Published : 24 Oct 2015 02:48 PM
Last Updated : 24 Oct 2015 02:48 PM

சென்னை ஐஐடி-யில் என்னதான் நடக்கிறது?- ஒரு மாணவரின் பகிரங்க பதிவு

கடந்த ஒரே மாதத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். ஆனால், ஐஐடி வளாகத்தில் எந்த சலனமும் இல்லாத ஒருவித நிசப்தம் நிலவுகிறது.

தற்கொலை எனும் முடிவை அந்த மாணவர்கள் ஏன் எடுத்தார்கள் என்பதை பகுப்பாய்வு செய்ய நான் முற்படவில்லை. அவர்கள் உயிரோடு இருந்தபோது சக மாணவர்களுடன் எப்படி பழகினார்கள்; அவர்களது கல்வித் தரம் எவ்வாறு இருந்தது என்றெல்லாம் இப்போது ஆராய்வது அநாவசியமானது.

கடந்த 5 ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து 5 மாணவர்கள் தற்கொலை எனும் முடிவை எடுத்திருக்கின்றனர். ( எத்தனை பேர் தற்கொலை முயற்சியில் தோற்றுப்போனார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை).

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காகவே 'மித்ரு' (நண்பன்) என்ற பெயரில் ஐஐடி வளாகத்தில் ஓர் ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளில் 5 மாணவர்கள் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றால் அந்த அமைப்புக்கு என்னவாயிற்று?

நாடு முழுவதும் உள்ள மற்ற ஐஐடி-க்கள் போலவே சென்னை ஐஐடி-யும் போட்டிகள் நிறைந்ததே. கல்லூரியின் முதலாம் ஆண்டில் எங்கள் அனைவருக்கும் பரிச்சயம் ஆகும் ஒரு குறியீடு "RG". அது என்ன "RG" என்று கேட்கிறீர்களா? ரிலேடிவ் கிரேடிங் என்பதன் சுருக்கமே அது. அதாவது தனது சக நண்பரை படிக்கவிடாமல் செய்துவிட்டு, தான் மட்டும் நன்றாக படித்து நல்ல கிரேட் பெறுவது என்பதே அதன் விளக்கம். அடுத்தவர்களின் தோல்வியில் வெற்றி காண்பது. இந்த யுக்தியால் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் சரியாக நட்பு பாராட்ட முடியாமல் பிரியும் நிலை உருவாகிறது. கூட்டுப்புழு போல் ஒவ்வொரு மாணவரும் அவரது அறையில் முடங்கும் சூழல் உருவாகிறது.

ஐஐடி-யில் சேர்வதற்கான ஜெ.இ.இ. எனப்படும் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷனை எதிர்கொள்ளும் பதின் பருவத்தினர் எத்தைகைய மன அழுத்தத்துக்குப் பிறகு வெற்றி கொள்கின்றனர் என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை.

இந்தச்சூழலில், இடஒதுக்கீட்டு முறைக்கு நிச்சயமாக ஒரு நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இடஒதுக்கீடு காரணத்தால் சென்னை ஐஐடி.,யில் தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் பயில்கின்றனர். ஆனால், ஐஐடி பாடதிட்டமானது அனைவரையும் சமமாக பாவிக்கும் வகையில் இன்னும் சீர்திருத்தம் செய்யப்படவில்லை. இதனால், ஐஐடி.,யில் இடஒதுக்கீடு மூலம் அனுமதி பெற்றது முழுமை பெறாமல், வெறும் படிக்க ஒரு சீட் கிடைத்துவிட்டது என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது.

இத்தகைய சூழலில்தான் மாணவர்கள் போட்டிக்கு ஆயத்தமாகிறார்கள். அவர்கள் தங்கள் கல்வித்தரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது. அவர்களது மதிப்பு அவர்கள் பெறும் மதிப்பெண் வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பல்வேறு விதமான கேலி கிண்டலுக்கு ஆளாகின்றனர்.

மாணவர்களின் கல்வித் தரத்தில் ஜாதி/மதம் பின்னணி ஏற்படுத்தும் தாக்கம் கண்டு கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாகவோ என்னவோ ஐஐடி போன்ற நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்படும் பாடத்திட்டங்கள் உயர் வகுப்பினருக்கு உகந்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புலமை, மிகப் பெரிய கல்வி நிறுவனத்தில் பள்ளிப் படிப்பு என்ற பகட்டான சூழலில் இருந்து வந்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டமாக இருக்கிறது.

