

தமிழின் முன்னோடி நாவல்களில் ஒன்றான ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலை எழுதியவர் அ. மாதவையா. ‘முத்து மீனாக்ஷி’, ‘விஜயமார்த் தாண்டம்’ உள்ளிட்ட நாவல்களையும், திருமலை சேதுபதி, உதயலன், மணிமேகலை துறவு உள்ளிட்ட நாடகங்களையும் எழுதியவர் இவர். ‘தி ஸ்டோரி ஆஃப் ராமாயணா’, ‘க்ளாரிந்தா’, ‘சத்யானந்தா’, ‘லெப்டினென்ட் பஞ்சு’ உள்ளிட்ட ஆங்கில நூல்களையும் எழுதியிருக்கிறார்.
1872-ல் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், அந்தக் காலத்திலேயே மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் கடுமையாக விமர்சித்தார். சாகசங்களிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். குதிரையேற்றம் இவருக்கு மிகப் பிடித்தமானது. அரசின் ‘உப்பு அப்காரி இலாகா’வில் ஆய்வாளராகத் தனது பணியைத் தொடங்கினார்.
1917-ல் தனது வேலையிலிருந்து நீண்ட விடுப்பு எடுத்து ‘தமிழர் கல்விச் சங்கம்’எனும் அமைப்பைத் தொடங்கினார். 1922-ல் விருப்ப ஓய்வுபெற்று மயிலாப்பூரில் சொந்த வீடு கட்டி அதிலேயே அச்சகத்தையும் நிறுவினார். ‘பஞ்சமிர்தம்’எனும் இதழைத் தொடங்கினார். தனது வாழ்நாளில் எழுத்துப் பணியின் பல்வேறு பரிமாணங்களைக் கைக்கொண்டார்.
1925 அக்டோபர் 22-ல் காலமானார்.