Published : 04 Dec 2020 10:45 AM
Last Updated : 04 Dec 2020 10:45 AM

சித்திரச்சோலை 18: நம்மூரு பிகாசோக்கள்

சிவகுமார்

இன்று சிவகுமார் என்ற பெயரை தமிழ் ரசிகர்களிடம் சொன்னால் அரை நூற்றாண்டு திரைத்துறையில் உள்ளவர், நினைவாற்றலுடன் நீண்ட நேரம் பேசக்கூடியவர், சூர்யா, கார்த்தி என இரண்டு ஹீரோக்களின் தந்தை என்பதையெல்லாம் யோசிக்காமல் சொல்வார்கள்.

ஆனால், இந்த சிவகுமாருக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. சமுதாயப் பார்வை உள்ளது. அச்சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்தே ஆக வேண்டும் என்ற நன்றி உணர்வும், கடமை உணர்வும் உள்ளது.

ஆனால், ஓவியர் பழனிச்சாமி சுதந்திரமானவன், உலகை ஒரு சுண்டு விரலால் தூக்கிச் சுற்றுவேன் என்ற அசாத்திய தன்னம்பிக்கை உள்ளவன்.

அவனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவனை யாரும் காசு கொடுத்து வாங்க முடியாது. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குப் போவான். எதையும் சாப்பிடுவான். எங்கும் படுத்துக் கொள்வான். இந்த உலகமே அவன் தோழன்.

இந்தக் குறைந்த தேவைகளோடு, உயர்ந்த லட்சியங்களோடு வாழ்ந்த ஓவியக்கல்லூரி காலத்தில் பழக்கமானவர்கள் நிறைய பேர். அதில் ஆதிமூலமும், பாஸ்கரனும் ஓராண்டு ஜூனியர்கள்.

‘சினிமா உலகம்’ என்ற பெயரில் திரையுலகச் செய்திகள் வெளியிட முதல் இதழைக் கொண்டு வந்தவர் பி.எஸ். செட்டியார். அந்தப் பெரியவர் வீட்டில் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரியில் படித்தவர் ஆதிமூலம்.

ஆதிமூலம் வரைந்த காந்தி ஓவியம்

கல்லூரியின் துணை முதல்வர் தேர்ந்த சிற்பி - ராய் சவுத்திரியின் சீடர் எஸ். தனபாலை ஆதிமூலத்துக்கு அறிமுகப்படுத்தி கல்லூரியில் சேர்த்துவிட்டவர் செட்டியார்.

ஆதிமூலம் நிறைகுடம். சாந்த சொரூபி. அவர் கோபித்துக் கூச்சலிட்டு யாரையும் திட்டி நான் பார்த்ததே இல்லை. மயிலாப்பூரிலிருந்து பஸ் பிடித்து எழும்பூர் ரயில் நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து 2 பர்லாங் தூரமுள்ள கல்லூரிக்கு வேட்டி கட்டிக் கொண்டு நடந்து வரும் காட்சி இன்றும் என் மனக்கண்ணில் பசுமையாக இருக்கிறது.

பிகாசோ உலகத்தையே தன் நவீன ஓவியங்களால் புரட்டிப்போட்டவர். நான் ஓவியம் படித்த காலத்தில் ஐரோப்பாவில் பிகாசோவும், இந்தியாவில் எம்.எஃப் ஹூசைனும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.

நவீன ஓவியம் என்பது நமக்குத் தீண்டத்தகாதது. புரியாதது என்ற வலுவான ஒரு கருத்து படித்தவர்களிடையே கூட உள்ளது.

2019-ல் இத்தாலி, பிரான்ஸ், வெனிஸ், லண்டன் என செல்வம் கொழித்து அறிவு கிளைத்து, கலைகள் முகிழ்த்து பொங்கிப் பிரவாகம் எடுக்கும் நாடுகளை நேரில் போய்ப் பார்த்தேன்.

