Published : 17 Nov 2020 03:31 PM
Last Updated : 17 Nov 2020 03:31 PM

க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்: செய்நேர்த்தி, உழைப்பின் மறுபெயர்

'க்ரியா' எனக்கு நன்கு தெரியும். ஆனால் 'க்ரியா' ராமகிருஷ்ணனை எனக்குத் தெரியாது. அவரை நேரில் பார்த்ததுகூட இல்லை. என்னைப் போலவே நிறையப் பேர் இருக்கக்கூடும். அவர்கள் எல்லோரும் வாசிப்பாளர்களாக, எழுத்தாளர்களாகத்தான் இருப்பார்கள்.

எந்த ஒரு எழுத்தாளனும் தான் எழுதியதை அச்சில் கொண்டு வருவதைவிடப் பிழையில்லாமல் கொண்டுவருவதற்கே பிரம்மப் பிரயத்தனப்படுவான். அதே போலத்தான் நல்ல வாசகனும். பிழையில்லாத அச்சு நேர்த்தியுடைய, அறிவுக்கு விருந்தாகும் அர்த்தத்துடனாகிய அட்டைப் படத்துடன் உள்ள புத்தகங்களையே விரும்புவான்.

ஓர் எழுத்து எப்படிப்பட்டதாயினும், அதைப் பதிப்பித்த வடிவமைப்பே எடுத்த எடுப்பில் அதை வாசிப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது என்பதை எழுத்தாளனும், வாசகனுமே உணர்ந்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து பதிப்புத் துறையில் இதில் அக்கறை செலுத்துபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சுயமாகப் பதிப்புத் துறையில் இறங்கி, பதிப்பித்து, இந்த விஷயத்தில் தோல்வி கண்ட எழுத்தாளர்களும் ஏராளம்.

என்னைப் பொறுத்தவரை என் பால்ய வயதில் ஒரு வேளை சோற்றுக்கே திண்டாட்டமாயிருந்த காலகட்டத்திலும் விபிபி அஞ்சலில் ஒரு புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் அனுபவத்தைக் கொடுத்த பதிப்பாளராக 'மணிமேகலை' பிரசுரம் தமிழ்வாணன் விளங்கினார். அவர் புத்தகங்களில் இருக்கும் கறுப்புக் கண்ணாடியும், தொப்பியும் 'துப்பறிகிறார் தமிழ்வாணன்', 'டோக்கியோவில் சங்கர்லால்' கதைகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். நூலகத்தில் புத்தகங்களைத் தேடும்போதெல்லாம் கறுப்புக் கண்ணாடியும், தொப்பியும் கொண்ட ‘லோகோ’ உள்ள நூல்களையே மனம் தேடும்.

வேடிக்கை என்னவென்றால் 'மணிமேகலை பிரசுரம்' தமிழ்வாணனுடையது என்றும், அது அவரின் துப்பறியும் நாவல்களை மட்டும் வெளியிடவில்லை; உணவு, இயற்கை, விவசாயம், மருத்துவம் எனப் பலதரப்பட்ட துறைகளில் கால்பதித்து நூல்களை வெளியிட்டிருக்கிறது என்றும் பின்னர்தான் தெரிந்தது. அவற்றிலும் சுவாரசியத்துக்குக் குறைவிருக்காது. வேளாண்மைப் புத்தகத்தைக்கூட விறுவிறுப்பாகத் துப்பறியும் நாவல் போல் வாசிப்பு சுகத்துடன் தமிழ்வாணன் தந்திருப்பார். அவற்றில் ஓர் எழுத்துப் பிழைகூட இருக்காது.

அடுத்ததாக என்னைக் கவர்ந்த பதிப்பகம் 'வானதி'. அந்த யானை சிம்பலும், 'தீனதயாளு தெரு...' என்ற கொட்டை எழுத்து முகவரியும் மனதில் பதிந்துவிட்டவை. கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், கோவி.மணிசேகரன், லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி போன்றோர் எழுதிய கதைகள் எல்லாம் இப்பதிப்பகத்தில் வெளிவரும்போது அந்தப் புத்தகங்களைத் தழுவுவதே ஒரு சுகமாக இருக்கும். அச்செழுத்துகள் கண்ணைப் பறிக்கிற மாதிரி இருக்காது. உறுத்தல் இருக்காது.

வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கிடைக்கும் இடைவெளி, வாசிப்பை வேகமாக்கும். அதிலும் முதல் தாளின் பின்பக்கத்தில் அச்சிடுவோர் குறிப்புகளில் ‘இது திருநாவுக்கரசு தயாரிப்பு’ என்று இருக்கும் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவர் புத்தகம் தயாரித்தால் நிச்சயம் அழகாக இருக்கும். ஆயிரம் பக்கங்களானாலும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். ஏறத்தாழ இதே பாணியில் கோவை ‘விஜயா பதிப்பகம்’ புத்தகங்கள் வடிவமைப்பில் நேர்த்தியாக வருவது தனி.

