

பிரதி எடுக்க உதவும் ‘கார்பன் பேப்பர்’ உருவான கதை எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது.
1806-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த ரால்ஃப் வெச்வூட், ஒரு நாள் மெல்லிய காகிதத்தைத் தட்டச்சு மையில் முழுவதுமாக நனைத்தார். அதை மை ஒட்டும் காகிதங்களுக்கு இடையில் வைத்து உலர்த்தினார். ஒரு வெள்ளைக் காகிதம், அதன் மேல் கார்பன் தாள், அதற்கு மேல் டிஷ்யூ காகிதத்தைப் பரத்தி தன்னுடைய இரும்புப் பேனா கொண்டு அழுத்தி எழுதிப் பார்த்தார். அவர் மேலே எழுதியவை காகித அடுக்கின் அடியில் இருந்த வெள்ளைக் காகிதத்தில் அப்படியே பதிந்தன. அவ்வளவுதான் கார்பன் பேப்பர் அற்புதமாகத் தயாரானது! 1806 அக்டோபர் 7-ல் ரால்ஃப் வெச்வூட் ‘கார்பன் பேப்ப’ருக்குக் காப்புரிமை பெற்றார். பார்வை அற்றவர்களுக்கு உதவவே கார்பன் தாளை அவர் உருவாக்கினார்.
இதே காலகட்டத்தில்தான் இத்தாலியைச் சேர்ந்த பெல்லகிரினோ டூரி என்பவரும் பார்வை அற்ற தன் காதலிக்காக கார்பன் பேப்பரை உருவாக்கினார். டூரியின் காதலி கவுண்ட்லெஸ் கரோலினா திடீரெனப் பார்வை இழந்தார். தன் காதலி தனக்குக் காதல் கடிதங்கள் அனுப்ப ஏதுவாக தட்டச்சு இயந்திரத்தில் தான் உருவாக்கிய கார்பன் தாளைப் பொருத்தி புதிய கருவியை 1808-ல் உருவாக்கினார் டூரி.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இருவர், ஒரே காலகட்டத்தில் ஒரு பொருளை உருவாக்கியிருப்பது வரலாற்று அதிசயமே!