ஆதிமூலம் வரைந்த பாரதி ஓவியம்

சற்றேறக்குறைய 600, 700 ஆண்டுகள் அவர்கள் கல்வி, மருத்துவம், அரசியல், கலைகள், விளையாட்டுகள் என எல்லாவற்றிலும் படிப்படியாக முன்னேறி இந்த நிலையை அடைந்துள்ளதை நேரில் கண்டேன்.

உலகத்தை ஆளும் அத்தனை வல்லமை, தகுதி அவர்கள் ரத்தத்திலேயே இருந்திருக்கிறது. நாம் அஜந்தா குகை ஓவியங்கள், எல்லோரா குகைச்சிற்பங்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், சிற்பங்களில் உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கிற சாதனை புரிந்திருக்கிறோம்தான்.

ஆனால் பல்லவர், பாண்டியர், சோழர்கால ஆட்சிக்குப் பிறகு மகராஷ்டிரர், விஜயநகர சாம்ராஜ்யம், நாயக்கர், பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயர் எனத் தொடர்ந்து அந்நியர், வெளிநாட்டினர் படையெடுப்பால், படிப்படியாகத் தமிழ்நாட்டில் கலைகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டது சோகம்.

கோயில்களில் வெண்கலச் சிலைகளில் தெய்வ வடிவங்கள் பார்க்கிறோம். கல் சிலைகளில் கடவுளைத் தரிசிக்கிறோம். ஆனால் லட்சுமி- சரஸ்வதிக்கும், சிவனுக்கும் -விஷ்ணுவுக்கும், ராமர்- லட்சுமணருக்கும் மனித வடிவம் கொடுத்து வரைந்து நமக்கு 150 ஆண்டுகளுக்கு முன் கொடுத்தவர் திருவாங்கூர் ராஜா ரவிவர்மாதான்.

100 ஆண்டுகளுக்கு முந்தைய எந்த தமிழ்நாட்டு ஜமீன் வீடுகளுக்குச் சென்றாலும், வீணை வாசித்தவாறு வெள்ளைச்சேலையில் இருக்கும் சரஸ்வதி ஓவியமும், சிவப்புச் சேலையில், சிவப்புத் தாமரை மலரில் லட்சுமி நிற்க, வெள்ளை யானை மாலை கொண்டு வரும் ஓவியமும் கட்டாயம் பார்க்கலாம்.

ஆனால், அந்த ஜமீன் குடும்பத்தாரில் எத்தனை பேர், அது ரவிவர்மா வரைந்த ஓவியம் என்பதை படத்தின் கீழ் உள்ள பெயரைப் பார்த்து தெரிந்து கொண்டிருப்பார்கள்?

ஓவியர் பாஸ்கரும் நானும்

ஐரோப்பாவில் வாழ்நாள் முழுவதும் பறவைகளை மட்டுமே வரைந்த ஓவியன் இருந்தான். போர்ட்ரெயிட் ஓவியத்தின் பிதாமகன் ரெம்ப்ராண்ட், குரூப்பிகர் ரூபன்ஸ், பாலே நடனம் எட்கர் டகாஸ், சமுத்திரக்காட்சி வில்லியம் டர்னர், மனித உடம்பு அனாட்டமி பிரிட்ஜ்மேன் என்று ஒவ்வொரு பிரிவிலும் உச்சம் தொட்ட பல ஓவியர்கள் வாழ்ந்தார்கள். மக்கள் அந்த ஓவியங்களைப் பார்த்துப் பழகி, புரிந்துகொண்டு ரசித்தார்கள்.

எல்லாவற்றையும் ‘ஸ்பெஷலைஸ்’ செய்து விட்டார்களே; அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான் அடுத்த தலைமுறை ஓவியன்.