இதற்குப் பிறகு எத்தனையோ பதிப்பக நூல்களைக் கண்டுவிட்டேன். வாசித்தும் பார்த்துவிட்டேன். இன்று வரை என் மனதை நிறைவு செய்யும் பதிப்பகங்கள் வரவில்லை. ஆனால், மேற்சொன்ன இரண்டு பதிப்பகங்களைவிடவும் அடியாழமாய் ஒரே ஒரு பதிப்பகம் ஒரே உந்துதலில் நிறைந்தது என்றால் அது 'க்ரியா'.

இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' நாவல் வெளிவந்த புதிது. 'என்ன இந்தப் புத்தகம் இப்படியொரு விதமாக இருக்கிறது. அட்டைப்படத்தில் உள்ள ஆதிமூலம் ஓவியமே ஏதோ சொல்ல விழைகிறதே. நாவலின் தலைப்பு மட்டுமல்ல, அந்த அச்செழுத்தின் (ஃபாண்ட்- அதுதான் ஆதிமூலம் கையெழுத்து என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்) கோடுகள்கூட இந்தச் சமூகத்திற்கு ஏதோ புதிதாகச் சொல்லத் துடிக்கிறதே?' என்றுதான் வாங்கினேன்.

அந்தக் காலகட்டத்திலேயே அதற்கு விலை கொஞ்சம் கூடுதல்தான். ஆனால் அந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டதற்கும், அதில் உள்ள உள்ளடக்கத்திற்கும் எத்தனை ரூபாய் வேண்டுமானாலும் தரலாம். அதற்கான சிறப்புத் தகுதி இருந்தது. ஒரு தடவை இல்லை. பலமுறை ‘கோவேறு கழுதைகள்’ படித்துவிட்டேன். இப்படியொரு அடர்த்தியான, கருத்தாழம் கொண்ட நாவலை வேறொரு பதிப்பாளர் பதிப்பித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால் இப்படியான படைப்பைப் படித்துப் பார்க்கும் தகுதியில் நம் பதிப்பாளர்களில் பெரும்பகுதியினர் இல்லை என்பதே உண்மை (சமகாலத்தில் ‘க்ரியா’வுக்கு இணையாக ‘தமிழினி’ வசந்தகுமார், தான் பதிப்பிக்கும் நூல்களை மிக நேர்த்தியாகப் பிழைகள் இல்லாமல் கர்ம சிரத்தையுடன் கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். இப்படி ஓரிருவர் உள்ளனர்).

‘மணிமேகலை’ பிரசுரம் தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களுக்காகவும், ‘வானதி’ பதிப்பகம் பிரபல சரித்திர நாவலாசிரியர்களின் நூல்களுக்காகவும் புகழ்பெற்றன என்றால், தலித்திய, வர்க்கப் பார்வையுடைய, அடியாழமும், அகலமும், அழுத்தமும்மிக்க நூலைப் பதிப்பித்து வாசக நெஞ்சில் இடம் பிடித்த ஒரே பதிப்பகம் 'க்ரியா'வாகத்தான் இருக்கும்.

ஒரு வேளை ‘க்ரியா’ மட்டும் இல்லையென்றால் இமையம் என்ற எழுத்தாளன் அறியப்பட்டே இருக்க வாய்ப்பிருக்காது என்பதும் என் எண்ணமாக இருக்கிறது. இப்படியான எழுத்தாளர்களுக்கு ‘க்ரியா’ செய்த சேவை அந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தற்காலத் தமிழ் அகராதி'யை விடவும் மேன்மையானது. முந்தையது எழுத்தாளனுக்கு என்றால் பிந்தையது தமிழுக்கு என்பேன்.

‘க்ரியா’ பதிப்பக வெளியீடுகள் என்றால் ஒரு வாசகனாக அடுத்தடுத்து வாங்குவது, வாசிப்பது மட்டுமல்ல, பத்திரப்படுத்துவதும் எனக்கு வாடிக்கையாகவே இருக்கிறது. 'பெத்தவன்', 'ஆறுமுகம்', 'வீடியோ மாரியம்மன்', 'அந்நியன்', 'ஆறுமுகம்', 'தற்காலத் தமிழ் அகராதி' என வரும் நூல்கள் எல்லாம் என் அலமாரியில் எப்போதும் எடுக்கிற இடத்தில் இருக்கும் நூல்கள்.

பிழைகளைக் களைவதில் பல பதிப்பகங்கள் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை என்பதற்கு என்னளவிலேயே சொந்த அனுபவங்கள் உண்டு. ஆனால், ‘க்ரியா’ பதிப்பகம் செய்நேர்த்திக்கு எப்போதும் தனிக் கவனம் செலுத்தும் என்பதை அதன் வெளியீடுகளே உணர்த்துகின்றன. ஆம். ‘க்ரியா’ என்கிற பெயர் எங்களுக்கு இப்படியெல்லாம் மரியாதைக்குரியது.

அதன் பின்னால் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் என்பவரது அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும், செய்நேர்த்தியும், வாசிப்புத் திறனும், அறிவாற்றலும் இருந்திருக்கிறது. இதைச் சமீபகாலமாக அவர் பெயரைப் பத்திரிகைகளில் படிக்கும்போதுதான் உணர்கிறேன். இப்போது அவரின் மறைவு ‘க்ரியா’ என்ற அர்த்தப் பதத்துடனே மனதைக் கனக்க வைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x