ஐஐடியில் நிலவும் போட்டிச்சூழல் அங்குள்ள அனைத்து மாணவர்களையும் பல்வேறு ரீதியாக பாதிக்கிறது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால், ஐஐடியில் பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்துடனேயே நாட்களை கழிக்கின்றனர் என்பது வளாகத்துக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். ஆனால், மன உளைச்சலில் இருந்து மீள ஐஐடி வளாகத்தில் இருக்கும் உளவியல் ஆலோசனை மையத்தை நாம் எத்தனை பேர் பயன்படுத்திக் கொள்கிறோம்? 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் அண்மையில் வெளியான ஒரு செய்தியில், ஐஐடி வளாகத்தில் உள்ள உளவியல் ஆலோசனை மையம் 'மித்ரு' மீதான குற்றச்சாட்டுகளை ஐஐடி இயக்குநர் திட்டவட்டமாக மறுப்பதாக கூறப்பட்டிருந்தது. ஐஐடியில் அண்மையில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட பின்னரும் இயக்குநர் 'மித்ரு' மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

'மித்ரு' அமைப்பு உருவாக்கப்பட்டதன் முழுமுதல் நோக்கமே மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே. ஆனால், 'மித்ரு' மீது மாணவர்கள் முன்வைக்கும் மிகப் பெரிய குற்றச்சாட்டு அதன் நிர்வாகிகளின் அறநெறி சார்ந்த கெடுபிடிகள். 'மித்ரு' ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் வளாகத்தில் சிகெரட் புகைக்கின்றனரா, மது அருந்துகின்றனரா? எதிர்பாலினத்தாருடன் பேசுகின்றனரா? என்றெல்லாம் கண்காணிப்பில் ஈடுபடுவதாக மாணவர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. அதேபோல், 'மித்ரு'வில் ஒரு மாணவன் யாரேனும் ஒரு பேராசிரியரால் தனக்கு நெருக்கடி இருப்பதாகக் கூறினால், அந்தப் பேரசிரியரின் நண்பர் 'மித்ரு' குழுவில் இருந்துவிட்டால் விஷயம் நிச்சயமாக சம்பந்தப்பட்ட நபரிடம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இதன் காரணமாகவே 'மித்ரு'வில் தங்கள் மனக்குறைகளை, குமுறல்களை தெரிவிக்க தயங்குகின்றனர். 'மித்ரு' மாணவர்கள் நம்பிக்கைக்குரிய ஓர் அமைப்பாக செயல்படத் தவறிவிட்டது என்றே கூற வேண்டும். ஆசிரியர்களைத் தவிர்த்து 'மித்ரு'வில் சில மாணவர்களும் தானாக முன்வந்து உளவியல் ஆலோசனை அளித்து வருகின்றனர். இவர்கள் சேவைக்கு நிர்வாகம் அண்மைக்காலமாக பணம் அளித்து வருகிறது.

மாணவர்கள் நம்பிக்கையைப் பெற 'மித்ரு' தவறிவிட்டது என்றால் அதை மறுசீரமைக்கும் நேரம் வந்துவிட்டது என்றுதானே அர்த்தம். அவசரகால அடிப்படையில் 'மித்ரு' செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து அதை மேம்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க சென்னை ஐஐடியில் நடைமுறையில் உள்ள மாணவர்கள் வருகைப்பதிவு விகிதாச்சாரம் முறை அதிக கெடுபிடிகள் நிறைந்ததாக இருக்கிறது. மாணவர்கள் 100% வருகையை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே வெறும் 15% இதில் தளர்வு அளிக்கப்படுகிறது. ஒரு மாணவன் குறைந்தபட்சம் 85% வருகையை உறுதி செய்துவிட்டால் பிரச்சினையில்லை. அதற்குக் குறைவாக பதிவாகியிருந்தால், குறிப்பிட்ட பேராசிரியரின் தயவை எதிர்பார்த்து அவர் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது. அதேபோல் ஒரு மாணவர் 2-க்கும் மேற்பட்ட டபிள்யு கிரேட் ( “W” grade - அதாவது 85%-க்கும் குறைவாக வருகைப்பதிவு பெற்றதற்காக வழங்கப்படும் கிரேடு) பெற்றுவிட்டால் அவர் ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இந்த விதிமுறையை உருவாக்கியவர்களுக்கு என்னிடம் கேள்வி ஒன்று இருக்கிறது. நீங்கள் இந்த விதியை உருவாக்கும்போது எந்த நோய் நீங்கள் அளிக்கும் 15% விடுப்புக்குள் சரியாகிவிடும் என்ற கணித்து, விதிமுறையை பிறப்பித்தீர்கள்?

எனக்கு நேர்ந்த தனிப்பட்ட ஓர் அனுபவத்தை இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு முறை எனக்கு உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுக்க நேர்ந்தது. அதன் பின்னர் எனது வருகைப் பதிவு 85% ஆக இருந்தது. அப்போது என்னை அழைத்த பேராசிரியர் ஒருவர் "உங்களுக்கு மஞ்சள் காமாலை போன்ற நோய் ஏற்பட்டால் அனுமதிக்கப்பட்ட 85% வீதத்துக்கும் குறைவாக வருகைப்பதிவு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.

