Published : 11 Oct 2015 12:55 PM
Last Updated : 11 Oct 2015 12:55 PM

மாயூரம் வேதநாயகம் பிள்ளை 10

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சிக் கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை (Mayuram Vedanayagam Pillai) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருச்சி மாவட்டம் குளத்தூரில் (1826) பிறந்தார். தந்தையிடம் கல்வியைத் தொடங்கியவர், தமிழ், ஆங்கிலக் கல்வியை தியாகராச பிள்ளையிடம் பயின்றார். சிறு வயதிலேயே எழுது வதில் ஆர்வமும் ஆற்றலும் கொண்டி ருந்தார். திருமணம், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளில் நகைச்சுவைக் கவிதைகள் எழுதுவார்.

* நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர், தரங்கம்பாடியில் முன்சீஃப் பணியில் சேர்ந்தார். மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். (பின்னாளில் இவ்வூர் பெயர் மாயவரம் என்று மருவி, தற்போது மயிலாடுதுறை எனப்படுகிறது.)

* மாயவரம் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில் தமிழின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நூலைப் படைத்தார். மேலும் 15 நூல்கள் எழுதினார். வீணை வாசிப்பதில் வல்லவர்.

* வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன. தமிழ் கவிதையில் இந்த பாணி ஒரு புதிய உத்தியாக, முதல் முயற்சியாக கருதப்படுகிறது.

* சமகாலத் தமிழ் அறிஞர்களான மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம், சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்.

* 1805 முதல் 1861 வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக வெளியிட்டார். தீர்ப்புகளை முதலில் மொழிபெயர்த்த பெருமைக்கு உரியவர். சட்ட விதிகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டார்.

* தமிழ் உரைநடையை வளம் பெறச் செய்த முன்னோடிகளில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். இவரது கட்டுரைகள், பெண் கல்வி, தாய்மொழிப் பற்று, கடவுள் பக்தி, நல்லாட்சி, நீதி நெறிகள் என பல அம்சங்களையும் உள்ளடக்கியவை. இவை தமிழில் கட்டுரை இலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாக அமைந்தன.

* பெண் கல்வி குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் உரைநடைச் சிறப்புக்கு சான்றாக விளங்குகின்றன. மாயவரத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். இது தமிழகத்தில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பள்ளி.

* கிறிஸ்தவ வழிபாட்டு பாடல்கள் கிரேக்கம், லத்தீன், ஆங்கில மொழிகளிலேயே இருந்தன. தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழிலேயே உணர்ந்து வழிபட வேண்டும் என விரும்பினார். திருவருள் மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, பெரியநாயகி அம்மைப் பதிகம் போன்ற இலக்கியங்களைப் படைத்தார்.

* தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர், மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி எனப் போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை 63 வயதில் (1889) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x