சரியாக நடக்கின்றனவா வன உயிரின வார விழாக்கள்?

சரியாக நடக்கின்றனவா வன உயிரின வார விழாக்கள்?
Updated on
4 min read

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் வாரம், 'வன உயிரின வார விழா'வாகக் கொண்டாடப்படுவது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். அழிந்து கொண்டிருக்கும் இயற்கைப் பல்லுயிரிகளைப் பாதுகாக்கும்பொருட்டு இவ்விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்த அதற்கான துவக்க விழாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

வன உயிரின வார விழா (Wildlife Week Celebration) கொண்டாட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அறையில் காட்டுயிர் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு சாரா இயக்கங்களின் செயல்திட்டங்களை விவரிப்பதற்காகவும், ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களுக்காகவும், தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மற்றொரு பெரிய கலையரங்கத்தின் மேடையில் கலை நிகழ்ச்சிகள் களைகட்டின. அங்கேயே சிறப்பாகப் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளுக்கும், வன உயிரின வார போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்குதலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கோவையைச் சேர்ந்த 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் கானுயிர் படக் கண்காட்சி அருமையாக இருந்தது. வெறும் படங்களை மட்டுமே காட்சிக்கு வைக்காமல் விளக்கவுரைகளையும் இடையிடையே வைத்திருந்தார்கள். வனப்பகுதியைப் பிளந்து அமைக்கப்படும் சாலைகளால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று, அங்கே சீறிப்பாயும் வாகனங்களில் அடிபட்டு சாலையில் பலியாவது. அதைப்பற்றிய விளக்கப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. 'மேற்குத் தொடர்ச்சி மலை - நம் நதிகளின் தாய்மடி!' எனும் தலைப்பில் ஒரு நதி எப்படி உற்பத்தியாகிறது என்ற படங்களுடன் கூடிய விளக்கவுரை அருமை.

தமிழகத்தில் காட்டு ஆராய்ச்சி, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டுள்ள பல அரசு சாரா நிறுவனங்களின் அரங்குகள் இருந்தன. பாறு இனப்பறவைகள் பல அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒரு காலத்தில் வானமெங்கும் கூட்டம் கூட்டமாக பறந்து திரிந்த அவை, 99% அழிந்து போய்விட்டது. காரணம் டைக்ளோஃபெனாக் (Diclofenac) எனும் கால்நடைகளுக்கான வலிநீக்கி மருந்து. உடல் வலிக்காக செலுத்தப்படும் இம்மருந்து கால்நடைகள் இறந்த பின்னும் அவற்றின் உடலின் உள்ளுறுப்புகளில் தங்கி விடுகிறது. அதை உண்ணும் பாறுகளுக்கு அம்மருந்து நஞ்சாகிறது. தற்போது டைக்ளோஃபெனாக் இந்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டது. எனினும் இந்த மருந்து இன்னும் புழக்கத்தில்தான் இருக்கிறது. 'அருளகம்' என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாறு கழுகுகளின் (பினந்திண்ணிக் கழுகுகள்) பாதுகாப்பிற்காகப் பாடுபட்டு வருகின்றனர்.

பாறு கழுகுகள் இறப்பதற்கான காரணம், டைக்ளோஃபெனாக் மருந்தின் விளைவு, காட்டில் இயற்கையாக இறந்த உயிரினங்களை புதைக்காமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றை மையக்கருத்தாக வைத்து, 'அருளகம்' அமைப்பினர் ஒரு பரமபத விளையாட்டை உருவாக்கியிருந்தனர். பள்ளி மாணவர்கள் தாயக்கட்டைகளை உருட்டி விளையாட, ஒவ்வொரு நகர்விலும் பாறு கழுகின் பாதுகாப்பினைப் பற்றி அறிந்து கொள்ள ஏதோ ஒரு தகவல் அச்சிடப்பட்டிருந்தது. அதை 'அருளகம்' அமைப்பினர் விளையாடுவோருக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். பார்வையாளர்களை ஈடுபடுத்தி, அவர்களாகவே ஒரு தகவலை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இது போன்ற விளையாட்டுகள் இவ்வகையான நிகழ்ச்சிகளில் பெருக வேண்டும்.