போதாதற்கு புகைப்படக்கருவி 500 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து விட்டார்கள். 6 மாதம் கொடைக்கானல் ஏரியின் அழகை அங்கேயே போய் ஒரு ஓவியன் வரைந்ததை 2 விநாடியில் கேமரா படமெடுத்து ஓவியனை ஓரங்கட்டிவிட்டது.

இந்தக் கருவியை வென்றாக வேண்டிய காலகட்டத்தில் ஓவியர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். அதன்பிறகு ‘இம்ப்ரனிசம்’ - என்ற பாணியைக் கொண்டு வந்தார்கள்.

கோழிகள் குப்பையைக் கிளறியது போல -கிட்டத்தில் நின்றால் ஒன்றும் புரியாது. பத்தடி தள்ளி நின்று பார்த்தால் மழை பெய்து ஈராமான தார்ரோட்டில், கார்களும், அதன் வெளிச்சமும் ரிஃப்ளக்ட் செய்யும் அழகு ஓவியத்தைக் காண முடியும்.

‘பால் செஸான்’, ‘க்ளாடி மோனோ-மேனட் என பலர் அந்தப் பாணியில் ஓவியம் தீட்டினர்.

பாஸ்கர் வரைந்த நவீன ஓவியம்.

வின்சென்ட் வேன்கோ என்று உலகமே இன்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஓவியன் 24 வயதில்தான் வரையவே ஆரம்பித்தான். பாலுக்கு நீல வண்ணம் சேர்த்தான். ஆகாயத்தை வெள்ளையாக வரைந்தான். செடி கொடிகளை சிவப்பு வண்ணத்தில் தீட்டினான். அதற்கு, ‘எக்ஸ்பிரசனிசம்’ என்று பெயர் வைத்தான்.

இதையெல்லாம் அந்த நாட்டு மக்கள் படிப்படியாகப் புரிந்துகொள்ளும் பரிணாம வளர்ச்சி அங்கு இருந்தது.

இங்கு அந்த வளர்ச்சி இல்லாததால் ‘ஆதிமூலம் காந்தியை ஏன் இப்படிச் சிதைத்து வரைந்திருக்கிறார். பாரதியை ஏன் இப்படி வரைந்து பயமுறுத்துகிறார்; ஜெயகாந்தன் மூக்குக் கண்ணாடியில் ஒரு பக்கம் ஏன் வெள்ளையாக விட்டிருக்கிறார்?’ என்று கேட்கிறோம்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஓவியர்களில் 1960களில் உருவானவர்களில் ஆதிமூலமும் ஒருவர். வீவர்ஸ் சர்வீஸ் சென்டரில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 1987களில் கி.ராஜநாராயணன் கரிசல் காட்டுக் கடுதாசி- தொடருக்கு நவீன ஓவியங்கள் வரைந்தவர். அருவமாக நிறைய வண்ண ஓவியங்களும் தீட்டி, சாதனை புரிந்தவர்.

இந்திய அளவிலும் உலக அளவிலும் பல நாடுகளில் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடந்தன. பல கேலரிகளில் இவர் படைப்புகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோலதான் ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன். இவர் 1960- 66களில் ஓவியம் பயின்றவர். ராஜஸ்தான் பனஸ்தலி சென்று சுவர் ஓவியங்கள் தீட்டப் பயிற்சி எடுத்தவர். இஸ்ரேல், யுனேஸ்கோ, ஸ்காலர்ஷிப்பில் பிரிண்ட் மேக்கிங் மேற்படிப்பு, 1995-97இல் கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர், 1997 -2001இல் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர், 2002 -2007இல் டெல்லி லலிதகலா அகாடமி சேர்மன் எனப் பல உயர் பதவிகள் வகித்தவர்.

