Published : 18 Dec 2020 11:26 AM
Last Updated : 18 Dec 2020 11:26 AM

சித்திரச்சோலை 22: வழிப்பயணி

பேரா. சாலமன் பாப்பையாவுடன்

சிவகுமார்

1985-ல் சிந்துபைரவி வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியது. பல தேசிய விருதுகள் பெற்றது. அப்படத்தின் 200 -வது நாள் விழா மதுரை தியேட்டரில் நடைபெற்றது. படக்குழு சென்னையிலிருந்து மதுரை வந்திருந்தது. நான் கோவையிலிருந்து காரில் சென்றேன்.

தியேட்டர் உள்ளே நுழைவதற்கு முன் டைரக்டர் கே.பி., பரபரப்பாக வந்தர். ‘என்னய்யா, இவ்வளவு லேட்டா வர்றே? உன்னைப் பார்க்கணுன்னு ஒரு பெரியவர் துடியா துடிச்சிட்டிருக்காரு!’ என்றார்.

‘‘சார்! படத்தை டைரக்ட் பண்ணினது நீங்க. தயாரிப்பாளர் நீங்க. உங்களை விட்டுட்டு என்னை யார் சார் தேடறாங்க?’’ கேட்டேன்.

‘‘பேசாம வாப்பா..!’’,என்றவர், ஒரு பெரியவரிடம் அழைத்து சென்று,

‘‘சார் இதோ நீங்க பாக்கணும்ன்னு துடிச்ச சிவகுமார்!’’ என்றார்.

அவரைப் பார்த்து, ‘‘வணக்கம் சார்!’’ன்னேன்.

‘‘வணக்கம். வணக்கம்! எனக்கு உடனடியா உங்ககிட்ட இருந்து ஒரு பதில் தெரிஞ்சாகணும். 20 வருஷத்துக்கு முன்னால ஒரு நாள் நான் கோயமுத்தூரிலிருந்து பஸ்ல மதுரை வந்தேன். அதே பஸ்ல ஒரு தம்பி, தலையில தொப்பி வச்சுட்டு ப்ரெளன் கலர் செக் சட்டை போட்டுட்டு, கையில போர்டு, பேப்பர் ரோலோட எங்கூட பயணம் செஞ்சாரு. அது நீங்கதானே?’’

நான் யோசிக்க கூட அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை.

‘‘ஆமா சார்!’’ என்றேன்.

‘‘போதும்யா! இந்த ஒரு வார்த்தை போதும். இன்னிக்கு நிம்மதியா வீட்டுக்குப் போவேன்!’’ என்றார் ஒரு வித பூரிப்போடு. அந்த பெரியவர் யார்? என்ன விவரம் பிறகு தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பு கிட்டத்தட்ட 55 வருஷம் முன்னால் நடந்த அந்த சம்பவத்தை பார்ப்போம்.

அது ஓவியக் கல்லூரி மூன்றாம் ஆண்டு நிறைவு பெறும் சமயம். 1962- மே மாதம் 22-ந்தேதி செவ்வாய்க் கிழமை, விடுமுறையில் சில நாட்கள் அம்மாவோடு கிராமத்தில் தங்கி விட்டு, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் கோவை -திண்டுக்கல் பயணமானேன்.

டைரக்டர் கே. பி.,யுடன்

பக்கத்து சீட்டில் ஒரு தமிழாசிரியர் கோவையிலிருந்து என்னோடு பயணமானார். திண்டுக்கல்லிலிருந்து மதுரை பஸ் பிடிக்கும் முன்பு பஸ் ஸ்டேண்டை ஒட்டியுள்ள ஓட்டலில் இருவரும் உணவருந்தினோம். பிறகு ஆளுக்கொரு திக்கில் பிரிந்து விட்டோம்.

ஓவியக்கல்லூரி தோழன் சந்திரசேகர் மதுரையில் பெரியம்மா குடும்பத்துடன் தன் பெரிய குடும்பத்தையும் இணைத்து பாசத்தின் அடையாளமாக வாழ்ந்து வந்தார்.

பெரியம்மா மகன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிரைவராக பணியாற்றினார். சந்திரனுக்கு 3 சகோதரர்கள், 2 சகோதரிகள். குடும்ப நிர்வாகம் மொத்தமும் பெரியம்மா கையில்தான். சந்திரன் அம்மா, அப்பா இருவரும் குழந்தைகளோடு குழந்தையாக இருந்தனர்.

சிறிய வாடகை வீடு, ஒரே ஹாலில் எல்லோரும் தூங்குவார்கள். வெளித் திண்ணையில் காற்றோட்டமாக நானும் சந்திரனும் படுத்துக் கொள்வோம்.

ஒரு குடும்பத்தின் தரத்தை எடைபோட சமையல்கட்டையும் டாய்லெட் அறையையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பார்கள்.