விடுதியில் அளிக்கப்படும் உணவுத்தரம் இருக்கிறதே அது அவ்வளவு மோசம். வேறு வழியில்லாமல் அதை உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்கள் பலருக்கும் வயிற்றுப்பேதி, எடை குறைவு, காய்ச்சல், எதிர்ப்புசக்தி குறைதல் போன்றவை ஏற்படுகின்றன. இதனாலேயே மாணவர்கள் பெரும்பாலும் உணவு அருந்துவதை தவிர்க்கின்றனர். ஆனால், இந்தக் காரணங்களையெல்லாம் கண்டுகொள்ளாத பேராசிரியர்கள், சோம்பல் காரணமாக மாணவர்கள் ஒழுங்காகப் படிப்பதில்லை என முத்திரை வழங்குகின்றனர். நோயினால் வருகைப்பதிவு குறைவதால் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவதால் மாணவர்கள் பெற்றோருடன் தங்க நேரிடும், பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் மாணவர்கள் திருந்திவிடுவார்கள் என்பதே பேராசிரியர்களின் விளக்கமாக இருக்கிறது.

ஆனால், விடுதியில் இருந்து தங்கள் குழந்தைகள் ஒழுங்கு நடவடிக்கையினால் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது பெற்றோரின் கனவுகளை சிதைக்கும் விஷயமாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் ஐஐடியில் பயின்று கை நிறைய சம்பாதிப்பார்கள் என்ற அவர்களின் கனவு நொறுக்கப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு தங்கள் மீதே ஓர் அதிருப்தி எழுகிறது. இந்த இறுக்கமான சூழலை மாற்றியமைக்கப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு வளாகத்தில் 'கொலோக்கியம்' என்ற அமைப்பால் மனநலன் சார்ந்த விவாத அரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற கடைசி நிமிடம் வரை அதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கே அது நடக்குமா? நடக்காதா? என்ற ஐயம் இருந்தது. காரணம், மேலிட நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை வரவேற்கவில்லை. 'மித்ரு'வின் மேற்பார்வையில் இருக்கும் ஒரு முக்கியமான விஷயம் 'கொலோக்கியம்' விவாத மேடையில் விவாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் ஐஐடி நிர்வாக உயர் மட்டம் மிகக் கவனமாக இருந்தது.

இருப்பினும் அந்த விவாதத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அது 18 முதல் 25 வயது உள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பானது. அந்த விவாதத்தில் கலந்து கொண்ட உளவியல் மருத்துவர் இதே கேள்வியுடன் தன்னை பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் மாணவர்கள் அணுகியிருக்கின்றனர் என்றார்.

சில ஐஐடி வளாகங்களில், ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அது கல்வி தொடர்பான ஆலோசனைகளில் மேற்கொள்வதற்காக மட்டும். ஐஐடி வளாகத்தில் செக்ஸ் என்பதே மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. விடுதியில் யாரை அனுமதிப்பது என்பதில் மிகப்பெரிய கட்டுப்பாடு நிலவுகிறது. பெற்றோர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நிர்வாகம் தெரிவிக்கிறது. காதல், கல்விக்கு தடையாகப் பார்க்கப்படுகிறது. கலாச்சாரக் காவலர்கள் வளாகத்தில் இருக்கின்றனர். அது நிறைய இடங்களில் அப்பட்டமாக பளிச்சிடும்.

கடைசியாக நடந்த தற்கொலை சம்பவத்துக்குப் பிறகு போலீஸார் வந்தனர். அந்த மாணவரின் நெருங்கிய நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவ்வளவுதான், அடுத்தநாள் வழக்கம்போல் அனைத்து வகுப்புகளும் நடைபெற்றன, எந்தவிதமான தவறும் வளாகத்துக்குள் நடைபெறாதது போல. இரண்டு நாட்களுக்குப் பிறகு நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, "ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்" என்று. இத்தகைய உணர்ச்சியற்ற போக்கினை எவ்வளவு காலம் மாணவர்களாகிய நாங்கள் சகித்துக் கொள்ள வேண்டும்.

பெருமைமிக்க கல்வி நிறுவனம் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐஐடி-க்கள் மாணவர்களையும், அவர்களது பிரச்சினைகளையும் அணுகும்முறையை கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் நேரம் வந்துவிட்டது.

இதற்கு ஒரே வழி, ஒழுக்கநெறி சார்ந்த முன்முடிவுகளை கைவிட வேண்டும். மாணவர்களிடம் நெருங்க வேண்டும். புரட்சிகரமான மாற்றுச் சிந்தனைகள் மட்டுமே வளாகத்தில் இதுபோன்ற துக்க நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் தடுக்கும்.

இந்தப் பதிவை எழுதியவர் சென்னை ஐஐடியில் முதுகலை பயிலும் மாணவர்.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x