இந்த பாஸ்கர் நவீன ஓவியத்திலேயே ஒரு வேடிக்கையான ஆள். என்னை விட ஒரு வயது சின்னவர். ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை ‘வாடா; போடா’ன்னுதான் கூப்பிடுவான். அவனை ஓவிய மேதைகள்கிட்டப் போய் பாஸ்கர்னா யாருக்கும் தெரியாது. பூனை பாஸ்கர்னு சொன்னாத்தான் தெரியும். அந்தப் பேரு அவனுக்கு வந்ததிலதான் வேடிக்கையே அடங்கி இருக்கு.

பாஸ்கர் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ்ல 1969-லிருந்து புரபஸரா வேலை பாக்கறான். 1979-ல் பத்து வருஷம் ஆகிப் போச்சு. கிளாஸ் ஸ்டூடண்ட்ஸுக்கு அந்த காலேஜுக்குள்ளேயே மரங்களை, காம்பவுண்டை சுத்தி பூனைக ஓடறதை, ஓடி வர்றதை, படுத்திருக்கிறதை, குதிக்கறதை, தூங்கறதை, சண்டை போடறதை பார்த்து, ‘இந்தப் பூனைகளை வரைஞ்சு காட்டறன் பாருடா!’ன்னு சொல்லி வரைய ஆரம்பிச்சிருக்கான். அவரு டெமான்ஸ்ட்ரேட் பண்றப்போ பத்து பசங்க பின்னாடி இருப்பாங்க.

பாஸ்கரின் பூனை ஓவியம்

அந்தப் பூனை தூங்கறதை, கால்களை நக்கிட்டு இருக்கறதைன்னு ஒவ்வொரு விஷயத்தையும் பல கோணங்கள்ல -அந்தப் பூனை இயல்பா இருக்கறதைப் பார்த்துப் பார்த்து ஸ்கெட்ச் பண்ணி -முதல்ல க்ரயான் ஸ்கெட்ச் பண்ணிக் காட்டியிருக்கான். அப்புறம் அதையே ஆயில் பெயிண்டிங்கா செஞ்சு காட்டியிருக்கான்.

அதுலயே அப்புறம் சின்ன இண்ட்ரஸ்ட் டெவலப் ஆகி, ரோட்ல ஒரு பூனை ஓடுச்சுன்னா அதை போட்டோ எடுப்பான். ஒரு ரிக்ஷா மேல தூங்கிட்டு இருந்தா போட்டோ எடுப்பான். எங்கெல்லாம் பூனைய[ பாக்கறானோ அங்கெல்லாம் அதை போட்டோ எடுத்து வித்தியாசமான கோணத்துல படம் எடுத்து - மல்லாக்கப் படுத்திருக்கறது -காலை ரெண்டையும் தூக்கிட்டு இருக்கறது -வயித்துக்குள்ளே தலைய உட்டு தூங்கறது -இப்படிப் பல்வேறு கோணங்கள்ல எங்கெல்லாம் பூனை எப்படிக் கிடைக்குதோ படம் புடிச்சு, 1979-லிருந்து தொடர்ந்து படம் பிடிச்சு, ஓவியங்களா தீட்டி, பிரிட்டிஷ் கவுன்சில்ல கண்காட்சி வச்சிருக்கான்.

பாஸ்கரின் நவீன ஓவியம்

நானும் போயிருந்தேன். அதுக்கப்புறம் பார்த்தா அவனை ஓவியர் பாஸ்கர்னா யாருக்கும் தெரியலை. உலகம் பூரா பூனை பாஸ்கராத்தான் தெரியுது. இப்ப பார்த்தா, ‘உனக்கெப்படி மார்க்கண்டேயன்’னு பேர் வந்துச்சோ, அதுபோலவே எனக்கு பூனை பாஸ்கர்னு பேர் வந்திருச்சு. இதுவரைக்கும் எத்தனை பூனைகளை வரைஞ்சேன்னு எனக்கே தெரியாது!’ங்கறான். இவங்களையெல்லாம் நம்ம ஊரு பிகாசோன்னு சொல்றதா? அதுக்கு மேல ஏதாச்சும் சொல்லலாமா?

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x