

என் இளமைக் காலத்தில் படைக்கும் பிரம்மாக்களாக நான் பார்த்து பிரம்மித்தது கோபுலு, மணியம், சில்பி, எஸ்.ராஜம் இந்த நான்கு பேர்.
ஓவியர் சில்பி இறையுணர்வு மிக்கவர். ஒரு சிற்பி செதுக்கும்போது தன் இதயத்தில் பதிய வைத்துள்ள இறையின் உருவத்தைக் கல்லில் வடித்தெடுப்பது போல, இறையுணர்வோடுதான் ஓவியம் வரைவார்.
1919-ம் ஆண்டு நாமக்கல்லில் பிறந்தவர் சில்பி. சிறுவயதிலேயே ஓவிய ஆர்வம் இருந்ததால் நாமக்கல் கவிஞர் இவரை ஓவியக்கல்லூரியில் சேர்த்து விட்டாராம்.
காந்தி, நேரு, படேல், போஸ் போன்ற தலைவர்களின் உருவங்களை வரைந்தவர்தான், ஒரு தரம் காஞ்சிப் பெரியவர், ‘நீ மனித முகங்களை வரைந்தது போதும். கோயில் விக்ரகங்கள் உனக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அங்கு போய் அவற்றை வரைந்து மக்களை மகிழ்விக்கச் செய்!’ என்று அறிவுரை சொன்னதால், கோயில், கருவறை என்று தன் பாணியை நிரந்தரமாக மாற்றிக் கொண்டார்.
1940-களில் சென்னை ஓவியக்கல்லூரி படிப்பு முடிந்ததும், ஓவியர் மாலி தீபாவளி மலரில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். பி.என்.ஸ்ரீனிவாசன் என்ற தன் இயற்பெயரிலேயே ‘க்ஷேத்ராடனம்’ என்ற தலைப்பில் இவரின் ஓவியங்கள் வெளிவந்தன.
சிற்பி செதுக்குவது போல் ஓவியம் தீட்டுவதால் ‘நீ சில்பி’ என்றே பெயர் வைத்துக் கொள்!’ என்று சொன்னவர் ஓவியர் மாலி.
மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, ஆண்டாள், திரிபுரசுந்தரி என்று அத்தனை தெய்வ வடிவங்களையும், முகம் மட்டுமே தெரிய ஆடை, ஆபரணங்களால் உடல் மொத்தமும் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை வாரக்கணக்கில் நேரில் சென்று அமர்ந்து தீட்டுவார்.
அந்த நாளில் மூல விக்ரகங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. அதனால் இவர் ஓவியங்களை பத்திரிகையில் பார்ப்பவர்கள் தெய்வ தரிசனத்தை நேரில் அனுபவிப்பது போல உணர்ந்தார்கள். அந்த அளவுக்கு இந்த ஓவியம் தீட்டும் பணியை தெய்வீகப் பணியாக விரதமிருந்து ஆச்சாரத்துடன் செய்தார். அதனால் அவரை ஒரு தேவ புருஷராகவே நினைக்கத் தோன்றுகிறது.
தென்னகத்துக் கோயில்கள் மட்டுமல்ல, வடநாட்டு முகலாயர் அரண்மனைகள், இரண்டு மூன்று மாடிக் கட்டிடங்களையெல்லாம் அங்கேயே சென்று அமர்ந்து ஓவியம் தீட்டியவர்.
கார், பங்களா, வசதியான வாழ்வுக்கு என்றுமே ஆசைப்பட்டதில்லை. காந்தி, காஞ்சி பெரியவர் போல எளிமையாக வாழ ஆசைப்பட்டதால் வற்புறுத்தி பெரிய தொகை தன் ஓவியங்களுக்குக் கேட்காமல், கொடுத்த காசை வைத்து திருப்தியாக வாழ்ந்தார்.
‘ஸ்பாட் பெயிண்டிங்’ - நான் வரைந்த 6 ஆண்டுகளில் எனக்கும் திருவண்ணாமலை கோயில் கோபுரங்களுக்கும், எனக்கும்; திருச்சி மலைக்கோட்டைக்கும், எனக்கும்; திருமலை நாயக்கர் மகாலுக்கும்தான் பந்தமே தவிர, என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? யார் என்ன பேசுகிறார்கள் என்று என் மனதில் பதியாது.
அதேபோலத்தான் சில்பி, தன் வாழ்நாள் முழுவதும் கோயில்களோடும், கோபுரங்களோடும், சிலைகளோடும் மட்டுமே உறவு வைத்து, துறவி போலவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
சிற்பங்களும் கோயில்களும் தமிழ்நாட்டில் இருக்கும் வரை சில்பியின் ஓவியங்களும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைபெற்றிருக்கும்.
----
தரிசிப்போம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in