

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படும் ஆனந்த் மகிந்திரா, அவ்வப்போது ட்விட்டர் மூலம் கவனம் ஈர்த்துவிடுவார். அவ்வாறாக விளையாட்டாய் அவர் பகிர்ந்த விடுகதை ஒன்று ட்விடட்ரில் வைரலாகி வருகிறது.
மார்ச் 2020 தொடங்கி இப்போது வரை உலகின் ஏதாவது ஒரு பகுதியில் முழுமுடக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ், உலகையே புரட்டிப்போட்டு வைத்துள்ளது.
பரபரப்பாக இருக்கு லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் கூட கட்டுப்பாடுகளால் காற்றாடுகிறது. படிப்படியாக தளர்வுகள் வந்தாலும்கூட அது வாழ்வாதாரத்துக்கானதே தவிர வழக்கம்போல் இயல்பாக இருப்பதற்கு அல்ல என்பது பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை.
கரோனா தற்காப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற அரசாங்கம் தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் விளையாட்டாக பதிந்த ட்வீட் சிரிப்பையும் வரவழைத்து சிந்திக்கவும் வைத்துள்ளது.
அது ஒரு கணித விளையாட்டு. உங்களின் அடுத்த பயண இலக்கைக் கண்டுகொள்ளுங்கள் என்பதுதான் விளையாட்டின் தலைப்பு. அந்தத் தலைப்பின் கீழ் ஒரு பட்டியலைப் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மகிந்திரா. அதில் இடதுபுறம் சில அறிவுரைகளும், வலதுபுறம் 15 நாடுகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
முதலில் இடதுபுறமுள்ள அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். முதற்படியாக 1-ல் இருந்து 9-க்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை 3-ஆல் பெருக்க வேண்டும். கிடைக்கும் எண்ணுடன் 3-ஐ கூட்ட வேண்டும். அப்படிச் செய்தால் இரண்டு இலக்க எண் கிட்டும்.
அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்ட வேண்டும். வலதுபுறம் இருக்கும் பட்டியலில் அந்த எண்ணுக்கு எதிராக என்ன எழுதியிருக்கிறதோ அங்குதான் பயணப்பட வேண்டும். இத்துடன் கேம் ஓவர். ஆனால், அங்குதான் ட்விஸ்ட் வைத்திருக்கிறார் ஆனந்த் மகிந்திரா. எந்த எண்ணை மனதில் நினைத்துக் கொண்டு கணக்கு செய்தாலும் விடை ஸ்டே அட் ஹோம் (Stay at home) என்றே வரும்.
வீட்டில் இருப்பதன் அவசியத்தை விளையாட்டை உணர்த்தும் விடுகதையைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.