Published : 02 Oct 2015 11:12 AM
Last Updated : 02 Oct 2015 11:12 AM

டி.வி.ராமசுப்பையர் 10

தேசபக்தரும், சீர்திருத்தவாதியும், சிறந்த பத்திரிகையாளருமான டி.வி.ராமசுப்பையர் (T.V.Ramasubbaiyer) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# நாகர்கோவில் அடுத்த தழுவிய மகாதேவர் கோவில் கிராமத்தில் (1908) பிறந்தார். வடசேரியில் ஆரம்பக் கல்வி பயின்றார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அரசு வேலைக்குச் செல்வதில் இவருக்கு ஆர்வம் இல்லை. மக்கள் சேவையில் ஈடுபட விரும்பினார்.

# மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர், தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக அவர்களது இடத்துக்கே போய் தொண்டாற்றினார். கல்வி பெற் றால் மட்டுமே, மக்களை உயர்நிலைக்குக் கொண்டுவர முடியும் என் பதை உணர்ந்தவர், அதற்காக பல போராட்டங்களை நடத்தினார்.

# திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டாயக் கல்விச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரச் செய்தார். இவரது முயற்சியால் மூன்றே மாதங்களில் 50 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

# தமிழர்களுக்காக ஒரு பத்திரிகை வேண்டும் என்ற உந்துதலுடன் களமிறங்கினார். ‘தினமலர்’ பத்திரிகையை 1951-ல் தொடங்கினார். திருவனந்தபுரம் குமரி திருநெல்வேலி இடையே ரயில் சேவை வழங்க வலியுறுத்தி தனது நாளிதழில் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். ரயில் பாதை அமைப்புக் குழு தலைவராகவும் செயல்பட்டார். இடையறாத முனைப்புகளால் வெற்றியும் ஈட்டினார்.

# சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றம் செய்ய வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். ஆடம்பரமோ, விளம்பரமோ இல்லாமல் மவுனமாக பல சாதனைகளை நிகழ்த்தியவர்.

# அரசியல், நிர்வாகம் எதுவானாலும் துணிந்து முடிவெடுப்பார். அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டார். தமிழ்ப் பற்று கொண்டவர். கவிமணியிடம் பக்தி கொண்டவர். பல இலக்கிய விழாக்களை முன்னின்று நடத்தி, தமிழை வளர்த்தவர்.

# குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். அதற்கான போராட்டத்தில் தமிழர்களின் குரலாக தனது நாளிதழை ஒலிக்கச் செய்தார். தொடர் போராட்டத்தின் விளைவாக, 1956-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்த நாளிதழ் அலுவலகம் 1957-ல் நெல்லைக்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

# காசி சர்வகலாசாலை போல குமரியில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கும் முனைப்புக்கு உறுதுணையாக நின்றார். அதற்கான ஆலோசனைக் குழு தலைவராக இருந்தார். திருநெல்வேலியில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. நாகர்கோவில், கோவில்பட்டி, திண்டுக்கல் பகுதிகளின் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கச் செய்தார். இவரது தொடர் வலியுறுத்தல்களால் திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்கள் உருவாயின.

# இன்றைய நிலவரத்தை மட்டும் பார்க்காமல், எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்து செயல்பட்ட தொலைநோக்கு சிந்தனையாளர். எஸ்எஸ்எல்சி, 12-ம் வகுப்புக்கு மாதிரி வினா விடை பகுதியை தொடங்கினார்.

# ‘தேசிய மாமணி’ பட்டம் உள்ளிட்ட பல கவுரவங்களைப் பெற்றவர். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தமிழ், தமிழரின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். ‘டிவிஆர்’ என அன்போடு அழைக்கப் பட்ட டி.வி.ராமசுப்பையர் 76-வது வயதில் (1984) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x