

விடுதலை வீரர், அரசியல் தலைவர்
சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான ‘பசும்பொன்’ முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalinga Thevar) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வசதி படைத்த குடும்பத்தில் (1908) பிறந்தார். ஒரு வயது பூர்த்தி யாகும் முன்பே தாயை இழந்தார். கல்லுப்பட்டியில் பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
l குடும்ப நண்பரிடம் அரிச்சுவடியும், கமுதியில் ஆரம்பக் கல்வியும் கற்றார். உடல்நலக் குறைவால் பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்றது. சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
l முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில் விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933-ல் நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடைதிறந்த வெள்ளம்போலப் பேசி, பாராட்டு பெற்றார்.
l ஆங்கிலத்திலும் சிறந்த புலமை, பேச்சாற்றல் கொண்டவர். இவரது பேச்சைக் கேட்ட காமராஜர், இவரை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடினார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, ஆங்கில அரசு இச்சட்டத்தை நீக்கியது. இவர் கையில் எடுத்த முதல் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது.
l தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச முனைப்பு 1939-ல் நடந்தது. அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியதில் முக்கியப் பங்காற்றினார். அவர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து போராடினார். 32 கிராமங்களில் தனக்குச் சொந்தமான நிலங்களை அவர்களுக்கு வழங்கினார்.
l வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஆன்மிகத்தில் இவர் கொண்டிருந்த ஞானத்தாலும் சொற்பொழிவாற்றும் திறனாலும் ‘தெய்வத் திருமகன்’ எனப் போற்றப்பட்டார்.
l தொழிலாளர்களின் தோழனாக விளங்கியவர். பல பிரச்சினைகளில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிப் போராடி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தார். இதற்காக கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் பெற்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தீவிர ஆதரவாளர்.
l நாளுக்கு நாள் இவரது செல்வாக்கு கூடியதால், 1940-ல் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கில அரசு. ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு விடுதலையான இவரை, பாதுகாப்பு சட்டத்தைக் காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தது. 1945-ல் விடுதலையானார்.
l காங்கிரஸில் இருந்து 1948-ல் விலகி, பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். ‘நேதாஜி’ என்ற வாரப் பத்திரிகையை தொடங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1955-ல் பர்மா வாழ் தமிழர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். பல்வேறு அரசியல், ஆன்மிக நிகழ்ச்சிகளில் உரையாற்றினார். மீண்டும் தாயகம் திரும்பியவர், தமிழக அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றார்.
l தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 55-வது வயதில் (1963) தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.