Published : 21 Dec 2020 10:16 AM
Last Updated : 21 Dec 2020 10:16 AM

சித்திரச்சோலை 23: பொன்னியின் செல்வர்கள்

சிவகுமார்

கலங்கல் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆசிரியர் கல்யாணசாமி நாயுடு வீட்டில் ஆனந்த விகடன், கல்கி இதழ்களைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பளித்தார்.

அப்போது மனதில் பதிந்த நால்வர்தான் கோபுலு, மணியம், சில்பி, எஸ்.ராஜம் ஆகியோர். மற்ற மூன்று பேரைப் பற்றி எழுதிவிட்டேன். மணியம் பற்றி இதில் சொல்கிறேன். அசல் மனித தோற்றத்தை அப்படியே வரையாமல், ஓவியனின் கற்பனையையும் கொஞ்சம் கலந்து வரைபவர்களில் மணியமும் ஒருவர்.

அழகான சிலை ஒன்றைப் பார்த்தால் அதை அப்படியே வரையாமல், அந்தச் சிலை அதே வடிவில் மனித உருவு எடுத்து வந்தால் எப்படி இருக்குமோ அப்படி மணியம் மாந்தர்கள் தென்படுவார்கள்.

வாதாபி போன்ற குகைகளில் ஒரு பெரிய சிலை சிதைவுற்றிருந்தால், அதற்கு மணியம் வடிவம் தரும்போது சிதைவுற்ற பகுதியைத் தன் ஓவியத்தில் சீர் செய்து முழு வடிவம் கொடுப்பார்.

பொதுவாக ஓவியர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் சாதுவாக இருப்பார்கள். ஓங்கிக் குரலெடுத்துப் பேசமாட்டார்கள். அட்டகாசச்சிரிப்பு சிரிக்க மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளிலும் ஒரு மென்மை, கனிவு இருக்கும்.

மணியம் செல்வம்

மணியமும், அவர் மகன் ம.செ. என்கிற லோகுவும் விதிவிலக்கல்ல. அதிர்ந்து பேச மாட்டார்கள். அடுத்தவர் பற்றி காழ்ப்புடன் எந்தப் புகாரும் கூற மாட்டார்கள். என்னை மாதிரி- நெருங்கிய நண்பர்களிடம் கூட வாடா, போடா என்று பேசமாட்டார்கள்.

வைதீக பிராமண குடும்பத்தில் உள்ள கட்டுப்பாடுகள். பூஜை, புனஸ்காரங்கள் இவர்கள் வீட்டிலும் உண்டு. மணியத்துக்கு ஓவியத்தில் ஆர்வம் ஏற்பட அவருடைய சித்தப்பா லிங்கையாதான் முதல் காரணம். ராய் சவுத்திரி காலத்தில் ஓவியக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்கு பயிலும்போதே எழுத்தாளர் கல்கியை 1941-களில் சந்தித்துப் பத்திரிகைகளுக்கு ஓவியம் வரையும் வாய்ப்புகள் பெற்றார்.

1944-ல் கல்கி எழுதிய தொடர்களுக்காக அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு கல்கியுடன் சென்று ஓவியங்கள் தீட்டினார். கல்கியில் பெருத்த வரவேற்பைப் பெற்ற தொடர், அதற்கு உயிர் கொடுத்தவை மணியம் ஓவியங்கள்.

பின்னர் பல்லவர், சோழர் கால சிற்பங்களைச் சிற்ப ஓவியங்களாக வரைந்து பயிற்சி எடுத்தார். சிதிலமடைந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் சிற்பங்களைக் கூட ஓவியத்தில் தன் கற்பனை மூலம் அதற்கு முழுமையான வடிவம் கொடுப்பார்.

ஹம்பி, வாதாபி போன்ற இடங்களுக்குத் தன் மனைவியுடன் நேரிலே சென்று அங்கேயே தங்கி சரித்திரக் காலத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவார். வாட்டர் கலர், ஏர் பிரஸ்ஸஸ், ட்ரை பேஸ்ட், கலர் பென்சில் இவற்றைக் கொண்டு ஓவியங்கள் தீட்டுவார்.

1950-ல் வெளிவந்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன.

தன் படைப்பில் CALLI GRAPHY, LAYOUT DESIGN இரண்டையும் சரித்திரம், சமூகம், கட்டுரைகள், கவிதைகளுக்கு அழகு சேர்க்க 50, 60களில் வரைந்த ஓவியங்களில் கையாண்டார்.