காலையில் அரங்கின் உள்ளே நுழைந்தவுடனே ஒரு வேதனையான நிகழ்வைப் பார்க்க நேர்ந்தது. வாசலில் ஒரு கூட்டம் எதையோ சூழ்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன்; பெரிய கூண்டு தென்பட்டது. புலி வேடமணிந்த ஒருவர் அதனுள்ளே மண்டியிட்டு நடந்து சென்றவுடன் கூண்டின் கதவு பலத்த ஓசையுடன் மூடிக்கொண்டது. சுற்றி நின்றவர்கள் சிரித்தும், கைகொட்டியும் ஆர்ப்பரித்தனர். இத்தகைய செயல்பாடுகள், வனத்துறையினர் இது போன்ற வேலைகளை மட்டுமே செய்வார்கள் என்கிற ஒரு தவறான எண்ணத்தைத் தந்துவிடும்.

கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் சென்று பார்த்தேன். ஒலிபெருக்கியின் ஓசை காதைக் கிழித்தது, சற்று நேரத்திலேயே வெளியே வந்துவிட்டேன். அரங்கின் பின்பக்கத்திற்குச் சென்ற போது பள்ளி மாணவ மாணவியர் புலி, மயில், மரம் என பலவித வேடங்களில் அவர்களது நிகழ்ச்சிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். மயில் வேடமணிந்தவர்கள் உண்மையான மயில்தோகையை அணிந்திருந்தனர். இவை எங்கிருந்து, எப்படி வந்திருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா?

அரங்குகள் நிறைந்த அறைக்குள் நுழைந்து பார்வையிட்டேன். அறையின் நடுவில் ஒரு சிறிய கூண்டையும், அதன் மேலே பெரிய புலி பொம்மையையும் பார்வைக்கு வைத்திருந்தனர். என்ன சொல்லவருகிறார்கள் என்பதே புரியவில்லை. பெரும்பாலானோர் அந்த பொம்மைப் புலியை தொட்டுப்பார்த்து, அதனருகில் நின்று கைபேசியில் படமெடுத்துக் கொண்டிருந்தனர்.

மற்றோர் அரங்கில் சிறுத்தையை வலை வைத்துப்பிடிக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பாவமாக இருந்தது. உயிரினங்கள் பிடிக்கப்படுவது போன்ற காட்சிகளை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பாமல், 'மனித - காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளித்தல்' பற்றிய படங்களையும், இது போன்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்கும் காட்சிகளையும் சேர்த்து திரையிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வனப்பகுதியை ஒட்டிய சில இடங்களில், மனிதர்கள் வசிக்கும் பகுதியில் எதிர்பாராத விதமாக நுழைந்து விட்ட காட்டுயிர்களை யாருக்கும் (அந்த உயிரினத்திற்கும், அங்குள்ள மனிதர்களுக்கும்) தொந்தரவு ஏற்படாத வண்ணம் பிடிப்பதும், விரட்டிவிடுவதும் சில வேளைகளில் அவசியமாகிறது. ஆனால் அவற்றைப் பிடிப்பதும், விரட்டுவதும் மட்டுமே மனித- காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க நிரந்தரத் தீர்வாகி விடாது. வனப்பகுதிகளின் அருகாமையில் வாழ்பவர்களுக்கு காட்டுயிர்களின் குணங்களையும், அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அடிக்கடி நடமாடாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகளையும் எடுத்துச்சொல்வது அவசியம்.

வால்பாறையில், மனிதர் - யானை எதிர்கொள்ளலை குறைக்கும்/சமாளிக்கும் பணியில் தொடர்ந்து இயங்கும் முனைவர் ஆனந்தகுமாரின் செயல் திட்டங்களை விளக்கும் குறும்படத்தைத் திரையிடவும், விளக்கச் சுவரொட்டியை அங்கே காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேர மாறுதல்களால் அக்குறும்படம் திரையிடப்படவில்லை.

புலிகள் காப்பக அரங்குகளில் பதப்படுத்தப்பட்ட சில காட்டுயிர்களை பார்வைக்கு வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் அரங்கில் பார்த்த காட்சி என் மனதைக் கலக்கமடையச் செய்தது. பதப்படுத்தப்பட சிறுத்தை, யானைக் குட்டி, அலங்கு, இரண்டு கரடிக் குட்டி ஆகிய உயிரினங்களை வனச்சூழலில் இருக்குமாறு அமைத்திருந்தனர். அவை தத்ரூபமாகக் காட்சியளிக்க இயற்கையான சூழலில் இருந்தே தாவரங்களை எடுத்து வந்து அங்கு அலங்காரப்படுத்தி இருந்தார்கள். அழகிய பெரணிச் செடிகள் (தகரை - Ferns), மரங்களில் படர்ந்திருக்கும் பாசிச் செடிகள் (Moss), மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளில் மட்டுமே தென்படும் மலைப்பூவரசு (Rhododendron), சேம்பு வகைச் செடி (Arisaema), தரையில் வளரும் ஆர்கிடு (Orchid) முதலிய தாவரங்களை பார்க்க முடிந்தது. இயற்கையான அரிய தாவரங்களை அலங்காரத்துக்கு பயன்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

