Published : 31 Oct 2015 10:06 AM
Last Updated : 31 Oct 2015 10:06 AM

முத்துக் குளிக்க வாரீகளா 15: இல்லையென்பது இல்லை!

இம்ரவுல் கைஸ் புகழ்பெற்ற அரபுக் கவிஞன்; கொடை வள்ளல். ஒருநாள் வழியில் அவன் நெடுநாட்களாகத் தேடி வந்த பகைவன் எதிர்ப்பட்டான். உடனே அவன் வாளை உருவி அவனைக் கொல்லப் போனான்.

பகைவன் உடனே அவன் முன் மண்டியிட்டு, ‘‘நீ யார் எதைக் கேட்டாலும் தருகின்ற வள்ளல். நான் இப்போது ஒன்று உன்னைக் கேட்கப் போகிறேன். கொடுப்பாயா?’’ என்று கேட்டான்.

இம்ரவுல் கைஸ் ‘‘கொடுப்பேன்’’ என்றான்.

பகைவன் ‘‘உன் வாளைக் கொடு’’ என்று கேட்டான்.

இம்ரவுல் கைஸ், கொஞ்சம் கூடத் தயங்காமல் அவன் வாளைப் பகைவனிடம் கொடுத்தான்.

வாளைப் பெற்ற பகைவன் உடனே இம்ரவுல் கைஸைக் கொல்ல வாளை ஓங்கினான்.

இம்ரவுல் கைஸ் உயிர் தப்ப ஓடினான்.

யாரைக் கொடை வள்ளல் என்று சொல்ல வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இம்ரவுல் கைஸ்.

மாவீரன் கர்ணனைப் போர்க் களத்தில் அதர்மப் போரால் கொல்ல முயன்றனர். உடலெங்கும் ஆயுதங்கள் துளைத்திருந்தும் அவன் உயிர் போகவில்லை.

அவன் செய்த தர்மங்கள் அவன் உயிரைக் காத்து நின்றன.

கண்ணன் அந்தணர் கோலத்தில் வந்து “கர்ணா! உன் தர்மங்களின் புண்ணியத்தை எனக்குத் தானமாகக் கொடு” என்றான். கர்ணன் தயங்காமல் கொடுத்தான்.

தர்மத்தையே தர்மமாகக் கொடுத் தவன் கர்ணன் ஒருவனே!

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி.

அடைக்கலம் தேடி வந்த புறாவுக்காக தன் உடலையே அரிந்து கொடுத்தான் சிபி.

ஏழை புலவனுக்கு உதவத் தன் தலையையே கொடுக்கத் துணிந்தவன் குமணன்.

தமிழுக்காகத் தன் உயிரையே கொடுத்தான் நந்திவர்மன்.

எத்தனையோ அரசர்கள் இருந்திருக் கிறார்கள். செல்வர்கள் இருந்திருக் கிறார்கள். ஆனால் ஏழு பேர்களைத்தான் வள்ளல்கள் என்று வரலாறு போற்று கிறது.

பாரி, எழினி, நள்ளி, மலையன், பேகன், ஓரி, காரி இவர்கள் கடையெழு வள்ளல்கள். இதிலிருந்தே முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

முதலெழு வள்ளல்கள்: செம்பியன், குமணன், விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்.

இடையெழு வள்ளல்கள்: அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கர்ணன், அரிச்சந்திரன்.

தமிழில் ‘ஈகை’ ஓர் அற்புதமான சொல். ‘ஈவதற்குத்தான் கை’, ‘ஈவதுதான் கை’ என்று அது உணர்த்துகிறது.

கேட்டுக் கொடுத்தால் பிச்சை; கேளாமல் கொடுத்தால் ஈகை.

சில்லறை கொடுத்தால் பிச்சை; பெருந்தொகை கொடுத்தால் ஈகை.

எப்படிக் கொடுத்தால் ஈகை என்பதை விளக்கும் வகையில் திருவள்ளுவர் ஒரு குறள் இயற்றியிருக்கிறார்.

’இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள’

அற்புதமான குறள் இது. தோண்டத் தோண்டச் சுரக்கும் மணற்கேணி போல் சிந்திக்க, சிந்திக்கப் பொருள் சுரக்கும் குறள் இது.

இனி உரைகளைக் காண்போம்.

மணக்குடவர்: இல்லை என்று கேட்டு வந்தவரிடம் இல்லை என்று கூறாமல் ஈவது குடிப்பிறந்தார் குணமாம்.

பரிதியார்: தன்னிடத்தில் வந்து ‘இல்லை’என்று சொல்லிப் பெற்றவன் வேறு ஒருவனிடத்தில் சென்று இல்லை என்று சொல்லாதபடி, அவன் வறுமை தீரக் கொடுப்பது குடிப் பிறந்தார்க்கு வர வித்தை.

பரிப்பெருமாள்: ஒருவன் தன்னிடம் வந்து இல்லை என்று சொல்வதன் முன் அவனுடைய வறுமையைக் குறிப்பால் அறிந்து கொடுத்தல்.

