

தோனி என்றாலே கேப்டன் கூல் என்ற அடைமொழியும் ஒட்டிக் கொள்ளும்.
கிரிக்கெட் விளையாட்டில் தோனிக்கான தனித்துவங்களில் நெருக்கடிகளை அலட்டிக்கொள்ளும் சமாளிக்கும் போக்கு அனைவராலும் அறியப்பட்டது. அவ்வாறாக களத்தில் கலங்காத தோனியை தன்னால் மட்டுமே எளிதில் எரிச்சலடையவைக்க முடியும் எனக் கூறியுள்ளார் அவருடைய மனைவி சாக்ஷி.
தோனியின் மனைவி சாக்ஷி நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனை ஒட்டி அவர் பேசிய வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
வீடியோவில் சாக்ஷி பேசியது என்ன?
தோனியை என்னைத் தவிர யாராலும் எரிச்சல் படுத்திவிட முடியாது. என்ன நடந்தாலும் அவர் அமைதியாகவே இருபபார். ஆனால், நான் நினைத்தால் அவரை எளிதில் தூண்டிவிட்டு எரிச்சல்படுத்திவிடுவேன். ஏனென்றால் நான் தானே அவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்.
வீட்டில் நாங்கள் எப்போதும் கிரிக்கெட் பற்றி பேசியதே கிடையாது. சராசரிப் பெண் தன் கணவரிடம் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று கேட்பது போல் அவருடைய தொழில் பற்றி நான் ஒருபோதும் விசாரித்தது இல்லை. அவருக்கு கிரிக்கெட் மீது காதல் அதிகம். அது அவருக்கு ஓர் அன்புக் குழந்தை. அந்த குழந்தை பற்றி நான் எப்போதும் பேசவே மாட்டேன்.
அதேபோல், எங்கள் மகள் ஜிவா தந்தை சொல் மட்டுமே கேட்பாள். அவளைச் சாப்பிட வைக்க நானும் எனது மாமியாரும் போராட வேண்டும். ஆனால் தோனி ஒருமுறை சொன்னால் போதும் உடனே கேட்டுக் கொண்டு நடப்பாள்.
நல்லவேளையாக நான் தோனியை, கலர் செய்யப்பட்ட நீளமான சிகை அலங்காரத்துடன் பார்க்கவில்லை. அவரை அந்தத் தோற்றத்தில் சந்திக்க நேர்ந்திருந்தால் நிச்சயமாக அவரை பார்த்திருக்கவே மாட்டேன். அழகியலும் முக்கியம் தானே. ஜான் ஆப்பிரஹாமுக்கு அந்த சிகை அலங்காரம் பொறுத்தமாக இருந்தது. ஆனால், தோனிக்கு சரியாக இல்லை.
ஜிவா உலகக் கோப்பையை ஒட்டி பிறந்தார். அப்போது மருத்துவமனையில் அனைவரும் உனது கணவர் ஏன் வரவில்லை என்று கேட்டார்கள். ஆனால் எனக்கு அது பெரிய விஷயமாகவே இல்லை.
தோனிக்கு கிரிக்கெட் தான் பிரதானம். எனக்கோ தோனி பிரதானம். அதனால், தோனிக்கு எதெல்லாம் பிரதானமானதோ அதெல்லாம் எனக்கும் முக்கியமானதே. எனவே, அவர் மருத்துவமனை வராததில் எனக்கு வருத்தமில்லை. அது தியாகமும். அன்பின் நிமித்தம் செய்யும் எதையும் தியாகம் என்று சொல்லக் கூடாது. எனக்கு தோனியை ரொம்பப் பிடிக்கும்.
இவ்வாறு சாக்ஷி பேசியிருந்தார்.
சிரித்துக் கொண்டே சாக்ஷி பேசி வெளியிட்ட யதார்த்தமான அந்த வீடியோ தோனி ரசிகர்களால் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.