

1954-ல் ஏவிஎம் ‘பெண்’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தது. அதில் ஜெமினிகணேசனும், எஸ்.பாலச்சந்தரும் இரண்டு ஹீரோக்கள். உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம்... ‘ஹ..ஹ.. கல்யாணம் என்ற பாடலை சந்திரபாபு பாடியிருப்பார். அதற்கு வாயசைத்து நடனமாடுவார் எஸ்.பாலச்சந்தர்.
அவர்தான் அதே ஏவிஎம் நிறுவனத்துக்கு ‘அந்தநாள்’ என்றொரு படத்தை எழுதி இயக்கினார். தனது கண்டுபிடிப்புக்கு இந்திய அரசு அங்கீகாரமளித்து, லைசன்ஸ் தரவில்லை என்ற கோபத்தில் ஜப்பான்காரனுக்கு நாட்டையே காட்டிக் கொடுக்கும் விஞ்ஞானியாக சிவாஜி நடித்திருப்பார். பாடலே இல்லாத படம். மாருதிராவ், ஆங்கிலப்படம் போல DEEP LIGHT & SHADE-ல் ஒளிப்பதிவு செய்திருப்பார்.
பின்னர் ‘பொம்மை’ என்ற பெயரில் ஒரு படம் உருவாக்கினார். நீயும் பொம்மை நானும் பொம்மை - நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை - என்று தமிழில் ஜேசுதாஸ் முதன்முதல் பாடிய படம் அது.
அவனா இவன் -நடு இரவில் -கைதி -ஓடாதே நில் -இது நிஜமா -என்று பல படங்களை ஆங்கில படப்பாணியில் எழுதி இயக்கியவர். சில படங்களைத் தயாரித்தவர். ஆனால் வீணை பாலச்சந்தர் என்ற பெயரே உலகில் நிலைத்துவிட்டது. அவரது அண்ணன்தான் ஓவியர் -நடிகர் -பாடகர் எஸ்.ராஜம்.
1934-ல் ‘சீதா கல்யாணம்’ என்று ஒரு படம் வெளியானது. பேசும் படங்களின் தொடக்கக் காலம். ஜனகர் மகள் சீதையை மணம் முடிக்க ராமர் மிதிலை வந்து வில் ஓடித்து, சீதையைக் கரம் பிடிக்கும் வேடத்தில் எஸ்.ராஜம் நடித்தார்.
ராமர் வேடத்தில் எஸ்.ராஜம் நடிக்க, அவரைக் கரம் பிடிக்கும் சீதையாக ராஜத்தின் தங்கை ஜெயலட்சுமி நடித்தார்.
அக்ரகாரத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது. ‘அண்ணனும் தங்கையும் கணவன் மனைவியாக எப்படி நடிக்கலாம்?’ என்று. ராஜம், ஜெயலட்சுமியின் தந்தை சுந்தரம் அய்யர் 1930-களிலேயே வக்கீலுக்குப் படித்தவர் - முற்போக்குச் சிந்தனையுள்ளவர் - இந்தக் கூச்சலை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
அந்த ஜெயலட்சுமியின் மகன் வழிப் பேத்தி நடிகை ஜெயஸ்ரீ என்னோடு, மனிதனின் மறுபக்கம், ஸ்ரீதரின் யாரோ எழுதிய கவிதை, பன்னீர் நதிகள் -என மூன்று படங்களில் ஜோடியாக நடித்தவர். வீணை பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதை நாடகமாக மேடையில் நடத்தி வருகிறார். இசைக்கவி ரமணன் -பாரதியாக அற்புதமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.
வீணை பாலச்சந்தர் -சீதா கல்யாணம் -படத்தில் ராவண தர்பாரில் - 7 வயதுச் சிறுவனாக இருந்தபோது கஞ்சிரா வாசித்திருக்கிறார்.
இசை, நடனம், ஓவியம் என கலைகளின்பால் அதிக ஈடுபாடு கொண்ட குடும்பம். அதனால் சிறு வயதிலிருந்தே ராஜத்திற்கு கர்நாடக இசையிலும், ஓவியம் வரைவதிலும் ஆர்வமிருந்தது.
பாடத் தெரிந்தவர் பின்னாளில் பாட்டு வாத்தியாராகவும் பகுதி நேரம் வேலை செய்திருக்கிறார்.