பெரியம்மா, பூஜை அறை எவ்வளவு சுத்தமாக இருக்குமோ அப்படி இண்டியின் ‘க்ளாசட்’ உள்ள டாய்லட்டை ஒரு நாளைக்கு 3 தரம் கழுவி பளிங்கு மாதிரி வைத்திருப்பார்.

திருமலை நாயக்கர் மகால்

காலையில் குளிப்பதற்கு சந்திரன் மாமா ஓட்டல் ஆனந்தபவன் அசைவ உணவு விடுதி சென்று விடுவோம். அங்கு சென்று விடுவோம். முந்தைய நாள் சாப்பிட்டு முடித்துக் குவித்து வைத்த எச்சிலைகள் வழியே பிரியாணி வாசனை குளிக்கும் போது ஆளைத் தூக்கும்.

முதல் நாள் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம், வண்டியூர் தெப்பக்குளம் எல்லாம் சுத்தி- எங்கே அமர்ந்து படம் வரைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

மே-24-ந்தேதி திருமலை நாயக்கர் மகாலில் -இரண்டு அற்புதமான ஓவியங்கள் தீட்டி விட்டோம். 1962 களில் திருமலை நாயக்கர் மகாலுக்குள் நீதி மன்றம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. மறுநாளும் அங்கு ஓவியம் வரையச் செல்லவே ஏகப்பட்ட வக்கீல்களும், சில நீதிபதிகளும், வழக்கு சம்பந்தமாக வந்த மக்களும், பெரும் கூட்டமாகக்கூடி ஓவியம் தீட்டுவதை வேடிக்கை பார்த்தனர்.

அடுத்தநாள் திருப்பரங்குன்றம் சென்றொம். ஊருக்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் பசுமலை பஸ் ஸ்டாப்பில் இறங்கி முழு மலையின் தோற்றத்தையும் பகலுக்குள் வரைந்து முடித்தோம்.

பிற்பகல் கொதிக்கும் வெயிலில் காலில் செருப்புப் போடக்கூடாது என்பதால் -பாதம் சூடு தாங்காமல் கொப்புளம் வரும் அளவுக்கு பெரும் போராட்டத்தில் பாறை மீது நடந்து மலையுச்சி சென்றோம் பாதி மலை ஏறியதும் முஸ்லீம் தர்கா ஒன்று உள்ளது. பக்கத்தில் ஒரு மரமும் இருந்தது.

அங்கிருந்து திரும்பிப் பார்த்தால் கழுகுப் பார்வையில் தூரத்தே மதுரை மீனாட்சி கோபுரங்கள் 4-ம் அதைத் தாண்டி யானை மலையும் முன்னால் மதுரை திருமங்கலம் ரயில்வே லைனும், அருமையான காம்போசிஷனாக கிடைத்தது.

மாலை 6.45 -க்குள் மிகவும் திருப்திகரமாக வரைந்து முடித்து கீழே வந்தோம்.

அடுத்தநாள் கோயிலுக்குள்ளே அக்னி வீரபத்ரர்- அகோர வீரபத்ரர் சிலைகள் உள்ள மண்டபத்தை வரைய ஆரம்பித்தோம். பொதுவாகவே அக்கால கோயில்களுக்குள் வெளிச்சம் குறைவாக இருக்கும். இரண்டு சிலைகளுக்கு நடுவில் 40 வாட்ஸ் பல்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் சிலையின் பின்புறமுள்ள தூண்கள் அதிலுள்ள சிற்பங்களை வேகமாக வரைந்து முடித்தோம்.

12 மணிக்கு உச்சி பூஜை முடிந்ததும் கோயிலின் உள்ளே எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, பக்தர்களை வெளியே அனுப்பி 4 மணி வரை பூட்டி விடுவார்கள். நாங்கள் விசேஷ அனுமதி வாங்கி மங்கலான வெளிச்சத்தி்ல முக்கியமான அக்னி வீரபத்ரர் -அகோர வீரப்தரர் சிலைகளையும் - அதற்கு முன்பாக உள்ள தூண்களையும் மாலை 5 மணி வரை இடைவெளி விடாது வரைந்து முடித்தோம்.

பசுமலை மதுரை நகர்

20 வயது இளைஞன் ஓடி ஆடி துறு, துறுவென்று அலையும் வயதில் 10 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கவனம் சிதறாமல் அந்த ஓவியத்தை எப்படி வரைய முடிந்தது என்பதற்கு நான் 16 வயதிலிருந்து பயிற்சி செய்யும் யோகாவும், தியானமும், உடம்பைப் பேண கடுமையாக நான் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும்தான் காரணம் என்று ஏற்கனவே சித்திரச் சோலை 5-இல் ‘உயிர்மூச்சு’ என்ற தலைப்பில் விரிவாக சொல்லியிருக்கிறேன்.

28-ந்தேதி சொக்கநாதர் ஆலயத்தினுள் இருக்கும் இன்னொரு பெரிய மண்டபத்தில் ருத்ர தாண்டவம்- பத்ரகாளி சிலைகள் உள்ளன. காளி சிலை மீது வெண்ணெய் அடித்து அடித்து பக்தர்கள் அந்தச் சிலையை எப்போதும் ஈரமாகவே வைத்திருந்தனர்.

