உடல் உறுப்பு தானமளித்த இந்தியாவின் முதல் மாற்றுப்பாலின தம்பதி!

ஹிருத்திக் - திருப்தி ஷெட்டி
ஹிருத்திக் - திருப்தி ஷெட்டி
Updated on
2 min read

பிறப்பால் ஆணாகப் பிறந்து தன்னைப் பெண்ணாக உணர்ந்த திருப்தி ஷெட்டி திருநங்கையாக மலர்ந்தார். பிறப்பால் பெண்ணாகப் பிறந்து தன்னை ஆணாக உணர்ந்த ஹிருத்திக் திருநம்பியாக சமூகத்தில் வெளிப்பட்டார்.

கேரளாவின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இவர்கள் இருவரும் அண்மையில் தம்பதிகளாயினர். அதோடு நிற்காமல், இந்தச் சமூகத்திற்கு தங்கள் வாழ்க்கைக்குப் பிறகும் ஏதாவது செய்ய முடியும் என்றால் அது 'உடல் உறுப்புகள் தானம்' தான் என்பதை அறிந்து, தங்களின் இறப்புக்குப் பின் தங்களின் உடலில் இருக்கும் உறுப்புகளை தானமாகவும் மருத்துவ மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவும் வகையிலும் தங்களின் உடல்களை தானமாக அளித்திருக்கின்றனர்.

உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதற்கான அடையாள அட்டை
உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதற்கான அடையாள அட்டை

உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அரசின் விண்ணப்பத்தில் இதுவரை ஆண், பெண் என்னும் இரு பிரிவுகளே இருக்கும். திருப்தி மற்றும் ஹிருத்திக் ஆகியோரின் முயற்சிக்குப் பின், தற்போது அந்த விண்ணப்பத்தில் ஆண், பெண், அதோடு மாற்றுப் பாலினத்தவர் என்னும் பிரிவும் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

"இந்த மாற்றத்துக்கான தொடக்கமாக இருந்ததில் மிகவும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதன் மூலம் மாற்றுப்பாலினத்தவரும் தங்களின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதற்கு முன்வரவேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் தொடக்கம்தான் இது" என்கிறார், திருநங்கை திருப்தி ஷெட்டி

பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது இரண்டையும் தவிர்த்துப் போராடித் தன்னை நிரூபித்திருப்பவர் கேரளாவைச் சேர்ந்த திருநங்கை திருப்தி ஷெட்டி. கைவினைக் கலைஞர், விளம்பர மாடல், நடிகை, பள்ளி, கல்லூரிகளில் மாற்றுப் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை அளித்துவரும் பேச்சாளர் இப்படிப் பல முகங்கள் இவருக்கு இருக்கின்றன.

கைவினைக் கலைஞராகக் கேரளாவில் மதிப்பான ஒரு வாழ்க்கையை நடத்துபவர் இவர். ஹேண்டிகிராஃப்ட்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் கேரளா வழங்கும் கைவினைக் கலைஞருக்கான அடையாள அட்டையை முதன்முதலாகப் பெற்றிருக்கும் திருநங்கை இவர். இந்த அங்கீகாரத்தின் மூலம் கேரள அரசு நடத்தும் எல்லாக் கண்காட்சிகளிலும் இவருடைய படைப்புகள் இடம்பெற முடியும்.

இவர் மலையாளத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 'த்வயா'வின் 2017-ம் ஆண்டின் 'குயின் ஆஃப் கேரளா' அழகிப் போட்டியில் 15 பேரில் ஒருவராகத் தேர்வானார். கேரளத்திலிருந்து வெளிவரும் பிரபல பெண்கள் இதழான 'வனிதா' இவரது படத்தை அட்டையில் வெளியிட்டு, இவரது பேட்டியை பிரசுரித்திருந்தது.

திருநங்கைகளுக்கு உதவி

"நிறையப் பேர் திருநங்கைச் சமூகத்தினருக்கு உதவத் தயாராக இருக்கின்றனர். ஆனால், எப்படி உதவுவது என்பது தெரியாமல் இருக்கிறார்கள். கேரள அரசாங்கமே நிறைய நன்மைகளைத் திருநங்கை சமூகத்துக்கு செய்துவருகிறது.

ஆனால், அந்தத் திட்டங்கள் முறையாக அவர்களுக்குக் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படுகின்றன. அந்தத் தடைகளை என்னால் முடிந்தவரை சரிசெய்து, திருநங்கைகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற உதவுகிறேன்" என்று சொல்லும் திருப்திக்கு, கேரளாவில் மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளுக்காகச் செயல்படும் 'க்யோரிதம்' அமைப்பு, சாதனையாளர் விருதை வழங்கிக் கவுரவித்திருக்கிறது.

ஆண், பெண் குறித்த புரிதல் மாறுமா?

"மாற்றுப் பாலினத்தவர் குறித்தும் பால் புதுமையர் குறித்தும் நிறைய புரிதல்களைச் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. ஆண், பெண்ணின் அன்றாட நடவடிக்கைகளை உற்றுப் பார்க்கும் சமூகம், இவர்களையும் ஒரு சதுரத்தில் சிறைப்பிடித்து, இப்படி இருந்தால்தான் ஆண், பெண் என்று நம்புகிறது. பொதுச் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

ஆண் என்றால் சிம்மக் குரலில் கர்ஜிக்க வேண்டும்; பெண் என்றால் குயிலின் இனிமையோடு பேச வேண்டும் என்று கட்டமைக்கிறது. சமூகத்தின் இந்தச் சதுரத்துக்கு வெளியே இருப்பவர்கள் எள்ளி நகையாடப்படுகிறார்கள். இந்த நிலை சமூகத்தில் மாறவேண்டும்" என்கிறார், திருப்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in