) உள்ளே நுழைந்து அங்கே உள்ள உணவைத் திருடித்தின்று இந்த வைரஸ் கோடிக்கணக்கில் பெருகும். (வளராது; only replication – like Xerox copies); விருந்து கொடுத்த செல் வற்றி மடியும். வழிநெடுக உள்ள செல்களில் நுழைந்து ‘ரணகளம்’ செய்யும். மூச்சுத்திணறலால் மனிதன் வீழ்வான்!

(ஆண்களை விட வெளி உலகம் சென்று பல வகை மனிதரோடும் பழக வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இல்லை; புகை பிடிக்கும் பழக்கமும் ரத்த அழுத்தமும் பெண்களுக்குக் குறைவு என்பதாலேயே கரோனாவால் ஆண்களை விடப் பெண்களுக்கு பாதிப்பு குறைவு ; குழந்தைகளுக்கு மிக மிகக் குறைவு )

இத்தகைய வாய்ப்பை ஐரோப்பியாவின் எல்லா நாடுகளிலும் உள்ள முதியவர்கள் கொடுப்பதால் அவர்கள் மடிகிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களின் மூச்சுக்குழாயில் இந்த கரோனா வைரஸ் மலிந்து நிறைந்து கிடப்பதால் அவர் தும்முகையில் மற்ற முதியவருக்கும் எளிதில் தொற்றி அவர் கஷ்டப்படுகிறார். இந்த பனிச்சரிவு அல்லது மலைச்சரிவு (Avalanche effect) ஒரு மகா கொடுமை.

இதேபோல ஒரு நூறு கோடி வைரஸ்கள் இந்தியாவுக்கும் வந்து சேர்ந்ததாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஆளுக்கு நூறு வைரஸ் ஒட்டிக் கொள்வதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இதில் வெளியில் நடமாடி வைரஸ் வாங்கிக்கொள்ளும் பெரும்பாலானோர் வயது 20 முதல் 50. அவர்களுக்கு ACE2 Enzyme ரொம்பக் குறைவு. எனவே கைகுலுக்கி வரவேற்க ஆளில்லாத நிலையில், கரோனா வழி தடுமாறிக் கொண்டிருக்கும்; யாரோ வெளிநாட்டு எதிரி வந்திருப்பதை தெரிந்த நம் எதிர்ப்பு சக்தி வீரர்கள் இந்த கரோனாவைத் துவம்சம் செய்து விடுவார்கள். இது நம்மூரில் கரோனா பட்ட அவஸ்தை வயதான சிலர் இந்த வைரஸுக்கு பலியாவதும் உண்டு; இது மனிதனுக்கும் வைரஸுக்கு நடக்கும் உலக மகா யுத்தம்.

மூன்றாம் உலகப்போர்

இந்த யுத்தத்தில் ACE2 என்ற உளவாளிகள் இல்லாத காரணத்தால் அல்லது குறைவாக உள்ள காரணத்தால், Team Bயில் உள்ள பல நாடுகளில் கரோனா தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தும் பலர் மடிய வேண்டியதாகிவிட்டது. “புண் இல்லாத போராட்டம் இல்லை; தீ இல்லாத வேள்வி இல்லை.!”

ஆனால் இங்கே எது முக்கியம் என்றால் இப்போது நடக்கும் உலகப்போரில் - இந்த மூன்றாம் உலகப் போரில் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் கரோனா என்ற ஒரு நுண்ணுயிர் - கேவலமான அரை உயிர் - மனிதம் என்ற மிக விழுமிய உயிரைப் போர்க்களத்தில் புறம் கண்டு கொண்டு இருக்கிறது. இந்த வெற்றி எல்லாம் தற்காலிகம்தான். ஏனென்றால் தடுப்பூசி என்ற பிரம்மாஸ்திரத்தை மனிதன் கண்டுபிடித்து விட்டான். இனி கரோனாவைப் புறமுதுகு காணும் நாள் அம்மையைக் கண்டதுபோல் தொலைவில் இல்லை.

இந்த பிரம்மாஸ்திரம் இல்லாமலே மனிதனின் எதிர்ப்பு சக்தி அடிப்படையிலேயே, முதியவர்கள் குறைவின் காரணமாக Team B-யில் கரோனா கீழை நாடுகளில் தோற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் உலகில் 65% கரோனா தொற்று Team A-ல் தான். மனிதன் இன்னும் வெல்ல வேண்டிய போர்க்களங்கள் இன்னும் பல மேலை நாடுகளில் உள்ளன என்பது இன்றைய நிதர்சன நிலவரம்.

இப்படிச் சொல்வதால் நாம் தறிகெட்டு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பொருள் அல்ல. மேலே உள்ள Team Bல் மூன்றாவது கட்டத்தில் இந்த கரோனாவின் அரை நேரம் (Half – time) குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிக நேரம் கரோனாவை விளையாட விட்ட நாடுகள் பகுதியில் நாம் உள்ளோம்.

காரணம் எந்தக் கூட்டங்களிலும் இடைவெளி விடும் பழக்கம் இல்லை. மற்றவர்கள் மூக்கால்தாம் நாம் சுவாசிக்கிறோம்.

மிக எளிமையானது கரோனா தடுப்புமுறை: முகக்கவசம்; மனிதருக்கு மனிதர் இடைவெளி; கைத் தூய்மை;
இது “யாவர்க்குமாம்” “செல்லும் வாய் எல்லாம் செயல் கூடுமான” பொது அறம். இப்படிப் “பொது அறம்” பற்றிய போதனைகள் பொது மக்களிடம் போய்ச் சேராது. அங்குதான் அரசாங்கம் வரவேண்டும். (அப்படி அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு முன்னோடியாக நம் நாட்டை விட பெரிய சீனா, நம் நாடு போன்றே ஜனநாயக நியூஸிலாந்து, தாய்லாந்து, கரோனா குட்டிச் சாத்தானை பெட்டியில் அடைத்து விட்டன.

அரசாங்கம் என்னதான் செய்யவேண்டும்?

மனித இடைவெளியை நீட்டி, பயணங்களை குறைத்தால், பொருளாதாரம் அடிபடும். (பட்டது போதும்; பட மாட்டேன் இனித் துயரம்!) ஆனால் முகக்கவசம் இல்லாமல், எந்த மனிதர் வந்தாலும் ஐநூறு என்று தண்டத்தொகை அங்கேயே போலீஸ் வசூலித்து ஒரு முகக் கவசம் போட்டுவிடவேண்டும். இதை நிலைநிறுத்த தமிழகத்தின் அத்தனை மாவட்டத் தலைநகரிலும் காவலர்கள் ரோந்து சுற்ற வேண்டும். சில மாதங்களுக்கு முன் இருபத்தியோரு நாட்கள் லாக்டவுனில் செய்ய முடிந்த வேலையை இப்போதும் முகக்கவசம் அணிவிப்பதில் மட்டும் நிலைநிறுத்த வேண்டும்.

எத்தனையோ சாதனைகளில் முன்னோடியாக இருந்த தமிழகம் இதில் எளிதாக முன்னோடி ஆகிவிடலாம். சட்டமியற்றி, செயல்படுத்தி நிலை நிறுத்தி விடலாம். (தவறினால் தீபாவளிக்கு போன கொரோனா பொங்கலுக்கு வந்துவிடும்!)

கட்டுரையாளர்கள்:

டாக்டர் வ. மாசிலாமணி, ஆராய்ச்சிப் பேராசிரியர் (Retd.),

R.வித்யாஸ்ரீ, Bio-Tech விஞ்ஞானி.

தொடர்புக்கு: masila123@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x