மணியம் ஓவியம்

தன் ஓவியக் கலைக்குருவாக ஆசிரியர் ‘கல்கி’யையே வரித்துக் கொண்டார். கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’, சரித்திரத் திரைப்படத்திற்கு ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்தார். செட்டிராயிங்க்ஸ், காஸ்ட்யூம்ஸ், ஹேர் ஸ்டைல், பப்ளிஷிட்டி டிசைன் என எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று திறம்படச் செய்தார்.

கோபுலு, எஸ்.ராஜம் போல 90 வயது தாண்டி வாழ்ந்து ஓவியப்பணி ஆற்றியிருக்க வேண்டியவர் உடல் நலம் குன்றி 44 வயதில் 1968-ல் அகால மரணமடைந்தது ஓவிய உலகிற்கு பேரிழப்புதான்.

ஆயினும் கலைஞர்கள் தங்கள் படைப்புகள் வழியாக இந்த உலகில் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

ம.செ ஓவியம்.

தந்தை பாதியில் விட்டுச் சென்ற ஓவியப்பணியை மகன் வளர்ந்து ஆளாகித் தொடர்ந்து செய்வது அபூர்வ நிகழ்வுதான். கோபுலுவுக்கோ, எஸ்.ராஜத்துக்கோ, சில்பிக்கோ அந்த பாக்யம் கிடைக்கவில்லை.

மணியத்துக்கு லோகு என்ற ஒரு அருமையான மகன் பிறந்து மணியம் செல்வன் என்ற பெயரில் அற்புதமான ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

மணியம் செல்வத்துக்கு அப்பா கடவுள். அம்மா வழிகாட்டி, தாயார் வாழும் காலம் வரை மகனைப் பிரிந்து இருந்ததேயில்லை என்பது ஆச்சர்யமான விஷயம். சரஸ்வதி அம்மையாரின் கடைசி மூச்சு வரை அவர் காலடியில் வாழ்ந்தவர் மணியம் செல்வன்.

மணியம் ஓவியம்

இதிகாசம், புராணம், சரித்திரம், கவிதை, கட்டுரைகள் மற்றும் போர்ட்ராய்ட், குழந்தைகளுக்கான பள்ளிப் புத்தகங்கள், விளம்பர நிறுவனத்துக்கு ஓவியங்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் கொடி நாட்டி வருகிறார்.

கல்கி, ஆனந்த விகடன், குமுதம், தினமணி கதிர், அமுதசுரபி, அவள் விகடன், சக்தி விகடன், ராமகிருஷ்ண விஜயம் எனத் தமிழகத்தில் வரும் பெரும்பாலான பத்திரிகைகளில் இவர் ஓவியங்கள் வெளியாகி உள்ளன.

தீபாவளி மலருக்காக, தந்தையைப் போலவே பல இடங்களுக்குச் சென்று ஸ்பாட் பெயிண்டிங் செய்திருக்கிறார்.

அப்பாவைப் போலவே லைன் டிராயிங், வாட்டர் கலர், அக்ரிலிக், ஆயில் கலர், ஆயில் பேஸ்டல், கிரயான், ஏர்பிரஷ் என பல யுக்திகளோடு தன் படைப்புக்கு மெருகேற்ற கணினியையும் பயன்படுத்துகிறார்.

ம.செ ஓவியம்.

இந்தியாவில் அஜந்தா, எல்லோரா, எலிஃபெண்டா, கொனாரக், குதும்பினார் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைத் தேடிப்போய் பார்ப்பதுடன் இத்தாலி, பிரான்சு, ஜெர்மன், லண்டன் நகரங்களையும் விட்டு வைக்கவில்லை.

என்னை விட 9 வயது சிறியவர் என்றாலும் நான் பிறந்த அக்டோபர் 27-ம் தேதியே இவரும் பிறந்திருக்கிறார். போட்கிளப்பில் அதிகாலை 5.15 மணிக்கு நடைப் பயிற்சிக்கு வரும் நண்பர்களில் இவரும் ஒருவர்.

பிறன்மனை நோக்கா பேராண்மை - என்று வள்ளுவன் சொன்னான். அடுத்த பெண்ணைப் பார்ப்பது மட்டுமல்ல, எந்தப் பெண்ணையும் மனதால் நினைப்பது கூட பாவம் என்று நினைக்கிற அபூர்வ மனிதர்.

நான் ஓவியனாகவே வாழ்க்கையை தொடர்ந்திருந்தால் எனக்குச் சரியான போட்டியாளர் இவராகத்தான் இருந்திருப்பார்.

---

தரிசிப்போம்..

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x