டிராஃபிக் இந்தியா என்னும் அரங்கில் அலங்கினைப் பற்றிய ஒரு விளக்கச் சுவரொட்டி வைத்திருந்தனர். அதைப் படிக்கப்படிக்க வேதனையாக இருந்தது. அலங்கின் செதில்களுக்காகவும், மாமிசத்திற்காகவும் 2008ல் இருந்து 2014 வரை குறைந்தபட்சம் 3000 வரை கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு தோராயமான மதிப்பீடுதான், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகத்தான் இருக்கும்.

அரங்கின் வெளியே மதிய உணவிற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் அரங்கின் உள்ளே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பியும், வெளியே கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிளாஸ்டிக் தட்டும் எனது கண்ணை உறுத்தியது. காலையில் மாணவர்களால் ஏந்தப்பட்டு மதிய வேளையில் தரையில் போடப்பட்டிருந்த வாசக அட்டைகள், ''பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்ப்போம்'' என்றன. அரசு விழாக்களில் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லைகள் காட்டுயிர்களுக்கு பொருந்தாது. பல உயிரினங்கள் மனிதனின் செயல்களால் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன, காட்டுயிர்களையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. இதற்காக பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? திருட்டு வேட்டையில் ஈடுபடுவோரை பிடிக்க பொதுமக்கள், வனத்துறைக்கு எப்படி உதவி செய்யலாம்? என்பதை படங்கள், திரைப்படங்கள், நாடகம் மூலமாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவையாவும் புலி எப்படி கூண்டு வைத்துப் பிடிக்கப்படுகிறது என்று விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் மிகவும் அவசியமானது, முக்கியமானது.

இதையெல்லாம் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். எதிரே ஒருவர் பல பைகளை உடைய பச்சை நிற உடையணிந்து, அச்சிறிய பைகளில் மரக்கன்றுகளை வைத்துக்கொண்டு வளாகத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது உடையில் ''மரம் நடுவீர்!''; "நட்ட மரத்தை பாதுகாத்திடுவீர்!" எனும் வாசகங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. அவரது அருகில் சென்று அறிமுகம் செய்துகொண்டேன். என் பெயர் 'மரம் அய்யப்பன்' என்றார். மரத்தை தன் உடலில் மட்டுமல்ல பெயரிலும் தாங்கிக் கொண்டிருந்தார். மரக்கன்றுகளின் பாரத்தைத் தாங்கிக்கொண்டு ஆடியசைந்து நடந்து சென்றார். வேடிக்கையான தோற்றத்தில் இருந்த அவரை அனைவரும் திரும்பிப் பார்த்து புன்னகை புரிந்தனர். சிலர் அவரைத் தேடிச் சென்று பாராட்டினர்.

வன உயிரிகள் என்னும் சொல்லின் அர்த்தம் வனத்தில் இருக்கும் உயிரினங்களை மட்டுமே குறிப்பதல்ல. நம் வீட்டில் இருக்கும் பல்லி, தெருவில் பார்க்கும் காகம், வீட்டுத் தோட்டத்தில் வளரும் புற்கள், அதில் இருக்கும் சிறிய பூச்சி இவையனைத்தும்கூட அதில் அடக்கம். எனவே நாம் 'வன உயிரின வாரவிழா' என்னும் பெயரை மாற்றி "புறவுலகைப் போற்றும் வாரவிழா" எனக் கொண்டாட வேண்டும்.

புறவுலகிற்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியதையும், இயற்கை மற்றும் பல்லுயிர் வளத்தினைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவற்றைப் போற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரு வார காலத்தில் பெற்ற படிப்பினையை வாழ்நாள் முழுவதும் அனைவரின் ஞாபகத்திலும் வைத்துக் கடைபிடிக்குமாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கிடைக்கும் இந்த வாய்ப்பை அரசுத் துறைகளும், அரசுசாரா நிறுவனங்களும் சரியான முறையில் பயன்படுத்துதல் அவசியம்.

ப.ஜெகநாதன்,பறவையியலாளர் - தொடர்புக்கு jegan@ncf-india.org

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in