பகல் உணவுக்கு 12 மணிக்கு மேல் வெளியே போனால் 4 மணி வரை உள்ளே வர முடியாது. மெயின் கதவுகள் சாத்தப்பட்டு விடுவதால் ‘விக்கட் கேட்’ என்று ஒரு ஆள் மட்டும் உள்ளே குனிந்து நுழைகிறாற்போல ஒரு கதவு உண்டு. அந்த வழி -சந்திரனின் பெரியம்மா -சாம்பார் சாதம் தயிர் சாதத்தோடு உள்ளே நுழைந்து எங்கள் முன்பு அந்த மீனாட்சியே வந்து நிற்பது போல் நின்றார்.

‘உள்ளே பசங்க, கொலைப் பசில, தண்ணி கூட குடிக்காம படம் வரையுதுங்க. இப்ப என்னை உள்ளே விடலேன்னா அந்த பசங்களுக்கு ஏதாவது ஆச்சின்னா போலீஸ்ல புகார் குடுப்பேன்’னு மிரட்டிட்டு உள்ளே வந்தேன்!’னு

பெரியம்மா சொன்ன போது அவரது தைரியம், பாசம் இவற்றின் பரிமாணம் புரிந்தது.

அடுத்தநாள் ஆயிரங்கால் மண்டபத்தினுள் இருக்கும் குறவன் குறத்தி, ரதி-மன்மதன் .உள்ளிட்ட சிலைகளைப் பென்சில் ஸ்கெச் செய்தோம். அன்றிரவு சிம்மக்கல் பகுதியில் சந்திரன் தம்பி கதிரேசன் டிவிஎஸ் ஆர்கெஸ்ட்ரா குழுவில் மெல்லிசைக் கச்சேரி நடத்தினான். சீர்காழியே நேரில் பாடுவது போல இனிமை உச்ச சாரீரம் கதிரேசனுக்கு. இவன் எப்படியும் பெரிய பின்னணி பாடகனாகி விடுவான்; அவன் தயவில் சினிமா ஸ்டுடியோ எல்லாம் போய் ஷூட்டிங் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

மதுரை கோபுரங்கள்

காலம் அந்த எண்ணத்தை புரட்டிப் போட்டு நான் ஹீரோ ஆன பிறகு கதிரேசன் குடும்பத்தோடு என் ஷூட்டிங் பார்க்க வரும்படி செய்து விட்டது.

அதேபோல் அன்று கதிரேசனுக்கு இசைக்குழுவில் வாசித்த ஒருவர் இன்று உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளராகி விட்டார். அவர்தான் இசைஞானி இளையராஜா.

இப்போது 1985- ல் சிந்துபைரவி விழாவில், ‘போதும்யா! இந்த ஒரு வார்த்தை போதும். இன்னிக்கு நிம்மதியா வீட்டுக்குப் போவேன்!’ என்று சொன்ன அந்தப் பெரியவரை சந்தித்த நிகழ்வுக்கு வருவோம்.

பெரியவர் அப்போது தொடர்ந்து சொன்னார்: ‘‘பத்து நாளைக்கு முன்னாடி நடுராத்திரியில என் சம்சாரத்தை எழுப்பி, ‘அம்மா, எனக்கு சிவகுமாரை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்ன்னேன். ஏதாவது கனவு கண்டீங்களா? -பேசாம படுங்கன்னுட்டா சம்சாரம்.

மறுநாளும், ‘அம்மா, உண்மையிலயே சிவகுமாரை முன்னமே எனக்குத் தெரியும்!’னேன்.

‘மதுரை அமெரிக்கன் கல்லூரியில பேராசிரியரா வேலை பாத்து ரிடையர்டு ஆனதோட நிறுத்தியிருக்கணும். பட்டி மன்றம் அது, இதுன்னு போயி உங்க மூளை குழம்பிருச்சு. போங்க!’ன்னா!

‘அம்மா! சொன்னா கேளு!’

அக்னிவீரபத்ரர் - வீரபத்ரர் மண்டபம்- மீனாட்சி ஆலயம்

‘என்னத்தை கேக்கறது? அவரை அத்தனை வருஷம் முன்னாடியே தெரியும்ங்கறீங்களே. 25 வருஷமா ஏன் எங்கிட்ட சொல்லலே. சொல்லுங்கய்யா’ன்னா.

எங்கிட்ட பதில் இல்லை. அதுதான் உங்ககிட்ட முதல் வேலையா கேட்டேன். இன்னிக்கு வீட்டுக்குப் போயி வச்சுக்கிறேன்!’ அப்படின்னு அப்ப வேடிக்கையா பேசினவரு பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள்.

சிந்து பைரவி படம் பற்றிய பாராட்டு விழாவில் அவர் பேசிய அன்றைய உரையில் இதுதான் ஹைலைட்.

தரிசிப்போம்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x