Published : 13 Dec 2020 05:41 PM
Last Updated : 13 Dec 2020 05:41 PM

சமத்துவப் பறவைகள்

புயல், மழையின்போது, மருத்துவமனை வேலைப் பளு மிகுந்து இருக்கும் வேளையில், மனதினை இலகுவாக்க மிக எளிய வழி இயற்கையைத் தேடிச் செல்வதே!!

மழை சற்று தணிந்திருந்ததாலும், மேலும் மழை வரும் என்பதை மீறி சில நாட்களுக்கு முன்னர் பழவேற்காடு பயணித்தபோது, கூட்டம் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையும், பறவைகளைக் காண இயலாது என்பதை அறிந்திருந்தும் இயற்கை ஆர்வலர்களுடன் பயணித்தோம்!

புலிகாட் (Pulicat ) / பழவேற்காடு - இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரும் உவர்நீர் கடல் வாய்க்கால். இது 700 சதுர கிலோ மீட்டருக்கு மேல், இரண்டு மாநிலங்களுக்கிடையே பரந்து விரிந்துள்ள கடல் முகத்துவாரமாக, இயற்கை செழிப்புமிக்க, பல உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றது!

எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, கடவுச்சீட்டு இல்லாமல், பல ஆயிரம் மைல்களைத் தாண்டி - பறவைகள் தங்கள் தடங்களைத் தேடி இங்கு வருகின்றன. பறவை புகைப்படத் துறையில் மிகக் குறுகிய காலமாகப் பயணிப்பதால் எடுத்த புகைப்படத்தில் உள்ள பறவையின் பெயர், முகவரி, வாழ்க்கைக் குறிப்பு தேடி அறியும் போது பல ஆச்சரியங்கள் காத்து நிற்கின்றன .

சான்விச் டர்ன்

இவை ஆலா வகைப் பறவைகள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பழவேற்காட்டில் காண முடிகிறது என்று எங்களை அழைத்துச் சென்ற பறவை ஆர்வலர், படகோட்டி கூறினார்.

இவை தனித்தனியே பறக்காமல் மற்ற வகை ஆலாப் பறவைகளுடனும், கடற் புறாக்களுடனும் (Sea Gull) இருப்பதைக் காண முடிந்தது. சான்விச் ஆலா, மற்றும் கடற் புறாக்கள் வடதுருவ வாழ்விடங்களின் குளிர்காலத்தில், பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து வருகின்றன.

சான்விச் ஆலாப்பறவைகள், பிற வகை ஆலாப் பறவையான லஸ்சர் கிரஸ்டட் ஆலாப்பறவை (Lesser Crested Tern) சிறிய கொண்டை ஆலாப்பறவைகளுடன் இனக்கலப்பும் ஏற்படுகின்றன. தான் முட்டையிடும் இடத்தையும் மற்ற வகை ஆலாப்பறவைகள், கடற்புறாக்கள் முட்டையிடும் இடத்தின் அருகிலேயே இடுகின்றன. இதன் மூலம் மற்ற இரை தேடிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. சமத்துவச் சமுதாயமாகவும் , நல்லிணக்கத்துடனும் வாழும் முறை அறிந்துள்ளது.


காஸ்பியன் ஆலாப்பறவைகள் (Caspian Tern), வெப்ப புவியியல் மாற்றங்களால் பாதிப்படையும் பறவையினங்களுள் ஒன்று.

பளாஸ் கடற்புறா (Pallas Gull) பெரிய கருந்தலை கடற்புறாக்கள் நடுவே சான்விச் ஆலா, மற்றும் சிறிய கொண்டை ஆலா, அருகருகே இருப்பதைக் காண முடிந்தது. சில நூறு அடிகள் தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்த பின்னரே, ஒவ்வொன்றாகப் பார்த்து இதனைக் கண்டறிய முடிகிறது.

இந்த வகை கடற்புறாக்கள், பெரிய உடல் அமைப்பைக் கொண்டதாக இருக்கின்றன. ரஷ்யா, மங்கோலியாவிலிருந்து இங்கு இடம் பெயர்கின்றன.

மேலும், ஹீகுளின் கடற்புறா, சைபீரியன் கடற்புறாக்களையும் கண்டறிய முடிந்தது. இவை யாவும் பருவத்திற்கு ஏற்ப இனப்பெருக்கம் போன்ற நிலைகளில் - இறகுகளின் நிறங்களும், தோற்றங்களும் மாறுகின்றன.

உலகிலேயே நீண்ட தூரம் நிற்காமல் பயணங்கள் மேற்கொள்ளும் பறவைகளில் முதலாவதாக வருவது பார் டைல்ட் காட்விட் ( Bar Tailed Godwit) கருப்பு வெள்ளை வால் மூக்கன் பறவைகள். இவை ஆர்ட்டிக் கடற்கரைகளிலிருந்து ஓய்வு எடுக்காமல் நியூசிலாந்து வரை, நிற்காமல் பறக்கும் தன்மை கொண்டவை!

காட்விட் என்ற பெயர்க் காரணம் - உணவருந்துவதில் நற்பண்புகள் உடையவை! இவை ஒவ்வொரு முறையும் சுமார் 29,000 கிலோ மீட்டர் தூரம் புலம் பெயர்ந்து வந்து, தன் பிறந்த இடத்திற்கே திரும்புகின்றன!

சமத்துவத்தையும், அமைதியான இணக்கத்தையும், தன் சிறகுகளை மட்டுமே நம்பி, பல்லாயிரம் மைல்கள் பறந்து பழவேற்காட்டிற்கு வருகின்றன. தனக்கென்றும், தன் குடும்பத்திற்கென்றும் உணவைத் தவிர வேறெதுவும் சேர்க்காமல் வாழ்கின்றன. ஆனால் மனிதனின் பேராசையினால், பல டன் ரசாயனக் கழிவுப் பொருட்களும், பிளாஸ்டிக் குப்பைகளும், பாட்டீல்களும் கொட்டிக் கிடக்கின்றன. சில வருடங்களில் சமத்துவப் பறவைகளின் தடயங்களே இல்லாமல் அழிந்துவிடும்.

நா.முத்துக்குமாரின் வரிகள்
“பறவையே எங்கு
இருக்கிறாய்? பறக்கவே
என்னை அழைக்கிறாய்!
தடயங்கள் தேடி வருகிறேன்”
நினைவில் வந்தது .

பறவைகளின் இடப்பெயர்ச்சி - அதன் மூதாதையர்கள் பறந்த தடங்களிலேயே உள்ளன. நாளை நாம் , நம் சந்ததியினருக்கு கழிவுப் பொருட்களையே தடங்களாக விட்டுச்செல்வோம்!

எழுத்து: மரு. சேகுரா
படங்கள்: மரு. தீப்தி


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x