சென்னை ஓவியக்கல்லூரிக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. 1850-ல் அலெக்ஸாந்தர் ஹண்டர் என்ற சர்ஜன் தொடங்கிய ஓவியப்பள்ளி 1852-ல் பிரிட்டீஷ் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 170 ஆண்டுகள் வரலாறு உள்ள இந்தியாவின் முதல் ஓவியப்பள்ளி - பின்னாளில் ஓவியக்கல்லூரி ஆனது. இதில் 20 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்து பெருமை சேர்த்தவர் கல்கத்தாவைச் சேர்ந்த தேவி பிரசாத் ராய் சவுத்திரி. அநேகமாக ராய் சவுத்திரியின் தொடக்கக் காலத்தில் எஸ்.ராஜம் மாணவராக அங்கு பயின்றிருக்க வேண்டும்.
படிக்கும்போதே அஜந்தா குகை ஓவியங்களின் பாணி இவரைக் கவர்ந்ததால் வகுப்பிலேயே கற்பனை கலந்து அஜந்தா பாணியில் ஓவியம் தீட்டத் தொடங்கிவிட்டார்.
இசை ஆர்வம் காரணமாக சென்னை வானொலி நிலையத்தில் கர்நாடக இசைப்பிரிவில் 40 ஆண்டுகாலம் பணியாற்றி இருக்கிறார்.
அவர் வரைந்த ஓவியங்களில் இசை மும்மூர்த்திகள் தியாகராஜர் -சியாமா சாஸ்திரி- முத்துசாமி தீட்சிதர் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.
இசையையும், ஓவியத்தையும், புராண சம்பவங்களையும் உள்வாங்கி தனக்கென ஒரு பாணியில் அவர் தீட்டிய ஓவியங்கள் அற்புதமானவை.
அருட்செல்வர் என் மகாலிங்கம் இவருடைய ஓவியங்களின் பரம ரசிகர். அவருடைய ஆலோசனையின் பேரில் சித்திர பெரியபுராணம் -சித்திர திருவிளையாடல் - என்ற இரண்டு நூல்களையும் ஓவியங்களின் வழி உருவாக்கித் தந்துள்ளார்.
சிவனின் 64 திருவிளையாடல்களையும் வண்ண ஓவியங்களாகவும், ‘லைன் டிராயிங்’காகவும், வரைந்த புத்தகத்தை அருட்செல்வர் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார்.
சில ஓவியங்களைப் பார்த்து ரசிக்கலாமே தவிர அது மாதிரி வரைந்து பார்க்க முயலக்கூடாது. அந்த ரகம்தான் எஸ்.ராஜம் ஓவியங்கள்.
காகிதங்களில் வரைவதுடன், பட்டுத் துணிகளிலும், ப்ளைவுட் பலகைகளிலும் இந்த ஓவியங்களை வரைவார்.
பல்லாவரத்திலுள்ள தனது வீட்டுச் சுவரில் -அஜந்தா குகையின் சுவர்களில் உள்ள ஓவியம் போலத் தீட்டி அழகு பார்த்தவர். தம்பி வீணை பாலச்சந்தர் வீட்டின் முகட்டில், தலைக்கு மேல் உள்ள பலகைகளில் தசாவதாரக் காட்சிகளை படுத்துக்கொண்டே வரைந்தார்.
மைக்கேல் ஆஞ்சலோ சிஸ்டைன் சாப்பலில் மாதக்கணக்காக கோடா மீது ஏறிப் படுத்துக் கொண்டே சர்ச்சின் மேற்பகுதியில் ஓவியங்களைத் தீட்டியது பற்றிப் படித்துள்ளேன். அதையே இவரும் செய்துள்ளார்.
எல் அண்ட் டி நிறுவனம் இவரது ஓவியங்களை காலண்டர்களாக வெளியிட்டுள்ளது.
ஹவாயிலுள்ள ‘ஹிந்துயிசம் டுடே’ நிறுவனம் இவரின் ஓவியங்களை டைம் கேப்ஸ்யூல் செய்து பத்திரப்படுத்தியுள்ளது.
91 வயது வரை தளர்வடையாது ஓவியம் தீட்டியவரை மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபா அரங்குக்கு எதிரிலுள்ள நடுத்தெரு மாடி வீட்டில் சந்தித்தேன். ‘‘ஓவியம் தீட்ட விரல்கள் ஒத்துழைக்க மறுக்கிறது. குழந்தைகளுக்கு பாட்டுக் கற்றுக் கொடுக்கப் போகிறேன்!’’ என்றார்.
ஓவியக்கலை மீது சலியாத உழைப்பும் இணையில்லாத ஈடுபாடும் கொண்ட எஸ்.ராஜம் போன்றவர்கள் தமிழ்நாட்டின் காலப் பொக்கிஷம்.
----
தரிசிப்போம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in