நாமக்கல்இராமலிங்கம்: தன்னை வந்து இரந்தவர்க்குத் தான், ‘நான் தரித் திரன் ஆனேன்’ என்ற துன்ப மொழிகளைச் சொல்லாமல் இயன்றதைக் கொடு.

கவிராசர்: ஞான தியானம், பொருள், பந்துக்கள் இல்லையே எனத் துன்பத் தோடு மொழியாத தன்மை ஈகையினால் வரும்.

பரிமேலழகர்: ஒருவன் உன்னிடம் ‘இல்லை’என்று கேட்டுவந்தால், இப்படி ஒருவன் கேட்டு வந்தான் என்று வேறு யாரிடமும் கூறி அவனை அவ மதிக்காமல் இரந்தவனுக்கு மறுக்காமல் கொடுக்க வேண்டும்.

ச.தண்டபாணி தேசிகர் கூறும் உரைகள்: இல்லை என்பவன் இனி எனக்கு எத்துன்பமும் இல்லை என்று கூறும் வண்ணம் ஈதல்.

செல்வம் பெற்று வறியவரைக் காத்தல் இல்லாதவன், தருமம் முதலான புகழ் இல்லாதவன் எனப் பிறர் இழிந்துரைக்க அதனைக் கேட்க அஞ்சியாவது ஈதல்

கா.சுப்பிரமணியபிள்ளை:கொடுப்பவனை வறியன் என்று இரப்பவன் பிறரிடம் சொல்லாதபடி ஈதல்.

இதுவரை ஒன்பது விதமான உரை களைக் கண்டோம். இனி வருவன என் உரைகள்:

உன்னிடம் இல்லை என்று கேட்டு வந்தவன் மறுபடியும் உன்னிடம் வந்து இல்லை என்று கூறாதபடி கொடு.

‘நான் கேட்டேன், அவன் இல்லை யென்று சொல்லிவிட்டான்’ என்று அவன் பிறரிடம் சொல்லாதபடி கொடு.

உன்னிடம் ஒருவன் ‘இல்லை’ என்று கேட்டு வருகிறான். கொடுப்பதற்கு உன்னிடமும் ஒன்றும் இல்லை. இதை நீ அவனிடம் சொன்னால் அவன் வருத்தப்படுவான். எனவே, நீ அவ்வாறு கூறாமல் மவுனமாக இருந்துவிடு. கேட்டு வந்தவன் உன் நிலை அறிந்து போய்விடுவான். இவ்வாறு நீ பேசாமல் இருத்தலே உரையாமை - ஈதலாகும்.

கொடுக்கிற அளவுக்கு உன்னிடம் வசதி இல்லையென்றாலும் உன்னால் முடிந்த அளவுக்குக் கொடு.

‘எனக்குத் தாய் தந்தை இல்லை; ஆதரிப்பவர் யாருமில்லை. நான் அனாதை’ என்று கூறிக் கேட்டு வருவோனிடம் இனி நீ அவ்வாறு கூற வேண்டாம். ‘உன்னை ஆதரிக்க நான் இருக்கிறேன்’ என்று கூறிக் கொடு.

நற்குடியில் பிறந்தவர்கள் வறியவராக இருந்தால் பொருளீட்டியாவது ஈகை புரிவார்களே தவிர, இல்லை என்று கேட்டு வருவோர்க்கு இல்லை என்று கூற மாட்டார்கள்.

இல்லையென்று கேட்டு வந்தவர்க்கு இல்லையென்று கூறாமல் கொடுக் கும் குணம் எல்லாருக்கும் இருக் காது; நற்குடியில் பிறந்தவரிடமே இருக்கும்.

வட ஆர்க்காடு வேலூரில் திருக்குறள் தொடர் சொற்பொழிவாற்றி வந்தேன். அப்போது இக்குறளுக்கு மேலே கூறிய உரைகள் எல்லாவற்றையும் கூறினேன்.

ஒருவர் எழுந்தார், ‘‘ஐயா! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருக்கிற எல்லாவற்றையும் கொடுத்துவிட வேண் டும் என்றாகிறது. அப்படிக் கொடுத்து விட்டால் நம்முடைய கதி என்ன?’’ என்று கேட்டார்.

நான் திடுக்கிட்டேன். ஒரு கணம்தான். உடனே நான் சொன்னேன்:

‘‘நீங்கள் கேட்ட கேள்விக்கும் இந்தக் குறளில் பதிலிருக்கிறது. ‘இல்லை’ என்னும் துன்பமான சொல்லை நீ பிறரிடம் சென்று சொல்லாதவாறு, உனக்கென்று வைத்துக் கொண்டு கொடு என்ற பொருளும் இக்குறளில் இருக்கிறது’’ என்றேன்.

இப்பொருள் நான் சிந்திக்காதது. ஒருவர் கேள்வி கேட்பதால் தோன்றியது. இக்குறளை நினைத்து வியந்தேன்.

நீங்களும் கூடச் சிந்திக்கலாமே.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x